Wednesday, September 03, 2025

ஒன்பது - ஒன்பான் - தொண்டு

அண்மையில் வளர் என்ற காலாண்டிதழ் ஒன்றிற்கு எழுதிய கட்டுரை: 


ஒன்பது - ஒன்பான் - தொண்டு

ஒன்பது என்ற எண்ணைக் குறிக்குஞ் சொல் ஒரு குழப்ப நிலையைத் தமிழிற்குத் தந்துள்ளது. இந்த நிலை எல்லோரும் அறிந்த ஒரு தகவல். பலரும் விசனப்படும் ஒரு விடயமும் கூட. இதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

எண்பது என்றால் எட்டு பத்து 80 ஆனால் ஒன் பது என்றால் அது 90 என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் அது வினோதமான  9.

இதே போல் தொண்ணூறு என்னும் போது அது ஒன்பது பத்தைக் குறிக்கிறது 90. 

தொண்ணூறு = தொண்   நூறு (9x100=900) போல் ஒலித்துக் குழப்பத்தை விளைவித்து 90 ஆகவே இருக்கிறது. உற்று நோக்க: எண்ணூறு = எட்டு நூறு (8x100). அப்படியே தொள்ளாயிரமும். 

இது காலங் காலமாக பழகி விட்டவர்களுக்குப் பெரிய தொல்லை இல்லை. ஆனால் உற்று நோக்கினால் குற்றம் போல் இருக்கிறது.

இந்தக் குழப்பத்தோடு தான் தமிழ் இருக்க வேண்டுமா? நாம் இதற்கு என்ன செய்யலாம்? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்த எண்களின் பயன்பாடு காலங் காலமாக எப்படி இருந்தது. அதற்கான ஆய்வாக எங்கள் புகழ் பெற்ற பழந்தமிழ் நூல்கள் வாயிலாக ஆய்வோம்.

ஒன்பது 

ஒன்பது என்பது தொல்காப்பியத்தில், பல இடங்களில் காணப்படுகிறது.

தொல்காப்பியத்தில் இருந்து ஒரு பாடல்:

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று)

ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே

ஒன்பது என்ற சொல் சிலப்பதிகாரத்திலும் உண்டு

ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்தவன் - சிலப்பதிகாரம்

இதே குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றிலும் உண்டு

ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - அகநானூறு

ஒன்பான் 

ஒன்பான் என்ற சொல் சிலப்பதிகரத்தில் ஒன்பதைக் குறித்து ஓரிடத்தில் வருவதைப் பார்ப்போம்.

அதிரா மரபின் யாழ் கை வாங்கி

மதுர கீதம் பாடினள் மயங்கி

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி

பொருள்:

விருத்தி என்றால் உடற் பயிற்சியின் ஒரு வகை. ஒன்பான் விருத்தி என்றால் ஒன்பது ஆசனங்கள். ‘தலைக்கண் விருத்தி' என்றால் ஒன்பதில் முதலாவதான பத்மாசனம் ஆகும். பத்மாசனமாகிய இருக்கை அமைத்துக்கொண்டு மாதவி யாழ் வாசித்தாளாம்.

தொல்காப்பியத்திலும் பல இடங்களில் ஒன்பான் என்று ஒன்பதைக் குறிப்பிடப்படுவதை பார்க்கலாம்.

தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும்  ஒன்பானும் உண்டு, ஒன்பதும் உண்டு.

மேலும் ஒன்பான் என்பது இந்த நூல்களில் ஒன்பது என்பதை கவி நயத்திற்காகவும், இலக்கண நயத்திற்காகவும் புகுத்தப்பட்ட வடிவமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தொல்காப்பியத்தில், சில இடங்களில் ஐந்தன், எட்டன் என்ற குறிப்புக்களைப் பார்க்கும்போது, ஒன்பான் என்பதும் அப்படியே ஒன்பது என்பதன் செல்லப் பெயரோ என்று தோன்றுகிறது.

மேலும், ஒன்பான் என்ற சொல் சங்க இலக்கிய நூல்களில் இடம்பெறவில்லை. 

தொண்டு

தொல்காப்பியத்தில் தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறித்து உள்ளது.

மெய் பெறு மரபின் தொடை வகைதாமே

ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று ஒன்பஃது என்பது 

ஒன்பதை மேலே வைத்த பத்துக் குறை எழுநூற்று ஒன்பது என்று வரும்.

அத்துடன், தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறிக்கு முகமாக சங்க கால இலக்கியங்களிலும் காணப்படுகிறது. பரிபாடலில் வரும் ஒரு பாடல் இதோ.

பாழ் என கால் என பாகு என ஒன்று என

இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என  - பரிபாடல்

சிலப்பதிகாரத்தில் தொண்டு என்ற சொல்லைக் காண முடியவில்லை. 

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் என்பவற்றில் குறிப்பிடப்படும் தொண்டு, அதே சம காலத்தில் குறிப்பிடப்படும் ஒன்பது என்ற நிலையை வைத்து, நாம் உய்த்தறிவது யாதெனில், ஒன்பது நுழையும் காலம் தொல்காப்பியக் காலத்தில் நடைபெறுகிறது.

தொல்காப்பியக் காலம், சங்ககாலம் வரை இருந்த தொண்டு சிலப்பதிகாரத்தில் இடம்பெறாததைக் கொண்டு ஒன்பதின் ஆட்சி பலப்படுத்தப் பட்டுவிடுவதை அவதானிக்கலாம். தொண்டு வழக்கொழிந்து போனதையும் காணலாம்.

தொண்ணூறு

தொல்காப்பியத்தில் ஒன்பானிற்கும்  ஒன்பதிற்கும் ஒரு தொடர்பு உருவாவது பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. ஆனால் “ஒன்பஃது” இலிருந்து தொண்ணூறு உருவாகும் முறை விபரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்

எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்

முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இதன் விளக்கமாவது: 

ஒன்பஃது இல் இருக்கும் ஒகாரத்தில் தகாரம் ஒற்றும். இதில் தொ ஆரம்பம்.

பின்னர் ணகாரம் இரட்டும். இப்போ தொண்ண் என்று வருகிறது.

மேலும், 

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இது தொண்ணூறு என்பதைக் கொடுக்கிறது என்று விளக்குகிறார் தொல்காப்பியர். நீட்டி முடக்கி அளிக்கப்பட்டுள்ள விளக்கம் இது.

இதை ஒரு வரைவிலக்கணமாக நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அக்கால வழக்கில் இருந்த அந்தச் சிக்கலுக்கு தொல்காப்பியர் கொடுத்த ஒரு விளக்கமாக எடுக்கலாம்.

தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவை சங்கப் பாடல்களிலோ, தொல்காப்பியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ வேறு இடங்க்களில் காணப்படவில்லை.

இலத்தீன்/உரோமன் எண் பாதிப்பு

உரோமன் எண்களில் 4 என்பது  IV என்றும்,  9 என்பது  IX என்றும் எழுதப்படுவது நாம் அறிந்ததே. இங்கே 4 என்பது “ஒன்று குறை ஐந்து” எனவும் 9 என்பது “ஒன்று குறை பத்து” எனவும் கொள்ளப்படலாம். இது ஒரு எச்சரிக்கையோடு கூடிய நெகிழ்ச்சி முறை. இந்த நெகிழ்ச்சியைக் கருத்திற் கொண்டு, தமிழில் ஒன்று குறை பத்து என்பதை ஒன்பது என்று அழைத்திருக்கலாம். ஆனால் இந்த நெகிழ்ச்சியை 4 இல் செய்யவில்லையே!. மேலும், இந்த நெகிழ்ச்சி முறை காணப்படும் உரோமன் எண்கள் அவற்றை உச்சரிப்பில் காட்டவில்லை. இதை கூகிளில் தேடிப் பார்க்கலாம்.


Roman Numeral

Latin

English

I

unus (oo-nus)

one

II

duo (du-oh)

two

III

tres (trays)

three

IV

quattuor (kwuht-tu-ohr)

four

V

quinque (kween-kweh)

five

VI

sex (sehks)

six

VII

septem (sehp-tehm)

seven

VIII

octo (ohk-to)

eight

IX

novem (noh-wehm)

nine

X

decem (deh-kehm)

ten

என்னவாயினும், தமிழின் சிறப்பைக் கருதி, ஒன்பது - 9, தொண்ணூறு - 90, தொள்ளாயிரம் - 900 என்ற உபயோகம் தவிர்க்கப்படுவது நல்லது

மாற்றுச் சிந்தனை

இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்பது என்ற தற்கால வழக்கத்தை நாம் கைவிட வேண்டும். 

ஒன்பான் என்பது ஒன்பது என்பதன் ஒரு சேர்மானத்தோடு கூடிய ஒரு சொல்லே. அதனால், ஒன்பான் என்பதும் கைவிடப்படலாம்.

ஆக நாம் எங்கள் பெருமைமிகு “தொண்டு” என்ற சொல்லைப் புழங்குவதற்கு முன்வருவோம்.

தொண்டு என்பதன் வடிவங்களை அறிமுகப்படுத்துவோம்.

9 = தொண்டு

90 = தொண்பது

900 = தொண்ணூறு

9,000 = தொள்ளாயிரம்

90,000 = தொண்பதாயிரம்

900,000 = தொண்ணூறாயிரம் அல்லது தொண்டு இலட்சம்

9,000,000 = தொண்டு மில்லியன் அல்லது தொண்பது இலட்சம்

இப்படியாக உபயோகிக்க, மேலும் சில எடுத்துக்காட்டுகள் இதோ.

19 = பத்தொண்டு

29 = இருபத் தொண்டு

91 = தொண்பத்தொன்று

92 = தொண்பத்திரண்டு

99 = தொண்பத் தொண்டு

109 = நூற்றித் தொண்டு

199 = நூற்றித் தொண்பத் தொண்டு

190 = நூற்றித் தொண்பது

909 = தொண்ணூற்றித் தொண்டு

999 = தொண்ணூற்றித் தொண்பத்தொண்டு

செயற்படுத்தல்

தமிழ் மொழியை அரச மொழியாகக் கொண்ட நாடுகளுக்கான விண்ணப்பம்.

இந்தப் பரிந்துரைப்பை அரசுகளும், தொடர்பான அமைச்சுகளும் கவனத்தில் எடுத்துத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் புழங்கும் இடங்கள் எங்கும் அந்த அரசுகளும் அமைச்சுகளும் இதை ஒருமுகமாகச் செயற்படுத்த வேண்டும்.

தமிழ் நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய அதிகாரம் கொண்ட நாடுகளுக்கு இந்த வேண்டுகோளை வைப்போம். அவர்கள் ஒரு கூட்டு நடவடிக்கையாக இதைக் கையாண்டு, செயற்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். 

இது நடைமுறைக்கு வந்ததும் எல்லோரும் பின்பற்றுவோம். அரச அதிகாரமில்லாத இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகள், பாடசாலைகள் அரச அறிவிப்புகளை ஏற்று நடக்க முன்வர வேண்டும்.

எல்லோரும் ஒருங்கிணைந்து இதை முன்னெடுத்தால், தமிழிற் புகுந்து கொண்ட  இந்தக் குறையை நீக்கி விடலாம். 



Saturday, March 29, 2025

தமிழ்ச் சாதி

 ஈழம் - தமிழ் நாடு

சாதி நிலை


சாதி அமைப்பைப் பேணுவதற்காகவோ, அதை ஞாயப்படுத்துவதற்காகவோ இதை எழுதவில்லை. சமூகத்தில் இருக்கும் பிரிவுகளையும் அவற்றால் விளைந்த ஏற்றத் தாழ்வுகளையும் அந்த அடுக்கு வரிசையில் எங்கிருந்தாலும் அதனுள் காணும் பேதங்களையும் பார்த்த விரக்தியில் எழும் பதிவு இது. 


தொழிலால் அடையாளம் காணப்பட்டவர்கள், பின்னர் பிறப்பால் அந்த அடையாளத்தில் அடக்கப்பட்ட போது இந்தச் சாதி அமைப்பு சமுதாயத்தில் நிலைத்து விட்டது. அதில், மேலும், உயர்ந்தோர் என்றும், தாழ்ந்தோர் என்றும் அடுக்கி வைத்ததால் இந்தச் சாதிய அமைப்பில் அகப்பட்டவர்கள் படும் பாடுகள் சொல்லி மாளா. 


இந்திய மற்றும் இலங்கையின் தமிழர்கள் பல்வேறு சமூகவியல், பண்பாட்டு வரலாற்றுப் பார்வைகளில் இணைந்தாலும், அவர்கள் வாழும் பிரதேசங்களில், குறிப்பாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும், சாதி அமைப்புகளுக்கான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரு பிரதேசங்களிலும் உள்ள சாதி அமைப்புகள் பொதுவாக ஒரே அடிப்படையைப் பின்பற்றினாலும், அவை சமூகத் தன்மைகள், வரலாற்று சூழ்நிலைகள், அரசியல் சூழல்களில் உள்ள வேறுபாடுகளால் வேறுபடுகின்றன.


தமிழர்கள் தங்களின் சமூகத்தில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் கொண்டிருந்த இந்திய சனாதன மரபுகளைக் கையாளும் மக்களாக இருக்கின்றனர். தமிழ் நாட்டின் சாதி அமைப்பும், இலங்கையிலும், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சமூகக் கட்டமைப்புகளை உள்ளடக்கியது. தமிழ் நாட்டின் சாதி அமைப்புகள் பெரும்பாலும் இந்து சமயக் கருத்துக்களில் அடிப்படையை கொண்டிருக்கும் போதிலும், இரு பிரதேசங்களிலும் அவை வெவ்வேறு வரலாற்றுப் பின்னணிகளால் மாறியுள்ளன.


ஈழத்தில் உள்ள சமூகம் தமிழ் சமூகவியல் பார்வையில் குறிப்பிடத்தக்கது. இங்கு சாதி அமைப்புகள் பல்வேறு வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. சாதி சமூகம் குறிப்பாக பெரும்பாலும் வெள்ளாளர், கரையார், முக்குவர், பள்ளர், நளவர், கோவியர், நட்டுவர், தட்டார், கொல்லர், சாண்டார், அம்பட்டர், வண்ணார், சிவியார், பறையர், செட்டியார், பிராமணர் மேலும் பல சிறிய சாதிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.


  • வெள்ளாளர்: இந்தச் சாதி சமூகத்தில் மிகப்பெரிய இடம் பெற்றது. வேளாண்மை மற்றும் நில உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இது ஈழத்தில் மிகவும் முக்கியமான சமூகமாக விளங்குகிறது.

  • கரையார்: மீன்பிடி பணி சார்ந்தவர்கள்.

  • முக்குவர்: கிழக்கு மாகாணத்தில் நில உடமையாளர்களாகவும் வேளாண்மையும் செய்பவர்களாகவும் உள்ளனர்,  மீன்பிடியும் உண்டு.

  • பள்ளர், நளவர், சாண்டார்: கள்ளிறக்கும் வேலையை பிரதானமாகச் செய்தவர்கள். வேளாண்மைக் கூலிகளாகவும் வேறு தொழில்களும் செய்பவர்கள். இவர்கள் இந்தியாவின் நாடார், ஈழவர் சமூகங்களுக்கு ஒப்பானவர்கள்.

  • கோவியர்: கோவிலுக்கும், கோவிலைச் சார்ந்தவர்களுக்கும் சேவகம் செய்யும் தொழிலுக்கானவர்கள். இப்பொழுது அந்த நடைமுறை இல்லை.

  • நட்டுவர்: தவில், நாதசுரம் இசைக்கலைஞர். 

