Sunday, November 09, 2008

இசை - மொழி – தமிழ் :: பகுதி 4 – பிற மொழி ஊடுருவல்


இப்பொழுது, தென்னிந்திய இசையாகப் பலர் படிப்பதும் பயிற்சி எடுத்துக் கொள்வதுமான கர்நாடக இசையைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்தக் கர்நாடக இசையில் வடமொழியிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட பாட்டுகள்
மட்டுமே முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்திய மற்ற மொழிகளை விட தெலுங்கும் வடமொழியும் முதன்மைப் படுத்தப் பட்டிருக்கும் காரணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

இந்திய வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்த வரலாற்றில் வட மொழியின் தாக்கமும் ஆதிக்கமும் வேதங்கள், புராணங்களூடாக வலுப்பெற்றிருப்பதைக் காண முடிந்திருக்கும். வடமொழி மக்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பரந்து வாழ நேர்ந்த காலங்களில், வட மொழியின் தாக்கமும் விரிந்து பரவத் தொடங்கியது. பரந்து கிடந்த பிராந்திய மொழிகளிலும் அம் மொழியினரின் இசை வடிவிலும் வட மொழி கொஞ்சங் கொஞ்சமாகக் கலக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தின் குருகுலக் கல்வி முறை, வடமொழிப் பாவனையை ஆதரித்துக் காத்த மன்னராட்சி முறை என்பன வடமொழியின் தாக்கம் தடையின்றிப் புகுந்து விளையாட உதவியாக இருந்தன. உள்ளூர் மக்களின் அறியாமையாலும், மன்னர்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளாலும் கலை, கல்வி போன்றவற்றில் முன்னிலையைத் தக்க வைத்த வடமொழியாளர்கள் தம் மொழியின் ஆதிக்கத்தை உறுதியாகவும் வேகமாகவும் உள்ளூரில் வளர்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் தம் மொழியின் இருப்பை விரும்பி உள்ளூர் மொழி வளர்ச்சியையும் அதிலிருந்த கலை வடிவங்களையும் தலையெடுக்காமலும் பார்த்துக் கொண்டார்கள். இந்தக் கைங்கரியத்தில் அவர்களுக்குப் பெரிய உதவியாக விளங்கியது அக்கால மக்களின் மதம் பற்றிய நம்பிக்கைகள். இந்த மத நம்பிக்கையையே அடி நாதமாகக் கொண்டது வட மொழியும் அதன் பாடல்களும். இதனால், வடமொழியும் அது சார்ந்த இசைவடிவும் மிக இலகுவில் மதப் பலவீனர்களாக இருந்த பாமரப் பிராந்திய மக்களிடையே திணிக்கப் படக்கூடியனவாக இருந்தன.

மன்னராட்சி நடந்து கொண்டிருந்த கால கட்டங்களில், எல்லா நாடுகளுமே அடிக்கடி வேறு வேறு நாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ் வருவதும் மாறுவதுமாக இருந்தன. இப்படியாக மாறி வரும் மன்னர்கள் தத்தம் மொழியின் பால் ஆதரவாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறாக ஒரு மொழியின் மேல் இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவது இயல்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவற்றில் அகப்படாமல் எம்மொழி வந்தாலும் அதற்கெல்லாம் ஈடு கொடுத்து மன்னர்களினதும் மக்களினதும் மத நம்பிக்கையை ஊடகமாக வைத்து வட மொழி தொடர்ந்து ஊடுருவிக் கொண்டேயிருந்தது. இதனாற் சொந்த மொழியில் இசை வளர்ச்சி என்பது சிதைந்து கொண்டே போனது. அவ்வப் பொழுது அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் நாட்டின் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காலங்களில் சொந்த மொழியில் இசையின் வளர்ச்சிக்குப் பங்காற்றினாலும் ஒரு முழு வளர்ச்சி என்பது எட்டப்பட முடியாமலேயே இருந்தது.

இந்த ஆட்சிச் சுழலிற் சிக்கியிருந்த தமிழ் அரசுகள் வீழ்வதும் எழுவதுமாக இருந்து வந்தன. எழுந்திருந்த காலங்களில் மதத்தையே ஊடகமாக வைத்துச் சைவத் திருமுறைகளும் வைணவ ஆழ்வார் பாடல்களும் வேறு பல ஆக்கங்களும் தமிழில் இசையோடு அறிமுகமாயின. ஆனாலும் தமிழரசுகள் வீழ்ந்த நேரத்தில் சைவத் திருமுறைகள் அமுக்கப் பட்டதும் பின்னர் ஒரு தடவை அவை குற்றுயிருங் குறையுயிருமாக வெளிக் கொணரப் பட்டதும் நாமெல்லாம் அறிந்ததே.


கச்சேரி தொடரும் ...

No comments: