Saturday, October 21, 2023

 ஓர் அறிவு உயிர்  - ஓரறிவுயிர்  


உலக உயிரினங்களில் மிருகங்களைப் பொதுவாக ஐந்தறிவு உள்ளவை என்றும் மனிதர்களை ஆறறிவு படைத்தவர்கள் என்றும் நாம் வழங்கி  வருகிறோம்.

அப்படியானால் ஒன்று முதல் நான்கு வரையான அறிவு உள்ளவை என்ன என்று நாம் சிந்தித்திருக்கிறோமா?
அவற்றைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

“புல்லாகிப் பூடாகிப் புழுவாகி ....” என்று திருவாசகத்தில் பாடல் ஒன்று வருகிறது. இதில் புல்லையும் ஒரு உயிரினம் என்று உள்ளடக்கி விடுகிறார் மாணிக்கவாசகர்.

கொழுகொம்பு இல்லாத இடத்தில் முளைத்துவிட்ட முல்லைக் கொடிக்கு அதன் மேல் இரக்கப்பட்டு,  அது படர்ந்து வளர்வதற்காகத்  தன் தேரையே  விட்டுச்  சென்றார்  வள்ளல் பாரி.

"வாடிய பயிரைக்  காணும் போதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார்.

இப்படித் தாவரங்களின் உயிர்த் தன்மையைப் பல இடங்களில் பலரும் நினைவுறுத்திச்  சென்றுள்ளார்கள்.

இவற்றிற்கு உயிர் உள்ளது என்றும் அவற்றின் இயல்புகளைப்  பற்றியும்  ஆராய்ச்சி செய்து அதைப் பதிப்பித்தவர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பிரித்தானிய இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ்  சந்திரபோஸ்.

புல், பூண்டு, செடி, கொடி, மரம்  என்பவை  தொடுகை அல்லது தொட்டுணர்தல் என்ற உணர்வின் மூலம் தம் உயிர்ப்பையும் இருப்பையும் நிலை நாட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இது பலருக்கும் பல காலமாகவே விளங்கிய ஒரு தகவல் தான்.  சந்திரபோஸ் அவர்கள் செய்தது ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு நிறுவல் அவ்வளவே.

ஆனால் , தமிழர்கள் பெருமைப்படும் விதமாக எங்கள் பழந்தமிழ் நூல் கூறுவதைப் பார்ப்போமா?  
ஆம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எம் தமிழில் எழுதப்பட்ட நூலாம் தொல்காப்பியத்தில் சொல்லிவிட்டார் தொல்காப்பியர்.

உலகின் உயிரினங்கள் எல்லாவற்றையும் ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தி அவற்றை வரிசைப்படுத்தி உள்ளார் தொல்காப்பியர்.

அவற்றில், தாவரங்கள் ஓரறிவு உயிரினம் என்று மொழிகின்றார். மற்றைய நாம் அரிதாக அறிந்த இரண்டு, மூன்று, நான்கு அறிவுயிர்களையும் நமக்கு அறியத் தருகிறார்.

தொல்காப்பியமும் ஆய்ந்து அறிந்த பெரிய அறிஞரால் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட நூலே தான். ஆனால், காலம் வேறு. உறுதிப்படுத்திய சபைகள் வேறு. இன்றைய சபையில் ஏற்றப்பட வேண்டிய தேவை எழுகிறது. 

இதோ அந்தப் பாடல் வரிகள்.


தொல்காப்பியம்
    பொருளதிகாரம்
           மரபியல்

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
வண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே


(வளர் சஞ்சிகைக்கு 2023 இல் எழுதப்பட்டது.)