Wednesday, July 26, 2006

இந்தப் பைத்தியக் காரத்தனம் அரசியலரங்கில் மிகவும் அதிகமாகக் காணப்படும் ஒரு சரக்கு. பல நாடுகளில், பல காலமாகப் பாவனையில் இருக்கும் ஒரு தந்திரம். அரசியல் அனர்த்தங்கள், படுகொலைகள், சதி வேலைகள் நடைபெறும் போது உதவிக்கு வருவது இந்தப் பைத்திய மருந்து. அரசியல் சதிகாரர்கள், கொலைகாரர்கள், பாதகர்கள் மாட்டிக் கொள்ளும் போது அவர்கள் சார்புடைய அரசுகள் பதிவியிலிருக்கும் போது அந்த அரசுகள் அவர்களைப் பாதுகாக்கத் தவறுவதில்லை. அதற்கு அவர்கள் பாவிக்கும் அரச தந்திரந் தான் பைத்தியக் காரப் பட்டம்.

சமீபத்திய உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவை சில. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்றவரைப் பைத்தியம் என்று கூறி விடுதலை செய்யப் பட்டது ஒன்று. அண்மையில் யாழ்நகரில் நீதிபதியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து தாக்க முற்பட்ட சம்பவத்தில் கைதானோருக்கும் பைத்திய வைத்தியம் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது. இப்படிப் பல.

இங்கே நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பைத்தியம் யாருக்கு என்பது தான். பைத்தியக் காரரை வேலைக்கு வைத்திருப்பவர்களா? அல்லது வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கும் பைத்தியமா? அல்லது அவர்களையெல்லாம் பதவிக்கு அனுப்பி வைக்கிறோமே எங்களுக்குப் பைத்தியமா?

என்னவோ ஏதோ இந்தப் பைத்தியக்காரப் பதவியால் பலரின் காட்டில் மழை.

Tuesday, July 11, 2006

தேன்கூடு போட்டி - மரணம் தண்டனையா

மரணம் தண்டனையா
===============

தேன்கூடு வைக்குதொரு போட்டி
தலைப்பைப் பாரதொரு ஈட்டி

மரணம் பற்றிநீ யெழுது
தோற்றால் வராது தீது
மரண தண்டனையுந் தராது

மகனே நிறுத்து
மரண தண்டனையா
மீண்டும் சொல்லையா
மரணம் தண்டனையா

மண்ணுலகில் மாந்தர்தம்
மண்ணாளுஞ் சட்டங்களில்
கண்ணாம்பூச்சி காட்டுகிறார்
குற்றம் புரிந்தோர்க்கு
அதியுச்சத் தண்டனையாம்
மரணம் தண்டனையாம்

மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா

மரணம் தண்டனையா
மனிதம் தப்பிழைக்கிறதா

ஜெயபால், 2006/07/06

Thursday, July 06, 2006

மரணம்

மரணம் --------- மறையாதது மரணம் நிலையானது மரணம் மரிக்காதது மரணம் மவுன நியதியே மரணம் தோன்றிய யாவும் தொடுமொரு நாளில் நிலையான மரணத்தை சரியான தருணத்தில் பிறக்கும் போது கூடவே பிறக்கும் பிறழாக் கணக்கு மரண வழக்கு நுண்ணிய அங்கி முதல் நூறுகோடி அண்டம் வரை நுழைய வேண்டிய வாசலது நுட்ப அதிசயம் சாதலது மரணத்தின் வரவு மர்மத்தில் மர்மம் எப்ப வரும் எப்படி வரும் என்றே தெரியாத தர்மத்தில் தர்மம் ஆண்டவன் படைப்பான் அவனே அழிப்பான் அழிப்புக்குத் துணையாம் மரணமெனும் மறையாம் மரணத்தை வென்றோருமில்லை மரணித்து மீண்டோருமில்லை - இம் மர்மத்தை விளக்கவொரு மார்க்கமும் இங்கில்லை
ஜெயபால், 2006/07/03

Thursday, June 22, 2006

குறையொன்றும் இல்லையே - திருத்தம்

"எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
"

இது ஒரு பாரதியார் பாடல். இந்தப் பாடலை ஒரு திரைப்படத்தில் கொண்டு வந்தார்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர். பாரதியாரின் பாடலில் இருந்த "கண்ணன்" என்ற பெயரை "ரங்கன்" என்று மட்டும் மாற்றி எழுதியிருந்தார் கவிஞர் கண்ணதாசன். பாரதியாரின் பாடலைக் கண்ணதாசனின் பாடல் என்று அந்தப் பாடலின் இசைத்தட்டில் அந்த நாளில் எழுதியிருந்தார்களாம். அது அந்தத் திரைப்படக் காரர்களின் பிழையே அல்லாது கணணதாசனின் பிழையல்ல. இது போலப் பலர், பலரின் பாடல்களை ஒரு வேடிக்கைக்காக மாற்றி எழுதுவதும் உண்டு. உதாரணமாக "இரண்டு மனம் வேண்டும்" என்ற பாடலை "இரண்டு ரொட்டி வேண்டும்" என்று மாற்றி எழுதிப் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.

அத்தகைய ஒரு மாற்றி எழுதும் நோக்கம் எனக்கும் வந்தது. பாடல் மிகப் பிரபலமான ஒன்று. அதனால் தயக்கம்.

அந்தப் பாடலை நான் முதன் முதலில் அறிந்தது, அப் பாடலைப் பற்றித் தெரியாமலேயே. ஒரு நாள் திரு. ஏ. வி. ரமணன் அவர்களின் சப்த சுவரங்கள் நிகழ்ச்சியொன்றின் ஒளி நாடாவைக் குடும்பதாருடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சி, கண் தெரியாதவர்களுக்கானது. அவர்கள் பாடுவதைப் பார்க்கக் கவலையாக இருந்தது. மிகத் திறமைசாலிகள் நன்றாகப் பாடினார்கள். அவர்களை வர்த்தக ரீதியில் உபயோகித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பலர் முன்னேற்றலாமே என்று ஒரு ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எல்லோரும் பாடி முடித்துப் பரிசுகளும் வழங்கப்பட்ட பின்னர், திரு. ஏ. வி. ரமணன் அவர்கள் அந்தக் கலைஞர்களை தன் இரு பக்கத்திலும் அழைத்து வைத்துக்கொண்டு ஒலிவாங்கியைத் தூக்கிப் பாடத் தொடங்கினார். கண்களில் கண்ணீர் ஆறாய் ஓட நானும் என் மனைவியும் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் பாடல் தான்:

"குறையொன்றும் இல்லை
மறை மூர்த்திக் கண்ணா
குறையொன்றும் இல்லைக் கண்ணா
குறையொன்றும் இல்லைக் கோவிந்தா"


பாடியவர் கூட அழுகையை அடக்க முடியாமல் அழுதே பாடினார். பாடலின் இனிமை, கருத்துச் செறிவு, பாடிய சூழல், பாடகரின் உணர்ச்சிப் பிரவாகம் என்று எல்லாமே எம்மை அடிமை கொண்டு விட்டன. நேரம் போதாமையால் அவர் பாடியது ஓரிரு வரிகளே தான். அன்றிலிருத்து அந்தப் பாடலைப் பற்றிப் பலரிடம் கேட்டு அதன் புகழ் மிக்க வரலாறு அறிந்து, இசைத் தட்டுக்களையும் வாங்கி எப்போதும் இரசித்து கொண்டே இருக்கின்றோம்.

அண்மையில் ஒரு வலைப்பூவில் (http://kelpidi.blogspot.com/2006/06/blog-post_17.html) இந்தப் பாடலை ஒரு அன்பர் இட, பல அன்பர்கள் அப் பாடலின் புல்லாங்குழல், சாக்சபோன் இசை வடிவங்களையும் பின்னூட்டாகத் தந்திருந்தார்கள். கேட்டு மெய் மறந்து விடுகிறோம்.

அத்தகைய பாடலை மூதறிஞர் இராஜாஜி ( அவர் பெயர் ராஜா ஆக இருக்குமோ? இந்தி மரியாதைச் சேர்ப்புத்தான் ஜி யோ?) அவர்கள் அழகாக எழுதி விட, இசை அரசி திருமதி சுப்புலட்சுமி அம்மாள் அருமையாகப் பாடிவிட நாமெல்லாம் தேடித் தேடி இரசிக்கின்றோம்.

வாழ்க அவர்கள் புகழ்.

இப்பொழுது என் கதைக்கு வருவோம். அதாவது, அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றுவது, இந்தப் பாடலை முருகன் மேல் பாடினாலும் மிகப் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணமே. பாடலின் பல வரிகள் முருகனுக்கும் ஒத்துப் போகக் கூடியவை. அவ் வரிகளில் வரும் மலை, குன்றம், மறை போன்றவை முருகனுடனும் மிகத் தொடர்புடயவை தானே. அதனால் இந்தப் பாடல் வரிகளில் சில மாற்றங்கள் செய்து கந்தனைப் பாட முடியுமே. முருகனா கண்ணனா, சைவமா வைணவமா என்ற குறுகிய நோக்கமெல்லாம் எனக்கு இல்லை. மனதில் தோன்றியது, முயற்சி செய்கிறேன். பிழையென்று நினைக்கவில்லை. பாடலை மாற்றிப் பார்ப்போம் என்ற முயற்சியின் விளைவே இது. யாரும் குறை கூறாதீர்கள். பாடலைப் பார்ப்போம்.

குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா
குறை ஒன்றும் இல்லைக்  கந்தா
குறை ஒன்றும் இல்லைக்  கடம்பா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் முருகா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
க்
குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா
வேண்டியதைத்  தந்திட வேல்முருகன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைதேர்ந்த கந்தா
மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

மயிலேறி  வருன்றாய் வேலா  - உன்னை
வேண்டுவோர் குறை தீர்க்க  விரைந்தோடி வாராய்
வாராயோ  எனுங் கவலை எனக்கில்லை
க் கந்தா
குன்றின் மேல் ஆண்டியாய்  நிற்கின்ற குமரா
குறை ஒன்றும் இல்லை மறைதேர்ந்த கந்தா

மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
சிலையாக
க் கோவிலில் நிற்கின்றாய் வேலவா
யாதும் மறுக்காத முருகையா - உன் நெஞ்சம்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் தானே 

என்று இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை வடிவேலா  கந்தா

மலையப்பா மால்மருகா குமரேசா குகனேசா

என்னால் பாட முடியாதாகையால் இதோ உங்களுக்காக இனிமையான் சாக்சபோன் இசையில் இப்பாடல்
Kurai onrumillai - Kadri Gopalnath

Monday, June 12, 2006

மனிதரா மதியிலாப் பதர்களா

அல்லைப் பிட்டியின்
அவலக் குரல்
ஓயமுன் எழுந்தது
வங்காலை வன்துயர்
எங்காலை சொல்வது
எம்காலை எப்படி
விடியுமென்று

கயவர் வந்தனர்
காமுகம் புரியவே
கார்முகங் கொண்டு
கயவர் வந்தனர்

தாயையும் சேயையும்
தந்தையையும் தனயனையும்
குத்திக் கிழித்துக் குதறிக்
கொலை செய்த பின்

சந்தையிலே தொங்கும்
மந்தை மாமிசம்போல்
தொங்க விட்டுச் சென்ற
அந்த மனித மாமிசங்கள்
மனிதரா மதியிலாப் பதர்களா?

மிருகச் செயல் புரிந்தாரென்றால்
மிருகங்கள் செயலிழந்து கெஞ்சும்
இது நாம் செய்வதில்லை
நம்மை இவரோடு சேர்க்காதீரென்று

புல்லர்களே என்றால்
புல்லினம் குறை சொல்லும்
தம் பேரையிழுக்க
வந்தது பேரிழுக்கென்று

என்னவென்று அழைக்க - மண்டையில்
ஏதுமற்ற அரக்கரை
நீங்களும் ஒரு தாய் மக்களா?
நாளை மக்களைப் பெறும் மக்கரா?

ஜெயபால் 2006-06-12

Monday, May 29, 2006

உரிமைக் குரலாறு

மே இருபத்தொன்பது
இரண்டாயிரத்தாறு
உலகெலாம் பாயுது
உரிமைக்குரலாறு

துடித்துப் போன உடன் பிறப்புகள்
தூங்கவில்லை நாமென்று
தூக்கிப் பிடிக்குது
துயர்ச் செய்தி மட்டைகளை
புலம் பெயர்ந்த தமிழர்க்குப்
புகலிடம் தந்து காத்த
புகுந்த நாடுகளில்
சுதந்திர வீடுகளில்.

பெண்டுகளும் பிஞ்சுகளும்
பழசாப்போன பஞ்சுகளும்
பேதமின்றிக் கோரமாகக்
கொல்லப் படவும்
கொடுமைப் படவும்

பார்த்தும் பாராதிருக்கும்
பலநாட்டு மக்களே!
மன்னரே!
என்ன இந்த மெளனம்?
கொலையைப் பார்த்தும்
குரவை இல்லையா?
கொன்றது யாரென்று
கண்டு கொண்டால் தான்
திறக்கும் உன் குரல்வளையா?

நல்ல நியாயம் இது
நலிந்தவர்க்கு உதவாதது
மனிதமும் சாக முன்
மனதைத் திறந்து விடு

தந்தை மண்ணே தமிழகமே
நீயுமா காக்கிறாய் மெளன மொழி?
இன்று எழாவிடில் என்று எழுவாய்?
இழவு விழுந்தபின் தான்
வந்துநிற் பாயோ?

சொந்தச் சகோதரர் நாம்
துன்பத்தில் சாகிறோம் - இதைச்
சொல்லிக் காட்டப்
பாரதியா வேண்டும்?

சாத்வீக ஆதரவுக்கே
சனநாயகத்தில் பயமா
உணர்ச்சிகளைக் காட்டக் கூட
உரிமையில்லையா அண்ணா
உங்கள் உணர்வுகளை
உறங்க விடாதீர் - எங்களை
உயிரோடே உறையவிடாதீர்

நாமொருநாள் வெல்வோம்
உரிமைகளைக் கொள்வோம்
அன்று ஊதுவோம் சங்கு
வென்று விட்டோம் என்று

-ஜெயபால்

எங்கே உரிமைக் குரல்?

உலகெங்கும் வாழும் தமிழர் இன்று இலங்கையில் நடைபெறும் அட்டூளியங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று உரிமைக் குரல் எழுப்புகிறார்கள். அந்தக் குரலை பல நாட்டுப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் கூடச் செவி மடுத்து ஆவன செய்வதாகக் கூறி ஒரு ஆறுதலை எங்களுக்குத் தருகிறார்கள்.
ஆனால் எங்கள் தந்தை மண்ணாம் தமிழ் நாடு ஏன் மெளனம் சாதிக்கிறது?
இரத்தம் துடிக்கவில்லையா ஈனப் படுகொலைகளைப் பார்த்த பின்னும்?
பெண்டுகளும், பிஞ்சுகளும், வயோதிபரும் கொல்லப் படுவது தெரியவில்லையா?
எங்கள் தமிழ்ச் சகோதரர்களே, மக்கள் சாவு அவ்வளவு இயல்பானதாகி விட்டதா?
தமிழகமே, இன்று எழாவிடில் என்று எழுவீர்கள்?
சாத்வீக முறையில் உங்கள் உணர்ச்சிகளைக் காட்டக் கூட உங்களுக்கு உரிமையில்லையா?
உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் தடையா?

எனக்குத் தெரியும் தமிழக மக்களின் உணர்ச்சிகள் கொதிப்பது.
ஆனால் என்ன பயம்? உங்கள் உணர்வை உறைய விடாதீர்கள்.
எங்களை உயிருடனே உறைய வைப்பதைப் பார்த்து வாளாவிராதீர்கள்.

Wednesday, May 17, 2006

2006 - விசாகம் (வெசாக்) படு கொலைப் பரிசு

புத்தர் பெருமான் சகலதும் பெற்ற நாளைக் கொண்டாடு முகமாகச் சிங்களப் பெளத்தர்களிடமிருந்து ஈழத் தமிழருக்குக் கிடைத்த வைகாசி விசாகத் திருநாட் பரிசு.

இந்தச் சுட்டியில் இருப்பது அகிலக் கவியின் கவிதை!

என் அழுகை கீழே!!
==================

ஈரற் குலை நடுங்குதையா
ஈனக் கொலை நடக்குதையா
ஈழநல் நாட்டி லெம்
இரத்தம் ஆறாய் ஓடுதையா

இன்றில்லையேல் இன்னொருநாள் - நீ
நின்று பதில் சொல்லிடுவாய்
பண்பு கெட்ட படு கொலைகாரா
பலிக் காதுன் கொலைத் தந்திரம்

அல்லைப் பிட்டியில் ஆறு பேர்
அம் பாறையில் ஐந்து பேர்
அதிலடங்கும் பிஞ்சுகள் பெயர்
அழுதுமுடியுமோ எம் துயர்

கொன்று குவிக்கும் சிங்கள நாடே
இன்றிதைப் பார்த்தும் பாரா விடுத்து
மென்று விழுங்கும் உலகத்தோரே
கன்றைக் கூடக் கொல்லும் கூட்டம்
என்றைக் குத்தான் திருந்தும் ஐயா


-ஜெயபால்

Tuesday, May 09, 2006

சிவாஜியும் ரஜினியும்

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் ரஜினிகாந்த் ஐயும் இணைத்து எழுதப் படும் ஒரு விடயம் அல்ல. சும்மா ஒரு சிந்தனையின் வரி வடிவம்.

சந்திரமுகி படத்தைப் பார்த்த போது அதில் ரஜினியின் பகுதியில் வேட்டையன் பாத்திரம் மற்றப் பாத்திரத்தை விட அள்ளிக் கொண்டு போவது தெளிவு. அதை பார்க்கும் போது யாருக்குமே தோன்றக் கூடிய ஒரு யோசனை, இது போல் ஒரு முழு நீள அரச கதையில் ரஜினி நடித்தால் மிக நல்லாக இருக்குமே என்பது தான். எனக்குத் தோன்றியது, உடனடியாகவே, இயக்குனர் சங்கர் இவரை வைத்து ஒரு அரச கதையை மிகப் பிரமாண்டமாக எடுத்தால் மிக நல்லாக இருக்கும் என்பது தான்.

நான் எதிர் பார்த்தது போலவே சிவாஜி படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. எதிர் பார்த்த அரச கதையாக இருக்குமோ இல்லையோ தெரியவில்லை. வேட்டையன் போல் ஒரு அரச கதையாக இருந்தால், வீர பாண்டிய கட்டப் பொம்மன் போல் ஒரு படத்தை ரஜினியும் தர முடியும். ரஜினியும் சிவாஜியும் தலைப்புச் சரியோ?

Monday, May 08, 2006

தங்கத்தின் தமிழ்ப் பெயர்

தங்கத்தின் தமிழ்ப் பெயர்:


சும்மா தொலைக்காட்சியை முறுக்கிக் கொண்டிருந்த போது, தமிழ்ச் சேவைகளின் பக்கம் சென்ற போது, ஒரு நிகழ்ச்சி தொடங்குகிறது. படையப்பியின் தங்க வேட்டை. நிகழ்ச்சி ஆரம்பத்தில், தங்கம் பற்றிச் சுவையாக(?) சில தகவல்களை அள்ளி வழங்கினார் படையப்பி. தங்கத்திற்கு வெவ்வேறு மொழிகளில் என்ன பெயர் என்றும் அப் பெயர்கள் எப்படி வந்தன என்றும் கொஞ்சம் சொன்னார். அப்படியே தமிழிற்கும் வந்தார்.
அங்கே தான் வந்தது வில்லங்கம்.
தங்கத்தை நம்ம நாட்டில் எப்படி அழைக்கிறோம்? "கோல்ட்" - ஆம், ஆங்கிலச் சொல்லையே சொன்னார்.
ஆ அம்மா!!!!, நெஞ்சு வலித்தது.
அப்படியே "கோல்ட்" என்று பெயர் வரக் காரணம், காரியம், ....., அத்தனை விளக்கங்களும் அந்த ஆங்கிலச் சொல்லுக்குத் தான், தமிங்கிலத்தில் தறித்து விழுத்திக் கொண்டு இருந்தார்.
அப்பா! படையப்பா, ஆறுபடையப்பா!!! முருகனைக் கூப்பிட்டேன்.
நீ தான் மீண்டும் வர வேண்டும் தமிழைக் காக்க என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தொலக்காட்சியை அணைத்து விட்டேன். இப்பொழுது தெரிகிறதா தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்று?

வாழ்க தமிழ் வளர்க்கும் தமிழகத் தமிழ்த் தொலைக் காட்சிகள்.

Wednesday, May 03, 2006

ஈழத் தமிழர் இந்தியாவை விரோதியாகக் கருதுகிறார்களா?

ஒரு வலைப்பூத் தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர் ஏன் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று. அது தவறு, ஈழத் தமிழர் எப்போதும் இந்தியாவின் நண்பராகவும் கூட்டு நாடாகவும் இருக்கவே என்றும் விரும்புகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தி மறுமொழி எழுதியிருந்தேன். அது சரியாகச் சென்றடையவில்லை. அதனால் அதை இங்கே இடுகிறேன்.

ஒரு ஈழத்தவன் என்ற ரீதியில் என் கருத்துக்கள், யார் விரோதி?

1. இந்தியா-பாக். யுத்தத்தின் போது பாக். விமானங்களுக்கு இறங்கு தள வசதி செய்தது அன்றைய சிங்கள அரசு.
2. அண்ணாத்துரை இறந்தபோது அவரின் இறுதிக்கிரியைகளின் ஒலிபரப்பை நேரடி அஞ்சல் செய்தது இலங்கைத் தமிழ் வானொலி.
3. இந்திரா அன்னையார் இறந்த போது, எங்கள் தாயே இறந்து விட்டது போல் துக்கம் அனுஷ்டித்தது ஈழத் தமிழர் மட்டுமே. சிங்களவர் பட்டாசு கொளுத்திக் கொண்டாடியது வேறு.
4.அமைதி படை 87ல் வந்த போது அன்போடு வரவேற்றது ஈழத்தமிழர். அதே நேரத்தில் கொழும்பில் சிங்களச் சிப்பாயால் ராஜீவ் தாக்கப் பட்டது, நட்பினால்!
5. அ.ப. அட்டூளியங்கள் தொடங்கிய போது, சண்டை தொடங்க முதல் இரண்டு பேர் உண்ணாவிரதம் இருந்து இறந்தது பாச மிகு இந்தியாவைப் பகைக்க விரும்பாமல் தான். சண்டை திணிக்கப் பட்ட போது வேறு வழி???
5. சிங்களவரின் இந்திய எதிர்ப்புப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அது இங்கே தேவையற்றறது

Friday, April 07, 2006

சிந்திக்க வைக்கும் சில சாட்டை அடிகள்

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். ஆனால் வந்தார் தமிழராக இருக்கக் கூடாது.
- ஒரு தமிழ்த் தொலைக்காட்சித் தொடரில் வந்தது

தமிழ் இசை - மக்கடா !!!!!

குமுதம் வார இதழில் 2006.1.4 அன்று வந்த வாலியின் கவிதை இது.

சில்லென
சீதத்தில் -
சென்னை நனையும்
மார்கழி
மாதத்தில் -

காலை மாலை
காதுகளுக்குச் .....

சுகமழிக்கும் - தம்புராவின்
சுதிசுத்தம்;
ஜல் ஜல் என்று - சதங்கையின்
ஜதிசத்தம்!

= = =

ஆம்;
ஆங்காங்கு -
ஆரம்பம்
ஆகிவிட்டது ....
என்றும்
எங்கள்
இசை விழா -
எனச்சொல்லும்
இசைவிழா!

= = =

அண்ணா பெயரில்
அமைந்திருக்கும்
பன்னாட்டு விமான
நிலையத்தில்
பார்க்கலாம் ...
வெளிநாட்டிலிருந்து
வந்து -
இறங்குகின்ற
இசைப்பிரியர் கூட்டம்;
வருடா
வருடம் - இந்த
வண்ணமிகு
சென்னை - அதற்கு
வேடந்தாங்கலாட்டம்!

= = =
பட்டு நூலும் -
பாட்டு நூலும் -
ஒரு சேர
ஓர்ந்த ....

வள்ளல் நல்லி
வழங்கலாம் சல்லி;
அவர் கொடுக்கும்
ஆக்ஸிஜனால் -
நிமிர்ந்து நிற்கலாம்
நீட்டிப்படுத்திருந்த சபா;

ஆனால் -
அங்கே போய்க் -
காது கொடுத்துக்
கேட்டுப் பாருங்கள் ஒரு தபா!

= = =

தியாகையர்;
தீட்சிதர்;
ஸ்யாமா சாஸ்திரி;
ஸ்வாதித் திருநாள்;
அன்னமாசார்யா;
புரந்தரதாசர்;

இவர்கள்
இயற்றிய பாக்கள்
விரும்பி இசைக்கும்
வித்வான்கள் நாக்கள்;

ஆம்;
அவர்களது நாவில் ....

தெலுங்கு - பூமரமாய்க்
குலுங்கும்;
கன்னடம் - புரிந்திடும்
நன்னடம்:
சம்ஸ்கிருதம் - சாற்றும்தன்
சம்த்காரம்;
மலையாளம் -
காட்டும்தன்
கலையாழம்!

= = =

கர்நாடக சங்கீதத்தின்
காவலர்களாகிய - இந்தக்
கலாநிதிகளின் நாக்குகளில்
கச்சேரி முடியக் கால்மணி
முன்பு ...
அருணாசலக்கவி;
அருணகிரிநாதர்;
பாரதியார்;
பாரதிதாசன்;

இன்னோரன்ன தமிழ்க் கவிகள்
இடம் பெறுவர் -
துளித்துளியாக; அதுவும்
துக்கடா என்று;
தமிழா! அதற்கும்
தலயாட்டும்
உன்னை - இந்த
மண்
தூற்றாதா
'நீயொரு
மக்கடா!' என்று?

தமிழ்நாட்டில்
தமிழ் வீட்டில்
தமிழ்ப்பாட்டுக்கு மேடையில்லை - எனில்
தமிழனைப் போல் சோடையில்லை!

= = =

கன்னடியர்
கன்னடத்தின் பால் -
காட்டும்
காதலால் ....

'பெங்களூரு' என ஆகப் போகிறது
பெங்களூர்; அதற்கு -
எழுச்சி என்று பெறக்கூடும்
எங்களூர்?

= = =

என் குறிப்பு:

இது ஒன்றும் புதிதாகச் சொல்லப் படவில்லை. ஆனால் இன்னமும் இருக்கே என்ற ஆதங்கம் தான். திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், தமிழ் சங்கீத வித்துவான்கள் திருந்த வேண்டும். தமிழ் இசை ரசிகர்கள் திருத்த வேண்டும்.

Thursday, March 23, 2006

தமிழ்த் திரைப்படம் - கண்ணோட்டம்

அண்மைக் காலப் படங்களில் பலவற்றைக் குடும்பத்தவருடன் சேர்ந்து பார்க்க முடியவில்லையே. அதீத சண்டைக் காட்சிகள், அதில் அடிக்கும் அடிகள் மகா பயங்கரம். அவ்வளவு அடி வாங்கியும் மனிதன் உயிர் பிழைக்க முடியுமா என்ற புதுமைகள். வித்தை காரன் செய்ய வேண்டிய சாகசங்களை ஒரு கதா நாயகன் செய்கிறான். ஆயுதங்களுடன் வரும் பல பேரை பந்தாடுகிறான். விதந்துரைக்கப்பட்ட சம்பவங்கள். ஐயோ விட்டு விடுங்கள். பாடல், காதற் காட்சிகள் சகிக்க முடியவில்லை. இவ்வளவு இருந்தும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்களாகச் சில படங்கள் வரத்தான் செய்கின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

காதற் பாடற் காட்சி தவிர ரசித்துப் பார்க்கக் கூடிய படங்கள்:


1. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி: தங்கர்ப் பச்சான் படம், அருமை.
2. ஒரு நாள் ஒரு கனவு: பாசிலின் படம், அருமை. காற்றில் வரும் கீதமே பாடல் ஒன்றே போதும் படத்தின் அழகைச் சொல்ல. விருது பெற வேண்டிய பாடல்.
3. தவமாய்த் தவமிருந்து: சேரனின் இப் படத்தைப் பார்க்கத் தவமிருக்க வேண்டும்.
4. ஆட்டோகிராப்: சேரனின் படம். பாடல்கள் ஆகா, ஓகோ.
5. அழகி: தங்கர்ப் பச்சானின் படம்.
6. வேதம் புதிது
7. சலங்கை ஒலி
8. அந்தமான் காதலி

Monday, August 22, 2005

தமிழை வளைக்காமல் வளர்ப்போம்

அரிச்சுவடி சொல்லித் தந்த வாத்தியார் அ முதல் ஃ வரையும் க முதல் ன வரையும் சொல்லித்தந்தார். உயிரெழுத்து, மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து என இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களையும் எழுத வாசிக்கக் கற்றுத் தந்தார். அதற்கு மேல் சில எழுத்துக்கள் சிலரது பெயர்களில் இருந்ததை விளக்க அவர் சொன்னது அப்போது புரியவில்லை. அதாவது வடமொழி எழுத்துக்கள் என்றார் கிரந்தம் என்றார், ஒன்றும் புரியவில்லை ஆனால் தமிழல்லாத எழுத்துக்கள் தமிழில் பாவனையில் இருக்கின்றன என்பது புரிந்தது.

சிறு வயதிலிருந்தே இது என்னை உறுத்தியது. தமிழுக்குள் ஏன் தமிழல்லாத எழுத்துக்கள் புகுந்துள்ளன? புகுந்தது தவிர்க்க முடியாதது தான்; கூடுதல் விளக்கத்திற்கு தேவையானது தான் என்றால் அந்த எழுத்துக்களை ஏன் தமிழோடு இணைக்கவில்லை? அரிச்சுவடிக்குள் புகுத்த முடியாவிட்டால் அதற்கு என்ன தனிச் சுவடி வேண்டிக் கிடக்கு.

சுருங்கி வரும் அகண்ட உலகைத் தமிழுக்குள் அடக்கக் கிரந்தம் தேவை தானா? தமிழ் வளைந்து கொடுக்க வேண்டுமா? அல்லது வளர்ந்து கொழுக்க வேண்டுமா?

தமிழை வளைத்து தரமிழக்க வைக்காமல், அதை வளர்த்து தமிழனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.

தற்கால ஆங்கில மொழியில் புதுப் புதுச் சொற்களை ஆண்டு தோறும் அறிமுகப் படுத்தி அகராதியில் உத்தியோக பூர்வமாக இணைத்து விடுகிறார்கள். இப் புதிய சொற்கள் ஆங்கிலத்தில் புதிதாகத் தோன்றியவையும் பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்தவையும் ஆகும். பிற மொழியில் இருந்து வரும் சொற்களை ஆங்கிலமாகத் தான் சேர்த்துக் கொள்கிறார்கள். சிறந்த உதாரணம், தமிழ். தமிழ் என்ற சொல்லில் உள்ள "ழ்" என்ற எழுத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? முடியாது. அதற்காக அவர்கள் "ழ்" ஐ ஆங்கிலத்தில் உள் வாங்கிக் கொள்ளவில்லை. "ல்" ஐப் பயன் படுத்திவிட்டார்கள். ஆங்கிலத்தை வளைக்காமல் ஒரு புதுச் சொல்லை உருவாக்கி விட்டார்கள். இது தான் தமிழுக்குத் தேவை. கோடிக் கணக்கில் சொற்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரட்டும். அதை தமிழாக்கித் தமிழை வளர்ப்போம்.


தமிழை வளையோம்
தரத்துடன் வளர்ப்போம்
தமிழ் நாடரசே செயலில் காட்டு
தயங் காதுநீ தலைமை யேற்று

Thursday, May 05, 2005

தூலிப்பூ விழா - Tulip festival

தூலிப்பூத் திருவிழா
===============

கனடாவின் தலை நகரம் ஓட்டவாவில் வருடம் தோறும் மே மாதத்தில் கொண்டாடப் படுகிறது தூலிப்பூ விழா. மிக அழகான சிறப்பான ஒரு திருவிழா. இந்தத் திருவிழாவிற்கும் இரண்டாம் உலகப் போருக்கும் தொடர்பிருக்கிறது.

அதாவது, இரண்டாம் உலகப் போரில் ஒல்லாந்து நாட்டை நாசிப் படைகள் கைப்பற்றிய போது ஒல்லாந்தின் அரசி கனடாவில் தஞ்சம் புகுந்திருந்தார். அந் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறக்க இருந்தது. மகப் பேற்றுக்காக அனுமதிக்கப் பட்டிருந்த வைத்தியசாலை அறையை தற்காலிகமாக ஒல்லாந்து நாட்டுப் பிரதேசமாக அப்போதைய கனடாப் பாராளுமன்றம் பிரகடனப் படுத்தியது. ஏனெனில் பிறக்கப் போகும் குழந்தை ஒல்லாந்து மண்ணில் பிறக்கட்டும் என்று.

1945 மே 6ம் திகதி கனடியப் படைகள் ஒல்லாந்தை நாசிகளிடமிருந்து மீட்ட நாள். நாடு மீட்கப் பட்டு, அரசியும் நாடு மீண்டார். கனடா செய்த இப் பெரிய உதவிக்கு நன்றி செலுத்த நினைத்த ஒல்லாந்து அரசி, பெருமளவு தூலிப் பூக்களை கனடாவுக்கு வருடந் தோறும் அனுப்ப முடிவு செய்தார். அப்படி அனுப்பப் படும் தூலிப் பூச் செடிகளும் பூக்களும் மே மாத முதலிரு வாரங்களுக்கும் ஒரு பூங்காவில் அழகுற நடப் பட்டிருக்கும். இந்த இரு வாரங்களும் வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப் பட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அது சரி, இது என்ன தூலிப்பூ?

தூலிப்பூ என்பது ஆங்கிலத்தில் Tulip என்று சொல்லப் படுகிறது. இதையே நான் தமிழ்ப் படுத்தியுள்ளேன். சரியான தமிழ் தெரியவில்லை. தமிழில் இந்தப் பூவிற்குப் பெயர் இருக்குமா என்பதும் தெரியவில்லை. உண்மையில் இந்தப் பெயரின் மூலம் துருக்கி மொழி என அறிகிறேன். இந்தப் பூவும் துருக்கியில் இருந்தே கி.பி. 1000 ஆண்டளவில் உலகுக்கு அறிமுகமாக்கப் பட்டதாம். துருக்கிய மொழியில் தூலிப் என்றால் தலைப் பாகை என்று பொருள்.

