Friday, June 22, 2007

புளிக்கும் நினைவுகள்

ஒரு நாள் ஆப்பிள் ஒன்றைக் கடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அதன் சுவை எங்கோ சுவைத்த ஒரு சுவையைப் பொறியிற் தாக்கி ஞாபகப்படுத்தியது. நன்கு முயற்சித்த போது பொறியில் தட்டிய சுவை “செம்பழச்” சுவை என்பது உறைத்தது (புளித்தது). செம்பழச் சுவையென்றதும் அதனோடு கூடிய சகலதையும் கடின யோசனை செய்து அசை (சுவை) மீட்டுக் கொண்டேன். அதன் தாக்கம் புளிக்கும் நினைவுகள்.

யுத்தம் இல்லாத காலத்தில், இடம்பெயர முன்னர், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தெரு ஓரமாக ஓங்கி வளர்ந்த புளியமரம் ஒன்று. பெரிய கிளைகளைப் பரப்பி மிகவும் விசாலமாக வளர்ந்திருந்தது.

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக் கட்டி
புழுதியையே சட்டையாக அணிந்து திரிந்த காலத்தின் ஒரு பகுதி இந்தப் புளிய மரத்தின் கீழும் எனக்கும் என் தோழர்களுக்கும் கழிந்தது.

வசந்த காலத்தில், புதிய இலைகளுக்கான துளிர் வர ஆரம்பிக்கும். வெளிறிய பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில் மிக அழகாகத் துளிர்க்கும். கைக்கெட்டிய உயரத்தில் இருக்கும் இந்தத் துளிர்களை சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் இதன் சுவை. புளியும் இல்லை உவர்ப்பும் இல்லை.

பின்னர் கொஞ்ச நாட்களில், புளியம்பூ பூக்கத் தொடங்கும். பூவும் சாப்பிட நன்றாக இருக்கும். துளிர் போலவே இருக்கும், கொஞ்சம் புளிப்புக் கூடியிருக்கும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் பிஞ்சு பிடிக்கும். அந்தப் பிஞ்சைச் “சுண்டங்காய்” என்று அழைப்போம். வளைந்து வளைந்து வடிவாகவும் இருக்கும். சுண்டங்காயின் சுவை இன்னும் கொஞ்சம் புளிப்புக் கூடி இருக்கும்.

சில வாரங்களின் பின், சுண்டங்காய் முத்திப் புளியங்காய் என்ற நிலைக்கு வரும். புளிப்பும் முத்தத் தொடங்கியிருக்கும்.

மேலும் சில வாரங்களின் பின், புளியங்காயானது, காய்க்கும் பழத்திற்கும் இடைப்பட்ட பருவமாகிய “செம்பழம்” என்ற நிலைக்கு வரும். இந்தச் சுவை தான் நான் கடித்த ஆப்பிளில் இருந்தது. நல்ல பச்சை நிறத்திலிருந்த புளியங்காய் இப்பொழுது கொஞ்சம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். காயும் கனியத் தொடங்கும், சுவையும் மாறத் தொடங்கும். இப்பொழுது புளியம் பழத்தின் ஓடும் கொஞ்சம் நீக்கக் கூடியதாக இருக்கும். ஓடு நீக்கிய செம்பழம் கொஞ்சம் புளிப்புக் குறைந்தும் இருக்கும்.

இதன் பின் புளியம் பழம் தோன்றும். அதுவும் எங்கள் வாயிலிருந்து தப்பாது. ஆனால், புளியம்பழம் பழம் என்ற பேருக்காகவேனும் இனிக்க மாட்டாதே!!!!!. நாங்களும் இடைக் கிடையே புளியமரச் சொந்தக்காரனிடமும் பேச்சு, திட்டு, எறி வாங்கத் தப்பியதில்லை.

புளியைத் தின்று வாயைப் புண்ணாக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனால் உறைப்புக் கறி சாப்பிட முடியாமல் வீட்டிலும் அகப்பட்டுக் கொளவதும் …….

புளிப்போடு வந்து இனிக்கும் நினைவுகளும் …….

(வலையில் அகப்பட்ட சில படங்களுக்கு நன்றி)

Friday, March 30, 2007

என் வீட்டுப் பூக்கள்

அழகுக்கின்னொரு பெயர் பூவா?
மனவமைதிக்கரு மருந்து பூவா?

