Saturday, May 16, 2015

மறவோமே

மறவோமே


நிற்க நடக்க
நிம்மதியா படுத்துறங்கப்
பாந்தமாய் வாழ்ந்த நம்
பத்திரப் பூமி அது
பாட்டன் வழிச் சொத்தெனக்
கொண்டாடும் வீடது

மனிதனாய் வாழ்ந்து
நிம்மதியா மூச்சு விட்டு
நினைத்ததை வெளியாக
உரிமையோ டுரைத்திட்டு
திரிந்த நம் தேசம்
சிக்கித் தவித்தது
பலவந்தப் படுத்தும்
பலரின் கைகளிலே

அத்தனை ஆக்கிரமிப்பும்
அப்பப்ப முறியடித்துக்
காத்திரமாய் வாழ்ந்து வந்தோம்
எம் தாயின் மடியில் நாமே

மீண்டுமொரு அத்துமீறல்
வந்ததேயிந் நாளினிலே
அக்கிரமம் நிறைசூழ்க்
கடுந்துயர்க் காலமிதில்

சொந்த நாட்டு மக்களையே
சொத்தையென்று பிரித்தெடுத்து
தாண்டவமாடத்
தலைப்பட்ட தோரரசு

எதிரிக்கு நாம் பேசும்
மொழி முதலிற் பிடிக்கவில்லை
உதவிக்கு நாம் அழைக்கும்
கடவுளையும் பிடிக்கவில்லை
சமமாக வாழ வைக்க
மனதில் இடம் இருக்கவில்லை
மனித உரிமைகளை
மதித்து அவர் நடக்கவில்லை

தமிழன் தன் திறமையாற்
தலையெடுத்தால் பிடிக்கவில்லை
தரணிபுகழ் தமிழர்தம்
பண்பாடும் பிடிக்கவில்லை
தமிழனென்றோர் அடையாளம்
இருப்பதே பிடிக்கவில்லை
பூர்வீகக் குடிகளது
பூர்வீகம் பிடிக்கவில்லை
பூர்வீகம் பொய்யென்று
பொய்யுரைக்கக் கசக்கவில்லை

மதவெறி மொழிவெறி
மதம் பிடித்துக் கூவி நின்றார்
தமிழ்மக்கள் உரிமைகளை
பலங் கொண்டு மிதித்திட்டார்

அழித்து விட்டால் ஆருங் கேளார்
என்ற வழி தெரிந்திட்டார்
அந்தவழி செல்வதற்கு
அடித்தளமும் போட்டு விட்டார்
அங்கு கேட்டு இங்கு கேட்டு
ஆதரவும் பெற்றிட்டார்
அழிக்கும் படலத்தைப்
படிப்படியாய் தொடங்கிட்டார்

மக்கள் வாழ்விடங்கள் எல்லாம்
கடகடவெனத் தகர்த்திட்டார்
வீழ்ந்து பட்ட மாந்தர்க்கு
மருந்துகூட மறுத்திட்டார்

மந்தைகளாய் மக்களையே
முள்ளிவாய்க்கல் துரத்திட்டார்
பட்டிக்குள் ஆடுகளாய்
முட்டுக்குள் அடைத்திட்டார்

குந்தக் கூட இடமின்றி
நெருக்குப்பட்டு நின்றவரை
கொத்தாய்க் குதறிடவே
மூர்க்கமாய்த் துணிந்திட்டார்

ஏதிலியாய் நின்றவரின்
இறுதி நிலை உணர்ந்திட்ட
ஈர நெஞ்சம் படைத்தவர்கள்
ஓடி வந்து காக்க வரக்
கோரிக்கை வைத்த போது
கோர முக எதிரியவன்
கொலை வெறியோ டெதிர்த்திட்டான்

கொத்துக் கொத்தாய்ச் சாய்த்து விட்டான்
கொட்டும் கொடும் ஆயுதத்தால்
கொஞ்ச நேரப் பொழுதினிலே
கொலையுண்டோர் கொஞ்சமல்ல

குழந்தைகளா பெண்களா
குடுகுடு கிழங்களா
கொல்லடா கூண்டோடென்று
கூவிக் கூவிக் கொன்றொழித்தார்

