Tuesday, December 20, 2011

அங்காடித் தெரு

திரைப்பட ஆய்வு செய்யத்
திராணி எனக்கில்லை
திரைக்கதை சாற்றும் உண்மை
திக்கற்றோர் துன்பலை

பல படங்கள் பார்த்து விட்டோம்
சில படங்கள் பதித்து விடும்
முத்திரை குத்தி
காஞ்சிவரம் அங்காடித்தெரு
பறித்ததோ நித்திரையை

நல்லதாய் ஒளிர்கிறது
வல்லரசாய் மிளிர்கிறது
வாய்கிழியக் கூவி விற்று
வக்கணையாய்ப் பதவி பெற்று
வந்ததெல்லாம் சுருட்டிக்கொண்டு
வண்ண வண்ண அரசுகளும்
வால்பிடிக்கும் அமைச்சுகளும்
வதைத்தெடுக்கும் ஊழியரும்
வலையமைப்பாய்த் தொடரும்
அநியாய அட்டூளியம்
அறுதியிட்டு நிற்கையேல்
அலைக்களியும் அப்பாவிச் சனம்

காவலரே கேவலமாய்க்
காசுக்கு வாய் பிளந்தால்
பாதகங்கள் செய்வோரைப்
பார்ப்பதுவும் யாரோ
பாவிகள் முறையீட்டைக்
கேட்பதுவும் யாரோ

உடனடியாய்த் தீர்வு தேட
இதுவொன்றும் மழையில்லை
தீர்வொன்றும் குடையுமில்லை

மனிதர்கள் மாறுவதும்
மனங்களை மாற்றுவதும்
மந்திரத்தால் நடந்துவிடா
மாற்றங்கள் தேவையென்றே
நற்குணங்கள் பிஞ்சிலேயே
போதிக்கத் தொடங்கிவிட்டால்
பாதி மக்கள் திருந்திடுவர்
நயமாக வாழ்ந்திடுவர்
-செயபால், மே 16, 2010

Tuesday, December 13, 2011

பாடகர்கள் ஜெயச்சந்திரன் - மது பாலகிருஸ்ணன்

1. மலரோ நிலவோ மலை மகளோ
2. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு



3. மஞ்சள் நிலாவுக்கு
4. ஆடி வெள்ளி தேடி வந்து
5. எங்கெங்கும் அவள் முகம்
6. சித்திரச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்
7. தவிக்குது தயங்குது ஒரு மனது
8. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்



போன்ற பல சிறந்த பாடல்களைப் பாடிய ஒரு அதிசயப் பாடகர் ஜெயச்சந்திரன். யேசுதாசிடம் இல்லாத ஒரு கவர்ச்சி அவர் குரலில் உண்டு. மெல்லிய சோகம் இழையோடும் பாடல்களை இவர் பாடும் போது அந்தப் பாடல்கள் பெரும் புகழடைந்திருந்தன.

இப்பொழுதெல்லாம் இவர் பாடல்கள் வருவதில்லை, வயதாகி விட்டது. இப்படிப்பட்ட பாடகருக்குப் பிறகு யார் வருவார் என்று ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடம் தீர்ந்த்து போல் ஒரு உணர்வு இந்தப் பாடலைக் கேட்டால் வரும். அந்தப் பாடல்,அபியும் நானும் படத்தில் உயிரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல்

வா வா என் தேவதையே - பொன்
வாய் பேசும் தாரகையே



படம் பார்க்கும் போது இது ஜெயச்சந்திரனின் இன்னொரு சிறந்த பாடல் என்று எண்ணிக் கொண்டிருந்தவேளை அதைப் பாடியவர் மது பாலகிருஸ்ணன் என்று அறிந்த போது அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டென்று நம்ப வைத்தது.

ஜெயச்சந்திரன் ரசிகர்களுக்காக இங்கே சில பாடல்கள்
http://mp3.tamilwire.com/p-jayachandran.html

Thursday, August 25, 2011

தாண்டவக்கோனே - கவர்ந்து போனாரே 2

காசு பணம் தேடிச் சென்றோம் தாண்டவக்கோனே - நாம்
கோடி சுகம் நாடிச் சென்றோம் தாண்டவக்கோனே

ஓடி ஒளிந்தே பறந்தோம் தாண்டவக்கோனே - நம்
தாயகத்தையே துறந்தோம் தாண்டவக்கோனே

பட்டழிந்தோம் கெட்டழிந்தோம் தாண்டவக்கோனே - நாம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம் தாண்டவக்கோனே

கட்டுக் காவல் கலைந்த நாட்டில் தாண்டவக்கோனே - அவர்
தட்டி பிரித்தே நுழைந்தார் தாண்டவக்கோனே

காடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - சுடு
காடும் பறி போனதண்ணே தாண்டவக்கோனே

வீடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - அட
நாடே பறி போனதண்ணே தாண்டவக்கோனே

ஏர் உழுத ஈர நிலம் தாண்டவக்கோனே - எங்கள்
ஏழை மக்கள் பாச நிலம் தாண்டவக்கோனே

கார் சூழ்ந்த கானகங்கள் தாண்டவக்கோனே - எல்லாம்
வேரோடே போனதண்ணே தாண்டவக்கோனே

மிச்ச சொச்ச சொந்த மெல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பச்சைப் புழுவாய்த் துடித்தார் தாண்டவக்கோனே

பட்டி கட்டிக் கமஞ் செய்தார் தாண்டவக்கோனே - இன்று
பட்டிக்குள்ளே அடை பட்டார் தாண்டவக்கோனே

குஞ்சு குரால் பிஞ்செல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பஞ்சையாய்ப் போனதண்ணே தாண்டவக்கோனே

கஞ்சிக்கே காவடியாம் தாண்டவக்கோனே - நாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே தாண்டவக்கோனே

வஞ்சகர்கள் காலமெல்லாம் தாண்டவக்கோனே - ஓர்நாள்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே தாண்டவக்கோனே

பொன்விளையும் புஞ்சை எல்லாம் தாண்டவக்கோனே - விரைந்து
வந்தமருங் கையிலோர் நாள் தாண்டவக்கோனே

Friday, August 19, 2011

தண்ணீர் போற்றுதும்

தண்ணீர் போற்றுதும்

பருகத் தண்ணீர்
பாய்ச்சத் தண்ணீர்
சோறுகறி எல்லாம்
காய்ச்சத் தண்ணீர்

கழுவத் தண்ணீர்
குளிக்கத் தண்ணீர்
நீந்தத் தண்ணீர்
துவைக்கத் தண்ணீர்

பயிர் விளையத் தண்ணீர்
உயிர் வாழத் தண்ணீர்
எத்தனை அதிசயம்
எத்தனை அற்புதம்
பாரீர் பாரீர்
தண்ணீர் பாரீர்

தின்னும் தொண்டை அடைத்தால் -அதை
இழக்க வேண்டும் தண்ணீர்
மேலும் விக்கல் எடுத்தால் - அதை
தடுக்க வேண்டும் தண்ணீர்

பயன்பட மட்டுமா தண்ணீர்
பயப்பட வேண்டாமா

மூழ்கினால் இறப்பு
பேரலையாக அடிப்பு
கொதிநீராக அவிப்பு
எனக் கொல்லவும்
செய்யும் இவ் அப்பு

ஆக்க அழிக்க
மட்டுமா தண்ணீர்
அழகாய் இரசிக்கவும்
அழகு தண்ணீர்

மழையின் அழகு
மனதைக் கவரும்

வெள்ளம் பாய்ந்துள்
மனதை வருடும்

நதியாய்ப் பாய்ந்து
அழகாய் நடக்கும்

குளமாய்க் கடலாய்
மனதை நிறைக்கும்

அலையாய் அடித்து
மனதை வெளுக்கும்

நீர் வீழ்வாய் வீழ்ந்து
மனக் கர்வம் அடக்கும்

வான வில்லாய்த் தோன்றி
விண்ணை அளக்கும்

வண்ணம் கூடத்
தண்ணீர் தானே

திண்மமாய்த் திரவமாய்
வாயுவாய் வடிவெடுத்து
எடுக்கும் வடிவிலெல்லாம்
கொடுக்கும் கொடை தண்ணீர்

இறந்தவர் கடன்தீர்க்க
ஒரு முழுக்கு
கோவிலைத் தொடக்க
குட முழுக்கு
துடக்குக் கழிக்க
ஒரு முழுக்கு
மூடக் கொள்கைக்கும்
இல்லை நீ விலக்கு

தண்ணீர் போல் தாராளம்
யார்க் குண்டு ஏராளம்
ஆதலால் நீவிர்
தண்ணீர் போற்றுதும்
தண்ணீர் போற்றுதும்

-செயபால்

Saturday, July 23, 2011

தமிழ் கற்றோம்

தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் ஒரு மாணவர் வாசிக்கும் கவிதை.

தந்தை தாய் கைப் பிடித்துக்
கலவர முகத்துடனே
நாலு வயதில் வந்தோம்
தமிழ்ப் பள்ளியினை நாடி

வணக்கம் கூறி வரவேற்றார்
வடிவாக ஆசிரியரும்
வணங்கி வரம் பெற்றதுபோல்
கற்றோம் தமிழை நாம்

ஆனா முதல் அகேனம் வரையும்
கானா முதல் னானா வரையும்
காணாத பல எழுத்தும் வாயில்
பூராத புது ஒலியும்
பழகினோம் பார்த்தோம்
எழுதியும் வந்தோம்

மொழி மட்டும் படிக்கவில்லை
தமிழ்ப் பள்ளியில் நாம்
தமிழ்ப் பண்பாடும் பழக்கமும்
வழக்கமும் அறிந்தோம் நாம்

புலம் பெயர்ந்து வந்த நாம்
புறம்பாகத் தேர்ச்சி பெற்றோம்
புலவர் பலர் வளர்த்து விட்ட
என்றும் புதுத் தமிழ் மொழியில்

கற்றது நல் தமிழ்
நம் பெற்றோர்க்குத் தந்தது
நன் மக்கள் எனும் பட்டம்
பெருமையாகப் பேசிக்கொள்வர்
எம் பெற்றோர் எம்மைப் பற்றி
தமிழ் தெரிந்த பிள்ளைகள் எம்
பிள்ளைகள் என்று நாளும்

முழுநேரக் கல்வியோ
புகுந்த மொழி மூலம்
மூச்சு விடுவதுமே
அம்மொழியில் என்றிருக்க
இரண்டரை மணித்துளிகளில்
இனிதாய்க் கற்றுவந்தோம்
தாய் மொழியாம் தமிழ் மொழியை

ஆண்டுகள் பத்து
கடந்து விட்ட இந்நிலையில்
தமிழ் தெரிந்த தமிழராகத்
திரும்பிப் பார்க்கிறோம்
கடந்து வந்த பாதையை நாம்
அன்பான பெற்றோரே
ஆசிரியரே தோழர்களே
அனைவருக்கும் நன்றிகள்
வாழ்த்துகள் வணக்கங்கள்

செயபால் 2010

Saturday, July 16, 2011

தமிழ் கேட்டேன், ஒரு மாணவனாக

அம்மாவிடம் என் அறிமுகம் கேட்டேன்
அப்பாவிடம் நான் அறிவுரை கேட்டேன்

பள்ளி செல்லும் ஆசையில் கேட்டேன் - தமிழ்ப்
பள்ளி என்ற சொல்லைக் கேட்டேன்

ஆனா ஆவன்னா முதலில் கேட்டேன்
அழகு தமிழில் பாடல் கேட்டேன்

சுவை மிகு கதைகள் நிறையக் கேட்டேன்
முத்தமிழ் மூலம் கலைகள் கேட்டேன்

அவ்வையின் ஆத்திசூடி கேட்டேன்
வள்ளுவன் தந்த திருக்குறள் கேட்டேன்

பாட்டுக்கொரு கவி பாரதி கேட்டேன்
பாரதிதாசன் பாடலும் கேட்டேன்

தொல்காப்பியத்தில் இலக்கணம் கேட்டேன் - பல்
ஆயிரமாண்டுப் பழமை கேட்டேன்

இலக்கியம் இயற்றும் யாப்புக் கேட்டேன்
யாப்பைக் காத்த சங்கம் கேட்டேன்

இன்னும் படிக்கும் ஆவலில் கேட்டேன்
உயர்தர வகுப்பும் உண்டெனக் கேட்டேன்

கற்றது கையளவாமெனக் கேட்டேன்
பென்னம் பெரிய கைகள் கேட்டேன்

விட்டது உலகளவாமெனக் கேட்டேன்
சின்னஞ் சிறிய உலகம் கேட்டேன்

அம்மா அப்பா வாழ்த்துக் கேட்டேன்
ஆசிரியர்கள் ஆசியும் கேட்டேன்

அன்புடன் இப்போ வணக்கம் கேட்பேன்
வாழ்நாள் முழுக்கத் தமிழைக் கேட்பேன்

செயபால் 2011