Tuesday, September 26, 2006

கணினியில் தமிழ் - பகுதி 3



-1- - -2- - -4- - -5- - -6- - -7-



தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற் கேற்பப் பாவனையில் வைத்திருந்ததால், ஒருவர் தமிழில் தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லா விட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். சரி, அனுப்புபவர், பெறுனர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும், வாசிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அதே நேரத்தில், அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளினூடு பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் கடிதம் சரியாகப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். இதனால் மின்னஞ்சல் மென்பொருட்களும் விசேட எழுத்துருக்களைக் கையாளக் கூடியதாக தம்மை மேம்பாடடையச் செய்ய வேண்டிய தேவையும் எழுந்தது. இப்படியான சிக்கல்களில் சிக்குப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மென்பொருள் தோன்றியது.

“மாதுரி” அல்லது “மதுரை” (Maduri) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்தது. அதாவது ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களை ஆங்கில உச்சரிப்பில் எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு “மாதுரி” கட்டளையை அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பாவனைக்கு வரவில்லை, ஆனால் இலகுவாகச் சின்னச் சின்ன வார்த்தைகளைத் தமிழ்ப் படுத்த இது மிக உபயோகமானது. அத்துடன் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், மாதுரியிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துக்கள். ஆதலால் இவ் வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1991/92 காலப் பகுதியில் சாத்தியமானதாக இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர் யாரென்பது சரியாகத் தெரியவில்லை.
இதன் மூலம் கிடைக்கும் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.

__
|_| L L0 ||

இது “படமா” என்ற சொல், கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.

இதிலிருந்த பெரிய குறை, எழுத்துக்கள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் பயமுறுத்தியது தான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பாவனையில் பெரிதாக இடம் பெற முடியாமற் போய்விட்டது.

மின்னஞ்சல் பிரச்சினைகளும் தீர்வு முயற்சிகளும் ஒரு புறம் போய்க்க் கொண்டிருக்க, யூனிக்ஸ் பக்கமும் தமிழ் கணினியில் ஏறிக் கொண்டிருந்தது.
ஐடிரான்ஸ் ( iTrans) என்ற நிறுவனம் தமிழை யூனிக்ஸில் அப்போது (90 களில்) பிரபலமாக இருந்த லேடெக் (LaTex) எழுதியில் தமிழைக் கொண்டு வந்திருந்தது. இதன் மூலம் தமிழில் எழுதுவது சாத்தியமாக இருந்தது. தனிக் கணினி போல் யூனிக்ஸ் கணினிகள் பொது மக்கள் பாவனையில் இல்லாததால், தனிக் கணினியில் தமிழைச் செம்மைப் படுத்தும் முற்சிகளும் அபிவிருத்திகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்தன. இக்காலத்தில் ஆராய்ச்சிகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின.

........................... தொடரும்


-1- - -2- - -4- - -5- - -6- - -7-

7 comments:

மருதநாயகம் said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள் !

Athman said...

'கணினியில் தமிழ்'தொடர் நன்றாக வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள்.

Jeyapalan said...

மருதநாயகம், ஆத்மன்,
உங்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

நற்கீரன் said...

இக் கட்டுரையின் (தமிழ் கணிமை வரலாறு) நடையை சற்று செழுமைப்படுத்தி த.வி. க.க இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நேரம் கிடைக்கும் பொழுது த.வி. க.க. பங்களித்தால் நன்று.

நன்றி.

Jeyapalan said...

நற்கீரன்,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
// நடையை சற்று செழுமைப்படுத்தி//
கிடைக்கும் நேரத்தில் முடிந்தது இவ்வளவு தான். வைத்துக் கொண்டு வஞ்சனை செய்யவில்லை.

அன்புடன்,
ஜெயபால்

Jeyapalan said...

வைசா,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Jeyapalan said...

நற்கீரனின் பரிந்துரைக்கேற்ப, இத் தொடரைக் கொஞ்சம் ஒழுங்கு படுத்தி விக்கிப்பீடியாவில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.