Sunday, October 01, 2006

கணினியில் தமிழ் - பகுதி 5



-1- - -2- - -3- - -4- - -6- - -7-



யாஹூ மடலாடற் குழுக்களுக் கெல்லாம் முன்பே அது தோன்றியது. முரசு அறிமுகமான காலத்தில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலாப்பிள்ளை என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (www.tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடல்களைச் செய்தனர். முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. முரசு அஞ்சலோடு யூடோராவில் வெற்றிகரமாக அமுலுக்கு வந்த எழுத்துரு ஆவரங்கால்.

உலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுனர்கள், தமிழ் வல்லுனர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. கணினியில் தமிழ் - பகுதி 4 இல் குறிப்பிடப் பட்டவர்களும், அதில் இருக்கும் பின்னூட்டில் குறிப்பிடப் பட்டிருப்பவர்களும் இன்னும் பலரும் இதில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியம (standard) நிலையைச் சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரயாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துருக்களை நியமப் படுத்த முடிந்தது. ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுற்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை.

ஆவரங்கால் எழுத்துருவும் முரசு விசைப்பலகையும் பாவனைக்கு வந்ததும், பலரும் ஆவரங்கால் எழுத்துருவைத் தங்கள் கணினியில் நிறுவி வைத்திருந்தனர். அத்தோடு பல இணையத் தளங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு வந்து கொண்டேயிருந்தன. தகுதரம் வந்து இணைய வேலைகளை இலகுவாக்கியது.
இவை தவிர தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணையத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கின. விகடன், குமுதம், வீரகேசரி மற்றும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் பிரபலமாகின. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவை இறக்கம் செய்து கொண்டால் போதும்.

………………… தொடரும்


-1- - -2- - -3- - -4- - -6- - -7-

3 comments:

வடுவூர் குமார் said...

இவ்வளவு நடந்திருக்கா?

Jay said...

அருமையான தொடர் தொடருங்கள்...
நான் தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.

Jeyapalan said...

வடுவூர் குமார்,
இவ்வளவு மாட்டுமல்ல இன்னும் நிறைய. வெளியில் தெரிந்தவை கொஞ்சம், அதிலும் நான் அறிந்தவை இன்னும் கொஞ்சம். தெரியாதவை எவ்வளவோ?
வருகைக்கும் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்.

மயூரேசன்,
தொடர்ந்து வாசியுங்கள். தொடரின் முடிவில் சில முக்கியமான இணையப் பக்கங்களின் தொடுப்புக்களையும் கொடுக்க எண்ணியுள்ளேன், அவையும் உங்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.