Monday, July 27, 2009

"தமிழ்" நாடெனும் மாயை - 2

கல்வி

கல்வித்துறையும் தமிழகமும் மிகப் பிரபலமான ஒரு சர்ச்சைப் பொருள். அங்கே என்ன நடக்கிறது? கல்வித் துறை எப்படித் “தமிழ்” நாடெனும் மாயை நாட்டில் இருக்கிறது என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம்.

தாய் மொழியில் ஒரு குழந்தைக்குக் கல்வி அவசியம் என்பதைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரையப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. அது தமிழக மற்றும் இதர மாநிலங்களின் செவியிலேற மறுப்பது எல்லோருக்குந் தெரிந்த விடயமே. ஊருக்கு உபதேசம் உனக்கல்லடிப் பெண்ணே என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. இருந்தும் பார்ப்போம். தமிழ் நாட்டில், தமிழ் வழிக் கல்விக் கூடங்கள் அருகி வருவதும், ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் அதிகரித்து வருவதும் இப்போது நாம் கண் கூடாகக் கண்டு வரும் ஓர் அவல நிலை. தம் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களிற் படிப்பதால், தமது நிலை மற்றவர்களை விட ஒரு படி மேல் என்று நினைக்கும் பாமரர்கள் தம் பணத்தை யிழந்து தவிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆங்கில மொழிக் கல்விக் கூடங்களில் கற்பதால் நல்ல கல்வி கிடைக்கிறது என்றும் பலர் நம்புகிறார்கள். பல இடங்களுக்குச் சென்று உத்தியோகம் பார்த்து மேல் நிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தால் பலர் ஆங்கில வழிக் கல்வியை நாடுகிறார்கள். இதில் ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்காக ஆங்கில வழியில் நம் முழுக் கல்வியையும் ஏன் கற்க வேண்டும்? ஆங்கில அறிவை நன்கு வளப்படுத்த ஒரு மேலதிக பயிற்சியாகவே ஆங்கில வழிக் கல்வியை ஆரம்பக் கல்வி யிலிருந்தே கடைப் பிடிக்கிறார்கள்.

இது தவறான ஓர் அணுகு முறை. அரசனை நம்பிப் புருசனைக் கை விட்ட கதை போல் ஆகி விடும் இந்த அணுகு முறை. ஓர் பள்ளியில் பயிலும் 1000 பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் ஓர் உயர் பதவி பெறப்போகுந் தொகையினர் ஒரு 10 பேர் தான். மிகுதி 990 பேரும் ஆங்கில வழிக் கல்வியாற் சாதிக்கப் போவது நிறைய அல்ல. அத்தோடு, தம் தாய் மொழியாம் தமிழில் புலமை யற்றவர்களாக தூய தமிழைத் தெரியாதவர்களாக தமிழைத் தொலைத்த தமிழர்களாக சமுதாயத்தில் வலம் வரப் போகிறார்கள். இத்தகையவர்கள் வாழும் நாடு எப்படித் தமிழ் நாடு ஆகும். இது ஒரு மாயைத் தமிழ் நாடல்லவா? சாதிக்காமல் விட்டவை மிக அதிகமாக இருக்கலாம். எத்தனை யெத்தனை கவிச் சக்கரவர்த்திகளையும், கதாசிரியர்களையும், காவியங்களையும், நீதி நூற்களையும், இசைப் பாடல்களையும் இழந்து விட்டோமோ யார் கண்டது?

