Monday, July 27, 2009

"தமிழ்" நாடெனும் மாயை - 2

கல்வி

கல்வித்துறையும் தமிழகமும் மிகப் பிரபலமான ஒரு சர்ச்சைப் பொருள். அங்கே என்ன நடக்கிறது? கல்வித் துறை எப்படித் “தமிழ்” நாடெனும் மாயை நாட்டில் இருக்கிறது என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம்.

தாய் மொழியில் ஒரு குழந்தைக்குக் கல்வி அவசியம் என்பதைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரையப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. அது தமிழக மற்றும் இதர மாநிலங்களின் செவியிலேற மறுப்பது எல்லோருக்குந் தெரிந்த விடயமே. ஊருக்கு உபதேசம் உனக்கல்லடிப் பெண்ணே என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. இருந்தும் பார்ப்போம். தமிழ் நாட்டில், தமிழ் வழிக் கல்விக் கூடங்கள் அருகி வருவதும், ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் அதிகரித்து வருவதும் இப்போது நாம் கண் கூடாகக் கண்டு வரும் ஓர் அவல நிலை. தம் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களிற் படிப்பதால், தமது நிலை மற்றவர்களை விட ஒரு படி மேல் என்று நினைக்கும் பாமரர்கள் தம் பணத்தை யிழந்து தவிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆங்கில மொழிக் கல்விக் கூடங்களில் கற்பதால் நல்ல கல்வி கிடைக்கிறது என்றும் பலர் நம்புகிறார்கள். பல இடங்களுக்குச் சென்று உத்தியோகம் பார்த்து மேல் நிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தால் பலர் ஆங்கில வழிக் கல்வியை நாடுகிறார்கள். இதில் ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்காக ஆங்கில வழியில் நம் முழுக் கல்வியையும் ஏன் கற்க வேண்டும்? ஆங்கில அறிவை நன்கு வளப்படுத்த ஒரு மேலதிக பயிற்சியாகவே ஆங்கில வழிக் கல்வியை ஆரம்பக் கல்வி யிலிருந்தே கடைப் பிடிக்கிறார்கள்.

இது தவறான ஓர் அணுகு முறை. அரசனை நம்பிப் புருசனைக் கை விட்ட கதை போல் ஆகி விடும் இந்த அணுகு முறை. ஓர் பள்ளியில் பயிலும் 1000 பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் ஓர் உயர் பதவி பெறப்போகுந் தொகையினர் ஒரு 10 பேர் தான். மிகுதி 990 பேரும் ஆங்கில வழிக் கல்வியாற் சாதிக்கப் போவது நிறைய அல்ல. அத்தோடு, தம் தாய் மொழியாம் தமிழில் புலமை யற்றவர்களாக தூய தமிழைத் தெரியாதவர்களாக தமிழைத் தொலைத்த தமிழர்களாக சமுதாயத்தில் வலம் வரப் போகிறார்கள். இத்தகையவர்கள் வாழும் நாடு எப்படித் தமிழ் நாடு ஆகும். இது ஒரு மாயைத் தமிழ் நாடல்லவா? சாதிக்காமல் விட்டவை மிக அதிகமாக இருக்கலாம். எத்தனை யெத்தனை கவிச் சக்கரவர்த்திகளையும், கதாசிரியர்களையும், காவியங்களையும், நீதி நூற்களையும், இசைப் பாடல்களையும் இழந்து விட்டோமோ யார் கண்டது?

தமிழ் மொழிக் கல்வியையோ தமிழ் கற்பதையோ ஆதரிக்கதவர்கள், இன்னொரு வாதத்தையும் நம் மக்கள் முன் வைக்கலாம். அதாவது, நாம் தமிழர்கள், பிறந்து வளரும் சூழல் தமிழ் மக்கள் மத்தியில், இப்படியிருக்கையில் எங்களுக்குத் தமிழ் தானகவே வந்து விடும். அதை ஏன் தனியாகக் கற்க வேண்டும் என்பது தான் அந்த வாதம். ஆனால் தானாக வருந் தமிழ் சரியான தமிழல்லாது ஒரு கொச்சைத் தமிழேயென்பதைப் பலர் புரிந்து கொள்கிறார்களில்லை. தமிழ் கற்றவர்கள் பேசும் தமிழுக்கும் கல்லாதவர்கள் பேசும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாடு மிக அதிகம் என்பதை நாம் இலகுவில் காண முடியும். ஒரு சிறு உதாரணம். ஊரில் எல்லோரும் பாவிக்கும் சில சொற்களை நான் தவிர்க்கப் பார்த்த போது அந்த முயற்சி ஒரு திருவினையாகியது. “இஞ்ச வா”, “என்ர பந்து” போன்ற சொற்களை நான் சரியாகப் பாவிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தில், இங்கே என்றும் என்னுடைய என்றும் மட்டுமே என் கூட இருப்பவர்கள் மத்தியில் நான் தொடர்ந்து பாவித்து வந்தேன். இந்தப் பாவனை கொஞ்ச நாட்களில் பலரிடம் வந்து விட்டது. இப்படித் தூய தமிழை நாம் மக்கட் தமிழாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. அத்தோடு, 1980 வரையிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ் ஒலிபரப்பாளர்கள் பேசிய தமிழ் நல்ல தமிழ். அதன் மூலம், ஒலிபரப்புத் துறையும், அறிப்புத் துறையும் நல்ல தமிழில் இயங்க வழி கோலியவர்கள் அந்தக் கால அறிவிப்பாளர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

