Saturday, November 08, 2008

இசை - மொழி – தமிழ் :: பகுதி 2 - மொழி

மனிதனின் கூர்ப்பின் ஒரு கட்டத்தில், அவன் மொழியொன்றைப் பேசத் தொடங்கிய போது, அந்த மொழியின் சொற்களை இசையிற் போட்டு மனித உணர்ச்சிகள் வெளிப்பட்ட போது இசைக்கு ஒரு புது வடிவம் கிடைத்திருந்திருக்கிறது. இசைக் கருவிகளிலிருந்து ஒலிக்கும் இசையாக வெளிப்படும் மனித உணர்ச்சிகள் சொற்களைக் கொண்டு ஒலிக்கும் போது பாடல்கள் இசைக்கத் தொடங்கின. இசைக்காக மொழியில் உருவான பாடல்களும், பாடல்களுக்காக உருவாகும் இசை வடிவங்களும் ஒன்றையொன்று வளர்க்கத் தொடங்கின.

சொற்களும் சொற்றொடர்களும் இசையோடு ஒலிக்க வேண்டுமானால், சொற்றொடர்கள் ஒரு ஒழுங்கில் கோர்க்கப்பட வேண்டுமென்ற கட்டாயம், பாட்டு உருவாக்கத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற அடுத்த கட்ட நிலைக்கு மொழியை எடுத்துச் சென்றது. ஓசை நயம் குன்றாமல் பாடுவதற்கு ஒலி நயத்தோடு கூடிய பாட்டுகள் உருவாகி அவை இசையை மெருகூட்டிய அதே நேரத்தில் மொழியின் வளர்ச்சியில் பாட்டு இயற்றும் துறை உருவாக அவை காரணியாக இருந்தன.

மனிதன் இசைத்தான். அதில் மொழியை இழைத்தான். இசையில் இழைக்கப்பட்ட மொழிக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்து அதன் வளர்ச்சிக்கு அது துணை புரிந்தது. ஒலியாய்த் தொடங்கிய இசை பாட்டாகிப் பல்கிப் பெருகியது.

மனித வளர்ச்சி பல்லாயிரம் வருடங்களூடாகப் பயணிக்கும் போது, மனிதன் பூகோள ரீதியாகப் பிரிந்து பரவத் தொடங்கினான். பிரிந்து பரவிய மனிதன் தான் சென்ற திசைகளில் தன் மொழியையும் திரித்து வழங்கிக் கால ஓட்டத்தில், வெவ்வேறான மொழிகளின் தோற்றத்திற்கும் வித்திட்டான். ஆனால் எல்லா மொழிகளிலும், மனிதனின் இசை வளர்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது.

கச்சேரி தொடரும் ...

No comments: