Monday, May 22, 2017

மழை

மழை

கூரையில் விழும் துளியோசை
கூரையை அலைக்கும் காற்றோசை
இடையிடை இடிக்கும் இடியோசை
இவற்றைக் கொண்டே அறிவோமே
எத்துணை மழை பெய்யுதென்று

கூரையால் வடிந்த மழைநீர்
மண்ணில் போட்ட கோலங்கள்
சாலச் சொல்லுமே பெய்த மழையின்
வீச்சும் அளவும் எத்துணையென்று

மழையின் போது புவியில் தோன்றும்
சின்னச் சின்னக் குட்டைகளில்
வீழும் மழைத் துளி
போடும் வட்டமும் பொங்கும் துளியும்
வடிவாய்ச் சொல்லும்
மழையின் கனதி

அத்தனையும் தரும்
மழையின் அளவும்
மனதைக் கவரும்
மழையின் அழகும்
நினைவில் நீங்கா
ஓவியமாமே

Saturday, May 20, 2017

நாடகம்

நாடகம்

நடு வயதைக் கடந்தவர்கள்
நடிக்கின்றார் நாடகத்தில்
அவர் போடும் அரிதாரம்
வயதான முதியோராம்

முதியோராய்க் காட்ட அவர்
அடிக்க வேண்டும் வெள்ளைமை
அதை நினைக்கப் பொங்கிடுதே
அடக்க வொண்ணாப் பெருநகை

ஏற்கனவே நரைத்து விட்ட
தாடி தலை மீசையெல்லாம்
கறுப்படித்து வைத்திருக்கும்
அரைக் கிழவரெல்லாமே
அதற்குமேல் அடிக்கின்றார்
வெள்ளை நிறச் சாயந்தான்

நாடகத்துள் நாடகமா
வாழ்க்கையே நாடகமே
வந்து பாரீர் வந்து பாரீர்
நடிகமணி அலங்காரம்