Tuesday, March 20, 2007

பீத்தல்

இன்று மதனின் மாறாட்டத்தைச் சாடி எழுதியிருந்த பதிலடிக்கு ( பார்க்க http://varalaaru-ezine.blogspot.com/2007/03/blog-post.html ) ஒரு பின்னூட்டம் இடும்பொழுது தானாக வந்து விழுந்தது "பீத்தல்" என்ற சொல். இது ஈழத்தில் பாவனையில் இருக்கும் சொல் தான். தமிழக மக்களும் இதைப் பாவிப்பதைக் காண்கிறேன். இந்தச் சொல்லில் இரு பொருள்கள் இருப்பது உடனே உறைக்கிறது.

1. பீத்தல்: ஈழத்தில் ஓட்டை அல்லது துவாரம் என்ற பொருள் படப் பாவிக்கப் படுகிறது. பீத்தல்ப் பேணி, பீத்தல் சட்டை என்று சொல்லப்படும்.

2. பீத்தல்: பிதற்றல் என்ற சொல்லின் மருவிய வடிவமாகத் தான் தமிழகத்தில் அறியப் படுகிறது என்று எண்ணுகிறேன். ஈழத்தில் இப்படிப்பட்ட பாவனையில்லை என்பது என் விளக்கம். "மதனின் பீத்தல் தெரிகிறது" என்று சொல்லும் போதும், மதன் பிதற்றுவது தெரிகிறது என்றல்லாமல், மதனில் (அல்லது மதனின் அறிவில்) இருக்கும் ஓட்டை தெரிகிறது என்பது தான் விளக்கம்.

அன்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

13 comments:

நாடோடி said...

பீற்றி கொள்வது எனதுதான் சென்னை தமிழில் பீத்தி என நினைக்கிறேன். ஆனால் அர்த்தம் பீற்றிதான்.

இராம.கி said...

நண்பரே!

அது பிதற்றல் அல்ல.பீற்றுதல்.

தண்ணீர் பீற்றி அடிக்கிறது என்று சொன்னால் அளவுக்கு மீறிப் பெருகித் தெறித்து அடிக்கிறது என்று பொருள். பீற்றிக் கொள்கிறான் என்றால் வெகுவாகச் சொல்லிக் கொள்ளுகிறான் என்று பொருள். பீற்றல் பீத்தல் என்றும், பீச்சல் என்றும் பேச்சுவழக்கில் திரியும்.

அன்புடன்,
இராம.க்.

மலைநாடான் said...

இராம.கி ஐயா சொல்லும் தொனிப்பொருள் சரியென்யென்பதே என் எண்ணமும். ஈழத்தில் இதே பொருள் பயன்பாட்டில் இச் சொல் உபயோகத்தில் இருந்திருக்கிறது.

நன்றி.

வெற்றி said...

செயபால்,
மறந்து போன ஒரு சொல்லை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

/*பீத்தல்: ஈழத்தில் ஓட்டை அல்லது துவாரம் என்ற பொருள் படப் பாவிக்கப் படுகிறது. பீத்தல்ப் பேணி, பீத்தல் சட்டை என்று சொல்லப்படும்.*/

உண்மை. இச் சொல்லைப் படித்ததும் எனக்கு இன்னுமொரு சொல் ஞாபகம் வருகிறது. பிஞ்சு என்ற சொல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிஞ்சு என்றால் கிழிந்த/கிழிஞ்ச/ஓட்டை என்ற அர்த்தத்தில் புழங்கும் சொல். பிஞ்சு என்ற சொல் பழம், காய், பிஞ்சு என்ற அர்த்தத்திலும் புழங்கப்படுவது. இச் சொற்களெல்லாம் இப்போது புழங்காததனால் மறந்து போய்விடுகிறது.

Anonymous said...

Peethal = Vetti Perumai.

Senthazal

Jeyapalan said...