மாண்டவர் மாண்டு விழ
மீதிருந்தோர் துவண்டு விழ
மான பங்கப் படுத்திட்டார்
அதைப் பார்த்து மகிழ்ந்திட்டார்

முள்ளிவாய்க்காற் கொடுந்துயரம்
முட்டிமோதிக் கலங்க வைக்க
கடுந்துயரக் கொலைகள் எம்மைக்
கனவிற்கூடக் கதற வைக்க
ஆறாண்டு போனபின்னும்
அவரை நினைத் தரற்றுகின்றோம்
ஆறென்ன அறுபதென்ன
ஆயிர மாண்டானாலும்
அவர் துன்பம் மறவோமே

கோரத் தாண்டவத்தில்
மாண்டுவிட்ட எம் உறவை
ஊழிக் காலங்கள்
மீண்டுமீண்டு வந்தாலும்
மறவோமே மறவோமே
இன்னொருவர்க் கித்துயரம்
இனிவரஅனு மதியோமே

Wednesday, May 06, 2015

புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு

புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு


ஒளி இருப்பு விளங்க அது
பட வேண்டும் பொருள் மீது
பட்ட ஒளி விழ வேண்டும் 
பார்க்கும் கண் கள்மீது

பார்த்தவர் மதி சொல்லும்
பார்த்தது எது என்று
முழு மதியால் உணர்வோமே 
தெரிய வைத்தது ஒளி என்று

ஒளியைப் போல் மொழி துலங்கப்
பேசிப் படித்து எழுதிக் காட்ட
மக்கள் வேண்டும் ஊடகமாய்
காவிச் செல்லக் காவிகளாய்

புலம் பெயர்ந்து வந்தவர்கள்
புலன் இழந்து வீழவில்லை
வந்த இடம் புதிது என்று
வாய் பொத்தி நிற்கவில்லை

புகுந்த நாட்டு மொழியினிலே
புலமை நிலை நிறுத்திவிடு
அத்தோடு தேர்ச்சி பெறு
தமிழ் மொழியில் விரைவாக

இரண்டு மொழி மூன்று மொழி
இளமையிலே கற்ப தெளிது
மானிடரின் மதித் திறனில்
பல மொழிகள் புகுமிலகில்

மொழியார்வம் மிகுந்து விட்டால்
எமையாரும் மிதித்து விடார்
வெறி பிடித்துப் பிதற்றாமல்
வடிவாக வேலை செய்வோம்

நாம் வழங்கா நமது மொழி
நாளைக்கே மறந்துவிடும்
நாள் தோறும் புழங்கினாலோ
நம்மில் நிலை பெற்றுவிடும்

தமிழில் உரை யாடிடுவோம்
தமிழில் உற வாடிடுவோம்
தமிழ் தடக்குப் பட்டு நின்றால்
தெரிந்து கொள்ள முயன்றிடுவோம்

கணினித் தமிழ் யுகத்தினிலே
நமக் கெல்லாம் வலையில் விழும்
தேடிப் பார்க்கக் கூகிள் உண்டு
பகிர்ந்து பேச முகநூல் உண்டு

இத்தனை வாய்ப்பிருந்தும்
வரவில்லைத் தமிழென்றால்
குற்றமது யார் மேலே
குற்றமது யார் மேலே

வீண்புலம்பல் தனை விடுத்து
வீராப்பாய்த் துடித் தெழுந்து
பேசிடுவோம் படித்திடுவோம்
எழுதிடுவோம் நம் தமிழை

நாம் வளர்க்கத் தமிழ் ஒன்றும்
மரமும் அல்ல மகவும் அல்ல
வளர்ந்து நிற்கும் தமிழை நாம்
தினம் புழங்க அது நிலைக்கும்

தமிழ் வாழும் தமிழ் வாழும்
கோடி நூல்கள் கண்ட மொழி
எம்மில் தமிழ் தினம் இணைக்க
தலை நிமிர்ந்து தமிழ் வாழும்


ஒரு ஆண்டு மலருக்காக 2015 இல் எழுதியது