தமிழ் மொழிக் கல்வியையோ தமிழ் கற்பதையோ ஆதரிக்கதவர்கள், இன்னொரு வாதத்தையும் நம் மக்கள் முன் வைக்கலாம். அதாவது, நாம் தமிழர்கள், பிறந்து வளரும் சூழல் தமிழ் மக்கள் மத்தியில், இப்படியிருக்கையில் எங்களுக்குத் தமிழ் தானகவே வந்து விடும். அதை ஏன் தனியாகக் கற்க வேண்டும் என்பது தான் அந்த வாதம். ஆனால் தானாக வருந் தமிழ் சரியான தமிழல்லாது ஒரு கொச்சைத் தமிழேயென்பதைப் பலர் புரிந்து கொள்கிறார்களில்லை. தமிழ் கற்றவர்கள் பேசும் தமிழுக்கும் கல்லாதவர்கள் பேசும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாடு மிக அதிகம் என்பதை நாம் இலகுவில் காண முடியும். ஒரு சிறு உதாரணம். ஊரில் எல்லோரும் பாவிக்கும் சில சொற்களை நான் தவிர்க்கப் பார்த்த போது அந்த முயற்சி ஒரு திருவினையாகியது. “இஞ்ச வா”, “என்ர பந்து” போன்ற சொற்களை நான் சரியாகப் பாவிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தில், இங்கே என்றும் என்னுடைய என்றும் மட்டுமே என் கூட இருப்பவர்கள் மத்தியில் நான் தொடர்ந்து பாவித்து வந்தேன். இந்தப் பாவனை கொஞ்ச நாட்களில் பலரிடம் வந்து விட்டது. இப்படித் தூய தமிழை நாம் மக்கட் தமிழாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. அத்தோடு, 1980 வரையிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ் ஒலிபரப்பாளர்கள் பேசிய தமிழ் நல்ல தமிழ். அதன் மூலம், ஒலிபரப்புத் துறையும், அறிப்புத் துறையும் நல்ல தமிழில் இயங்க வழி கோலியவர்கள் அந்தக் கால அறிவிப்பாளர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

தமிழ் மொழியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாயமாகப் பிள்ளைகளுடன் தூய தமிழிற் தான் பாடம் நடத்த வேண்டும். “ஏன் இண்டைக்குப் பிந்தி வந்தாய்?” என்று கேட்பதை, “இன்றைக்கு” என்று பாவிக்க வேண்டும். இவை ஆசிரியர் பயிற்சியில் முதற் பாடமாகச் சொல்லித் தர வேண்டியது. சமுதாயத்தை உருவாக்குவதில் முதலாவது இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். இவர்கள் காட்டும் வழியில் தான் நாளைய மக்கள் தோன்றுகிறார்கள். இந்த ஆசிரியர்கள் சரியாகவும் தரமாகவும் தமிழைக் கற்றுக் கொடுத்தால் தமிழ் நாடென்பது மாயை இல்லாமல் உயிர்ப்போடு வாழுமே. இது தமிழ் நாட்டிற்கு மட்டும் பொருந்துவது அல்ல. எங்கெங்கே எல்லாம் தமிழ் அமுலாக்கம் தேவைப் படுமோ அங்கெங்கே யெல்லாம் இந்தக் குறைபாடுகள் இல்லாம்ல பார்த்துக் கொள்ள வேண்டும்.

5 comments:

91001103021 said...

மிக்க நன்று . இதை நடைமுறை படுத்துவதற்கு அனைவருக்கும் சென்றடைய வேண்டிய மிக முக்கிய பதிவு .

Jeyapalan said...

வாசித்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றி.

முருக.கவி said...

எனது உளகருத்தும் அதுவே ஐயா!
அக்காலத்தே தனித்தமிழ் தந்த திரு.வி.க. போல இக்காலத்தே நாமும் முயல்வோம் ஐயா! நாளடைவில் நம் முயற்சி வெற்றி பெறும். நம்பிக்கை வைப்போம்,தங்கத்தமிழைக் காப்போம் நாமே!

முருக.கவி said...

எனது உளகருத்தும் அதுவே ஐயா! அக்காலத்தே தனித்தமிழ் கண்ட திரு.வி.க.வைப் போல இக்காலத்தே நாமும் நம்பிக்கையுடன் முயன்று, நாளடைவில் வெற்றி பெறுவோம். தங்கத் தமிழை காப்போம் நாமே!
மிக்க நன்றி! தங்கள் தமிழுணர்வுக்கு எமது வாழ்த்துகள்.

Jeyapalan said...

முருக கவி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. முடிந்தால் மற்றவற்றையும் வாசித்துக் கருத்து
சொல்லவும்

அன்புடன்
செயபால்