தமிழ் மொழியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாயமாகப் பிள்ளைகளுடன் தூய தமிழிற் தான் பாடம் நடத்த வேண்டும். “ஏன் இண்டைக்குப் பிந்தி வந்தாய்?” என்று கேட்பதை, “இன்றைக்கு” என்று பாவிக்க வேண்டும். இவை ஆசிரியர் பயிற்சியில் முதற் பாடமாகச் சொல்லித் தர வேண்டியது. சமுதாயத்தை உருவாக்குவதில் முதலாவது இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். இவர்கள் காட்டும் வழியில் தான் நாளைய மக்கள் தோன்றுகிறார்கள். இந்த ஆசிரியர்கள் சரியாகவும் தரமாகவும் தமிழைக் கற்றுக் கொடுத்தால் தமிழ் நாடென்பது மாயை இல்லாமல் உயிர்ப்போடு வாழுமே. இது தமிழ் நாட்டிற்கு மட்டும் பொருந்துவது அல்ல. எங்கெங்கே எல்லாம் தமிழ் அமுலாக்கம் தேவைப் படுமோ அங்கெங்கே யெல்லாம் இந்தக் குறைபாடுகள் இல்லாம்ல பார்த்துக் கொள்ள வேண்டும்.

Thursday, July 23, 2009

"தமிழ்" நாடெனும் மாயை - 1

இந்திய உப கண்டத்தில் மொழி வாரியாக அமைக்கப்பட்ட நிர்வாகப் பிரிவுகளில் தமிழ் மொழியை முன்னிலைப் படுத்தி அமைந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இது ஒரு தனி இறைமையுள்ள அல்லது விரும்பினால் பிரிந்து செல்லக் கூடிய உரிமையுள்ள ஒரு பிரதேசம் அல்ல. இந்தியா என்ற இறைமையுள்ள நாட்டின் சிறிதளவு அதிகாரப் பரவலாக்கமுள்ள ஒரு அலகே தமிழ் நாடு. இந்தியாவின் 22 அளவிலான மற்றைய மாநிலங்களும் இது போன்றவையே. அனேகமான மாநிலங்கள் எல்லாமே தத்தம் மொழிகளின் வளர்ச்சி, உயர்வு மற்றும் மொழியின் இருப்புக் கருதி மொழி வாரியாக அமைந்தனவே. இப்படியாக அமைந்த மாநிலங்களில் மொழி வளர்ச்சி மற்றும் இருப்பு என்பன எப்படிப் பட்ட நிலையில் உள்ளன? தமிழ் நாடு, தமிழர் நாடு, தமிழர் நாம் என்று கூறிக் கொள்ளும் தமிழகம் எப்படி இருக்கிறது என்று இங்கு பார்ப்போம்.

அரசு:
முதலில் தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்குகிறாதா அல்லது தமிழை இழக்கிறதா என்பதை நோக்குவோம்.

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். அந்த ஆட்சி மொழி எவ்வளவுக்கு ஆட்சி செய்கிறது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய விடயம். ஆட்சி எங்கே தொடங்குகிறது? அது சட்ட சபையுடன் ஆரம்பிக்கிறது. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஓரளவு தூய தமிழில் பேசுகிறார்கள் மன்றும் தமிழில் இயங்குகிறது, மகிழ்ச்சியே. சட்ட மன்றத்திற்கு வெளியே வந்தால்? தமிழ் நாட்டு அரச உயரதிகாரிகளில் 90 வீதமானவர்களுக்குச் சரளமாகத் தமிழில் எழுத, வாசிக்க மற்றும் பேசக் கூடிய புலமை இல்லவேயில்லை. இந்த உயரதிகாரிகளிற் பலர் தமிழ் மொழி மூலம் தமது கல்வியை ஓரளவிற்கேனும் கற்றவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாகத் தம் பாடவிதானத்தில் கொண்டவர்களோ அல்லது தமிழில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களோ இல்லை. இன்னும் பார்த்தால், இவர்களிற் பலர் இந்தியா என்ற கூட்டுப் பொங்கல் நிலையால் வந்த பிற மாநிலக்காரர்கள். இவர்கள் தமிழ் மொழிக்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்ப் புலமை குறைந்த தமிழர்களும், தமிழ்ப் புலமையற்ற பிற மாநிலக்காரர்களும் அதிகாரிகளாகப் பதவியேற்று எப்படித் தமிழ் மக்களின் குறை நிறைகளை நிவிர்த்தி செய்ய முடியும்? தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை, சிக்கல்களை இப்படிப் பட்ட அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள நல்ல தொடர்பு மொழி அவசியமல்லவா?

