Thursday, September 21, 2006

கணினியில் தமிழ் - பகுதி 1

கணினியில் தமிழ் என்ற ஒரு தொடரை எனக்குத் தெரிந்த வரையில் இங்கே தர முயல்கிறேன்.


-2- - -3- - -4- - -5- - -6- - -7-


கணினியில் தமிழ்

- பகுதி 1
கணினி தோன்றிப் பல வருடங்களானாலும், கணினியில் தமிழ் தோன்றியது 1980 களில் தான். அப்பொழுது மேசைக் கணினிகள் முளை விடத் தொடங்குகிற நேரம். முளை விடும் கணினிகளும் தனக்குத் தனக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் கொண்டிருந்தன. பின்னர் “மக்கின்டாஸ்”, “மைக்ரோசாப்ட்” வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளி வந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.

கணினிகள் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்கள் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

இவற்றின் ஆதாயங்களைத் தமிழிலும் பெற முயன்ற தமிழ்க் கணினி வல்லுனர்களின் பல முயற்சியிகளில் முதலில் தோன்றிய மென்பொருள் ஒரு ஆவணங்கள் எழுதும் “ஆதமி” என்னும் மென்பொருள். இது 1984 இல் கனடாவில் வதியும் கலாநிதி சிறீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அன்னாளில் தமிழ்க் கணினிப் பாவனையாளர்களிடம் பிரபலமாக இருந்தன.

1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு அறிமுகப் படுத்தப் பட்டது. இக்கால கட்டத்தில் எழுத்துருக்களை உருவாக்கப் பல வல்லுனர்கள் சொந்த முயற்சியாக இறங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன.

...............தொடரும்
-2- - -3- - -4- - -5- - -6- - -7-

7 comments:

சின்னக்குட்டி said...

வணக்கம் ஜெயபால்...நல்லதொரு முயற்சி.. தொடருங்கள்...

╬அதி. அழகு╬ said...

ஆதமிக்கு முன்னரே (1982) பாரதி வந்து விட்டது.

Jeyapalan said...

சின்னக்குட்டி, அழகு உங்கள் வரவுக்கு நன்றி.
அழகு, "பாரதி" பற்றி மேலதிக விபரங்கள் இருந்தால் தர முடியுமா?
திருவள்ளுவர் என்னும் ஒரு எழுதி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன், அனால் அதிக விபரம் இல்லை. பாரதி பற்றிக் கேள்விப்படவில்லை.
அன்புடன்,
ஜெயபால்

Jay said...

அருமையான தொடர்.
தமிழ் கணனிஇயல் எனது விருப்பமான பகுதி...
தொடர்ந்து எழுதுங்கள்..ஆர்வமாகக் காத்து இருக்கின்றேன்

Jeyapalan said...

மயூரேசன்,
உங்கள் ஆர்வத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

கணினியா? கணனியா? எப்படி அழைக்க வேண்டும் என்று பெரிய வாதப் பிரதி வாதங்களெல்லாம் நடந்து முடிந்து கணினி என்றே இப்பொழுது எல்லோரும் பாவிக்கின்றோம்.

கணினியில் தமிழ் ஏறிய காலப் பகுதியிலிருந்தே கணினியுடன் தொடர்பிலிருக்கிறேன், அதனால் சொந்த அனுபவத்திலிருந்து எழுதுகிறேன். இதில் பழம் தின்று கொட்டை போட்ட பலர் இருக்கிறார்கள் அவர்களில் நான் அறிந்தவர்களைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

மணிவானதி said...

மிக அருமை. பல வரலாற்று உண்மைகளை(கணினித்தமிழ்) எழுதிவருகின்றீர்கள் என்பதை இன்றுதான் கண்டேன். வாழ்த்துகள். அதைபோல முதன்முதலில் தொடங்கிய தமிழ் இணையதளம்? எது? ஆங்கிலத்தில் தோன்றிய முதல் இணையதளம் எது? என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும். மிக்க நன்றி.

Jeyapalan said...

வணக்கம் மணிவானதி,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் முதற்கண் நன்றி.

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் என்னிடம் கிடையாது. ஏனெனில், முதலில் தொடங்கப்பட்ட இணையத் தளம் என்று தமிழில் யாரும் சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லை எனக்கு.
பலர் ஒரே சமயத்தில் ஆரம்பித்திருக்கலாம். அவை இப்பொழுது உபயோகத்தில் இல்லாமல் கூடப் போயிருக்கலாம். தனித் தமிழில் இல்லாவிட்டாலும், கலப்பு மொழியில் ஆரம்பித்திருக்கலாம். நான் கூட 1996 இல் தமிழில் எனக்கு ஒரு இணையத் தளத்தை வைத்திருந்தேன்.

அன்புடன்,
செயபால்