Saturday, November 08, 2008

இசை-மொழி–தமிழ் :: பகுதி 3 - இனிமை


இசைக்கும், மொழிக்கும் முடிச்சுப் போடுவது பொருந்தாதென்று சில கருத்துகளும், இசையின் இனிமை மொழிகளில் தங்கியுள்ளது என்பது போன்ற சில கருத்துகளும் இங்கே நிலவுகின்றன. இசையின் இனிமையத் தீர்மானிப்பது இசையக் கேட்போரே. கேட்பவரின் முடிவைத் தீர்மானிப்பது அவர் இது நாள் வரை பழகிய இசை வகையறாக்கள். அவரது இசைப் பரிச்சியம் சாதாரணமாக அவரது தாயின் தாலாட்டில் தாய் மொழியில் தொடங்குகிறது. ஆக, இசைப் பரிச்சியம் தாய் மொழியில் தொடங்குவதையும் அதையே ஒருவர் முதலில் பழக்கப் படுத்தியிருப்பதையும் நாம் இங்கு காண்கிறோம். இதுவே இசை நுகர்வோரின் முடிவைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்கும். தனக்குப் பழக்கமான மொழியில் உரையாடும் போது கிடைக்கும் வசதி பழக்கமல்லாத மொழியில் உரையாடும் நேரங்களில் கிடைப்பதில்லை என்பது எங்களில் பலருக்குப் புரிந்த உண்மை. சொந்த மொழியின் இலகு நடையும் இனிமையும் வசதியும் வந்த மொழியில் கிடைக்க முடியாத ஒன்று. இதுவே சொந்த மொழிப் பாடல்களை நுகர்வதிலும் எற்படும் உணர்வாகும்.

ஒருவரது தாய் மொழியல்லாத மொழியில் இருக்கும் எப்பேர்ப்பட்ட இனிமையான பாட்டும் அவரது தாய் மொழியில் இருக்கும் ஒரு சாதாரணப் பாட்டை விட அவருக்கு இனிமையாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தப் பிற மொழிப் பாடலில் அவருள்ளே புகுந்து கொள்வது அப் பாடலின் இனிமையின் ஒரு பகுதியான இசை மட்டுமே. அப் பாடலின் மொழியில் கலந்திருக்கும் கவிச் சுவை அவரைச் சென்றடைவதில்லை. அதனால் அப் பாடலின் முழு இனிமையும் அவருக்குக் கிடைக்காது என்பது வெளிப்படையே.

அந்தப் பாடலின் இசையின் இனிமை அவரைச் சேர்வதற்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்திய உப கண்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்திய மொழிகளின் அனேகமான எல்லாப் பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஓசை அடிப்படையிலிருந்து இசைக்கின்றன. ஆகவே, எந்த ஒரு இந்தியப் பாடலின் இசை வடிவமும் எந்த ஒரு இந்தியருக்கும் கேட்கக் கூடியதாக இருப்பது இயற்கையே. இந்த அடிப்படை இசை இந்தியப் பாடல்களிலும், மத்திய கிழக்குப் பகுதிப் பாடல்களிலும் இருப்பதை நாம் காணலாம். அதனால் மத்திய கிழக்குப் பகுதி மக்களின் இசை கூட நமக்குள் தாக்கம் ஏற்படுத்துவது இலகுவே. இதன் அனுபவம் பலருக்கு ஏற்படடிருக்கலாம். ஒரு அன்னிய நாட்டில் தனித்து வசித்த பலர், அரேபிய மொழிப் பாடல்களைக் கேட்கக் கிடைத்திருந்தால் அது ஒரு தனி அனுபவம். இதுவே ஒரு சீன மொழிப் பாடலாக இருந்திருந்தால் அதனால் ஒரு தாக்கத்தை எற்படுத்தியிருக்க முடியாது. இன்னும் அரேபியா - இந்தியா என்பவற்றின் தொடர்பு, வரலாறு சார்ந்த ஒரு துறை. அதை விட்டு விட்டு நம் இசைப் பார்வைக்குத் திரும்புவோம்.

No comments: