Saturday, September 30, 2006

கணினியில் தமிழ் - பகுதி 4



-1- - -2- - -3- - -5- - -6- - -7-



முன்பே சொன்னது போல், எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சை உபயோகிப்பதால் இருந்த சிரமங்களைக் கருத்திற் கொண்டு சில மென்பொருட்கள் இப்பொழுது தயாராகத் தொடங்கின. 90 களின் நடுப்பகுதியில், மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகமாக்கினார். இதில் எழுத்துரு, எழுதி, மின்னஞ்சற் செயலி, விசைப்பலகை என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதில் முக்கியமான அறிமுகம் விசைப் பலகை. இந்த விசைப் பலகையைப் பாவித்து நாம் ஆங்கிலமயமான (romanized)தமிழையும் எழுத முடிந்தது. இதில் தமிழ்த் தட்டச்சும், ஆங்கிலமயத் தமிழ்த் தட்டச்சும் சேர்ந்தே இருந்தன. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அம்மா என்று எழுத “ammaa” அல்லது “ammA” என்று தட்டினால் சரி. மிக இலகு. இதில் இன்னொரு விளைவு, தமிழைப் படிக்காத ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூடத் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழை திருத்த முடியாதென்பது வேறு விடயம்.

இந்த நேரத்தில் யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சற் செயலி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளி வந்து மின்னஞ்சலிற் தமிழை மேம்படுத்தியது. முரசுஅஞ்சல், இணைமதி, இணைக்கதிர், மைலை, ஆவரங்கால் போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கிய பங்காற்றின. ஆவரங்கால் என்பது ஈழத்தில் ஒரு ஊரின் பெயர். இந்த ஊரைச் சேர்ந்த திரு. ஸ்ரீவாஸ் சின்னத்துரை என்பவர் உருவாக்கிய ஒரு எழுத்துரு தான் இது. இவர்களோடு குறிப்பிடக் கூடிய இன்னும் பலர் இருந்தனர். இவர்களில் எனக்கு ஞாபகம் வரும் பெயர்கள் சில இதோ.

திரு. குமார் மல்லிகார்ஜுன்,
கலாநிதி கல்யாணசுந்தரம்,
திரு. மா. அங்கையா,
திரு. மணிவண்னன்,
திரு. நாகு,
திரு. கலைமணி,
திரு நா. கணேசன்,
திரு. பூபதி மாணிக்கம்,
திரு நா. சுவாமிநாதன்.
(பெயர் மறந்து விட்ட அறிஞர்கள் தயை கூர்ந்து மன்னிக்க)

இவர்கள் இத்தோடு நில்லாமல் தொடர்ந்து தமிழின் கணினி இருப்பிற்கு இன்னமும் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந் நேரத்தில், யுனிக்ஸில் அகரம் என்ற செயலியும், மக்கிண்டாசில் சில்க்கி என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகி விட்டிருந்தன. இவை இப்படியிருக்க இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் எற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான் இணைய யுகம். (Internet era)

இணையத்தில் (internet), வைய விரி வலை (world wide web) 1990 முற்பகுதியில் கோபர் (Gopher), மொசையிக்(Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்களாக உருவாகி இணையத்தின் பாவனயை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது அபிவிருத்தி அடைந்து நெட்ஸ்கேப் (Netscape) பில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே ஆரம்பமாகியது.

இப்பொழுது, சில இணையத் தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. இந்தத் தமிழ் இணையத் தளங்களை உருவாக்குவதில் மிக உதவியாக இருந்தவை முரசு-அஞ்சல் செயலியும் அப்பொழுது தோன்றிய இன்னொரு புரட்சியான தமிழ் மடலாடற் குழுவும் அதனாலேற்பட்ட பெரிய அபிவிருத்திகளும்.

…. தொடரும்


-1- - -2- - -3- - -5- - -6- - -7-

Tuesday, September 26, 2006

கணினியில் தமிழ் - பகுதி 3



-1- - -2- - -4- - -5- - -6- - -7-



தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற் கேற்பப் பாவனையில் வைத்திருந்ததால், ஒருவர் தமிழில் தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லா விட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். சரி, அனுப்புபவர், பெறுனர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும், வாசிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அதே நேரத்தில், அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளினூடு பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் கடிதம் சரியாகப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். இதனால் மின்னஞ்சல் மென்பொருட்களும் விசேட எழுத்துருக்களைக் கையாளக் கூடியதாக தம்மை மேம்பாடடையச் செய்ய வேண்டிய தேவையும் எழுந்தது. இப்படியான சிக்கல்களில் சிக்குப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மென்பொருள் தோன்றியது.

“மாதுரி” அல்லது “மதுரை” (Maduri) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்தது. அதாவது ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களை ஆங்கில உச்சரிப்பில் எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு “மாதுரி” கட்டளையை அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பாவனைக்கு வரவில்லை, ஆனால் இலகுவாகச் சின்னச் சின்ன வார்த்தைகளைத் தமிழ்ப் படுத்த இது மிக உபயோகமானது. அத்துடன் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், மாதுரியிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துக்கள். ஆதலால் இவ் வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1991/92 காலப் பகுதியில் சாத்தியமானதாக இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர் யாரென்பது சரியாகத் தெரியவில்லை.
இதன் மூலம் கிடைக்கும் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.

__
|_| L L0 ||

இது “படமா” என்ற சொல், கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.

இதிலிருந்த பெரிய குறை, எழுத்துக்கள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் பயமுறுத்தியது தான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பாவனையில் பெரிதாக இடம் பெற முடியாமற் போய்விட்டது.

மின்னஞ்சல் பிரச்சினைகளும் தீர்வு முயற்சிகளும் ஒரு புறம் போய்க்க் கொண்டிருக்க, யூனிக்ஸ் பக்கமும் தமிழ் கணினியில் ஏறிக் கொண்டிருந்தது.
ஐடிரான்ஸ் ( iTrans) என்ற நிறுவனம் தமிழை யூனிக்ஸில் அப்போது (90 களில்) பிரபலமாக இருந்த லேடெக் (LaTex) எழுதியில் தமிழைக் கொண்டு வந்திருந்தது. இதன் மூலம் தமிழில் எழுதுவது சாத்தியமாக இருந்தது. தனிக் கணினி போல் யூனிக்ஸ் கணினிகள் பொது மக்கள் பாவனையில் இல்லாததால், தனிக் கணினியில் தமிழைச் செம்மைப் படுத்தும் முற்சிகளும் அபிவிருத்திகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்தன. இக்காலத்தில் ஆராய்ச்சிகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின.

........................... தொடரும்


-1- - -2- - -4- - -5- - -6- - -7-

Sunday, September 24, 2006

கணினியில் தமிழ் - பகுதி 2



-1- - -3- - -4- - -5- - -6- - -7-



எழுத்துருக்களில் (fonts) குறிப்பிடத் தக்கதாகவும், பரந்த அளவில் பாவனயில் இருந்தவையாகவும் சிலவற்றைக் குறிப்பிடலாம். மைலை (Mylai), பாமினி (Bamini) போன்றவை பிரபலமாக இருந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. எழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரேயொரு சிக்கல் விசைப்பலகை (keyboard) தான்.

கணினியில் இருக்கும் விசைப்பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப்பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்குத் தமிழில் மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் உபயோகிப்பது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பிரபலமடைந்தன. அங்கே இருந்த கணினி வல்லுனர்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கில மூல மென்பொருட்களிலும் நூறு வீதம் சரியாக ஒத்துழைக்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களில் சங்கடங்களும் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பிரயோகங்களான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறவேற்றக் கூடியதாக இருந்தன.

தனித்தனியாகத் தன்தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகளை வலை வேலைப்பாட்டால் இணைத்து கணினிகளையும் அவற்றின் பிரயோகங்களையும் ஒரு படி உயர்த்தி வைத்து மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாகப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் கால கட்டத்தில் (90 களில்) தொடர்பாடற் சாதனமாகப் பரிமணிக்கத் தொடங்கின. மின்னஞ்சல் பாவனை பிரபலமாகத் தொடங்கியது. யூனிக்ஸ் (UNIX) இயங்கு முறைக் (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முதலிலேயே இருந்தன. தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சற் தொடர்பாடல் பிரபலமாகத் தொடங்கும் போது தான் தமிழைத் தொடர்பாடலில் பாவிக்கும் தேவை எழுந்தது. தனிப்பட்டோரின் எழுத்துருக்கள் இந்த இடத்தில் கொஞ்சம் இடறத் தொடங்கின.

................................... தொடரும்


-1- - -3- - -4- - -5- - -6- - -7-

Thursday, September 21, 2006

கணினியில் தமிழ் - பகுதி 1

கணினியில் தமிழ் என்ற ஒரு தொடரை எனக்குத் தெரிந்த வரையில் இங்கே தர முயல்கிறேன்.


