Thursday, August 25, 2011

தாண்டவக்கோனே - கவர்ந்து போனாரே 2

காசு பணம் தேடிச் சென்றோம் தாண்டவக்கோனே - நாம்
கோடி சுகம் நாடிச் சென்றோம் தாண்டவக்கோனே

ஓடி ஒளிந்தே பறந்தோம் தாண்டவக்கோனே - நம்
தாயகத்தையே துறந்தோம் தாண்டவக்கோனே

பட்டழிந்தோம் கெட்டழிந்தோம் தாண்டவக்கோனே - நாம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம் தாண்டவக்கோனே

கட்டுக் காவல் கலைந்த நாட்டில் தாண்டவக்கோனே - அவர்
தட்டி பிரித்தே நுழைந்தார் தாண்டவக்கோனே

காடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - சுடு
காடும் பறி போனதண்ணே தாண்டவக்கோனே

வீடு பறி போனதண்ணே தாண்டவக்கோனே - அட
நாடே பறி போனதண்ணே தாண்டவக்கோனே

ஏர் உழுத ஈர நிலம் தாண்டவக்கோனே - எங்கள்
ஏழை மக்கள் பாச நிலம் தாண்டவக்கோனே

கார் சூழ்ந்த கானகங்கள் தாண்டவக்கோனே - எல்லாம்
வேரோடே போனதண்ணே தாண்டவக்கோனே

மிச்ச சொச்ச சொந்த மெல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பச்சைப் புழுவாய்த் துடித்தார் தாண்டவக்கோனே

பட்டி கட்டிக் கமஞ் செய்தார் தாண்டவக்கோனே - இன்று
பட்டிக்குள்ளே அடை பட்டார் தாண்டவக்கோனே

குஞ்சு குரால் பிஞ்செல்லாம் தாண்டவக்கோனே - அங்கே
பஞ்சையாய்ப் போனதண்ணே தாண்டவக்கோனே

கஞ்சிக்கே காவடியாம் தாண்டவக்கோனே - நாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே தாண்டவக்கோனே

வஞ்சகர்கள் காலமெல்லாம் தாண்டவக்கோனே - ஓர்நாள்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே தாண்டவக்கோனே

பொன்விளையும் புஞ்சை எல்லாம் தாண்டவக்கோனே - விரைந்து
வந்தமருங் கையிலோர் நாள் தாண்டவக்கோனே

2 comments:

பூங்குழலி said...

ஏர் உழுத ஈர நிலம் தாண்டவக்கோனே - எங்கள்
ஏழை மக்கள் பாச நிலம் தாண்டவக்கோனே

கார் சூழ்ந்த கானகங்கள் தாண்டவக்கோனே - எல்லாம்
வேரோடே போனதண்ணே தாண்டவக்கோனே

:(

Jeyapalan said...

வரவுக்கும் உங்கள் பின் ஊட்டத்திற்கும் நன்றி.