Saturday, January 17, 2026

பாட்டு 54) முகம் (சிறுவர் பாடல்)

 

முகம்  (சிறுவர் பாடல்)


கண்ணிரண்டு காதிரண்டு

கண்டு கேட்டு வாழ்வதற்கு


வாயொன்று மூக்கொன்று

உண்பதற்கும் மோப்பதற்கும்


நெற்றியொன்று நாடியொன்று

நல்ல கன்னந் தானிரண்டு


வாயினுள்ளே நாக்குமுண்டு

பற்களுமங் கேயுண்டு


மூக்கிலிரு துளைகளுண்டு

மூச்சுவிடும் வழிகளுண்டு


கண்ணில் மணி தானுண்டு

காண வைக்கப் பங்குண்டு


வெள்ளித் திரையுமங்குண்டு

வீழும் விம்பம் பாரென்று


காதில் குகைபோல் துளையுண்டு

துளையின் வழியே ஒலி சென்று


செவியின் பறையில் அதிர்ந்திட

இசையும் பேச்சும் கேட்டிடுமே


நெற்றி முதல் நாடி வரை

முகத்திலுள்ள உறுப்புகளை


அறிந்து பாட்டாய்ப் பாடிடுவோம்

பாடிப் பாடி மகிழ்ந்திடுவோம்


பாட்டு 53) ஒற்றைப் பனையடி

ஒற்றைப் பனையடி

ஒற்றைப் பனைமரம் இருந்த தெம்மூரிலும்

பாதையில் வழித்தடம் காட்டிடுந் தனிமரம்

வீட்டிலிருந்தெம் மாச்சியின் வீட்டிற்கு

பாதித் தொலைவினில் ஓரமாய் நின்றிடும்


ஆச்சியின் வீட்டுடன் நிற்காது பாதை

கூப்பிடு தூரத்தில் வந்திடுங் கடற்கரை

வெண் மணற்பரப்பினில் கூடிக்காத்திருப்பம்

அலைகள் ஓய்ந்தபின் நீந்திக் களித்திட


எம்மூர்க் கடலிலே அலைகளும் ஓயுமே

மூழ்கிய முருகைக்கல் அணைக்கிப்பாலே

கடல்வற்றும் நேரம் வந்திடும் போது

கல்லணைக்கப்பால் அலைகள் மோதும்


கடலிப்பொழுது இரண்டாய்ப் பிளந்து

குட்டைக்கடலில் எங்கள் நீச்சல்

நீச்சல் முடிந்து வீடு திரும்ப

பாதைக் குறிப்பாய் ஆச்சி வீடு


அதைத் தாண்டிடவே ஒற்றைப்பனையடி

பனையடிப் பேய்க்குப் பலத்த பாட்டடி

பாட்டைத் தணித்து வீட்டினுள் காலடி

எங்கேபோ னாயென்று விழுமினிச் சணலடி


பாட்டு 52) ஊரும் நீரும்

எங்கெங்கும் ஊரிருக்கும்

ஊர்களுக்கும் பேரிருக்கும்

ஊர்களிலே வாழ்விருக்கும்

பலவற்றைக் கண்டிருக்கும்


ஊர்களிலே நீரிருக்கும்

நீர் கொடுக்கக் கிணறிருக்கும்

கிணறின்றேல் குளமிருக்கும்

குளமின்றேல் ஆறிருக்கும்


ஊரினிலே வீடிருக்கும்

வீட்டோடு வளவிருக்கும்

வளவினிலே மரமிருக்கும்

கொடியிருக்கும் பூவிருக்கும்


நீராடிக் களித்திருப்பர்

நீரள்ளிக் குடித்திருப்பர்

நீரினிலே சமைத்திருப்பர்

நீர்பாய்ச்சிப் பயிர் வளர்ப்பர்


நீரற்றும் போயிருக்கும்

எல்லாமே காய்ந்திருக்கும்

ஊர்வளமே தேய்ந்திருக்கும்

மழை வந்து உயிர் கொடுக்கும்


ஆறு அறிவு

தன் மையப்படுத்திச் சிந்திக்கும் மனிதர்களால் பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.


ஆறறிவுள்ள மனிதனால், ஐந்தறிவு விலங்குகளினதோ அல்லது அதைவிடக் குறைந்த அறிவுள்ள உயிரினங்களின் தகவல் பரிமாற்றத்தை இதுவரை பகுத்தறிய முடியவில்லை. ஆனால் அந்த உயிரினங்கள், மனிதனின் தகவல் தொடர்பாடலைப் புரிந்து வைத்துள்ளதை நாம் பல இடங்களில் காண்கிறோம்.


