Friday, August 19, 2011

தண்ணீர் போற்றுதும்

தண்ணீர் போற்றுதும்

பருகத் தண்ணீர்
பாய்ச்சத் தண்ணீர்
சோறுகறி எல்லாம்
காய்ச்சத் தண்ணீர்

கழுவத் தண்ணீர்
குளிக்கத் தண்ணீர்
நீந்தத் தண்ணீர்
துவைக்கத் தண்ணீர்

பயிர் விளையத் தண்ணீர்
உயிர் வாழத் தண்ணீர்
எத்தனை அதிசயம்
எத்தனை அற்புதம்
பாரீர் பாரீர்
தண்ணீர் பாரீர்

தின்னும் தொண்டை அடைத்தால் -அதை
இழக்க வேண்டும் தண்ணீர்
மேலும் விக்கல் எடுத்தால் - அதை
தடுக்க வேண்டும் தண்ணீர்

பயன்பட மட்டுமா தண்ணீர்
பயப்பட வேண்டாமா

மூழ்கினால் இறப்பு
பேரலையாக அடிப்பு
கொதிநீராக அவிப்பு
எனக் கொல்லவும்
செய்யும் இவ் அப்பு

ஆக்க அழிக்க
மட்டுமா தண்ணீர்
அழகாய் இரசிக்கவும்
அழகு தண்ணீர்

மழையின் அழகு
மனதைக் கவரும்

வெள்ளம் பாய்ந்துள்
மனதை வருடும்

நதியாய்ப் பாய்ந்து
அழகாய் நடக்கும்

குளமாய்க் கடலாய்
மனதை நிறைக்கும்

அலையாய் அடித்து
மனதை வெளுக்கும்

நீர் வீழ்வாய் வீழ்ந்து
மனக் கர்வம் அடக்கும்

வான வில்லாய்த் தோன்றி
விண்ணை அளக்கும்

வண்ணம் கூடத்
தண்ணீர் தானே

திண்மமாய்த் திரவமாய்
வாயுவாய் வடிவெடுத்து
எடுக்கும் வடிவிலெல்லாம்
கொடுக்கும் கொடை தண்ணீர்

இறந்தவர் கடன்தீர்க்க
ஒரு முழுக்கு
கோவிலைத் தொடக்க
குட முழுக்கு
துடக்குக் கழிக்க
ஒரு முழுக்கு
மூடக் கொள்கைக்கும்
இல்லை நீ விலக்கு

தண்ணீர் போல் தாராளம்
யார்க் குண்டு ஏராளம்
ஆதலால் நீவிர்
தண்ணீர் போற்றுதும்
தண்ணீர் போற்றுதும்

-செயபால்

No comments: