Tuesday, January 02, 2007

தேசத்தின் குரல் - இரங்கல்

“தேசத்தின் குரல்” பாலசிங்கம் அவர்கள் மறைவு ஒரு பேரிழப்பு. அவர் கடும் சுகவீனமுற்ற செய்தி முன்னரே வந்து அதிர்ச்சியைத் தந்திருந்ததால், அவரின் இறப்புச் செய்தி பேரதிர்ச்சியை எமக்கு அளிக்கவில்லை. ஆனாலும், இறப்பு, அதுவும் ஒரு பெரும் சாணக்கியனின் இறப்பு, தாங்க முடியாத சோகமாகக் கவிழ்ந்தது எம் மேல். அவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்ளும் அதிட்டம் எங்கள் குடும்பததவர்க்குக் கிடைத்தது சோகத்திலும் ஒரு நற் பாக்கியம்.

வாகனங்களால் நிரம்பி வழிந்த தெருக்களில் வாகன நெரிச்சலைக் கட்டுப் படுத்த இலண்டன் பொலிசார் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மக்கள் வெள்ளமோ மண்டபத்தின் வெளியே மலைச் சரிவில் போடப்பட்ட வீதி போல் நெளிந்து நெளிந்து தெரு வரை இருக்க நாமும் அதில் இணைந்து எம் அஞ்சலியையும், வீர தீர வணக்கத்தையும் செலுத்தக் கூடியதாக இருந்தது.

அவர் மறைவிற்கு இரங்கல்:

பறந்து விட்டது பாலா உயிர்
இறந்து விட்டது பண்புப் பயிர்
அணைந்து விட்டது அறிவுச் சுடர்
தொலைந்து விட்டது துருவக் கதிர்

கலங்கி நிற்குது களமாடுந் தலை
கசங்கி நிற்குதுன் கனிவான துணை
குலுங்கி அழுகிற குரல் கேளாயோ
கலங்காது சாவைக் கரம் பற்றியோனே

சேனைத் தலைவன் தேடும் ஆணித் தரம்
சர்வ தேசத்தில் ஒலித்த சிங்கக் குரல்
இராச சாணக்கியத்தில் தேசக் குரல்
பால சிங்கத்தின்பட் டாசுக் குரல்

தேசத்தின் குரல் தாங்கி நிற்கும்
சாணக்கியன் குரல் தூங்கி நிற்கும்
சோகத்திலும் நாம் வேண்டி நிற்பது
தேசப் பெருமகனின் புகழுடல்