Saturday, January 11, 2020

தேசிய வாதம் – நாம் தமிழரா?

தேசிய வாதம் – நாம் தமிழரா?

மனிதர்கள் இயல்பாகவே இடம் பெயர்ந்து கொண்டு இருப்பவர்கள். அரசியல், பொருளாதார, சமூக அழுத்தங்களால் மக்கள் இடம் பெயர்வதும் பெயர்ந்த இடங்களிலேயே நிலையாகி விடுவதும் காலங் காலமாக நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு இடங்களிலும் மக்களின் மொழியாக இருக்கும் மொழி, அவ் விடங்களுக்கு இடம் பெயர்ந்த மக்களின் மொழியாகி விடுவது இயல்பே. இவ்வாறு ஒரு இடத்தில் பெரும்பான்மையோரால் புரிந்து கொள்ளப்படும் நிலையிலிருக்கும் மொழியை வந்தோர் ஏற்றுக் கொள்வதும் காலப் போக்கில் அவர்களுக்கும் அதுவே தாய் மொழியாகி விடுவதும் நிகழும்.

தமிழ் நாட்டிற்குப் பல் வேறு கால கட்டங்களில் பல் வேறு மக்கள் பல் வேறு காரணங்களால் குடியேறி வந்திருக்கிறார்கள். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கட்டங் கட்டமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி வந்தவர்கள், வருபவர்கள் ஓரிரு தலைமுறைகளுக்குத் தம் மொழியைத் தம்முள் வைத்திருப்பார்கள். காலப் போக்கில் உள்ளூர் மொழியே அவர்களுக்கும் தாய் மொழியாகி விடும் நிலைமை தான் எங்கும்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கொண்டு வந்த மொழியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஒன்று, உள்ளூர் மக்களுடன் கலந்து, கலப்பு மக்கள் உருவாகி விடுவது இன்னொன்று.

எது எப்படியோ, மக்களோடு மக்களாக ஓர் அடையாளத்தின் பேரால் வந்தோரும், இருந்தோரும் இணைந்து இருக்கும் போது அது ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகமாகும். இதைக் குலைக்க நினைப்பது நல்லதல்ல.

தமிழ்நாட்டினர், தமிழர்களாக மொழி அடையாளம் ஒரு மக்களாக உணரப்படுவது ஒரு சிறப்பு. இந்த அடையாளத்திற்கு யார் உரித்து உடையவர்கள் அல்லது அற்றவர்கள் என்று பிரிவினை செய்வது தவறு.
பல நூற்றாண்டுகள் கடந்த பின்னருங்கூட சிலரின் பூர்வீகங்களைத் தேடித் துருவி, அவர்கள் தற்போது கொண்டிருக்கும் அடையாளத்திற்கு உரியவர்கள் அல்ல என்று பிரித்துப் பார்ப்பது ஒரு பண்பாடற்ற செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல், தமிழர்  யார் என்று அறிவதற்கு நதிமூலம் ரிசிமூலம் ஆய்ந்து சென்று அடையாளம் காணப்படுவது ஒரு குறுகிய மனப்பான்மையான பழக்கமாகும்.

நானும் இந் நாட்டான் தான், நானும் தமிழன் தான் என்று உணர்வோடு தலை நிமிர்த்துபவர்களை எல்லோரும் மதிக்க வேண்டும். அவ்வாறு போற்றாமல் பிரிவினைகளைத் தூண்டுவதால் தீங்கு நேரிடும் என்பதற்குப் பல சான்றுகள் நம் கண் முன்னே உள்ளன.

உதாரணமாக, திராவிடம் பேசிய அரசியற் கட்சிகள் முன் வைத்த சில வாதங்களால், பலர் அன்னியப் படுத்தப்பட்டு அவர்களின் தமிழ் அடையாளம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. இது அம் மக்கள் மனதில் கூட ஒரு குழப்ப நிலையத் தோற்றுவித்துத் தாமே தம்மைத் தனிமைப்படுத்தி வாழத் தலைப்பட ஏதுவாகியிருந்தது. தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் பெரும் பங்காற்றிய உ.வே. சாமிநாதையர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் சிறப்பை யார் மறுக்க முடியும்?