பேசும் ஆற்றல் கொண்ட கிளி, மைனா ஆகிய பறவைகள் மனிதரின் மொழியை தெரிந்து கொண்டு பேசுகின்றனவே. மனிதரால் மிருகங்களின் ஒரு ஒலியையாவது சரியாகத் தொடர்பாடலில் உபயோகிக்க முடிகிறதா?


நாய்களில், பல வகை நாய்கள், பல்வேறு தேவைகளுக்கு மனிதரால் பயிற்றுவிக்கப்பட்டு பல செயற்கரிய வேலைகளை அவை செய்கின்றனவே.

இந்த நாய்கள் மனிதரின் கட்டளைகளை மிகவும் துல்லியமாகப் புரிந்து கொண்டு தம் பயிற்சித் துறையில் சிறந்து விளங்குகின்றனவே. என்ன வியப்பு!


இதே போல், வேறு விலங்குகளும் பயிற்றப்பட்டு சில சில வேலைகளுக்குப் பயன்படுகின்றன. மேலும், டொல்பின் போன்ற உயிரினங்கள் பயிற்றப்படாமலே சில வியத்தகு செயல்களைச் செய்திருப்பதைச் செய்திகளில் பல தடவை கேள்விப்பட்டிருகிறோம்.


இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, ஆறறிவுள்ள மனிதரா அல்லது ஆறிலும் குறைந்த அறிவுள்ளவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களா அறிவிற் சிறந்தவை என்ற வினா எழுகிறதே.


ஆறறிவும் ஏழறிவும் மனைதனின் பார்வையிலே தான். மனிதனாக இலாமல் மாற்றி யோசித்தால் அறிவும் திறனும் நன்கு புலப்படும்.


மீண்டும் கூறுவதானால, தன்னை மையப்படுத்திச் சிந்திக்கும் மனிதர்க்குத் தாமே சிறந்தவரென்றும் மற்றவை தம்மை விட அறிவு குறைந்தவையே என்ற எண்ணம் தலை தூக்கியிருப்பதில் வியப்பொன்றுமில்லையே.


பாட்டு 51) கோயிலுக்குப் போனாயா

 கோயிலுக்குப் போனாயா

அமைதியற்ற நெஞ்சுக்கு

அதைத்தேடிக் கோயிலுக்கு

அமைதியாக வழிபடவே

ஆசையுடன் சென்றேனே


கோயிலுள்ளே பூசகராம்

இரைச்சலுடன் இறைவனிடம்

அறிந்திராத ஒலியெழுப்பி

அமைதியினைக் கலைத்துவிட்டு

அமளிதனை வழங்கினாரே


பேர் சொல்லி இறவனிடம்

அர்ச்சிக்கச் சீட்டெடுத்து

பவ்வியமாய் நிற்கையிலே

கோத்திரம் என்னவென்று

கேட்டொருவர் வருகையிலே

எனையறியா ஆண்டவனே

எனக்கு நீ அருளுவியோ


கண்ணை மூடி இறைவனிடம்

நீர் சொரிய வேண்டுகையில்

தன் கண்ணைச் சுழல விடும்

முகத்தை அண்மைப்படுத்துகின்ற

படக்கருவி இயக்கி நிற்கும்

படக்காரன் பார்வையில் நான்

அழுது கெஞ்சி ஆண்டவனை

வழிபடவும் வழியிலையே


தேடிச்சென்ற அமைதியினை

ஓட வைக்கும் அயலிருக்கும்

கோயிலுக்கு நானேனின்று

போகவில்லை என்று இன்னும்

சொல்லவோ நான் போபோபோ


மரியாதைக் கேடு

 

எம் மத்தியில் நிலவும் மரியாதை “ர்” பற்றி முன்னர் ஒரு கட்டுரையில் பார்த்தோம். அதாவது, ஆண்களின் பெயர்கள் “ன்” இல் நிறைவடையும் போது அந்த “ன்” ஐ “ர்” ஆக மாற்றும் ஒரு வேண்டாத பழக்கம்.


கந்தன் => கந்தர்

சம்பந்தன் => சம்பந்தர்


இது ஒரு தேவையற்ற பெயர்ச் சிதைப்பு அத்துடன் இந்தப் பழக்கத்தைத் தமிழும் தமிழரும் கைவிட வேண்டும் என்பதே அந்தக் கட்டுரையின் சாரம்.


இந்த மரியாதை “ர்” தவிர வேறு வகையான மரியாதைக் குறிப்புகளால் தமிழ்  சிதைவடையும் நிலையைச் சற்று நோக்குவோம்.

இஞ்சருங்கோ

தமிழர் குடும்பங்களில் கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் பெயர் சொல்லிக் கூப்பிடுவதைத் தவிர்ப்பதுண்டு. ஒருவரை ஒருவர் அழைக்க ஏதாவது ஒரு முறையைக் கையாள்வார்கள். குழந்தை பெற்றவர்களாக இருந்தால், குழந்தைகளின் முறையால் அப்பா என்றோ அம்மா என்றோ அழைப்பார்கள்.


பல இடங்களில், “இஞ்சர்” என்ற சொல் கணவனால் மனைவிக்குக் கொடுக்கப்படும் பெயர். அது “இங்கே பார்” என்பதன் சுருக்கமான பேச்சுவாக்கு. இந்த “இஞ்சர்” என்பது “இஞ்சரப்பா” என மாற்றம் பெற்று கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அழைப்பர். 


இஞ்சரப்பா = இஞ்சர் அப்பா


இந்த வகையில், இஞ்சர் என்று மனைவியைக் கணவன் அழைப்பார்.

ஆணாதிக்க சமூகத்தில், மேலதிக மரியாதையோடு, மனைவி கணவனை அழைக்க இஞ்சர் என்பதைப் பயன்படுத்தும் போது அது ஒருமையாகத் தொனிப்பதால் அதை மரியாதைப் பன்மைக்குள்ளாக்கி, “இஞ்சருங்கோ” என்று வந்து விடுகிறது.


இந்த “ங்கோ” எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

ஏவல் வினைச் சொற்கள் பன்மை வடிவில் “ங்கள்” விகுதி பெறுவது எங்களுக்குத் தெரியும்.

வா - வாருங்கள்

போ - போங்கள்

நில் - நில்லுங்கள்

கேள் - கேளுங்கள்

இது மருவிக் குறுகும்போது, பேச்சு வழக்கில் “ங்கோ” அல்லது  “ங்க” வடிவைப் பெறுகிறது.

வா - வாருங்கள் - வாருங்கோ - வாங்கோ - வாங்க

போ - போங்கள் - போங்கோ - போங்க

நில் - நில்லுங்கள் - நில்லுங்கோ - நில்லுங்க

கேள் - கேளுங்கள் - கேளுங்கோ - கேளுங்க


இவ்வாறே

இங்கே பார் - இஞ்ச பார் - இஞ்சர்

இங்கே பாருங்கள் - இஞ்ச பாருங்கள் - இஞ்சருங்கள் - இஞ்சருங்கோ

என்னங்க 

என்ன? - என்னங்கோ? - என்னங்க?

சரி - சரியுங்கோ - சரியுங்கோ - சரிங்க


அம்மா என்ன சொன்னீர்கள்? - இது மரியாதைக் குறைவாம்!

அம்மா என்னங்க சொன்னீர்கள்? - இது மரியாதை உயர்வாம்!


இது ஒரு தமிழ்க் கொலையே! 


தேவையற்ற இடங்களில் “ங்கள்” என்ற பன்மை விகுதியைச் சேர்த்தல் என்பது தமிழறிந்தோர் செய்யக்கூடாத செயல்.


எது, என்ன, யார், எங்கே என்பவற்றோடு “ங்க” சேர்த்து உபயோகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.



சில இடங்களில் வினைச் சொற்களில் பிழை நேர்கிறது.

போகிறார்கள் -> போகிறாங்கள் -> போகிறாங்க - இது கொஞ்சம் பரவாயில்லை. 


ஆனால்: போகிறேன் என்பதற்கு “போகிறேனுங்க” என்று சொல்லும்போது பெரும் பிழையே!

அவன் போகிறானுங்க” - இன்னொரு தவறு.


வினைச் சொற்கள் மரியாதை நோக்கில் பன்மை விகுதி பெற்று வருவதும் அது குறுகி, மருவி வருவதும் பரவாயில்லை. ஏனைய சொற்கள் இந்த மரியாதைப் பன்மையைத் தூக்கும்போது தான் மரியாதைக் கேடு வருகிறது.

ஒருத்தங்க

இப்பொழுதெல்லாம் ஒருவர் என்பதை ஒருத்தங்க என்று பரவலாகச் (தமிழக தொலைக் காட்சிகளில் பார்க்கலாம்) சொல்கிறார்கள். அதெப்படி வருகிறது?

