Saturday, September 30, 2006

கணினியில் தமிழ் - பகுதி 4



-1- - -2- - -3- - -5- - -6- - -7-



முன்பே சொன்னது போல், எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சை உபயோகிப்பதால் இருந்த சிரமங்களைக் கருத்திற் கொண்டு சில மென்பொருட்கள் இப்பொழுது தயாராகத் தொடங்கின. 90 களின் நடுப்பகுதியில், மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகமாக்கினார். இதில் எழுத்துரு, எழுதி, மின்னஞ்சற் செயலி, விசைப்பலகை என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதில் முக்கியமான அறிமுகம் விசைப் பலகை. இந்த விசைப் பலகையைப் பாவித்து நாம் ஆங்கிலமயமான (romanized)தமிழையும் எழுத முடிந்தது. இதில் தமிழ்த் தட்டச்சும், ஆங்கிலமயத் தமிழ்த் தட்டச்சும் சேர்ந்தே இருந்தன. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அம்மா என்று எழுத “ammaa” அல்லது “ammA” என்று தட்டினால் சரி. மிக இலகு. இதில் இன்னொரு விளைவு, தமிழைப் படிக்காத ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூடத் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழை திருத்த முடியாதென்பது வேறு விடயம்.

இந்த நேரத்தில் யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சற் செயலி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளி வந்து மின்னஞ்சலிற் தமிழை மேம்படுத்தியது. முரசுஅஞ்சல், இணைமதி, இணைக்கதிர், மைலை, ஆவரங்கால் போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கிய பங்காற்றின. ஆவரங்கால் என்பது ஈழத்தில் ஒரு ஊரின் பெயர். இந்த ஊரைச் சேர்ந்த திரு. ஸ்ரீவாஸ் சின்னத்துரை என்பவர் உருவாக்கிய ஒரு எழுத்துரு தான் இது. இவர்களோடு குறிப்பிடக் கூடிய இன்னும் பலர் இருந்தனர். இவர்களில் எனக்கு ஞாபகம் வரும் பெயர்கள் சில இதோ.

திரு. குமார் மல்லிகார்ஜுன்,
கலாநிதி கல்யாணசுந்தரம்,
திரு. மா. அங்கையா,
திரு. மணிவண்னன்,
திரு. நாகு,
திரு. கலைமணி,
திரு நா. கணேசன்,
திரு. பூபதி மாணிக்கம்,
திரு நா. சுவாமிநாதன்.
(பெயர் மறந்து விட்ட அறிஞர்கள் தயை கூர்ந்து மன்னிக்க)

இவர்கள் இத்தோடு நில்லாமல் தொடர்ந்து தமிழின் கணினி இருப்பிற்கு இன்னமும் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந் நேரத்தில், யுனிக்ஸில் அகரம் என்ற செயலியும், மக்கிண்டாசில் சில்க்கி என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகி விட்டிருந்தன. இவை இப்படியிருக்க இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் எற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான் இணைய யுகம். (Internet era)

இணையத்தில் (internet), வைய விரி வலை (world wide web) 1990 முற்பகுதியில் கோபர் (Gopher), மொசையிக்(Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்களாக உருவாகி இணையத்தின் பாவனயை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது அபிவிருத்தி அடைந்து நெட்ஸ்கேப் (Netscape) பில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே ஆரம்பமாகியது.

இப்பொழுது, சில இணையத் தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. இந்தத் தமிழ் இணையத் தளங்களை உருவாக்குவதில் மிக உதவியாக இருந்தவை முரசு-அஞ்சல் செயலியும் அப்பொழுது தோன்றிய இன்னொரு புரட்சியான தமிழ் மடலாடற் குழுவும் அதனாலேற்பட்ட பெரிய அபிவிருத்திகளும்.

…. தொடரும்


-1- - -2- - -3- - -5- - -6- - -7-

2 comments:

Anonymous said...

மயிலை: கல்யாணசுந்தரம் மயிலாப்பூர் பெயரிலே உருவாக்கியது.

திரு. பூபதி மாணிக்கம், திரு நா. சுவாமிநாதன் ஆகியோர் காலத்திலே பிந்தித்தான் தமிழிணையத்துக்கு வந்தார்கள். எல்லே சுவாமிநாதனுக்கு முன்னால், அவருடைய தம்பியார் எல்லே ராம் இருந்தார். அவர்கூட, தமிழ்நெற்றிலே 1997 இல் வந்தவர்தான். நா. கணேசன்கூட தமிழ்நெற் சார்ந்த இணையத்துக்குப் பிந்தியவர்தான். சிங்கை பழனி, இண்டி ராம், கப்டன் கோவிந்தா, மலேசியா ரெ. கார்த்திகேசு, கோவர்த்தன், மலேசியா ஜெயபாரதி, அப்போதைய ஜெர்மன் (இப்போதைய தென் கொரியா), கண்ணன், நயனன் என்று இப்போது அறியப்படும் நாக. இளங்கோவன், சிங்கை அரவிந்தன், நியூ ஜெர்ஸி அரவிந்தன் ஆகியோர் இயூடோரா_முரசு அஞ்சல் தமிழ் குழுமத்திலே ஆரம்பத்திலே இருந்தவர்கள்.

முத்து நெடுமாறனோடு எதிர்த்துக்கொண்டு, இன்னொரு குழுவை வைத்திருந்த தமிழின் முதலாவது இணைய இதழைத் (கணியன்) தந்த சிங்கை நா. கோவிந்தசாமியையும் கருத்திலே எடுக்கவேண்டும். அவரின் இணையக்கருத்தாடல் மின்மடற்குழுவையும் சொல்லவேண்டும். இவருடைய எழுத்துரு தமிழ்நெட் எழுத்துரு. பாலாபிள்ளையின் தமிழ்நெற்றுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. தமிழ்நெற் முரசு அஞ்சலோடு இயங்கியது. சில்க் கீயினை மல்லிகார்ஜுன் நா. கண்ணன் போன்ற மக்கிண்டொஸ் கணணிக்காரர்களின் தமிழ்வசதிக்காகப் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். நா. கண்ணன், ஹார்ட் போன்றோரும் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களே சுட்டட்டும்.

சாராமல், ஈழத்தமிழர்கள் பயன்படுத்திய, இன்னும் பயன்படுத்தும் பாமினி எழுத்துரு பற்றிய பதிவொன்றும் வேண்டும்.

Jeyapalan said...

அருவமாக வந்து அவசியமான பல பெயர்களை இங்கே தந்ததற்கு மிக நன்றிகள். இவற்றில் சில தொடரும் தொடரில் இடம்பெறும். பாமினி பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். பெயர்களோடு, மேலதிக தகவல்களும் பிரயோசனமாக் உள்ளன. நன்றிகள்.

வைசா உங்களுக்கும் நன்றி. கல்யாணசுந்தரத்தைப் பற்றி எழுதியுள்ளேன்.