இப்போது தமிழ்த் தேசியம் உத்வேகமடைந்து திராவிடம் என்று ஆரம்பித்த போக்கையும் தள்ளி விட்டு, இன்னும் குறுகி, தமிழரைத் தமிழரே ஆள வேண்டும் என்று பேசப்படுகிறது. தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டான் ஆள வேண்டும் என்று முழங்கினால் எவ்வளவு பலமாக இருக்கும்? உலகின் பல நாடுகளை உற்றுக் கவனித்தால் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.

திராவிடக் கட்சிகளில் இருந்த, இருக்கும் வைகோ, கலைஞர் போன்றோரைத் தமிழரல்லாதவர் என்று சொல்வது சரியல்ல. வான்புகழ் வள்ளுவனுக்கு வானுயர் சிலை வைத்த கலைஞர், தமீழ மக்கள் நலன் கருதிப் பல செயலாற்றிய வைகோ, விசயகாந்த் போன்றோரை நாம் அன்னியப்படுத்துவதா? எண்ணற்ற மனிதர்களின் பெயர்கள் ஞாபகம் வருகிறதே. உள்ளத்தால் உணர்வால் தமிழரென்று உணர்ந்து செயற்பட்டவர்களைக் காயப்படுத்துவது தவறு.

“தமிழர் மட்டும்” என்று இப்பொழுது பிளவுபடும் மக்கள், நாளை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று தம்முள்ளே மேலும் பிளவுபட்டு சிதைந்து விட மாட்டார்களா? சிதைந்திருந்து கெட்டதும் வரலாறு தானே.

மாபெரும் இராச்சியங்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்நாட்டைப் பிரித்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒருவரையொருவர் கொன்று வென்று தானே வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகள் எம்முன்னே நின்று எம்மை நோக்கிக் கை கொட்டிச் சிரிக்கவில்லையா? உதாரணத்திற்கு ஒன்று; மலையாளம் தமிழ் பேதம்.

எல்லா மக்களிடையேயும் நல்லவரும் தீயோரும் இருக்கிறார்கள். இல்லா விட்டால் எட்டப்பன், காக்கை வன்னியன் போன்றோர் எப்படி உருவாகிறார்கள்? அவர்களும் தமிழர் தானே? கோபம், துரோகம், உயிர்ப் பயம், தீராப் பகை, மித மிஞ்சிய சுயநலம் போன்ற குணங்கள் மக்களைத் தம்மிடையே பிரித்துத் தீயவர்களாக்கி விட்டது தான் வரலாறு.

நாம் மட்டும் தான் தமிழரென்று கூவித் திரியும் நாங்கள் எங்கள் குடும்பங்களில் உறவுகளில் காலங் காலமாகக் கலந்திருக்கும் பிறரைப் புறந்தள்ளி விட்டோமா? இந்தத் தனித் தமிழ் அடையாள வாதம் நம்மைப் பிரித்துப் பிரித்து உதறி உதறி இறுதியில் ஓரிருவரில் மட்டும் எஞ்சி நிற்கும். ஏனெனில் இங்கே எந்த ஒரு இனமும் தனியாக இல்லை. பல மக்களின் கலப்பாகவும் கலவையாகவுமே எல்லோரும் உள்ளார்கள்.

இந்தப் பிரிவினை தேடுபவர்கள் கடைசியில் உண்மைய உணரும் போது காலம் கடந்து விடும்.

தோளோடு தோள் கொடுத்து ஒன்றாகப் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் அன்னியப் படுத்தப்பட்டு விலக்கி நிற்க வைக்கப்படும் நாளில் மீதமிருக்கப் போவது வெறும் வெறுமையும், தோல்வியும், வெறுப்பும் விரக்தியும் தான்.
ஆகவே நாமெல்லரும் தமிழர் என்ற உணர்வால் ஒன்றுபட்டு உயர்வடைய வேண்டும்.

தமிழ் மொழியும் அதன் சிறப்பு, தொன்மை, பண்பாடு என்பவையும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக மிக முக்கியம். ஆனால் அதன் பேரால் தமிழரையே சொத்தை பிரித்தெடுப்பது இழிவு. நாம் எல்லாம் தமிழரென்ற உணர்வை அனவருக்கும் ஊட்டி உணர்த்தி வளர்த்தெடுத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும்.

No comments: