Saturday, January 14, 2017

தமிழின் தரம் பேணல்

அண்மையில் ஒரு தமிழகத்  தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றம் பார்த்தேன்.
அதிலே பேசியவர்கள் பேராசிரியர்களும் வக்கீல்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும். அவர்கள் தம் பேச்சைத் தொடங்கும்போது அழகு தமிழிற் தொடங்கி வணக்கவுரை முடிந்ததும் விவாதத்தைத் தொடங்கும்போது தூய்தற்ற தமிழில் ஆரம்பித்தார்கள்.

இப்படிப் போகிறது அவர்கள் பேச்சுகள். “இன்னிக்கி என் வூட்டுக்கார அம்மா சொன்னாய்ங்க ……..”.

வியப்பாக, வேதனையாக இருக்கிறது. படித்த தகுதிகள் பல மிக்க இந்தப் பேச்சாளர்கள் ஒரு மேடையில், இப்படிப் பேசுவது எவ்வளவு தவறென்பதை அறியாதவர்களா? இவற்றைப் பார்ப்பவர்கள் முக்கியமாகக் குழந்தைகள் அறியப் போகும் தமிழ் எது? தூய்வற்ற தமிழ் தானே? நல்ல தமிழ் கற்கவோ எழுதவோ அவர்கள் சங்க இலக்கியங்களையா தேட வேண்டும்? தனியாக ஒரு பள்ளிக்கா செல்ல வேண்டும்? கண்டு கேட்டுப் படிக்க முடியாத மொழியா நம் மொழி?

”தழிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது” என்று ஒரு ஆய்வாளர் சொல்கிறார். நாம் தமிழை மேடைகளில், தூய்வற்ற முறையிற் பேசினால், தொடர்ச்சி எப்படித் தொடரும். சங்க காலத் தமிழோடு தமிழின் தரம் போய் விடுமே.

சங்க இலக்கியங்கள், திருக்குறள் மற்றும் 200 ஆண்டுகளுக்கு முந்தைய  தரமான படைப்புகளுக்கு விளக்கவுரை எழுத வேண்டிய நிலை ஏன் எழுகிறது? தமிழைத் தரமாகப் படிக்காதவர்கள் பொறுக்கி வைத்திருக்கும் தமிழறிவைக் கொண்டு அந்த இலக்கியங்களைப் படிக்க முயலும்போது இன்னிலை உருவாகிறது.

ஏன், பாரதியின் கவிதைகளுக்கே விளக்கவுரை கேட்போர் இப்பொழுது இருக்கிறார்கள். அவ்வளவு தரம் அவர்களின் தமிழ்த் தரம்.

இன்றைய கவிஞர்கள், எழுத்தாளர்களிற் பலர், தூய்தற்ற தமிழ்ச் சொற்களைக் கொண்டு தமது ஆக்கங்களை உருவாக்குகிறார்கள். இவர்களின் படைப்புகள் ஒரு பானை பாலில் ஒரு துளி நஞ்சு போலத் தமிழைக் கொல்லும் ஆயுதங்கள். இதைப் படைப்பாளிகள் உணர வேண்டும்.

தூய தமிழைப் புழங்குவோம் என்று, மேடைகள், படைப்புகள், ஊடகங்கள் என்பவை தம் கடமையாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் தமிழ் சிறக்கும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்...

Jeyapalan said...

Thanks.