Monday, June 21, 2021

கத்திகள்

  • பன்னச்  சத்தகம்
    • பன்ன வேலையில் பயன்படும் ஒரு சிறிய கத்தி. பன்ன வேலையென்பது பனை ஓலையால் பெட்டி போன்றவை இழைக்கும் பணி.
  • புல்லுச் சத்தகம்
    • தோட்டங்களில் புல் புடுங்கப் பயன்படும் ஒரு வகைச் சிறிய ஆயுதம்
  • கொக்குச் சத்தகம்
    • கொக்கைத் தடி என்று சொல்லப்படும் நீண்ட தடியில் இணைக்கப்பட்டிருக்கும் கத்தி
  • பாளைக் கத்தி
    • தென்னை, பனை மரங்களில் பாளை சீவப் பயன்படும் மிகக் கூரான கத்தி
  • வெட்டுக் கத்தி
    • பெரிய வெட்டு வேலைகளுக்குப் பயன்படும் கத்தி
  • அருவாக் கத்தி
    • நெல், குரக்கன் போன்ற தானிய அறுவடைக்குப் பயன்படும் அரிவாள் கத்தி




Friday, January 22, 2021

பல்கலைக்கழக வாசம்

 எண்ணம் வந்து தேங்குதே 

என்னை ஏதோ செய்யுதே

எல்லாம் இருந்தும் என்னை 

ஏழையாக்கிப்  பார்க்குதே 


துள்ளி ஓடித் திரிந்த காலம் 

பள்ளி நாள் வாலைக் கோலம் 

தள்ளி விட்டுப் புகுந்தோம் நாம் 

பல்கலைக் கழக வாசம்


புத்தம் புதுச் சூழல் 

சத்தம் நிறை தோழர் 

கொட்டம் களியாட்டம் 

கொண்டாட்ட மேதினம்


காலை மாலை பேதமில்லை 

படிப்பையுங் கைவிடுவதில்லை 

எதையும் பெரிதாய் எடுத்ததில்லை 

துவண்டு நாமும் விழுந்ததில்லை


என் உடமை ஒன்றுமில்லை 

பொதுவுடமை எங்கள் கொள்கை 

தனி ஒருவர் துயர் போக்க 

எம்மாலான தெல்லாம் செய்வோம் 


அடிதடி சண்டைகள் அண்ட விடவும் இல்லை 

தடியடி வந்தவேளை தடுத்துத் தாக்கவில்லை 

படிப்பை முடிக்கத் தயக்கப்படவில்லை 

முக்கி முனகி முடிக்கத் தவறவில்லை 


வாலிபப் பருவமதில் 

வாலில்லாக் குரங்குகளாய் 

ஆட்டமும் பாடலும் 

ஆரவாரக் கூச்சலும் 

போட்டுத் திரிந்தோமே 

போதையேறியோர் போல

களைத்துச் சோர்வோமே  

காசில்லாது போகையிலே 


காசு வரும் சேதி வரும் 

கனிவோடு பாசம் வரும் 

காகிதம் காண்கையிலே 

வீட்டுக் காய்ச்சல் கொஞ்சம் வரும் 


பிரச்சினைகள் இருந்தாலும் 

புன்னகையே என்றும் வரும்

நண்பர்கள் சூழ்ந்திருக்க 

கவலை யெலாம் ஓடிவிடும் 


எத்தனை படிகள் நாம் 

ஏறி ஏறிச் சென்றாலும் 

பேராதனைக் காலம் 

நம் வாழ்வின் பொற்காலம் 


இன்று எண்ணிப் பார்க்கையிலே 

இதமாகக் கொல்லுதையோ 

அந்த வாழ்க்கை இனி வருமோ 

ஆயிமாய்க் கொடுத்தாலும்