Tuesday, December 04, 2012

துப்பாக்கி - படம் என்ன சொல்கிறது?


துப்பாக்கி

இந்தத் திரைப்படம் தற்கால இந்தியாவின் ஒரு பிரதிபலிப்பா? அப்படியானால், சட்டம் ஒழுங்கு எல்லாவற்றையும் யாரும் கையில் எடுக்கலாமா? எங்கே போகிறது நாடு? கவலையாக் இல்லையா?

படம் முழுக்கச் சகிக்க முடியாத கொடூரமான  வன்முறைக் காட்சிகள். இந்தப் படத்தைப் பிள்ளைகள், குழந்தைகளுடன் எப்படிப் பார்ப்பது? இப் படத்தின் மூலம் மக்களைச் சென்றடையும் சேதி என்ன?

படத்திற்கு வருவோம். நாயகன் விடுமுறையில் வீடு வரும் ஒரு பட்டாளத்து வீரன். பயங்கரவாதி ஒருவனைத் தற்செயலாகச் சந்தித்ததிலிருந்து, முடிவு வரை உலக நாடுகளின் சட்ட திட்டங்களை எல்லாம் காலால் மிதித்து தன் சொந்தச் செயற்றிட்டத்தை முடிக்கிறார். அதிலும், ஒரு காட்சியில், குண்டு வைத்துத் தகர்க்கப்படும் கப்பலில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்கள் இருந்திருந்தால், என்னவாகியிருக்கும், என்ற பொறுப்புணர்வு கூட இல்லையே.

ஒரு சனநாயக நாட்டில் இது சரியா? இதைப் பார்க்கும் மக்களுக்கு என்ன சொல்லுகிறோம்? எதையும் நம்பும் இளகிய மனதுக்காரர்கள் எப்படி இவற்றை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒவ்வொருவரும் தமது பொறுப்பையுணர்ந்து செய்ற்பட வேண்டாமா?

இது போன்ற படங்களை மக்கள் இரசிக்கிறார்கள் என்பதற்காக, சட்டங்களை மீறுவதற்கு மக்களுக்குக் கற்பிக்கக் கூடாது. இந்தப் படத்தில் இடம்பெறும் சட்ட விரோதச் செயல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்று கூடப் பலருக்குப் புரியாமல் போகலாம். இப்படிச் செய்யச் சிலருக்கு உரிமை உண்டு தான் என்று கூடப் பலர் ஏற்றுக் கொள்ளலாம். இவையெல்லாம் மக்களின் அறிவை மழுங்கடித்துத் தனிமனிதன் சட்டத்தைக் கையிலே எடுப்பதை ஆமோதிக்க வைக்கும். இப்படிப் படம் எடுப்பதைக்  கலைஞர்கள் அனுமதிக்கக் கூடாது. இப்படிப்பட்ட பிழையான சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்கக் கூடாது.

இந்திய உபகண்டத்தில், பட்டி தொட்டி எங்கும் இலகுவில் சென்றடையும் ஊடகம் திரைப்படங்களும் திரைப்படப் பாடல்களுமே. நல்லதே செய்யும் நியாய வாதியாகவும், அவற்றைப் பிரதிபலிக்கும் பாடல்களாலும், எம்.ஜி.ஆர். மக்களின் செல்லப் பிள்ளையாக மிளிர்ந்தது எப்படியென்று நாமெல்லாம் அறிந்தது தானே. இத்தகைய வல்லமை பெற்ற ஊடகத்தை நல்ல வழியில் பயன்படுத்தி மக்களையும் நாட்டையும் முன்னேற்றப் பார்க்கலாமே.  நல்ல கருத்துகளையும், நல்ல சிந்தனைகளையும் இந்த மாபெரும் ஊடகத்தின் மூலம் மக்கள் மனங்களில் விதைத்து இன்னும் 50 இல்லை 100 வருடங்களிலாயினும் ஒரு நியாய சிந்தையுள்ள நேர்மையான சமுதாயத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப முயல்வார்களாக.

No comments: