Sunday, April 20, 2008

இன்னொரு சுனாமி




தொப்புள் கொடி உறவு தமிழ் நாட்டுத் தமிழருக்கும் ஈழ நாட்டுத் தமிழருக்கும் உண்டு என்று பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறோம். அதனால் அந்தத் தொடுப்பு நிலப் பரப்பைத் ரிசிக்கச் சென்றேன் அண்மையில். தொப்புள் கொடியில் இருந்து அறுந்தவர்கள் ஈழத்தவர்கள் என்றால், தமிழக அன்னையின் தொப்புளாக இருக்கக் கூடிய இடம் ராமேசுவரம்-தனுசுக்கோடி தானே. போன வருடம் இந்தியா சென்ற போது, அழிந்து கொண்டிருக்கும் தனுசுக்கோடியைப் பார்க்கும் ஆவலைப் பூர்த்திசெய்ய அங்கே சென்றிருந்தோம்.

2004 டிசம்பர் 26 இல் ஆழிப் பேரலையில் அழிந்து எஞ்சியிருக்கும் பகுதிகளைத் தான் பார்க்க முடிந்தது. என்ன அநியாயம், சரியாக 40 வருடங்களுக்கு முன்னர் 1964 டிசம்பர் 23 இல் ஒரு ஆழிப் பேரலை இதே தனுசுக்கோடியில் ஊழித் தாண்டவம் ஆடியிருக்கிறது என்ற கல்வெட்டைப் பார்த்ததும் ஆண்டவன் மேலேயே கோபம் வந்தது. அந்தக் கல்வெட்டைப் படம் பிடித்தேன் பகிர்ந்து கொள்ள.

மிகப் பெரிய ஒரு நிலப் பரப்பைக் கடல் கொஞ்சங் கொஞ்சமாக ஆக்கிரமிக்கும் கோலம் நெஞ்சைப் பிழிகிறது. துபாயில், சிங்கப்பூரில் கடலில் தீவுகளைக் கடினப்பட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம், பெரும் நிலப் பரப்பைத் தீவுகளாக்கித் தொலைத்துக் கொண்டிருக்கிறது, கடலில். தற்போதைய தொழில் நுட்பங்களைக் கொண்டு, இந்தப் பிரதேசத்தை நன்கு பாதுகாக்க முடியும். அரசு முயல வேண்டும்.

சேது சமுத்திரச் சிற்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். சேதுக் கால்வாயையும் வெட்டுவோம், தொப்புள்கொடிப் பாலத்தையும் கட்டி அழியும் நிலப் பரப்பை மீட்கலாமே. கனடாவின், P.E.I.-New Brunswick ( http://www.confederationbridge.com/en/about_the_bridge/ )பாலத்தைப் பர்ர்த்தவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நிறைவேற்றக் கூடிய திட்டமே என்பது புரியும்.


2 comments:

HK Arun said...

"நாமில்லாத நாடில்லை நமக்கென்று ஒரு நாடில்லை."

நமக்கென ஒரு நாடு இருக்கிறது. வரலாற்று ரீதியிலான தாயக நிலம்.

அது கொஞ்சம் கொஞ்சமாக .. நீங்கள் எழுதியுள்ள வரிகளை கொஞ்சம் மாற்றி வாசிக்க வேண்டும் போல் உள்ளது.

//மிகப் பெரிய ஒரு நிலப் பரப்பைக் கடல் கொஞ்சங் கொஞ்சமாக ஆக்கிரமிக்கும் கோலம் நெஞ்சைப் பிழிகிறது.//

Jeyapalan said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி