Friday, June 22, 2007

புளிக்கும் நினைவுகள்

ஒரு நாள் ஆப்பிள் ஒன்றைக் கடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அதன் சுவை எங்கோ சுவைத்த ஒரு சுவையைப் பொறியிற் தாக்கி ஞாபகப்படுத்தியது. நன்கு முயற்சித்த போது பொறியில் தட்டிய சுவை “செம்பழச்” சுவை என்பது உறைத்தது (புளித்தது). செம்பழச் சுவையென்றதும் அதனோடு கூடிய சகலதையும் கடின யோசனை செய்து அசை (சுவை) மீட்டுக் கொண்டேன். அதன் தாக்கம் புளிக்கும் நினைவுகள்.

யுத்தம் இல்லாத காலத்தில், இடம்பெயர முன்னர், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தெரு ஓரமாக ஓங்கி வளர்ந்த புளியமரம் ஒன்று. பெரிய கிளைகளைப் பரப்பி மிகவும் விசாலமாக வளர்ந்திருந்தது.

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக் கட்டி
புழுதியையே சட்டையாக அணிந்து திரிந்த காலத்தின் ஒரு பகுதி இந்தப் புளிய மரத்தின் கீழும் எனக்கும் என் தோழர்களுக்கும் கழிந்தது.

வசந்த காலத்தில், புதிய இலைகளுக்கான துளிர் வர ஆரம்பிக்கும். வெளிறிய பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில் மிக அழகாகத் துளிர்க்கும். கைக்கெட்டிய உயரத்தில் இருக்கும் இந்தத் துளிர்களை சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் இதன் சுவை. புளியும் இல்லை உவர்ப்பும் இல்லை.

பின்னர் கொஞ்ச நாட்களில், புளியம்பூ பூக்கத் தொடங்கும். பூவும் சாப்பிட நன்றாக இருக்கும். துளிர் போலவே இருக்கும், கொஞ்சம் புளிப்புக் கூடியிருக்கும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் பிஞ்சு பிடிக்கும். அந்தப் பிஞ்சைச் “சுண்டங்காய்” என்று அழைப்போம். வளைந்து வளைந்து வடிவாகவும் இருக்கும். சுண்டங்காயின் சுவை இன்னும் கொஞ்சம் புளிப்புக் கூடி இருக்கும்.

சில வாரங்களின் பின், சுண்டங்காய் முத்திப் புளியங்காய் என்ற நிலைக்கு வரும். புளிப்பும் முத்தத் தொடங்கியிருக்கும்.

மேலும் சில வாரங்களின் பின், புளியங்காயானது, காய்க்கும் பழத்திற்கும் இடைப்பட்ட பருவமாகிய “செம்பழம்” என்ற நிலைக்கு வரும். இந்தச் சுவை தான் நான் கடித்த ஆப்பிளில் இருந்தது. நல்ல பச்சை நிறத்திலிருந்த புளியங்காய் இப்பொழுது கொஞ்சம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். காயும் கனியத் தொடங்கும், சுவையும் மாறத் தொடங்கும். இப்பொழுது புளியம் பழத்தின் ஓடும் கொஞ்சம் நீக்கக் கூடியதாக இருக்கும். ஓடு நீக்கிய செம்பழம் கொஞ்சம் புளிப்புக் குறைந்தும் இருக்கும்.

இதன் பின் புளியம் பழம் தோன்றும். அதுவும் எங்கள் வாயிலிருந்து தப்பாது. ஆனால், புளியம்பழம் பழம் என்ற பேருக்காகவேனும் இனிக்க மாட்டாதே!!!!!. நாங்களும் இடைக் கிடையே புளியமரச் சொந்தக்காரனிடமும் பேச்சு, திட்டு, எறி வாங்கத் தப்பியதில்லை.

புளியைத் தின்று வாயைப் புண்ணாக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனால் உறைப்புக் கறி சாப்பிட முடியாமல் வீட்டிலும் அகப்பட்டுக் கொளவதும் …….

புளிப்போடு வந்து இனிக்கும் நினைவுகளும் …….

(வலையில் அகப்பட்ட சில படங்களுக்கு நன்றி)

6 comments:

Anonymous said...

புளி புளிக்கும்

Anonymous said...

// காய்க்கும் பழத்திற்கும் இடைப்பட்ட பருவமாகிய “செம்பழம்” என்ற நிலைக்கு வரும்.//

இதை ஒதக்காய் என்று நாங்கள் சொல்லுவோம்.

படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

Jeyapalan said...

புளி நினைவுகள் இனிப்பானவை தான். வருகை தந்து விட்டுச் சும்மா செல்லாமல் ஒரு வரி விட்டுச் சென்றதற்கும் கருத்துக்கும் நன்றி.

எஸ் சக்திவேல் said...

ஏறக்குறைய மறந்துபோன செம்பழத்தை ஞாபகப் படுத்தியதிற்கு நன்றி. இடைக்கட்டில் நிறைப் புளிய மரங்கள் :-)

எஸ் சக்திவேல் said...

ஏறக்குறைய மறந்துபோன செம்பழத்தை ஞாபகப் படுத்தியதிற்கு நன்றி. இடைக்காட்டில் நிறைப் புளிய மரங்கள் :-)

Jeyapalan said...

சரி தான், எங்கள் புளி மன்னர் இராச்சியத்தில் சுமார் 10-12 புளிய மரங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள்.
இப்போ அவை நிக்கோ இல்லை தறிச்சுச் கொண்டு போட்டங்களோ?
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சக்திவேல்.