Monday, November 17, 2008

இசை - மொழி – தமிழ் :: பகுதி 5 – கர்னாடக இசை


தமிழ் மண்ணைப் பொறுத்த வரை, இந்தச் சுழற்சிகளின் இறுதிக் கட்டமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழராட்சி முடிவுக்கு வந்த பின் தமிழ் நாடுகளின் ஆட்சிகள் பெரும் பாலும் அன்னிய மொழி மன்னர்களின் கைகளிலேயே இருந்து வந்தன. சோழராட்சிக்குப் பிறகு வட இந்தியரும், இசுலாமியரும், தெலுங்கு மற்றும் கன்னட மன்னர்களும் தமிழ் நாட்டைப் பல ஆண்டுகளாக ஆண்டு வந்தனர். இந்தக் காலத்தில் தமிழ் நாட்டின் இசையிலிருந்து தமிழ் மிகவும் பலமாகத் தள்ளப்பட்டு வடமொழியும் தெலுங்கும் இசையின் அடிப்படை என்ற நிலைக்கு வந்து கர்னாடக சங்கீதம் என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கான பொதுவான இசையாக நிலை பெற்று விட்டது. தெலுங்குக் கீர்த்தனைகளின் தந்தையென்று விழங்கும் தியாகராச சுவாமிகளும் தெலுங்கு மன்னராட்சியின் போதே தமிழகத்திலிருந்து கொண்டே அந்தக் கீர்த்தனைகளை உருவாக்கி கர்நாடக இசையில் தெலுங்குக்கு ஒரு மிக முக்கிய, நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்தார்.


இப்படியாகத் தமிழர் இசையிலிருந்து தமிழ் கழற்றி விடப்பட்டுத் தமிழ்ப் பாடல்களில்லாத கர்நாடக இசையென்ற ஒரு இசையைத் தென்னிந்தியர் அனைவருக்கும் பொதுவான இசை என்ற ஒரு நிலைப்பாட்டைத் தமிழரல்லாத மன்னர்கள் தமிழரிடம் திணித்து விட்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் இசை ஆர்வமுள்ள தமிழரும் கர்நாடக சங்கீதத்தைப் பயின்று பாண்டித்தியமும் பெற்று அதையே மற்றவர்களுக்கும் கற்பித்துக் கர்நாடக சங்கீதத்தை தமிழரின் சங்கீதமாகத் தொடரச் செய்யப் பெரும் பங்கு செலுத்தினார்கள். தவிரவும், இந்த இசைப் பாடல்கள் முழுக்க முழுக்க மத வழிபாட்டுப் பாடல்களாக இருந்த காரணத்தால் அப் பாடல்களுக்கு ஒரு உயர்ந்த புனிதமான இடமும் இலகுவாகக் கிடைத்தது. இந்தப் புனிதப் பட்டமும் சங்கீதம் பயின்ற எல்லோருக்கும் ஊட்டப்பட்டு வந்தமையால் இப்பாடல்களை எதிர்க்கவோ அன்றித் தவிர்த்து மத சார்பற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவோ அல்லது பயிலவோ யாருக்கும் துணிவு வரவில்லை. பக்தி என்ற பலவீனத்தால் கட்டுண்டு கிடந்த வெகுளிப் பாமர மக்கள் தமிழில் பாடுவதைக் கடவுளுக்கு எதிரான செய்கையென்று எண்ணி அதைப்பற்றிச் சிந்திக்கவே மாட்டார்களே. நாளும் பொழுதும் நாவிலும் காதிலும் விழும் கர்நாடக சங்கீதம் இசை வல்லுனர்களையும் அவர்களைச் சூழ இருந்த இசை இரசிகர்களையும் வசப்படுத்துவது தொடர்ந்து கொண்டே வந்தது.

கச்சேரி தொடரும் ...

2 comments:

முகவை மைந்தன் said...

நல்ல இடுகை. இசைத்தமிழ் பெரும்பாலானோர் ஒதுங்கிக் கொள்ளும் துறை. நல்ல முயற்சி. தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையிலும் எழுதி இருக்கிறீர்கள். மற்ற இடுகைகளையும் விரைவில் வாசிக்கிறேன் ஐயா.

Jeyapalan said...

உங்கள் கருத்துக்கு மிக நன்றி முகவை மைந்தன். தமிழர் பயிலும் இசையில் தமிழின் இடம் அபகரிக்கப் பட்டிருப்பது பல முறை பலரால் சுட்டிக் காட்டப் பட்டும் அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வருவதாகத் தெரியவில்லை. அதனால் இந்தப் பதிவு. இதன் மூலம் சில வரலாற்று நிகழ்வுகளை உற்று நோக்க முயல்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துகளையும் மறக்காமல் எழுதுங்கள். நன்றி.