ஒருவர் - ஒருத்தர்

இந்த ஒருத்தர் என்பதற்கு மரியாதை சேர்க்கும் முகமாக அதற்குப் பன்மை விகுதி!


அலங்கோலம்!


இலகுவாக ஒருவர் என்று சொல்லக் கூடிய சொல்லை, ஒருத்தர் என்று சொல்லி, அதிலிருந்து ஒருத்தர்கள் ஆகிப் பின்னர் அது மரியாதை “ங்க” சேர்க்கப்பட்டு உருவாகிறது ஒருத்தங்க! மிகக் கொடுமை!

அப்பாங்க

அவர் எனது அப்பா. இந்த வசனத்தைச் சிலர் இப்படிச் சொல்கிறார்கள்.

அவர் எனது அப்பாங்க. சில வேளை “அவருங்க என் அப்பாங்க” என்றும் பேசுகிறார்கள்.


வேறு: அது என்னுடையது - அது என்னுடையதுங்க.


நல்லது -> நல்லதுங்க

போக வேண்டாம் -> போக வேண்டாங்க

கூடாது -> கூடாதுங்க

இப்போ நேரம் பத்து மணி இருக்குமுங்க


தமிழைச் சரியாகக் கற்றறியாதோர் புழங்கும் இத்தகைய சொற்களால் தற்காலிகமாகப் பல சொற்கள் சிதைக்கப்படுவதை முளையிலேயே கிள்ள வேண்டும். இவை நாளாந்த பாவனைச் சொற்கள் என்றும், வட்டார வழக்கென்றும் மக்கள் ஆதரிக்கும்போது, தமிழுக்கான தீங்கு நேர்கிறது.

தூர நோக்கில் இவற்றின் பாதிப்பு பெரியதாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.


பல படைப்பாளிகள் கூட, இவற்றைத் தம் படைப்புகளில் உள்வாங்கித் தவறுகளை ஊக்கப்படுத்துவதும் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். 


Wednesday, September 03, 2025

ஒன்பது - ஒன்பான் - தொண்டு

அண்மையில் வளர் என்ற காலாண்டிதழ் ஒன்றிற்கு எழுதிய கட்டுரை: 


ஒன்பது - ஒன்பான் - தொண்டு

ஒன்பது என்ற எண்ணைக் குறிக்குஞ் சொல் ஒரு குழப்ப நிலையைத் தமிழிற்குத் தந்துள்ளது. இந்த நிலை எல்லோரும் அறிந்த ஒரு தகவல். பலரும் விசனப்படும் ஒரு விடயமும் கூட. இதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

எண்பது என்றால் எட்டு பத்து 80 ஆனால் ஒன் பது என்றால் அது 90 என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் அது வினோதமான  9.

இதே போல் தொண்ணூறு என்னும் போது அது ஒன்பது பத்தைக் குறிக்கிறது 90. 

தொண்ணூறு = தொண்   நூறு (9x100=900) போல் ஒலித்துக் குழப்பத்தை விளைவித்து 90 ஆகவே இருக்கிறது. உற்று நோக்க: எண்ணூறு = எட்டு நூறு (8x100). அப்படியே தொள்ளாயிரமும். 

இது காலங் காலமாக பழகி விட்டவர்களுக்குப் பெரிய தொல்லை இல்லை. ஆனால் உற்று நோக்கினால் குற்றம் போல் இருக்கிறது.

இந்தக் குழப்பத்தோடு தான் தமிழ் இருக்க வேண்டுமா? நாம் இதற்கு என்ன செய்யலாம்? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்த எண்களின் பயன்பாடு காலங் காலமாக எப்படி இருந்தது. அதற்கான ஆய்வாக எங்கள் புகழ் பெற்ற பழந்தமிழ் நூல்கள் வாயிலாக ஆய்வோம்.

ஒன்பது 

ஒன்பது என்பது தொல்காப்பியத்தில், பல இடங்களில் காணப்படுகிறது.

தொல்காப்பியத்தில் இருந்து ஒரு பாடல்:

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று)

ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே

ஒன்பது என்ற சொல் சிலப்பதிகாரத்திலும் உண்டு

ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்தவன் - சிலப்பதிகாரம்

இதே குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றிலும் உண்டு

ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - அகநானூறு

ஒன்பான் 

ஒன்பான் என்ற சொல் சிலப்பதிகரத்தில் ஒன்பதைக் குறித்து ஓரிடத்தில் வருவதைப் பார்ப்போம்.

