Tuesday, October 03, 2006

கணினியில் தமிழ் - பகுதி 6



-1- - -2- - -3- - -4- - -5- - -7-



பகுதி 6

பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, “இயங்கு எழுத்துரு” (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை ஒரு தனியார் நிறுவனம் (bitstream) தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத்தளங்களைப் பார்வையிட முடிந்தது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன.

இவறிற்கெல்லாம் முடிவு கட்டத் தான் நியம வேலையில் பலரும் மூழ்கினர்.
இதிலொன்று தகுதரம். ஆயினும் தகுதரத்திற்கும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி (unicode.org) என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தயும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து நியமங்களையும் அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி நியமம் உருப் பெற்றது. இது தகுதரத்தின் நியமத்தை ஒத்திருக்கவில்லை.

இந்தத் தறுவாயில், தமிழக அரசு தமிழின் நியமம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரச ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு நியமச் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. இதை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் அங்கீகரிக்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி நியமமே எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்டு இயல்பாகவே பாவனைக்கும் வந்து விட்டது. தமிழ்நெட் என்னும் தலைப்பில் வருடந்தோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. உத்தமம் என்ற ஒரு அமைப்பும் இவற்றோடு சம்பந்தமுடையது.

முரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, கீமான் (keyman) என்னும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயயரிக்கப் பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்தக் கீமான் மூலம் தமிழை அடிப்பதும் இலகுவாக்கம் பெற்றது. இதைப் பாவித்து ஈ-கலப்பை என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப் பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், நாங்கள் அடிப்பதற்கு வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது பாமினியா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் இங்கே உண்டு.

தகுதரம், ஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாளாந்தப் பாவனையிலும் பூத்துக் குலுங்குகிறது.

தமிழ்க் கணினி அறிஞர்களையும் தமிழறிஞர்கள் பலரையும் ஒன்று பட வைத்த பெருமை “தமிழ்.நெட்” க்கு உரியது. ஒன்று பட்டது மட்டுமல்ல பல ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளுக்கும் இது வடிகாலாக இருந்தது. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் ஆக்க பூர்வமாகத் தனித் தனியே பிரிந்து “தமிழ்” என்ற நோக்கைக் கை விடாமல் இன்றும் இயங்குவது கண்கூடு.

தமிழ்.நெட் இல் ஆரம்ப காலம் தொட்டே மிகப் பெரும் பங்காற்றியவர் மலேசிய வைத்தியக் கலாநிதி ஜெயபாரதி அவர்கள். தமிழில் எல்லாத் துறைகளையும் பற்றிச் சரளமாக எழுதி வந்தார். மேலும் அவர் அகத்தியர் என்ற ஒரு யாஹூ மடலாடற் குழுவை ஆரம்பித்து இன்றும் அயராது அரும் பெரும் விடயங்களைப் பற்றி அங்கே எழுதி வருகின்றார். அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்பது அவருடைய படைப்புகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். கணினியில் அவரின் தமிழ்த் தொண்டு இன்றும் தொடர்கிறது. இணையம் (Internet), வைய விரி வலை (World wide web) போன்ற தமிழ்ச் சொற்களை எங்களுக்குத் தந்தவர் இவரே.

இது போல் தமிழுலகம், தமிழாராய்ச்சி போன்ற பல குழுக்களும் இப்பொழுது இருக்கின்றன. மேலும், சுமேருவில் வாழ்ந்தவர்கள் தமிழரென்று சுமேருத் தமிழ் பற்றியும் ஆதாரங்களோடு எழுதி வந்தவர் கலாநிதி லோகநாதன் அவர்கள். அவரது எழுத்துக்களை மெய்கண்டார் என்னும் மடலாடற் குழுவில் காணலாம். பல மடலாடற்குழுக்கள் ஒருங்குறியிலும், பல இன்னமும் தகுதரத்தோடும் தகுதர ஆவரங்கால் எழுத்துருவோடும் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றன.

… அடுத்த பகுதியுடன் முடியும்.


-1- - -2- - -3- - -4- - -5- - -7-

8 comments:

Anonymous said...

தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது.

தமிழக அரசினை தமிழ்நாட்டுக்கணிச்சங்கம் தகுதரக்குழுவினருக்கெதிராக எப்படியாக இயக்கி இரவோடு இரவாக தமிழ்நெட்99 இனை நடைமுறைப்படுத்தினர் என்பதையும் எழுதியிருக்கலாம்.

வைத்தியகலாநிதி வையவிரிவுவலையைக் கண்டுபிடித்தார் என்றாலுங்கூட, இணையம் என்பதனை அல்ல என்று தோன்றுகிறது ;-)

பாலா பிள்ளை தமிழ்க்கணியத்துக்காக நடத்திய webmasters list பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். இது, தகுதரம், உத்தமம் குழுமங்களுக்கு முன்னோடி.

மெய்கண்டார் லோகநாதன் தமிழ்நெற்றுக்கு வந்தது மிகவும் பிந்தித்தான். அதைவிட பழனி, மாகோ இவர்களும் இவர்களின் தமிழ்க்குழுமமும் முக்கியமானது.

Jeyapalan said...

அருவம்,
உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
விடுபட்டவைகளைச் சுட்டிக் காட்டியதற்கும் நன்றி.
இணையம் என்ற சொல் பின்னே யாரால் முன் மொழியப்பட்டது? உங்களுக்குத் தெரியும் போலுள்ளது, சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

Anonymous said...

தெரியாது. ஆனால் மருத்துவக்கலாநிதியால் அல்ல. தமிழ்நெற் என்பதற்கு தமிழ் இணையம் என்பது மருத்துவக்கலாநிதி தமிழ்நெற்றுக்கு வரமுன்னரேயிருந்தது.

கீமான், சில்க்கீயுடன் குமார் மல்லிகார்ஜுனனுடன் சிவராஜும் தமிழ் எழுத்துருக்களைப் பதிப்பதற்காகச் செயற்பட்டார்.

முதலிலே எழுத்துரு மாற்றியினை சுரதா யாழ்வாணன் செய்யமுன்னரே, மணி. மு மணிவண்ணன் தன் தகுதரமாற்றியிலே (TSC Converter) செய்தார். முரசு அஞ்சல் எழுதிபோல, சிக்காக்கோ இளங்கோ சம்பந்தத்தின் இளங்கோ மாற்றியும் பயன்பட்டது.

Jeyapalan said...

உங்கள் மேலதிக கருத்துகளுக்கு நன்றி அனானி (அருவம்)

Anonymous said...

இணையம் என்ற சொல்லை யார் ஏற்படுத்தியது என்பது
சம்பந்தமான ஐயப்பாடு அவ்வப்போது எழுகிறது.
என்னுடைய பெயரும் அதனுடன் அடிபடும்.
நான் அந்த சொல்லைக் கண்டுபிடிக்கவில்லை.
நான் தமிழ் நெட்டில் சேரும்போதே அதைத் தமிழ் இணையம்
என்று அழைத்துக்கொண்டிருந்தார்கள்.

நான் Coin செய்த சொற்கள்:

வையவிரிவலை
புலம்பெயர்தமிழர்
கணினியா கணனியா
உரலை இடிக்கவும் - Click the URL

மதுரைத் திட்டம் என்னும் பெயர் பிரரேபிக்கப்பட்டபோது
அந்தப் பெயர் மிகவும் பொருத்தமானது என்று அதற்கு Justification
கொடுத்தேன்.
அந்தப் பெயரும் நான் Coin செய்ததில்லை.

Jeyapalan said...

அறிஞர் ஜெயபாரதி அவர்களே இங்கே வந்து பின்னூட்டம் இட்டது எனக்குப் பெருமையும் மகிழ்வும் அளிக்கிறது. நன்றி ஐயா. கிட்டத்தட்ட 10 வருடமாக உங்கள் ஒப்பற்ற பணிகளோடு பழக்கமே.

Anonymous said...

அகத்தியர் யாஹ¥ குழு இப்போது பத்தாவது ஆண்டாக நடந்துவருகிறது.

http://groups.yahoo.com/group/agathiyar/

அதில் இருக்கும் நாற்பதினாயிரத்துச்சொச்சம் மடல்களை அனைத்தையும்

http://www.TreasureHouseOfAgathiyar.net

என்னும் வலைத்தளத்தில் சேமித்துவைத்திருக்கிறோம்.

இவைதவிர

http://visvacomplex.com/
என்னும் புதிய வலைத்தளத்தையும் நிறுவியிருக்கிறோம்.

மதுரைக்கென தனி வலைத்தளமும் Maduraiweb என்ற பெயரில் இயங ஆரம்பித்துவிட்டது.

http://www.maduraiweb.com/

மேலும் இரண்டு வலைத்தளங்களுக்கு வேலைகள் நடந்து வருகின்றன.

Jeyapalan said...

இந் நாள் அகத்தியர் ஜெய்பீ அவர்களுகளின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.