Wednesday, July 01, 2020

பேராதனை 80

வானுயர் மலைகள் சூழ் கண்டி மாநகரம்
ஞானியர் விளையும் பேராதனை வளாகம்

ஆவலாய் விஞ்ஞான பீடமதிற் சேர்ந்து
கல்வியும் கேள்வியும் சிறக்கவென வெண்ணி
எண்பதாம் ஆண்டார்கள் வருகிறார் பிந்தி
விடுவிடென நுழைகிறார் எண்பத்து ஒன்றில்

விடுதிகளிற் புகுந்தவுடன் தொடங்கியது பகிடிவதை
விரிவுரைகள் கேட்கமுதல் விதவிதமாய்க் கண்டுகேட்டோம்
வெட்கத்தைக் கொன்றார்கள் கூச்சத்தை வென்றார்கள்
வெட்கமே வெட்கித் தலை குனிய வைத்தார்கள்

இடம்புதிது வளம்புதிது முகம்புதிது என்றாக
காலை உணவுக்குக் கடைவாசல் தேடி வந்து
பாண் பாகையாய் பரிப்பெக்காய் என்று கேட்டு
பழகினோம் புதியவற்றைப் பலதரப்பு மக்களுடன்

படித்தோம் கிழித்தோம் சிரித்தோம் களித்தோம்
சுற்றுலாக்களும் சென்றோம் சுத்தினோம் நாடளாவி
பத்தியம் தவறியதால் பாதியிலே வயிற்றோட்டம்
கபரணக் காட்டினிலே கலக்கி அடித்ததடா

அடிக்கின்ற அடியினிலே கழிப்பறையா தேடநேரம்
அங்கங்கே நிப்பாட்டி அவசர நிவாரணம்
அந்த அவத்தையிலும் அடித்தானே ஒரு பகிடி
மருசிறா இடம் மச்சான் அமத்தி வாசியடா

வழிபடவும் விழிபடவும் மலைமீது வீற்றிருக்கும்
குறிஞ்சிக் குமரனிடம் வெள்ளிகளில் பொடி நடை
போகமுதல் கேட்டிடுவான் சோறா சோட்டீற்சா
அதற்கேற்ப வயிற்றிலிடம் ஒதுக்கிவிட வேண்டுமன்றோ

பேராதனை வந்தும் பேடு தேடியோரும் உண்டு
தேடியவர் சிலருக்கு விழுந்தும் விட்டுதுகள்
போட்டவர்க்கு நீராட்டு அல்விஸ் குட்டையிலே
போடாதோர் தாமாக ஏன் குதித்தார் தெரியலையே

கலைவிழாக்கள் என்றாலே எம் பங்குமென்று முண்டு
மேடையிலே ஏறிடுவோம் பாட்டுக்கும் கூத்துக்கும்
அழற்பட்டோர் ஒலிவாங்கி பறித்தே எறிந்தாலும்
விடாது நம் கச்சேரி நடாத்தி முடித்தவர் நாம்

 தென்னிலங்கை நம்வாசம் எண்பது களிலென்றால்
எண்பத்து மூன்றுதனைக் கண்டவரில் நாமுமுண்டே
பண்பாடு தொலைத்தோரால் பலமாகத் தாக்குண்டோம்
பட்டதனாற் பழகிவிட்டோம் தடை தகர்த்து வாழ்வதற்கே

பல்லாண்டு போனதுவே நம்பயணம் புறப்பட்டு
நடுவழியில் இரு நண்பர் பிரிந்திட்டார் நமைவிட்டு
இப்போது செல்கின்றோம் பின்னாளில் நீர் வாரும்
என்றெண்ணிப் போய்விட்டார் மறக்கேலா தோழர்கள்

பசுமரத்து ஆணி போல பதிந்துவிட்ட நினைவுகளை
பலதடவை இரைமீட்டு பகிர்ந்து மகிழ்கின்றோம்
பாண்மனோ கினிகூரு ஜிம்கலி டோப்பென்று
பட்டப் பெயர்கள் பல மறக்காமல் உரைக்கின்றோம்

பட்டப்பெயர் கொண்டோம் பட்டங்களும் பெற்றோம்
பல்வேறு திசைகளிலே தூக்கி எறியப்பட்டோம்
இருந்தாலும் இடைக்கிடையே  கூடிக் களிக்கின்றோம்
இளைய நினைவுகளை இனிதே சுமக்கின்றோம்

செயபாலன் 2020

No comments: