Tuesday, October 03, 2017

ஈழ நாடு

இலங்கையில் விடுதலைப் போராட்டக் காலங்களில் (1970 - 2010), ஈழம், ஈழவர், ஈழ  என்ற சொற்கள் மிக அதிகமாகப் புழக்கத்திற்கு வந்திருந்தன.
அதற்கு முன்னர் ஈழ நாடு என்றொரு பத்திரிகை, இலங்கையின் பழைய பெயர் ஈழம் என்ற அளவில் புழக்கத்தில் இருந்தது தான் ஈழம்.


ஈழ மக்களை ஈழவர் என்று அழைத்து மகிழ்ந்தும் இருந்தோம், சில காலம்.
திடீரென, ஈழத்தவர்க்குக் கொஞ்சம் பரந்துபட்ட அறிவு தெளிந்த போது, ஈழவர் என்பதில் ஒரு நிறுத்தல் ஏற்பட்டது. அந்தச் சொல்லை அறவே தவிர்த்து விட்டு இலகுவில் வெளியே வந்து விட்டார்கள். காரணம் என்னவென்றால், கேரளாவில் இருக்கும் ஈழவர் மக்களும் அவர்களின் சமூக நிலையும். ஈழ வேட்கை வீரியர்களிற் பலர் தம்மை ஈழவ இனமாக அடையாளம் காணத் தயாராக இருக்கவில்லை. சாதீயம் முன்னுரிமை எடுத்துக் கொண்டது.


ஆனால், இலங்கை, ஏன் ஈழம் என்ற பெயரால் வழங்கப்பட்டது?

இலங்கை முழுவதுமே சுமார்  ஒரு பத்து இருபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஈழவ மக்கள் வாழ்ந்த நாடாக இருந்திருக்க வேண்டும். அதனால் ஈழ நாடு என்ற பெயர் வந்திருக்கலாம். சேர நாட்டிலும் அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். கேரளாவில் அவர்களின்  தற்போதைய மக்கட் தொகையைப் பார்க்கும் போது அவர்கள் ஒரு காலத்தில் பெருந்தொகையாக வாழ்ந்த இனமாக இருக்க வேண்டும் என்று கொள்ளலாம். அவ்வாறே அவர்கள் ஈழத்திலும் இருந்திருக்க வேண்டும்.

அந்த ஈழவ மக்கள் பல்கிப் பெருகி அவரிடையே வேற்றுமைகள் உருவாகிக் காலப் போக்கில் அவர்கள் இனப் பெயர்கள் மாற்றமடைந்து இன்னமும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறொரு பெயரால், அவர் அடையாளம் சிதைக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு வாழ்கிறார்கள்.
இப்படிச் சிதைக்கப்பட்டவர்களிற் சிலர்  தமிழகத்தில் வாழ்ந்து வருபவர்கள் (நாடார்). இவர்கள்  இன்னொரு சிதைக்கப்பட்ட பெயரால் அழைக்கபடுகிறார்கள். இந்த மக்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், அவர்கள் ஒரு பெரிய நாடாக ஒரு காலத்தில் விளங்கியிருக்கக் கூடியவர்கள் என்று கொள்ளலாம்.
நளவர், பள்ளர் என்ற இம்மக்களின் வரலாற்றை ஒரு ஆராய்ச்சியாளர், தந்திரமாகவோ அன்றி ஆய்வைச் செவ்வனே செய்யாமலோ, வேறொரு விதமாக 1960/70க களில் வெளியிட்டார். அது முழுக்க முழுக்கத் தவறே. நாடார் (ஈழவரோடு தொடர்பான ஒரு குழு) என்ற குழுவிலிருந்து வந்தவர் நளவர் என்று இலகுவில் கொள்ளாமல், சிங்களரிலிருந்து நழுவி வந்தவர்கள் என்று ஒரு ஆய்வாளர் பிதற்றியிருந்தார்.

இலங்கைக்கு, பின்னர் ஒரு காலத்தில் வந்த ஒடிசாப் பகுதி மக்கள் உள்ளுர் மக்களுடனும் தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர்களுடனும் கலந்து இன்னொரு இனம் தோன்றியதும் இப்பொழுது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.

பின்னொரு காலத்தில் 1900 ஆண்டுகளில் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் வேண்டிப் பேச்சுகள் நடைபெற்ற காலங்களில், பிரித்தானிய இலங்கையில் ஒரு மக்கள் கணக்கெடுப்பைச் சாதி வாரியாக எடுத்தார்கள். சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் மக்களில் யாரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கலாம் என்று நினைத்து எடுத்திருக்கக் கூடும். இந்தக் கணக்கெடுப்பில், தமிழர் மத்தியில் இருந்த புள்ளிவிபரம் வியக்கத் தக்கதாக இருந்தது. ஒடுக்கப் பட்ட மக்கள் என்றிருந்தவர்கள் ஏறக்குறைய 70% ஆக இருந்தார்கள். அதிலும், ஈழவர்க்கு நெருங்கிய இனங்களாக இருந்த இரு பெரும் பிரிவினரும் சேர்ந்து 50% அளவில் இருந்தார்கள் ஈழ நாட்டில்.

Sunday, August 13, 2017

நினைவாலே சிலை செய்து

நினைவாலே சிலை செய்து

அந்தமான் காதலி படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
பாடியவர்கள்: யேசுதாஸ், வாணி ஜெயராம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விசுவநாதன்

இந்தப் பாடலை கேட்கும்போது பின்வருமாறு ஒலிக்கும்.
ஆண்:  
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
தெருக்கோவிலே ஓடி வா ஆ...  
தெருக்கோவிலே ஓடி வா...
பெண்:
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ...
திருக்கோவிலே ஓடி வா...

இதில், ஆண் பாடியதைத் தவறென்றும் தமிழ் உச்சரிப்புத் தெரியாத பாடகர் பாடியதால் தவறிழைத்தார் என்றுங் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகிறது.

திரு. யேசுதாஸ் இவ்வளவு ஆண்டுகளாகத் தமிழிற் பாடி வருகிறார், இன்னும் அவருக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லை என்பது ஒரு நெருடல் தான். நம்மில் எத்தனையோ பேர் எத்தனையோ மொழிச் சூழலில் வாழும் நிலை ஏற்பட்ட போது அந்தந்த மொழிகளைப் பேசும் ஆற்றலை ஒரு ஐந்து ஆண்டுகளுக்குள் பெற்று விடுகிறோம். ஆனால் சிலருக்கு இது முடிவதில்லை. விட்டு விடுவோம்.

திரு – தெரு
திரு என்ற சொல்லை ஒரு மலையாள மொழியார்க்கு உச்சரிக்கத் தெரியாதென்பது சரியான வாதம் இல்லை. மலையாளத்தில் திரு என்ற சொல் தாராளமாக உள்ளது. உதாரணம்: திருவனந்தபுரம். ஆக, திரு. யேசுதாசுக்கு, திரு என்பது ஒரு தடையல்ல.

கவிஞரோ இசையமைப்பாளரோ பாடற் பதிவின் போது இருந்திருக்கவில்லை, அதனாற் திருத்தப் படாமல் போய்விட்டது என்று ஒரு காரணத்தைப் பின்னாளில், திரு யேசுதாஸ் அவர்கள் கூறியிருந்தார். அதுகூட நம்பும் படியாக இல்லை. ஏனென்றால் இந்தப் பாடல் பதிவான காலத்தில் (1978) பாடகர்கள் தத்தம் வசதிக்கேற்ப வெவ்வேறு நேரங்களிற் குரலைப் பதிவு செய்யும் வசதி வந்திருக்கவில்லை. எனவே இருவரும் சேர்ந்தே பாடிப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது, அருகிலிருந்து பாடிய வாணி ஜெயராம் அவர்கள் மிக அழுத்தந் திருத்தமாகப் பாடியதைக் கவனித்துத் திருத்தியிருக்கலாம்.
ஆக, இங்கே திருத்த வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை என்பது வெளி வருகிறது.

என் மனதிற் படும் காரணம் இதோ:
ஆண் பாடும்போது, ”தெருக்கோவிலே” என்று விளிப்பதும், பெண் பாடும்போது “திருக்கோவிலே” என்று விளிப்பதும் நோக்கத்தோடு தான் நடந்திருக்கிறது. அதாவது, அந்தப் படத்தில் வரும் பெண், பணமோ செல்வாக்கோ படிப்போ இல்லாத ஒரு ஏழைப் பெண்ணாகவே வருகிறாள். ஆனால், நாயகனோ ஒரு பெரிய ஆள். இந்த நோக்கில், நாயகனை மரியாதைக்குரிய திருக்கோவிலாகவும், பெண்ணின் ஏழ்மையைக் கருதி அவளை ஒரு தெருவிற் கிடந்த மாணிக்கமாகக் கருதி தெருக்கோவில் என்றும் விளித்திருக்கலாம்.

இந்தக் கருத்துப்படக் கவிஞரே எழுதியிருக்கலாம் அல்லது பாடற் பதிவின் போது இருந்தவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

எனவே இங்கே திரு. யேசுதாசில் தவறு காணப்படவில்லை என்பது என் கருத்து.







Wednesday, July 05, 2017

தண்ணீரைப் போற்றுவோம்

மணிமேகலை பிரசுரத்தால் பதிக்கப்பட்ட எனது கவிதைத் தொகுப்பு இங்கே தரப்படுகிறது.

தண்ணீரைப் போற்றுவோம்

Sunday, June 18, 2017

ஒட்டாவா தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா 2017: வகுப்பு 8

Monday, May 22, 2017

மழை

மழை

கூரையில் விழும் துளியோசை
கூரையை அலைக்கும் காற்றோசை
இடையிடை இடிக்கும் இடியோசை
இவற்றைக் கொண்டே அறிவோமே
எத்துணை மழை பெய்யுதென்று

கூரையால் வடிந்த மழைநீர்
மண்ணில் போட்ட கோலங்கள்
சாலச் சொல்லுமே பெய்த மழையின்
வீச்சும் அளவும் எத்துணையென்று

மழையின் போது புவியில் தோன்றும்
சின்னச் சின்னக் குட்டைகளில்
வீழும் மழைத் துளி
போடும் வட்டமும் பொங்கும் துளியும்
வடிவாய்ச் சொல்லும்
மழையின் கனதி

அத்தனையும் தரும்
மழையின் அளவும்
மனதைக் கவரும்
மழையின் அழகும்
நினைவில் நீங்கா
ஓவியமாமே

Saturday, May 20, 2017

நாடகம்

நாடகம்

நடு வயதைக் கடந்தவர்கள்
நடிக்கின்றார் நாடகத்தில்
அவர் போடும் அரிதாரம்
வயதான முதியோராம்

முதியோராய்க் காட்ட அவர்
அடிக்க வேண்டும் வெள்ளைமை
அதை நினைக்கப் பொங்கிடுதே
அடக்க வொண்ணாப் பெருநகை

ஏற்கனவே நரைத்து விட்ட
தாடி தலை மீசையெல்லாம்
கறுப்படித்து வைத்திருக்கும்
அரைக் கிழவரெல்லாமே
அதற்குமேல் அடிக்கின்றார்
வெள்ளை நிறச் சாயந்தான்

நாடகத்துள் நாடகமா
வாழ்க்கையே நாடகமே
வந்து பாரீர் வந்து பாரீர்
நடிகமணி அலங்காரம்

Friday, March 31, 2017

பிரியா விடை தாராய்

பிரியா விடை தாராய்

பிரிந்து செல்ல மனமின்றிக்
கால்களும் தடக்கி நிற்க
எத்தனை அன்புனக்கு
இருந்தும் நாம் பிரிய வேண்டும்

எத்தனை நாள் சேர்ந்திருந்தோம்
என்றென்றும் குளிர்ந்திருந்தோம்
அவ்வப்போ தேதாவது
விதவிதமாய்ப் பரிசளிப்பாய்
கரைச்சலே நீ தந்தாலும்
அவை உந்தன் பரிசல்லோ

இத்தனை அனுபவங்கள்
இதமாக எனக்களித்த
என் அருமைத் தோழமையே
உன்னைப் பிரிவதென்றால்
உன்போலே மிக வருத்தம்
எனக்குமுண்டன்றோ

பிரிவிங்கே வேண்டும் தான்
எல்லோர்க்கும் நலமதுவே
பிரியா விடை உனக்கு
கனடாக் குளிர்பனியே

March 31, 2017

Saturday, March 25, 2017

தமிழிற் பெயர் வைக்க

தமிழ ரென்று பெருமை கொள்ளுந்
தமிழ் மக்கள் நாம் எல்லாம்
நம் பெயரைத் தெரிவதற்கோ
நற்றமிழுக் குத்தயக்கம்

பிற மொழியின் கலப்பால் இன்று
குறை மொழி ஆகி நிற்கும்
தீந் தமிழின் குறை அகற்றி
அனைத்துலகத் தமிழருக்கும்
அழகாய் ஓர் அகராதி
தூய்மையான சொற்களோடு
அமைந்திடவே வேண்டுமன்றோ

திருக்குறள் போல் அதையும் நாம்
தினந் தினமே உசாவிடவே

உண்மையன் வாய்மையன்
என்றிருக்க வேண்டிய பேர்
சத்யன் என்று வரச்
சம்மதமோ சரியோ சொல்

அறன் அமைதி என்ற பெயர்கள்
தர்மன் சாந்தி ஆகலாமோ

இது போன்ற குறைகளையும்
களைய வேண்டுந் தமிழறிவு

பெயர் வைக்கப் பொருள் மிக்க
சொற் தேட வேண்டாமே
புதிதாகப் பேர்களை நாம்
உருவாக்கலாமே கேள்

தமிழ் எழுத்துச் சிலவற்றை
நாம் தெரிந்து எடுத்து வைத்துத்
தமிழிலக்கண விதி விலகாச்
சொல்லொன்று கூட்டுகையில்

புதிதாகப் பெயர் ஒன்று
உருவாகு மேயானால்
அதுவும் தமிழ்ப் பெயரே
தவறொன்று மில்லையே

Saturday, January 14, 2017

தமிழின் தரம் பேணல்

அண்மையில் ஒரு தமிழகத்  தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றம் பார்த்தேன்.
அதிலே பேசியவர்கள் பேராசிரியர்களும் வக்கீல்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும். அவர்கள் தம் பேச்சைத் தொடங்கும்போது அழகு தமிழிற் தொடங்கி வணக்கவுரை முடிந்ததும் விவாதத்தைத் தொடங்கும்போது தூய்தற்ற தமிழில் ஆரம்பித்தார்கள்.

இப்படிப் போகிறது அவர்கள் பேச்சுகள். “இன்னிக்கி என் வூட்டுக்கார அம்மா சொன்னாய்ங்க ……..”.

வியப்பாக, வேதனையாக இருக்கிறது. படித்த தகுதிகள் பல மிக்க இந்தப் பேச்சாளர்கள் ஒரு மேடையில், இப்படிப் பேசுவது எவ்வளவு தவறென்பதை அறியாதவர்களா? இவற்றைப் பார்ப்பவர்கள் முக்கியமாகக் குழந்தைகள் அறியப் போகும் தமிழ் எது? தூய்வற்ற தமிழ் தானே? நல்ல தமிழ் கற்கவோ எழுதவோ அவர்கள் சங்க இலக்கியங்களையா தேட வேண்டும்? தனியாக ஒரு பள்ளிக்கா செல்ல வேண்டும்? கண்டு கேட்டுப் படிக்க முடியாத மொழியா நம் மொழி?

”தழிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது” என்று ஒரு ஆய்வாளர் சொல்கிறார். நாம் தமிழை மேடைகளில், தூய்வற்ற முறையிற் பேசினால், தொடர்ச்சி எப்படித் தொடரும். சங்க காலத் தமிழோடு தமிழின் தரம் போய் விடுமே.

சங்க இலக்கியங்கள், திருக்குறள் மற்றும் 200 ஆண்டுகளுக்கு முந்தைய  தரமான படைப்புகளுக்கு விளக்கவுரை எழுத வேண்டிய நிலை ஏன் எழுகிறது? தமிழைத் தரமாகப் படிக்காதவர்கள் பொறுக்கி வைத்திருக்கும் தமிழறிவைக் கொண்டு அந்த இலக்கியங்களைப் படிக்க முயலும்போது இன்னிலை உருவாகிறது.

ஏன், பாரதியின் கவிதைகளுக்கே விளக்கவுரை கேட்போர் இப்பொழுது இருக்கிறார்கள். அவ்வளவு தரம் அவர்களின் தமிழ்த் தரம்.

இன்றைய கவிஞர்கள், எழுத்தாளர்களிற் பலர், தூய்தற்ற தமிழ்ச் சொற்களைக் கொண்டு தமது ஆக்கங்களை உருவாக்குகிறார்கள். இவர்களின் படைப்புகள் ஒரு பானை பாலில் ஒரு துளி நஞ்சு போலத் தமிழைக் கொல்லும் ஆயுதங்கள். இதைப் படைப்பாளிகள் உணர வேண்டும்.

தூய தமிழைப் புழங்குவோம் என்று, மேடைகள், படைப்புகள், ஊடகங்கள் என்பவை தம் கடமையாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் தமிழ் சிறக்கும்.

கானல் நீர்

இல்லாதவற்றை இருப்பதாய் எண்ணித்
தள்ளாடும் தமிழுலகே இந்தப்
பொல்லாத எண்ணங்கள் உன்னை யிங்கே
செல்லாத காசாகச் செய்விக்குங் கொடுமையைக்
கல்லாக உணராது கனவுலகில் வாழ்ந்து
கணக்கின்றித் துய்க்கின்றீர் துயரை நீரே

அண்மையில் மறைந்திட்ட அம்மாவை நீரும்
அதிகமாய்ப் புகழ்ந்திட்டீர் ஆறுதல் அடைந்திட்டீர்
அவர்செய்த தொண்டுகள் எவ்வளவே யானாலும்
அத்தோடு செய்திட்ட எண்ணற்ற கொள்ளைகளை
எண்ணித்தான் பார்த்தீரோ நிறுத்துத்தான் பார்த்தீரோ

நாடகந்தோறும் நல்லோராய் நடிப்போரை
தலைவா வென்றும் தளபதி யென்றும்
மகுடமும் மதிப்புங் கொடுப்பீர் நீரே
நாடக மகற்றி அவர்தம் தகுதி
மதித்துப் பார்த்தீரோ அனு பவித்துப் பார்த்தீரோ

சரியோ பிழையோ எதுவானாலும்
அளவேயிலாது தூக்கிப் பிடித்து
அலட்டிக் கொளாது முன்னோர் போல
ஆய்ந்து அறிந்து நீதி செய்தால்
பாரோர் போற்றும் வல்லவராய்
நாமும் உலகில் நிலை பெறலாம்
2017-01-14 பொங்கல்