வந்து கருத்துக் கூறிய அனைவருகும் நன்றிகள். உங்கள் கருத்துக்களைப் பின்னர் அலசுகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மதன் பீற்றினாரா? பீத்தினாரா? தெரியவில்லை;
ஆனாலும் செயபால் சொன்னவற்றையும்; ஏனையோர் கருத்துக்களையும் நான் அறிந்த வகையில்
யோசித்துப் பார்த்தேன்.
பீற்றல் தான் பீத்தலாச்சோ என நினைக்கும் வண்ணம்; "தங்கட பிள்ளைகளைப் பற்றி நல்லாப் பீத்துவினம்
என பேசக் கேட்டுள்ளோம்.
இதே வேளை" பீத்தல் சட்டையைப் போட்டிருக்கிறான்" எனவும் கூறுவார்கள். இதே வேளை வெற்றி சொன்னதுபோல் பீத்தலைப்; பிய்தல் என்றும் சொல்வதுமுண்டு.பிய்தல் வடிவம் பிஞ்ச;பிஞ்சு என வரும்.
பிஞ்ச சட்டை; வேட்டி பிஞ்சு போச்சு
ஆனால் "பீச்சல்" என்பதற்கு ஈழத்தில் வேறு கருத்திலும் பாவனையுண்டு. பீச்சல் என்பது அங்கே பீச்சி என வரும்...
1) பாலைப் பீச்சிப்போட்டு மாட்டை அவிட்டுவிடு- பாலைக் கறந்து விட்டு மாட்டை அவிழ்த்துவிடு!!
2) காகம் பீச்சி விட்டுது- காகம் மலம் கழித்து விட்டது.
3) பிள்ளை ரண்டு நாளா பீச்சிக் கொண்டு கிடக்குது; பரியாரியட்டப் போக வேணும்- பிள்ளைக்கு இரண்டு நாளாக வயிற்றுப் போக்கு வைத்தியரிடம் காட்ட வேண்டும்.
4) ஆமியைக் கண்டால் இவனுக்குப் பீச்சல் பயம்- இரானூவத்தினரைக் கண்டால் இவனுக்கு வயிற்றுப் போக்கு வருமளவுக்குப் பயம்.
நம் முதியவர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தவை;இவை இப்போ வழக் கொழிந்தவை.

துளசி கோபால் said...

பிஞ்சது, பிய்ஞ்சது = கிழிஞ்சுபோனது

போ போ பெருமை பீத்திக்காதே ன்னு சொல்ற வழக்கம் இருக்கு.

Jeyapalan said...

நாடோடி, இராம. கி. சொல்வது போல் பீத்தல் என்பது பீற்றல் என்பதன் திருந்த வடிவு என்று தான் கொள்ளவேண்டும். மலைநாடான், அனானி, யோகன் ஆகியோரும் இதையே வலியுறுத்துவது சரியே. இது பீற்றல் என்ற தம்பட்டம் அடிக்கும் செயல் குறித்து விளக்கம்.

பீத்தல்=ஓட்டை என்பது வெற்றி, யோகன் ஆகியோருக்கும் தெரிந்திருக்கிறது.
அப்படியானால், தமிழகத்தில் இந்தச் சொல் கிடையாதா? தமிழக் அன்பர்கள் விளக்குங்கள்.

பீச்சி அடிக்கும் சொல்லில் இருக்கும் பீச்சு என்பது, மூலச் சொல்லென்றே நினைக்கிறேன். யோகன் விளக்கியிருப்பது போல் பல இடங்களில் பாவிக்கப் படும் இச்சொல் பீய்ச்சி என்றும் வரும் என்று நினைக்கிறேன். "பீற்றி" இலிருந்து பீச்சி வந்திருக்காது என்று எண்ணுகிறேன். இராம. கி. என்ன சொல்கிறீர்கள்?

வெற்றி சொல்லியிருக்கும், பிஞ்சு என்பது - பிய்ந்து வின் மருவு வடிவம். பிய்ந்த பாய், பேச்சு வழக்கில் பிஞ்ச பாய் என்று சொல்லப்படும்.

பிய்ந்த(பிஞ்ச), கிளிந்த (கிளிஞ்ச) போன்ற இன்னொரு சொல் "புறுதல்" கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வெற்றி said...

செயபால்,


/* இன்னொரு சொல் "புறுதல்" கேள்விப்பட்டிருக்கிறீர்களா? */

புறுதல் என்ற சொல்லை நான் இதுவரை கேள்விப்படவில்லை. புறுதல் என்றால் என்ன பொருள்?

ஆனால் 'புறு புறுத்தல்' என்ற சொல் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது சில சமயங்களில் புழங்கி வருகிறேன்.

புறுதல் எனும் சொல் வட்டார வழக்குச் சொல்லக இருக்குமோ, அதாவது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் புழங்கப்படும் சொல்லாக.

Jeyapalan said...

வெற்றி,
புறுதல் என்பது கிளிந்து, பிய்ந்து போன நிலையின் கடைசி நிலை.
பழைய சைக்கிள் வண்டிகள் சில கழண்டு கொட்டுப்படும் நிலையிலும் ஓடிக்கொண்டிருப்பார்கள் சிலர். அவ்வகை வண்டிகளைப் பார்த்துப் புறுதல் சைக்கிள் என்று சொல்லும் வழக்கம் இருந்தது.

Anonymous said...

நல்லா பீத்துறீங்க ஜெசபால்..

செந்தழல் ரவி

Jeyapalan said...

நீங்க பீத்திறது புரியலீங்கோ செந்தழ(ண)ல் ரவி. பின்னூட்டத்தற்கு நன்றி.