அதிரா மரபின் யாழ் கை வாங்கி

மதுர கீதம் பாடினள் மயங்கி

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி

பொருள்:

விருத்தி என்றால் உடற் பயிற்சியின் ஒரு வகை. ஒன்பான் விருத்தி என்றால் ஒன்பது ஆசனங்கள். ‘தலைக்கண் விருத்தி' என்றால் ஒன்பதில் முதலாவதான பத்மாசனம் ஆகும். பத்மாசனமாகிய இருக்கை அமைத்துக்கொண்டு மாதவி யாழ் வாசித்தாளாம்.

தொல்காப்பியத்திலும் பல இடங்களில் ஒன்பான் என்று ஒன்பதைக் குறிப்பிடப்படுவதை பார்க்கலாம்.

தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும்  ஒன்பானும் உண்டு, ஒன்பதும் உண்டு.

மேலும் ஒன்பான் என்பது இந்த நூல்களில் ஒன்பது என்பதை கவி நயத்திற்காகவும், இலக்கண நயத்திற்காகவும் புகுத்தப்பட்ட வடிவமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தொல்காப்பியத்தில், சில இடங்களில் ஐந்தன், எட்டன் என்ற குறிப்புக்களைப் பார்க்கும்போது, ஒன்பான் என்பதும் அப்படியே ஒன்பது என்பதன் செல்லப் பெயரோ என்று தோன்றுகிறது.

மேலும், ஒன்பான் என்ற சொல் சங்க இலக்கிய நூல்களில் இடம்பெறவில்லை. 

தொண்டு

தொல்காப்பியத்தில் தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறித்து உள்ளது.

மெய் பெறு மரபின் தொடை வகைதாமே

ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று ஒன்பஃது என்பது 

ஒன்பதை மேலே வைத்த பத்துக் குறை எழுநூற்று ஒன்பது என்று வரும்.

அத்துடன், தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறிக்கு முகமாக சங்க கால இலக்கியங்களிலும் காணப்படுகிறது. பரிபாடலில் வரும் ஒரு பாடல் இதோ.

பாழ் என கால் என பாகு என ஒன்று என

இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என  - பரிபாடல்

சிலப்பதிகாரத்தில் தொண்டு என்ற சொல்லைக் காண முடியவில்லை. 

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் என்பவற்றில் குறிப்பிடப்படும் தொண்டு, அதே சம காலத்தில் குறிப்பிடப்படும் ஒன்பது என்ற நிலையை வைத்து, நாம் உய்த்தறிவது யாதெனில், ஒன்பது நுழையும் காலம் தொல்காப்பியக் காலத்தில் நடைபெறுகிறது.

தொல்காப்பியக் காலம், சங்ககாலம் வரை இருந்த தொண்டு சிலப்பதிகாரத்தில் இடம்பெறாததைக் கொண்டு ஒன்பதின் ஆட்சி பலப்படுத்தப் பட்டுவிடுவதை அவதானிக்கலாம். தொண்டு வழக்கொழிந்து போனதையும் காணலாம்.

தொண்ணூறு

தொல்காப்பியத்தில் ஒன்பானிற்கும்  ஒன்பதிற்கும் ஒரு தொடர்பு உருவாவது பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. ஆனால் “ஒன்பஃது” இலிருந்து தொண்ணூறு உருவாகும் முறை விபரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்

எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்

முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இதன் விளக்கமாவது: 

ஒன்பஃது இல் இருக்கும் ஒகாரத்தில் தகாரம் ஒற்றும். இதில் தொ ஆரம்பம்.

பின்னர் ணகாரம் இரட்டும். இப்போ தொண்ண் என்று வருகிறது.

மேலும், 

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இது தொண்ணூறு என்பதைக் கொடுக்கிறது என்று விளக்குகிறார் தொல்காப்பியர். நீட்டி முடக்கி அளிக்கப்பட்டுள்ள விளக்கம் இது.

இதை ஒரு வரைவிலக்கணமாக நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அக்கால வழக்கில் இருந்த அந்தச் சிக்கலுக்கு தொல்காப்பியர் கொடுத்த ஒரு விளக்கமாக எடுக்கலாம்.

தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவை சங்கப் பாடல்களிலோ, தொல்காப்பியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ வேறு இடங்க்களில் காணப்படவில்லை.

இலத்தீன்/உரோமன் எண் பாதிப்பு

உரோமன் எண்களில் 4 என்பது  IV என்றும்,  9 என்பது  IX என்றும் எழுதப்படுவது நாம் அறிந்ததே. இங்கே 4 என்பது “ஒன்று குறை ஐந்து” எனவும் 9 என்பது “ஒன்று குறை பத்து” எனவும் கொள்ளப்படலாம். இது ஒரு எச்சரிக்கையோடு கூடிய நெகிழ்ச்சி முறை. இந்த நெகிழ்ச்சியைக் கருத்திற் கொண்டு, தமிழில் ஒன்று குறை பத்து என்பதை ஒன்பது என்று அழைத்திருக்கலாம். ஆனால் இந்த நெகிழ்ச்சியை 4 இல் செய்யவில்லையே!. மேலும், இந்த நெகிழ்ச்சி முறை காணப்படும் உரோமன் எண்கள் அவற்றை உச்சரிப்பில் காட்டவில்லை. இதை கூகிளில் தேடிப் பார்க்கலாம்.


Roman Numeral

Latin

English

I

unus (oo-nus)

one

II

duo (du-oh)

two

III

tres (trays)

three

IV

quattuor (kwuht-tu-ohr)

four

V

quinque (kween-kweh)

five

VI

sex (sehks)

six

VII

septem (sehp-tehm)

seven

VIII

octo (ohk-to)

eight

IX

novem (noh-wehm)

nine

X

decem (deh-kehm)

ten

என்னவாயினும், தமிழின் சிறப்பைக் கருதி, ஒன்பது - 9, தொண்ணூறு - 90, தொள்ளாயிரம் - 900 என்ற உபயோகம் தவிர்க்கப்படுவது நல்லது

மாற்றுச் சிந்தனை

இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்பது என்ற தற்கால வழக்கத்தை நாம் கைவிட வேண்டும். 

ஒன்பான் என்பது ஒன்பது என்பதன் ஒரு சேர்மானத்தோடு கூடிய ஒரு சொல்லே. அதனால், ஒன்பான் என்பதும் கைவிடப்படலாம்.

ஆக நாம் எங்கள் பெருமைமிகு “தொண்டு” என்ற சொல்லைப் புழங்குவதற்கு முன்வருவோம்.

தொண்டு என்பதன் வடிவங்களை அறிமுகப்படுத்துவோம்.

9 = தொண்டு

90 = தொண்பது

900 = தொண்ணூறு

9,000 = தொள்ளாயிரம்

90,000 = தொண்பதாயிரம்

900,000 = தொண்ணூறாயிரம் அல்லது தொண்டு இலட்சம்

9,000,000 = தொண்டு மில்லியன் அல்லது தொண்பது இலட்சம்

இப்படியாக உபயோகிக்க, மேலும் சில எடுத்துக்காட்டுகள் இதோ.

19 = பத்தொண்டு

29 = இருபத் தொண்டு

91 = தொண்பத்தொன்று

92 = தொண்பத்திரண்டு

99 = தொண்பத் தொண்டு

109 = நூற்றித் தொண்டு

199 = நூற்றித் தொண்பத் தொண்டு

190 = நூற்றித் தொண்பது

909 = தொண்ணூற்றித் தொண்டு

999 = தொண்ணூற்றித் தொண்பத்தொண்டு

செயற்படுத்தல்

தமிழ் மொழியை அரச மொழியாகக் கொண்ட நாடுகளுக்கான விண்ணப்பம்.

இந்தப் பரிந்துரைப்பை அரசுகளும், தொடர்பான அமைச்சுகளும் கவனத்தில் எடுத்துத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் புழங்கும் இடங்கள் எங்கும் அந்த அரசுகளும் அமைச்சுகளும் இதை ஒருமுகமாகச் செயற்படுத்த வேண்டும்.

தமிழ் நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய அதிகாரம் கொண்ட நாடுகளுக்கு இந்த வேண்டுகோளை வைப்போம். அவர்கள் ஒரு கூட்டு நடவடிக்கையாக இதைக் கையாண்டு, செயற்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். 

இது நடைமுறைக்கு வந்ததும் எல்லோரும் பின்பற்றுவோம். அரச அதிகாரமில்லாத இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகள், பாடசாலைகள் அரச அறிவிப்புகளை ஏற்று நடக்க முன்வர வேண்டும்.

எல்லோரும் ஒருங்கிணைந்து இதை முன்னெடுத்தால், தமிழிற் புகுந்து கொண்ட  இந்தக் குறையை நீக்கி விடலாம்.