Thursday, March 05, 2015

தமிழ் எழுத்துக்கள் முந்நூற்றுப் பதின்மூன்றா அல்லது முப்பதா? - பகுதி 1

தமிழ் எழுத்துக்கள்  முந்நூற்றுப் பதின்மூன்றா அல்லது முப்பதா?

(காப்புரிமம் 2014 யூலை) 

(தமிழ் மொழியை இலகுவிற் கற்பிக்கவும், தமிழ் மொழியின் தடங்கலற்ற வளர்ச்சியை இலகுவாக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்றாக நம் அரிச்சுவடியை எளிதாக்கும் ஒரு முன்மொழிவு.)

அறிமுகம்

எழுத்தில் மொழி

மனிதன் சமூக விலங்காக வாழ்ந்து பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தம்மிடையேயான தொடர்பாடலை முதலில் பேச்சில் தொடங்கினான். அதுவே அவனது மொழியாக வடிவம் பெற்றது. காலப் போக்கில் பேசுவதை எழுதி அல்லது பதிந்து வைக்க வேண்டும் என்ற தேவை எழுந்த போது மொழிக்கு ஓர் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தம்மிடையே வழங்கிவந்த எல்லா ஒலி ஓசைகளையும் பகுத்து அவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுத்து அரிச்சுவடிகள் உருவாக்கப்பட்டன. அக்காலத் தேவைக்கு, அக்காலத்தில் வழக்கில் இருந்த ஓசைகளை உச்சரிக்கு முகமாக எழுத்துக்களை உருவாக்கியது மனித குலம்.
எழுத்து வடிவம் உருவாகிய பின்னர் அதனை எல்லோரும் ஒரே வழியில் பின்பற்ற ஒரு பொது வடிவம் அதாவது ஒரு நியமம் வேண்டியிருந்தது. அந்த நியமத்தை மனிதன் ஏற்படுத்தும் போது முதலில் வரையறை செய்ய வேண்டியிருந்தது தனித் தனி எழுத்துக்களை அறிமுகம் செய்யும் அரிச்சுவடியை. அதைத் திட்டமிட்டு வரையறை செய்தான் அக்கால மனிதன்.
காலம் மாறிய போது, மனிதர்கள் பல சமூகங்களாலான ஒரு குழுமம் என்ற நிலை உணரப்பட்ட போது, பல வித மொழிகள் சந்தித்தன. பல மொழிகள் தத்தமக்கெனப் பல வித்தியாசமான ஒலிகளைக் கொண்டிருந்தன. இவ்வொலிகள், மொழிகளைப் புதுப் பரிமாணத்தில் பயணிக்க வைத்தன. ஒவ்வொரு மொழியும், தன்னை விரிவு படுத்தித் தன்  வரைவிலக்கணங்களை விசாலப்படுத்திக் கொள்ளலாயின. ஆக, எல்லா மொழிகளுமே  தாம் தோன்றியதிலிருந்து தம்மைப் புதுப்பித்து மெருகூட்டி அலங்கரித்து வளர்ந்து வந்தன.

நியமங்களும் மாற்றங்களும்

இந் நேரங்களில், மொழியின் கட்டுக் கோப்பைக் குலைக்கா வண்ணம் அவற்றின் வளர்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டார்கள். நியமங்கள் மாறிக் கொண்டிருந்த போதும் நியமங்களைக் கை விடாமல் பரிணாம வளர்ச்சியை மொழிகள் கண்டு வந்தன.

தமிழ் எழுத்துக்கள்

மொழிகள் பலவாகிப் பிரவாகித்த உலகில், தமிழ் மொழி பழம் பெரும் மொழிகளில் ஒன்றெனப் பெயர் பெற்றுச் சிறந்த வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு மொழியாகத் திகழ்கிறது.
தமிழ் மொழிக்கு வலுச் சேர்க்கவென்று கருதிப் பல கூட்டல்களும் கழித்தல்களும் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்துள்ளன. வட எழுத்துக்களின் சேர்க்கை, -காரங்களும் -காரங்களும் இலகு படுத்தப்பட்டமை என்பவை சில எடுத்துக்காட்டுகளாம். தமிழ் மொழியில் இருந்திருக்காதநிறுத்தற் குறிகள்கூட ஒரு அண்மைய உள் வாங்கல் தான். ஆக, உள்வாங்கலும், வெளியேற்றலும் தமிழ் மொழிக்குப் புதிதல்ல. தமிழ் மொழி மட்டுமல்லாது உலக மொழிகள் பலவும் பல மாற்றங்களை உள் வாங்கித் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதை நாம் அவதானிக்கலாம்.

தமிழ் அரிச்சுவடியில் உரிய இடம் இல்லாமல் தனியாக நிற்கும் வட எழுத்துக்களான , , , , க்ஷ”  திரிசங்கு சொர்க்கத்தில் நின்றுகொண்டு தமிழ் மொழியில் பட்டும் படாமல்  உள் வாங்கப்பட்டுப் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
லை, ளை, றா, ணா போன்ற மாற்றங்கள் தமிழ் எழுத்துக்களின் சீரான வரி வடிவை  இலகுவாக்கிய இன்னொரு முயற்சி.
அறிமுகம்

1 comment:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வணக்கம், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு
http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_6.html