Friday, March 31, 2017

பிரியா விடை தாராய்

பிரியா விடை தாராய்

பிரிந்து செல்ல மனமின்றிக்
கால்களும் தடக்கி நிற்க
எத்தனை அன்புனக்கு
இருந்தும் நாம் பிரிய வேண்டும்

எத்தனை நாள் சேர்ந்திருந்தோம்
என்றென்றும் குளிர்ந்திருந்தோம்
அவ்வப்போ தேதாவது
விதவிதமாய்ப் பரிசளிப்பாய்
கரைச்சலே நீ தந்தாலும்
அவை உந்தன் பரிசல்லோ

இத்தனை அனுபவங்கள்
இதமாக எனக்களித்த
என் அருமைத் தோழமையே
உன்னைப் பிரிவதென்றால்
உன்போலே மிக வருத்தம்
எனக்குமுண்டன்றோ

பிரிவிங்கே வேண்டும் தான்
எல்லோர்க்கும் நலமதுவே
பிரியா விடை உனக்கு
கனடாக் குளிர்பனியே

March 31, 2017

Saturday, March 25, 2017

தமிழிற் பெயர் வைக்க

தமிழ ரென்று பெருமை கொள்ளுந்
தமிழ் மக்கள் நாம் எல்லாம்
நம் பெயரைத் தெரிவதற்கோ
நற்றமிழுக் குத்தயக்கம்

பிற மொழியின் கலப்பால் இன்று
குறை மொழி ஆகி நிற்கும்
தீந் தமிழின் குறை அகற்றி
அனைத்துலகத் தமிழருக்கும்
அழகாய் ஓர் அகராதி
தூய்மையான சொற்களோடு
அமைந்திடவே வேண்டுமன்றோ

திருக்குறள் போல் அதையும் நாம்
தினந் தினமே உசாவிடவே

உண்மையன் வாய்மையன்
என்றிருக்க வேண்டிய பேர்
சத்யன் என்று வரச்
சம்மதமோ சரியோ சொல்

அறன் அமைதி என்ற பெயர்கள்
தர்மன் சாந்தி ஆகலாமோ

இது போன்ற குறைகளையும்
களைய வேண்டுந் தமிழறிவு

பெயர் வைக்கப் பொருள் மிக்க
சொற் தேட வேண்டாமே
புதிதாகப் பேர்களை நாம்
உருவாக்கலாமே கேள்

தமிழ் எழுத்துச் சிலவற்றை
நாம் தெரிந்து எடுத்து வைத்துத்
தமிழிலக்கண விதி விலகாச்
சொல்லொன்று கூட்டுகையில்

புதிதாகப் பெயர் ஒன்று
உருவாகு மேயானால்
அதுவும் தமிழ்ப் பெயரே
தவறொன்று மில்லையே