-2- - -3- - -4- - -5- - -6- - -7-


கணினியில் தமிழ்

- பகுதி 1
கணினி தோன்றிப் பல வருடங்களானாலும், கணினியில் தமிழ் தோன்றியது 1980 களில் தான். அப்பொழுது மேசைக் கணினிகள் முளை விடத் தொடங்குகிற நேரம். முளை விடும் கணினிகளும் தனக்குத் தனக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் கொண்டிருந்தன. பின்னர் “மக்கின்டாஸ்”, “மைக்ரோசாப்ட்” வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளி வந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.

கணினிகள் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்கள் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

இவற்றின் ஆதாயங்களைத் தமிழிலும் பெற முயன்ற தமிழ்க் கணினி வல்லுனர்களின் பல முயற்சியிகளில் முதலில் தோன்றிய மென்பொருள் ஒரு ஆவணங்கள் எழுதும் “ஆதமி” என்னும் மென்பொருள். இது 1984 இல் கனடாவில் வதியும் கலாநிதி சிறீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அன்னாளில் தமிழ்க் கணினிப் பாவனையாளர்களிடம் பிரபலமாக இருந்தன.

1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு அறிமுகப் படுத்தப் பட்டது. இக்கால கட்டத்தில் எழுத்துருக்களை உருவாக்கப் பல வல்லுனர்கள் சொந்த முயற்சியாக இறங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன.

...............தொடரும்
-2- - -3- - -4- - -5- - -6- - -7-

Friday, September 01, 2006

தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம்

தாய்மொழி வழிக் கல்வியின் அருமை புரிந்த பலரில் இவர்களும் வருகிறார்கள்.
அவர்கள் செயலூக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

சுருக்கம் என்னவென்றால்:
ஆரம்பப் பள்ளிக்கூடங்களில், கற்கை மொழியைக் கன்னடத்திலிருந்து ஆங்கிலமாக மாற்றிக் கொண்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்பப் பாடசாலைகளின் அரச அங்கீகாரத்தைச் செல்லுபடியற்றதாக்கக் கர்நாடக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

விரிவாக இங்கே காண்க:

Karnataka nips English in the bud - முளையிலேயே கிள்ளு

கேரளாவும் இணைந்து விட்டது


இதனோடு தொடர்பான எனது ஒரு பதிவு இங்கே


அரசு:
முதலில் தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்குகிறாதா அல்லது தமிழை இழக்கிறதா என்பதை நோக்குவோம். 

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். அந்த ஆட்சி மொழி எவ்வளவுக்கு ஆட்சி செய்கிறது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய விடயம். ஆட்சி எங்கே தொடங்குகிறது? அது சட்ட சபையுடன் ஆரம்பிக்கிறது. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஓரளவு தூய தமிழில் பேசுகிறார்கள் மன்றும் தமிழில் இயங்குகிறது, மகிழ்ச்சியே. சட்ட மன்றத்திற்கு வெளியே வந்தால்? தமிழ் நாட்டு அரச உயரதிகாரிகளில் 90 வீதமானவர்களுக்குச் சரளமாகத் தமிழில் எழுத, வாசிக்க மற்றும் பேசக் கூடிய புலமை இல்லவேயில்லை. இந்த உயரதிகாரிகளிற் பலர் தமிழ் மொழி மூலம் தமது கல்வியை ஓரளவிற்கேனும் கற்றவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாகத் தம் பாடவிதானத்தில் கொண்டவர்களோ அல்லது தமிழில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களோ இல்லை. இன்னும் பார்த்தால், இவர்களிற் பலர் இந்தியா என்ற கூட்டுப் பொங்கல் நிலையால் வந்த பிற மாநிலக்காரர்கள். இவர்கள் தமிழ் மொழிக்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்ப் புலமை குறைந்த தமிழர்களும், தமிழ்ப் புலமையற்ற பிற மாநிலக்காரர்களும் அதிகாரிகளாகப் பதவியேற்று எப்படித் தமிழ் மக்களின் குறை நிறைகளை நிவிர்த்தி செய்ய முடியும்? தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை, சிக்கல்களை இப்படிப் பட்ட அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள நல்ல தொடர்பு மொழி அவசியமல்லவா? 

மேலும் வாசிக்க கீழேயுள்ள தொடுப்புகளை நாடுங்கள்

”தமிழ்” நாடெனும் மாயை - 1

"தமிழ்" நாடெனும் மாயை - 2