Thursday, October 15, 2009

நீரிழிவு

நீரிழிவு
-------

அள்ளினாள் மனைவி
ஆசையாற்  சீனியை
கொட்டவே எண்ணினாள்
கொண்டவன் கோப்பியில்
கொட்டமுன் நிறுத்தினாள்
கொஞ்சமாய்ப் போடவே
நப்பியா இல்லையே
அவனுக்கு நீரிழிவு

Wednesday, October 14, 2009

கண்ணனின் கீதையும், கண்ணீரில் ஈழமும்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும்

இதுவே உலக நியதி

இந்த வரிகள் எல்லாம் எங்களில் பலருக்கு மிகவும் பழக்கமாகி விட்ட கண்ணனின் கீதையின் சாராம்சத்திலிருந்து சில வரிகள்.அனேகமானவர்களின் வீடுகளில் இந்த வாசகங்கள் காணப்படுகின்றன. வெறும் கண்ணன், அருச்சுனன் படமாக வீடுகளின் சுவர்களில் தொங்காமல் பெரும் பிரபஞ்ச உண்மையை உணர்த்தி நிற்கும் அதி உன்னத வார்த்தைகள். இப்போது ஏன் நான் இவற்றை ஊருக்கு உரைக்க வேண்டும்?

ஈழத்தின் துயரங்களைத் தாங்க முடியாது அவதிப்பட்ட நேரங்களில் எங்கோ விறைத்துப் பார்த்து மனத்தினுள்ளேயே குமுறிய நாட்களில் சுவரில் தட்டுப்பட்ட படத்திலிருந்த வாசகங்கள் கவலையைக் குறைக்க உதவி செய்தன. எக் காலமும் பொருந்தும் இத் தத்துவம் எம் மனக் கவலையைப் போக்கும் எனபதில் என்ன சந்தேகம்?

வன்னியின் வதை முகாம்கள் இன்று யாருடையனவோ
அவை நாளை வேறொருவனுடையவையாகி விடும்
நாளை மறுதினம் அவை மற்றொருவனுடையதாகும்

இதை எண்ணும் போது நல்லதும் கெட்டதும் எப்பொழுதும் ஒருவருக்கே சொந்தமாகாது என்பதும் இன்று அழுவோர் நாளை சிரிப்பதும், இன்று கொக்கரிப்போர் நாளை மக்கரித்துப் போவதும் கண் கூடே தெரியும் போது தானகவே அமைதி பிறக்கிறது.

எத்தனை கண் கூடான உதாரணங்களைப் பார்த்து விட்டோம். நமது மண் கூட எத்தனை முறை எத்தனை கைகள் மாறி விட்டது. அத்தனை மாற்றங்களின் போதும், எத்தனை வதை முகாம்கள், சித்திர வதைக் கூடங்கள், துரோகிகள், முதுகில் கத்தி செலுத்துவோர் இருந்திருக்கக் கூடும். யார் யார் வதை பட்டு இருப்பார்கள். யார் யார் கொக்கரித்திருப்பார்கள்.

உலக நாடுகளையே உற்றுப் பார்த்தால் அண்மைக் காலங்களில் ஒரு ஐம்பது ஆண்டுகளாகத் தானே துன்பமில்லாத வாழ்க்கையைப் பல உலக நாடுகள் முன்னெடுத்து நிற்பதைப் பார்க்கிறோம். அதிலும் பல நாடுகளில் மக்கள் துயரம் இன்னமும் காணப்படுகின்றனவே. இவற்றைப் பார்த்துத் தான் நாம், நமக்குங் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடி நம்மைத் தேற்றிக் கொள்கிறோம்.

மன்னராட்சிக் காலங்களில் இன்னும் மோசமான வாழ்ககையைத் தானே அந்தந்த நாடுகளின் ஏதோ ஒரு வகை மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். உதாரணமாக சோழ மன்னராட்சிக் காலத்தில் பாண்டிய, சேர நாடுகளும் அதன் மக்களும் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கக் கூடும். அதே போல், பாண்டிய, சேர மன்னர்கள் கோலோச்சிய காலங்களில் சோழர் மற்றும் இதர நாட்டு மக்களில் பலர் பல விதத் துன்பங்களில் தானே வாழ்ந்திருப்பர். எல்லாமே ஒரு காலச் சக்கரத்தின் பயணத்தில் கண்ணனின் வாசகங்களை அனுசரித்துச் சென்றவை தானே. காலச் சக்கரம் சில சம்பவங்களை வேகமாகக் கடந்து விடுகிறது, சில சம்பவங்களை மெதுவாகக் கடந்து விடுகின்றது.

உலகின் நாகரீகத்தில் சிறந்து விழங்கிய எகிப்து நாட்டைப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆண்ட பேரரசர்களைப் பற்றி வாசிக்கும் போது இந்த நிலையில்லாமை மிகத் துல்லியமாக விளங்கி விடும். பெரும் பாலான பேரரசர்கள் 15 – 20 ஆண்டுகளுக்குத் தான் தம் ஆட்சிகளை வெற்றிகரமாக நடாத்தி யிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் பெரும் அழிவுகளுடன் தான் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவற்றோடு ஒப்பிடும் போது நம் நாடு ஒரு 20 – 25 வருடங்களுக்காவது நல்ல ஆட்சியில் இருந்ததுவே.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது கண்ணனின் கீதை மொழியின் ஆழம் புரிகிறது. இன்று வதம் செய்யும் கொடியவர்களின் அந்தம் தெரிகிறது. வதம் செய்யும் கொடியவர்களின் கொக்கரிப்புக்குத் துணை போகும் மகா கொடியவர்களின் காலம் முடியும் நாள் கண்ணனின் கீதை வழி தெரிகிறதே. இவர்கள் வீழும் போது ஈழம் வாழும். வன்னி நிமிரும். நாளை நமதே.