  • கொல்லர்: (இரும்பு வேலை), தட்டார்: (பொற் கொல்லர்), கன்னார்: (பித்தளை போன்ற உலோக வேலை), தச்சர் (மர வேலை)

  • அம்பட்டர், வண்ணார்: தலைமயிர் திருத்துவோர், துணி துவைப்போர்.

  • சிவியார்: அரச குடிகளுக்கு சிவிகை சுமந்த வழித்தோன்றல்கள்.

  • செட்டியார்: இந்தியாவிலிருந்து வந்த வியாபாரிகள்.

  • பிராமணர்: இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கோவில் பூசகர்கள்.

  • குயவர்: மட்பாண்டம் செய்பவர்கள்.

  • பறையர்: பறை இசைக்கருவி இசைப்பவர்கள், செருப்புத் தைத்தல், மற்றும் துப்புரவுத் தொழில் செய்தவர்கள்

  • பண்டாரம், தவசி: கோவில் வேலைகளில் சம்பத்தப்பட்டவர்கள்.


இவை தவிர, பல சிறு சமூகங்கள் வெளியில் தெரியாத பிரிவுகளுடன் ஏனையவருடன் கலந்து விட்டனர்.


இந்தச் சாதிகளில் இப்பொழுது, பெரும்பாலானவர்கள், தம் அடையாளத் தொழில்களை விட்டு எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள்.


தமிழ் நாடு: சிறிது வேறுபட்ட அமைப்பு


தமிழ் நாடு, இந்தியாவின் முக்கிய மாநிலமாக, பல்வேறு சாதி அமைப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு பல்வேறு மதம், பழமையான பண்பாடுகள், கட்சி அரசியல், ஊர்த் திருவிழாக்கள் மற்றும் மதப் பரம்பரைகள், இவை அனைத்தும் சாதி அமைப்பின் பிரிவுகளாகக் கையாளப்பட்டுள்ளன.


  • பிராமணர்: இந்தச் சாதி, தமிழ் நாடு சமூகம் முழுவதிலும் அதிக கருத்துக்களையும் மதக் கட்டளைகளையும் கொண்டவர்கள். அவர்கள் பொதுவாக ஆன்மிகத்திலும், கோவில் பூசாரிகளாகவும், அறிவியலிலும் தம்மைப் புகுத்திக் கொண்டவர்கள்.

  • வெள்ளாளர்: இந்தச் சாதி சமூகத்தில் மிகப்பெரிய இடம் பெற்றது. வேளாண்மை மற்றும் நில உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு பிரிவுகள் உண்டு. பிள்ளை, முதலி, உடையார் போன்ற பிரிவுகள் தங்களை மேலும் தனித்துவமாகக் காட்டத் தலை தூக்கியவை

  • தேவர்: படையணியும் வேளாண்மையும் இவர்களின் பாரம்பரிய தொழில்கள். இவர்களும் கள்ளர், மறவர், அகமுடையார் என்ற மூன்று பிரிவுகள் ஒன்றிணந்து உருவாக்கப்பட்ட குழு. ஈழத்தில் இவர்கள் வேளாளருக்குள் சேர்ந்து விட்டனர்.

  • மீனவர்: செம்படவர், கரையார் என்று உள்ளவர்கள். ஈழத்தில் இருக்கும் உயர் நிலை தமிழகத்தில் இல்லை.

  • வன்னியர்: இவர்கள் சமூகத் தொண்டுகள் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இவர்களும் ஈழத்தில் வேளாளருக்குள் சேர்ந்து விட்டனர்.

  • பறையர்: பறை இசைக்கருவி இசைப்பவர்கள், செருப்புத் தைத்தல், மற்றும் துப்புரவுத் தொழில் செய்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அடிப்படை வேலைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டவர்கள்.

  •  செட்டியார்: இந்த சமூகங்கள் வணிகத்தில் மற்றும் வர்த்தகத்தில் முன்னணி வகித்துள்ளன. இவர்கள் பெரும்பாலும் வணிகதுறையில் மிகவும் சாதனையாளர்களாக இருந்து வருகிறார்கள்.

  • நாடார்: கள்ளிறக்கும் தொழிலைச் செய்தவர்கள். இப்போது வர்த்தகத்திலும் முன்னணி வகிக்கிறார்கள். ஈழத்தில் இவர்கள் நளவர், பள்ளர் இரண்டிற்கும் ஒப்பிடப்படக் கூடியவர்கள்.

  • வண்ணார், அம்பட்டர், தட்டார், கொல்லர், தச்சர், குயவர் போன்றவர்களும் உண்டு.


ஈழம், தமிழ் நாடு: ஒப்பீடு


ஈழம் மற்றும் தமிழ் நாட்டின் சாதி அமைப்புகளில் சில முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.


1. சமூக பரம்பரை மற்றும் வரலாற்று வித்தியாசங்கள்: தமிழ் நாடு சாதி அமைப்புகள் பாரம்பரியமாக பெரும்பாலும் வேளாண்மை, ஆதிகால ஆட்சிகளின் கீழ் சமூக கட்டமைப்புகளுக்கு உட்பட்டிருந்தது. ஈழத்தில் அதேபோல், இலங்கைத் தமிழர்களின் சமூக கட்டமைப்பு வழக்கமாக வேளாண்மை மற்றும் கடல் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.


2. அரசியல் மற்றும் பண்பாடு: தமிழ் நாடு, 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் போன்ற சமூக மாற்றப் பணிகளுக்கு மையமாக இருந்தது. இவை சாதி மற்றும் சாதி ஒழிப்புக்கான வழிமுறைகளைத் திறந்துவிட்டன. ஆனால், ஈழத்தில் ஆட்சியாளர்களின் தாக்கம் மற்றும் தமிழ் இளைஞருக்கான விடுதலைப் போராட்டங்கள் மட்டுமே முக்கியமான அரசியல் அமைப்புகளாக நிலைத்திருந்தன.


சுருக்கமாக, ஆனால் கவலையுடன் கூறப்பட வேண்டியது:

ஈழம் மற்றும் தமிழ் நாடு ஆகியவற்றின் சாதி அமைப்புகள் இரண்டும் தமிழ் சமுதாயத்தின் வெட்கப்பட வேண்டிய அங்கமாக இருக்கின்றன. வரலாற்று, சமூக மற்றும் அரசியல் பலவீனங்களான இவை, இவ்விரு பிரதேசங்களின் சமூகம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் கொடுமையாகவும் இருக்கின்றன. 


அதிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பல வடிவங்களிற் காணப்படுகின்றன. இந்தக் கொடுமைகளும் துயரங்களும் ஒழிய வேண்டின், எல்லோரும் ஒன்றாகப் பாடுபட்டு, பாகுபாடுகளைக் களைய வேண்டும்.


சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் 

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

சாதி மதங்களைப் பாரோம் – பாரதியார்


சாத்திரம் பலபேசும் சழக்கர் காள்

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் –  அப்பர்


சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

 ஆதமிலி நாயேனை..   - மாணிக்கவாசகர்


பறைச்சி யாவது ஏதடா? பனத்தி யாவது ஏதடா?

இறைச்சி தோல் எலும்பிலும் 

இலக்கம் இட்டு இருக்குதோ…  —      சித்தர் சிவவாக்கியார்



சாதி என்பது ஒரு வசதியான வசதி பலருக்கு. அதுவே வசதி மறுக்கும் வசதியீனம் ஏனையோருக்கு.

Caste is a convenient convenience for some and an inconvenient inconvenience for others.


Tuesday, December 31, 2024

ஈழமும் கலையும்

ஈழத்தில் பிறந்து வளர்ந்த போது கண்ட கலை இருப்பும் மக்களின் பங்களிப்பும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும் ஒரு பதிவு.


யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து வரும் வேளையில், பள்ளிக்கூட வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பமாகிறது. சிறு வயதில் நடந்தவை எல்லாமே ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் அசை போட்டுப் பார்க்கும் போது தோன்றுபவை கொஞ்சம் சிந்தையைத் தூண்டுபவையாக இருக்கின்றன.


மூன்றாம் வகுப்பளவில் அதாவது 9 வயதளவில், மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகளுக்குப் பங்களிக்கத் தொடங்குவார்கள். சிறு மேடைப் பேச்சு, பாட்டு போன்றவை தான் அதிகமாக இடம்பெறும் நிகழ்ச்சிகள். பாட்டு என்றால் திரைப்படப் பாடல்கள் அல்ல, பாடசாலையில் கற்கும் பாட சம்பந்தமான பாடல்கள், சில வேளைகளில் தேவாரங்கள். 


நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்ற ஞாபகமே இல்லை. 


நாடகங்கள் பள்ளிக்கூட மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற ஞாபகம் இல்லை. ஆனால் வட்டார, மாகாண நிலைகளில் இடம்பெறும் போட்டிகளுக்கு அவ்வப்போது நாடகங்கள் பழகி அவை எடுத்துச் செல்லப்படும்.


இப்படியான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் மாணவர்கள் அதிகமாக ஆதிக்க சாதியல்லாத பிள்ளைகளாக இருப்பதை நினைவு கூருகிறேன். காரணம் என்னவென்றால், இப்படியான காட்சி நிகழ்ச்சிகள் ஒரு வகை இழுக்கு என்ற மன நிலை ஆதிக்க சாதியில் நிலவியதாக எண்ணம். அத்தோடு, இதில் செலவிடும் நேரம் படித்துச் சாதிக்கச் செலவிடப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணமும் தான். கலையென்றோ மேடை நிகழ்வென்றோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இவையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தான் சரி என்ற மனப்பாங்கு.


பாடசாலையில் இவ்வாறாக இருக்கும்போது, பாடசாலைக்கு வெளியே எப்படி இருந்தது கலை ஈடுபாடு என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.


ஊரில் உள்ள பல கோயில் திருவிழாக்களில், தவில், நாதசுவரம், கதாப்பிரசங்கம், வில்லுப்பாட்டு, பின்னர் இசைக் குழுக்கள் கடைசியாக சின்ன மேளம் என்று அழைக்கப்படும் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவை யாவுமே கோயிலின் வெளியே மேடை அமைக்கப்பட்டு அதிலே இடம்பெறும். 


இந்த நிகழ்ச்சிகளை கோவிலுக்கு வெளியே வைத்ததன் காரணத்தை இப்போது எண்ணிப் பார்த்தால் அங்கு மறைந்திருக்கும் உண்மை கசிகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சிகளை வழங்குபவர்களில் பலர் ஆதிக்க சாதியல்லாதவர்கள். அவர்களை எப்படி உள்ளே விடுவது?

அதுபோக, இங்கே காணப்பட்ட கலைஞர்களும் எங்கள் பாடசாலை வழக்கத்தில் வந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கலை ஈடுபாடோ, கலை வளர்க்கும் ஆர்வமோ ஒடுக்கப்பட்டவர்களிடையே தான் மிளிர்ந்திருந்தது.


இவை தவிர, மேடை நாடகங்கள், நாடக விழாக்கள் என்பவற்றில் பல நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றை நன்கு எண்ணிப் பார்க்கும்போது, பெயர் பெற்ற நாடகக்காரர்களும், நடிகர்களும் ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்தே தோன்றியிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது.

எப்படியாக எங்கள் சமூகம் இருந்திருக்கிறது என்பது சிந்திக்க வைக்கிறது.


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை காணப்பட்ட இந்த நிலை பின்னர் மாறத் தொடங்கியது. சங்கீதம், பரத நாட்டியம், நடனம் என்பவை எல்லோரிடமும் உள்வாங்கப்பட்டன. கொஞ்சங் கொஞ்சமாக கலை ஈடுபாடும், கலை வளர்க்கும் ஆவலும் எல்லோரிடமும்  இப்பொழுது வந்து விட்டது. கூத்தாடிகள் என்று முன்னர் இழிவாகப் பேசப்பட்டவர்கள் இப்போது அங்கீகாரம் பெற்றுள்ளதும், அந்தக் கூத்துக் கலைகளில் எல்லோரும் பங்குபெறக் காட்டும் ஆர்வமும் மிக நல்ல நிலைக்குக் கலையை எடுத்துசெல்வது மகிழ்ச்சி தான்.


Saturday, December 14, 2024

தமிழ்ப் பெயர்கள் - பொருள் தேடல்

 தமிழ்ப் பெயர்கள் 

தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பெயர்களில் ஒருவரின் பெயர் முல்லை என்றோ இனியவன் என்றோ காணும்போது அப்பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாகவும் பொருள் பொதிந்தவையாகவும் இருக்கின்றனவே என்று பலரால் பாராட்டப்படுவதைக் காண்கிறோம். 

மாறாக, வசந்த், குரோசி போன்ற பெயர்கள் குறை கூறப்படுவதையும் காண்கிறோம். மேலும், ஆராதனா, லெனின், டேவிட், நியூட்டன் என்பவை பிற மொழிப் பெயர்கள் என்று சித்தரிக்கப்படுவதையும் காண்கிறோம். இந்த நிலைமையையும் அதனால் ஏற்படும் உளைச்சல்களையும் எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்.


ஒருவரின் பெயரை இன்னொருவர் அறியும்போது அந்தப் பெயருக்குப் பொருள் என்னவாக இருக்கும் என்று சிலருக்கு ஒரு கேள்வி தோன்றும். தமிழில் ஏற்கனவே இருக்கும் ஒரு சொல்லினால் ஆன பெயராக இருந்தால் மகிழ்வோடு நல்ல பெயர் என்று புளகாங்கிதம் அடைகிறோம். அதாவது முல்லை என்று ஒரு பெண்ணிற்குப் பெயர் இருந்தால், ஆகா, இது முல்லைச் செடியின் பெயர், நல்ல தமிழ்ப் பெயர் என்றுணர்வோம். 

இப்படிப்பட்ட பெயர்கள் தமிழ் மக்களுக்கு இருப்பது நன்றே. உதாரணமாக சில பெயர்கள் இங்கே.

கொடி, அழகி, மலையன், மழையன், அருவி, முருகன், வெயிலோன், பகலவன்.


இத்தகைய பெயர் சூட்டும் பழக்கம் எங்களிடையே அதிகரிக்க வேண்டும். பொருளோடும், அழகோடும், மொழி இலக்கணத்தோடும் இப்பெயர்கள் இருக்கும் போது எல்லோருக்கும் மகிழ்ச்சி, திருப்தி.


ஆனால், இப்பொழுது, தமிழில் பொருள் உள்ள பெயர்கள் தவிர வடமொழி இலக்கியங்களிலும், புராணக் கதைகளிலும் காணப்படும் பெயர்களைத் தமிழர் வைத்துக்கொள்ளும் வழக்கம் மிக அதிமாக உள்ளது.


உதாரணத்திற்கு ஒரு பெயரைப் பார்ப்போம். லக்ஷ்மன்


பல தமிழர்கள் வைத்துகொள்ளும் ஒரு பெயர். இந்தப் பெயர் இராமாயணத்தில் ஒரு பாத்திரமாகும்.

ஆனால், வடமொழியைத் தவிர்த்தும், தமிழ் மரபைப் பேணியும், தமிழ் தொய்வடையாமல் இருக்கவும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் லக்ஷ்மனா என்றிருந்த பெயரை இலக்குவன் என்று தமிழில் தான்  உருவாக்கிய கம்பராமாயாணத்தில் குறிப்பிட்டார்.  அதாவது அந்தப் பெயரை தமிழ்ப் பண்பாட்டிற்குக் கொண்டு வந்தார். இது போன்றவையே சீதை (சீதா), இராமன்(ராமா), அனுமான்(ஹனுமன்), விபீடணன்(விபீஷணா), இராவணன்(ராவணா), சனகன்(ஜனகன்), சானகி(ஜானகி). 

இப் பெயர்களின் பொருளை வடமொழி இலக்கியத்தில் இருந்து கொடுத்தாலும், தமிழில் அழகாக பெயர் வைக்கும் முறையை கம்பர் எடுத்துக் கையாண்டிருக்கிறார். 


இலக்குவன் என்ற பெயரைக் கொண்ட ஒரு தமிழரிடம் அதற்கான பொருள் ஏதுமுண்டா என இன்னொருவர் கேட்கலாம். அதற்கான பதில்கள், இவ்வாறாக இருக்கலாம்.


  1. பொருள் ஏதும் இருக்கலாம் ஆனால் எனக்குத் தெரியாது.

  2. இலக்கு என்றால் தமிழில் அடையவேண்டிய ஒரு நிலை, அப்படிப் பார்க்கும்போது இலக்கு என்பதிலிருந்து பொருள் பெறலாம்..

  3. இது லக்ஷ்மனா என்ற வடமொழிப் பெயரிலிருந்து தமிழாக்கஞ் செய்யப்பட்ட பெயர், அம்மொழியில் பொருள் இருக்கலாம்.

  4. வடமொழியில் லக்ஷ்மனா என்றால் அதிட்டமுடையவன் என்று பொருள். அதையே தமிழாக்கி இடப்பட்டுள்ளது.

  5. மேலும் ஏதாவது ஒரு மொழியில் இதற்கு நெருக்கமான ஒரு சொல்லைக் கொண்டும் பொருள் சொல்லலாம்


இந்தப் பதில்கள் எல்லாமே அவரவர் விளக்கத்திற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. ஆக, பொருள் வேண்டுவோருக்குப் பொருள் தரலாம், வேண்டாதவர்களுக்கு அது தமிழில் எழுதப்பட்ட ஒரு சொல். தமிழின் தரம் குறையாமல் இருக்கும் ஒரு பெயர்.


ஆனால் இதையே லக்ஷ்மன் என்று தமிழில் எழுதிப் புழங்கும் போது தமிழின் சுவையும், தரமும் இழக்கப்படுகின்றன. இந்த நிலை தவிர்க்கப்படலாம்.


ஆனால், ஒருவருக்கு இடப்படும் பெயருக்குப் பொருள் இருக்கத்தான் வேண்டுமா?


ஒருவரை அடையாளப்படுத்த அவருக்கு இடப்படும் பெயர் அவரின் மொழியில்  தவிர்க்கப்பட வேண்டிய சொல்லாக இருக்காத நிலையில் எந்தவொரு பெயரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.

உதாரணமாக; கதரன், மோரியன், மதினி, விபுலி, தகாதி, தேமன் போன்றவை.

இவை தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒன்றுகூட்டி, தமிழிற் சொற்கள் அமைய வேண்டிய அடிப்படை இலக்கணத்தை மீறாமல் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்கு வெளிப்படையாகப் பொருள் தெரியவுமில்லை. இருந்தும் இவற்றை நாம் மக்களுக்குப் பெயராகக் கொள்வதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுசி, சசி, நிசா போன்ற பெயர்களில்  பொருள் ஏதும் வெளிப்படையாகத் தெரியவில்லை.


இன்னொரு உதாரணமாக, ஒருவருக்குக் குண்டர் என்று பெயர் இருந்தால், அதற்கான பொருளாக, குண்டு என்ற தமிழ்ச் சொல்லைக் கொண்டு உருவாக்கிய பெயர் என்று சொல்லலாம். இதையே ஒரு நோர்வே மொழிப் பழக்கம் உள்ளவர் சிந்திக்கையில் வாடிக்கையாளர்கள் (kunder) என்ற நோர்வே சொல்லுக்குத் தொடர்புபடுத்தலாம்.


இன்னொரு பெயர் மணி என்பதைக் கருத்தில் எடுப்போம். தமிழில் ஓசையெழுப்பும் மணி அல்லது தானிய மணிகள் என்று பொருள் கொடுக்கலாம். வடமொழியில் ஆபரணம், மாணிக்கக் கல் போன்று பொருள். ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தால் “காசு”. இப்படியாகப் பல பொருள்களை நாம் எடுத்துக் கூறலாம்.


பொருள் தேடாவிட்டால்,  தமிழில், மணி, அது ஒரு பெயர் அவ்வளவே. மாணி கூட ஒரு பெயராகலாம்.


ஆக, ஒருவரின் பெயருக்குப் பொருள் தேடப் புறப்பட்டால் எத்தனை மொழிகளில் புலமை உள்ளதோ அத்தனை பொருள்கள் காணப்படலாம். எனவே, பெயருக்குப் பொருள் தேடல் என்பது அத்துணை அவசியமானதில்லை.


இவ்விடத்தில் ஒரு வேற்று மொழி உதாரணத்தைக் கூறலாம். பின்லாந்தில் உள்ள ஒருவரின் பெயர் “தாவி” (Taavi). அப்பெயரை விளக்கமுடியுமா என அவரிடம் கேட்டபோது, அவர் சொன்னார். David என்ற கிறிஸ்தவப் பெயரின் பின்லாந்து மொழி வடிவமே அது என்று. இது தமிழிலும் முன்னர் தாவீது என்று இருந்தது நினைவுக்கு வருகிறதே.


தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விவிலிய நூலிலும் குரானிலும் அவற்றின் மூல நூலிலிருந்த பெயர்கள் நல்ல தமிழாக்கஞ் செய்யப்பட்டு எழுதப்பட்டிருந்தன. காலப்போக்கில், தமிழர்கள் அவற்றை மறந்து வருகின்றனர். விவிலியம், பைபிள் என்று எழுதப்படுகிறது.

ஏசு நாதரின் பெயர் மூல நூலில் ஏசு என்று ஒலிக்கும். உரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்டபோது  Jesus. இது அனேகமான ஐரோப்பிய மொழிகளில் Yesus என்றே உச்சரிக்கப்படும். பின்னர் ஆங்கிலத்தில் அது ஜேசு ஆகிப் பின்னர் ஜீசஸ் என்றும் ஆகி விட்டது.


பிற மதங்கள், பிற பண்டைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள் தவிர, இப்பொழுது பிற மொழிப் பெயர்கள் தமிழர் இட்டுக் கொள்வதையும் காணலாம்.

உதாரணமாக; ஜேசன், ஜோன்சன், அண்டனி, வில்லியம், ரோசா, ரோஜா

இவற்றில் கிரந்தம் தவிர்க்க விரும்பினால், சேசன்/யேசன், சோன்சன்/யோன்சன் என்று எழுதலாம். ரோசாவை  உரோசா என்று தமிழ் இலக்கணம் கெடாமல் எழுதலாம்.


ஆனால் இவையெல்லாம் அவசியமற்றவை என்றும் தமிழில் காணப்படும்  கிரந்தம் உட்பட்ட எல்லா எழுத்துகளாலும், தமிழ் இலக்கணத்தைப் பற்றி கவலை கொள்ளாமலும் பெயர்களை தேவையானவர்கள் எழுதிக்கொள்ளலாம். தடையுமில்லை குற்றமுமில்லை. ஆனால் தமிழ் நன்றாகத் தொனிக்காது.


ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுத வேண்டும் என்று அவசியமில்லை. இதேபோல், தமிழ்ப் பெயரையும் அப்படியே ஆங்கிலத்தில் எழுதவேண்டியதுமில்லை. தமிழ்ப் பெயரை ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்ப நாங்கள் எழுதி வைத்துகொண்டிரும்போது, அதை, பிரெஞ்சு மொழிக்காரரோ அல்லது பின்லாந்து மொழிக்காரரோ வாசிக்கும்போது அது அவர்கள் மொழி உச்சரிப்பில் வேறு பெயராகிவிடும்.


இப்போது, எண்கணிதச் சாத்திரம் பார்ப்பவர்கள், புதிதாகப் பெயர் வைக்கும் போது, ஆங்கிலத்தில் அப் பெயரை எழுதிக், குறிப்பிட்ட ஒரு எண் கிடைக்கும் வகையில் எழுத்துக்களை மாற்றியோ, இரட்டிப்பாக்கியோ அல்லது ஓசையில்லா எழுத்துக்களை உள்வாங்கிய ஒரு பெயரை உருவாக்கி விடுகிறார்கள். அந்தப் பெயரை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அது நாம் நினைத்து வைக்கப்பட்ட பெயர் போல் இருப்பது கடினமே.


உதாரணமாக, பிரதாபன் என்று பெயரை வைக்க விரும்பியவர், ஆங்கிலத்தில் எழுதும் போது இப்படியெல்லாம் வரலாம்.

Pirathaapan, prathaapan, prathapan, pirathaphan, piirathapan, pirathaban, prathabhan, pradhaban, Brathapan, …..

இந்தப் பெயர்களை ஆங்கிலத்தில் வாசிக்க முயல்வோர் பெருந்  தொல்லைக்காளாவார்கள்.


இன்னொரு பெயரான, கோகுலன் என்ற பெயரை எடுத்துக் கொள்வோம். இதை நாம் ஆங்கிலத்தில் எழுத முயலும்போது Koghulan என்று தமிழ் உச்சரிப்புக்கு அமைய எழுதலாம். ஆனால் வடமொழிப் பரிச்சியம் உள்ளவர்கள் அதை Gokulan என்று எழுதவும் உச்சரிக்கவும் முயலும்போது பிரச்சனை வந்து விடும்.

இந்தச் சிக்கல் பல பெயர்களில் உண்டு. சில எடுத்துக்காட்டுகள் இதோ.


கணேஸ் - Kanes - Ganesh

பாலா - Pala - Bala

கிரிதரன் - Kiritharan - Giritharan

காயத்திரி - Kayathri - Gayathri


எனவே தமிழரின் பெயரைத் தமிழில் எழுத வேண்டும். தேவைப்படும்போது, பிற மொழியாளருக்கு அவர்களின் மொழியையும் அதன் உச்சரிப்பு முறையயும்  அறிந்து தமிழ்ப் பெயர்களை அவற்றிற்கு ஏற்ப எழுதிக் காட்டலாம்.


நோர்வேயில் வாழ்ந்து வரும் தமிழர் உதயன். அவர் நோர்வேயில் இருக்கும்போது, தன் பெயரை Oddean என்றே எழுதுவார். நோர்வே உச்சரிப்பில் அது உதயன் போல் ஒலிக்கும்.


ஆக மொத்தத்தில், ஒருவரின் பெயர் என்பது அவரின் மொழிக்கும், பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இருப்பது சாலச் சிறந்தது. மற்றவருக்கேற்ப பெயர்களை அமைக்க எண்ணுவது தவிர்க்கப்பட வேண்டும்.


----- வளர் சஞ்சிகைக்காக எழுதப்பட்டது ----