நிறங்களின் வித்தை பூவா?
மனங்களின் விம்பம் பூவா?

வண்டுக்கு மதுச்சாலை பூவா?
பெண்டுக்குப் பூச்சூட்டப் பூவா?

இயற்கையின் ஓவியம் பூவா?
இயற்கையின் காவியம் பூவா?

அழகே பூவா?
பூவே அழகா?


என்று மயங்க வைக்கும் பூக்களின் படங்கள் சில.

Monday, March 26, 2007

மரம் பற்றியொரு பாடல்

கீழேயிருக்கும் இணைப்பில் மரம் என்ற சொல்லை எப்படியெல்லாம் பாவித்துக் கவி புனைந்தார் நம் முன்னோர் என்று பாருங்கள். இதை திரட்டித் தருபவர் அகத்தியர் குழுவை நடாத்தும் தமிழறிஞர் மருத்துவர் ஜெயபாரதி.
வாழ்க அவர் பணி.

http://www.visvacomplex.com/Maramadhu_MaraththilERi___.html

Tuesday, March 20, 2007

பீத்தல்

இன்று மதனின் மாறாட்டத்தைச் சாடி எழுதியிருந்த பதிலடிக்கு ( பார்க்க http://varalaaru-ezine.blogspot.com/2007/03/blog-post.html ) ஒரு பின்னூட்டம் இடும்பொழுது தானாக வந்து விழுந்தது "பீத்தல்" என்ற சொல். இது ஈழத்தில் பாவனையில் இருக்கும் சொல் தான். தமிழக மக்களும் இதைப் பாவிப்பதைக் காண்கிறேன். இந்தச் சொல்லில் இரு பொருள்கள் இருப்பது உடனே உறைக்கிறது.

1. பீத்தல்: ஈழத்தில் ஓட்டை அல்லது துவாரம் என்ற பொருள் படப் பாவிக்கப் படுகிறது. பீத்தல்ப் பேணி, பீத்தல் சட்டை என்று சொல்லப்படும்.

2. பீத்தல்: பிதற்றல் என்ற சொல்லின் மருவிய வடிவமாகத் தான் தமிழகத்தில் அறியப் படுகிறது என்று எண்ணுகிறேன். ஈழத்தில் இப்படிப்பட்ட பாவனையில்லை என்பது என் விளக்கம். "மதனின் பீத்தல் தெரிகிறது" என்று சொல்லும் போதும், மதன் பிதற்றுவது தெரிகிறது என்றல்லாமல், மதனில் (அல்லது மதனின் அறிவில்) இருக்கும் ஓட்டை தெரிகிறது என்பது தான் விளக்கம்.

அன்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

Thursday, February 15, 2007

உறைந்து விட்ட நயகரா நீர் வீழ்ச்சி

நண்பர் ஒருவர் இந்தப் படங்களை அனுப்பியிருந்தார். ஓடிப் போய்ப் பார்த்து விடுவோம். இந்தக் குளிரிலும் மீற்றர்க் கணக்காகப் பொழியும் பனியிலும் இது நடந்திருக்கும். நயகரா என்ன எரிமலையே உறைந்துவிடும். முதலில் இங்கே பார்த்து விட்டுப் பின்னர் நேரிற் பார்ப்போம்.







1911 இல் நடந்ததைத் தான் இங்கே தர முடிந்தது.
இந்த ஆண்டில் உறைந்தால் நாங்கள் அதிட்டசாலிகள். உறையலாம். பார்க்கலாம்.

Tuesday, February 13, 2007

பார்த்த படம்

நான் அவ்வப் பொழுது பார்க்கும் படங்கள் பற்றிய மதிப்பீடுகளை இங்கே தரலாம் என்று எண்ணி இதை ஆரம்பிக்கிறேன். தமிழ்ப் படங்களில் பலவற்றை நிம்மதியாக ரசித்துப் பார்க்க முடிவதில்லை. சிறார்கள் பார்க்க முடியாதவாறு பல பைத்தியக்காரக் காட்சிகள். அதீத கற்பனைச் சண்டைகள். இவற்றையெல்லாம் தாண்டி எவை பார்க்கக் கூடியனவாகத் தேறுகின்றன என்று பார்ப்போம்.

  • வேட்டையாடு விளையாடு - இரண்டு பாடல்கள் கேட்கலாம் (பார்க்கலாம் அல்ல) என்பதைத் தவிர முழு நீள நேர விரயம். குழந்தைகளோடு சும்மா விமானப் பயணத்திற் கூடப் பார்க்கக் கூடாது.
  • பொய் - பாலச்சந்தர் படம். குடும்பத்தோடு நெளியாமல் பார்க்கக் கூடிய படம். எல்லோருக்கும் பிடிக்குமோ என்பது சொல்ல முடியாது. எனக்குப் பிடித்துள்ளது.பாடல்களும் பரவாயில்லை
  • வரலாறு - பரவாயில்லை, குழந்தைகளுடன் பார்க்க முடியாது. கதையில் பல ஓட்டைகள் உண்டு. நல்ல பாட்டுகளும் உண்டு.
  • தாமிரபரணி - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம். பாடல்கள் நன்றாக உள்ளன.
  • டிஷ்யூம் - படத்தின் பெயர் பிடிக்கவில்லையேயயினும், படம் அருமையானது. நல்ல பாடல்கள். நல்ல நடிப்பு.
  • மொழி - குடும்பத்தோடு இருந்து பார்த்து மகிழ ஒரு அருமையான படம். நல்ல பாடல்கள், நகைச்சுவை என்று அழகான ஒரு படம்.
  • போக்கிரி - விஜயின் பத்தோடு பதினோராவாது குப்பை.
  • தீபாவளி - போக்கிரியை விடப் பரவாயில்லாத குப்பை.
  • வெயில் - அழுத்தமான கதை, இயற்கையான காட்சிகள். ஆனால் அதை வெறித்த்னச் சண்டைக் காட்சிகளுடனும் வன்ம மனிதர்களுடனும் தந்திருப்பது, படத்தைக் குடும்பத்தோடு பார்க்க முடியாமல் வைக்கிறது. இந்தியாவில், இதை மக்கள் - சிறுவர்கள் - எப்படிப் பார்க்கிறார்கள் என்று எண்ன வைக்கிறது.

Tuesday, January 02, 2007

தேசத்தின் குரல் - இரங்கல்

“தேசத்தின் குரல்” பாலசிங்கம் அவர்கள் மறைவு ஒரு பேரிழப்பு. அவர் கடும் சுகவீனமுற்ற செய்தி முன்னரே வந்து அதிர்ச்சியைத் தந்திருந்ததால், அவரின் இறப்புச் செய்தி பேரதிர்ச்சியை எமக்கு அளிக்கவில்லை. ஆனாலும், இறப்பு, அதுவும் ஒரு பெரும் சாணக்கியனின் இறப்பு, தாங்க முடியாத சோகமாகக் கவிழ்ந்தது எம் மேல். அவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்ளும் அதிட்டம் எங்கள் குடும்பததவர்க்குக் கிடைத்தது சோகத்திலும் ஒரு நற் பாக்கியம்.

வாகனங்களால் நிரம்பி வழிந்த தெருக்களில் வாகன நெரிச்சலைக் கட்டுப் படுத்த இலண்டன் பொலிசார் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மக்கள் வெள்ளமோ மண்டபத்தின் வெளியே மலைச் சரிவில் போடப்பட்ட வீதி போல் நெளிந்து நெளிந்து தெரு வரை இருக்க நாமும் அதில் இணைந்து எம் அஞ்சலியையும், வீர தீர வணக்கத்தையும் செலுத்தக் கூடியதாக இருந்தது.

அவர் மறைவிற்கு இரங்கல்:

பறந்து விட்டது பாலா உயிர்
இறந்து விட்டது பண்புப் பயிர்
அணைந்து விட்டது அறிவுச் சுடர்
தொலைந்து விட்டது துருவக் கதிர்

கலங்கி நிற்குது களமாடுந் தலை
கசங்கி நிற்குதுன் கனிவான துணை
குலுங்கி அழுகிற குரல் கேளாயோ
கலங்காது சாவைக் கரம் பற்றியோனே

சேனைத் தலைவன் தேடும் ஆணித் தரம்
சர்வ தேசத்தில் ஒலித்த சிங்கக் குரல்
இராச சாணக்கியத்தில் தேசக் குரல்
பால சிங்கத்தின்பட் டாசுக் குரல்

தேசத்தின் குரல் தாங்கி நிற்கும்
சாணக்கியன் குரல் தூங்கி நிற்கும்
சோகத்திலும் நாம் வேண்டி நிற்பது
தேசப் பெருமகனின் புகழுடல்