மொழி புரியாத சிக்கலில் ஏற்படும் விளைவுகள் தான் எல்லோரும் அறிந்ததே. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் சப்பானும் மோதிக்கொள்ள நேர்ந்தது கூட ஒரு தகவல் தொடர்பின் தவறான புரிதலே என்பது எல்லோருக்குந் தெரியும். இருந்தும், எங்கள் நாடுகளில் யார் மக்களைப் பற்றி அதிகம் பொருட்படுத்துகிறார்கள். அதை விடுவோம். தமிழ் நாட்டு அதிகாரிகளை மீண்டும் பார்ப்போம்.

அதிகாரிகள் ஆங்கிலத்தில், இந்தியில் அல்லது அவர்களது தாய் மொழியில் புலமையுடையவர்களாக இருப்பார்கள். தமிழக மக்களோ தமிழில் கருமம் ஆற்ற நினைப்பார்கள். இந்நிலையில், அதிகாரிகள் அரை குறைக் கொச்சைத் தமிழில் கடமையாற்ற முனைவார்கள். அதிகாரிகளின் கொச்சைத் தமிழைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும் பொது மக்களோ அரை குறைக் கொச்சை ஆங்கிலத்திற்கோ வேறு மொழிக்கோ தாவ முயல்வார்கள். தமிழர் தமிழுடன் ஓரிரு ஆங்கில வார்த்தகளையும் சேர்த்துத் தம் கருமம் பெறுகையில், தமிழில் ஆங்கிலம் கலப்பது தவிர்க்க முடியாததாகின்றது. உதாரணமாக, குமார் சார் என்றும் குமார்ஜி என்றும் தொடங்கி, லெப்ட், ரைட், கலர் போன்ற சொற்களுடன் தமிழர் ஆரம்பிப்பார். இதைப் பார்த்த அரச உத்தியோகத்தர்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதலான ஆங்கில வார்த்தைகளையோ மற்ற மொழி வார்த்தைகளையோ புகுத்த முனைவார். இவ்வாறு சீரழிவு தொடர்கிறது. அதிகாரியினதும் இவரைப் போன்றவர்களினதும் கொச்சைத் தமிழோ தமிழுக்குப் புது வடிவம் கொடுக்க முனைந்து ஒருவகை நாகரீகத் தமிழாக உருவெடுக்கிறது. தமிழும் புது வடிவம் பெறும். அந்த வடிவத்தை அழகு என்று எண்ணும் அப்பாவித் தமிழரும் அதைப் பின்பற்றித் தமிழின் அழிவில் பங்கு பெறுகிறார்கள். நல்ல தமிழைப் பேசுவோர்கள் நாட்டுக் கட்டைகள் அல்லது பண்டிதர்கள் என்று பழிக்கப்பட்டு இழிவு படுத்தப் படுகிறார்கள்.

ஆங்கிலம் போன்ற வேறு மொழிகளில் கலந்து கொள்ளும் பிற மொழிக்காரர்களின் தூய்மையற்ற பாவனைகள் மூலம் அந்த மொழிகளைப் பிழையாகக் கையாள்கிறார்கள். ஆனால் அம் மொழிகளின் சொந்தக்காரர்கள் தம் மொழித் திறைமையாலும் மொழிப் பற்றாலும் தம் மொழி கொச்சைப் பட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தமிழிலும் தமிழரிலும் காணப்படாத ஒரு குறைபாடு. இது பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

தமிழ் கொச்சைப் படுத்தப் படும் இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசு, தனது தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்கச் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும். முதலில், அரச அதிகாரிகள் நியமனத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளைச் செப்பனிட வேண்டும். தமிழ் நாட்டில் கடமை புரிய வரும் ஒவ்வொருவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்க வேண்டும். மத்திய அரச நியமனமானாலென்ன, மாநில அரச நியமனமானாலென்ன தமிழகத்தில் கடமை புரிவோருக்குத் தமிழிற் தேர்ச்சி இருக்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை மிகக் கடுமையாக அமுல் படுத்துவதற்கு தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு அதிகாரம் இல்லையென்றால், அந்த அதிகாரத்தைப் போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள் 60 களில் இந்தி எதிர்ப்பில் காட்டிய வீராப்பை இத்தகைய விடயங்களிலும், தமிழ் மொழி வழிக் கல்வியையும் தமிழ்க் கல்வியையும் கண்டிப்புடன் அமுலாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். இப்பொழுதாவது அக்கறையுடன் செயலாற்ற வேண்டும்.

பின்னர், இந்தத் தமிழ் நாடெனும் மாயை கல்வித் துறையில் எப்படிச் செயல்லாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்.