இந்தப் பூ வசந்த காலத்தில் துளிர்க்கும். ஒரு மாதம் நின்று பிடித்து விட்டு பின்னர் பட்டு விடும். ஆனால் சாகாது. பனிக் குளிர் காலத்தையும் தாங்கி மறு படியும் வசந்த காலத்தில் துளிர்க்கும். பலப் பல அழகிய நிறங்களில் மிக அழகாகப் பூக்கும்.

தூலிப் ஒரு வகைக் கிழங்கிலிருந்தே முளைக்கும். இந்தக் கிழங்கை யுத்த காலத்தில் பஞ்ச நேரத்தில் சனங்கள் சாப்பிட்டும் இருக்கிறார்கள்.

Wednesday, May 04, 2005

சில பழமொழிகள்

பழமொழி சொல்லிப் பிள்ளை வளர்க்காத பெற்றோர் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரையும் போலவே, எனது பெற்றோரும் அவ்வப்போது சொன்னவை இப்பொழுது உறைக்கின்றன. அவற்றில் சில உங்களுடன் பகிர்ந்து கொள்ள.

  • நம்ப நட, நம்பி நடவாதே

  • எல்லோர் நம்பிக்கையையும் நீ பெறும் படியாக நடந்து கொள். ஆனால் எல்லோரையும் நம்பி நடந்து அதனால் ஏமாந்து துன்பத்தைத் தேடிக் கொள்ளாதே

  • கட்டிலில் ஏற முன்னர் காலை ஆட்டாதே

  • இதையொத்த பல பழமொழிகள் உண்டு. அதாவது, கிடைக்க முன் அனுபவிக்க நினைக்காதே. கட்டிலில் ஏற முன் காலை ஆட்டினால் விழுந்து விடுவாயேயல்லாது, சொகுசாக இழைப்பாற முடியாது.

  • ஓடும் புளியம் பழமும் போல் இரு

  • எந்தவொரு விடயத்திலும் ஒட்டி ஊறி விடாதே. புளியம் பழமும் அதன் ஓடும் போல் ஒன்றாக இரு. ஆனால் ஒட்டி இராதே. அதிகம் ஒட்டினால் இழப்புக்களைத் தாங்குவது மகா கடினம்.

  • தோழனோடும் ஏழமை பேசேல்

  • எப்படிப்பட்ட தோழனாயினும், உனது ஏழ்மையையோ பலவீனங்களையோ பகிர்ந்து கொள்வது நல்லதல்ல.

2005-05-04

Tuesday, April 19, 2005

பெயரில் நளினம் - நீரோ

ஒரு கணனி மென்பொருளுக்குப் பெயர் வைக்கும் போது எவ்வளவு நயமாகச் சிந்தித்திருக்கிறார்கள் என்று வியந்ததில் விளைந்தது இது.

நீரோ என்று ஒரு மென்பொருள். சிறுவட்டுக்கள் பதியும் ஒரு மென்பொருள். இந்த வட்டுப் பதியும் முறையை ஆங்கிலத்தில் எரித்தல் எனும் பொருள் பட அழைப்பார்கள். எரிப்பதோடு சம்பந்தப் பட்ட பிரபலம் யார்? நீரோ, ஞாபகமா? உரோமாபுரி எரியும் போது பிடில் வாசித்த மன்னன். ஆகா, இதை விட நல்ல பெயர் ஒரு எரிக்கும் (பதியும்) மென்பொருளுக்குக் கிடைக்குமா? வாழ்க நீரோ!!!!

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விசயம், நீரோ உரோமாபுரியை எரித்தவன் அல்ல. எரிந்து கொண்டிருக்கும் நகரைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்த ஒருவன். இசைப் பித்தனா அல்லது முழுப் பித்தனா அல்லது வேறு ஏதுமா தெரியாது.

ஆனால் தொடர்பு படுத்திப் பெயரைக் கொடுத்து விட்டார்கள்.
“Nero Burning Rom” என்பது தான் பெயர்.
Rome இற்குப் பதில் ROM. - ROM stands for Read Only Memory
மிக அழகாகச் சிந்தித்துக் கொடுக்கப்பட்ட பெயர்.

எங்கள் வாழ்வில் அறியப்பட்ட எரிவு நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் நினைவுக்கு வருபவை:

புராண இலங்கையை எரித்த அனுமான்
மதுரையை எரித்த கண்ணகி
மன்மதனை எரித்த சிவன்

ஈழத்தில் எங்கள் கண் முன்னே எரிந்தவை:

அரக்கர்கள் எரித்த யாழ் நூலகம் (தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் 80 களில்)
அரக்கர்கள் எரித்த சன்னதிமுருகன் தேர் (3 முறை எரிந்தது)
அரக்கர்கள் 83ல் எரித்த உயிர்கள் (உயிருடன் எரிக்கப் பட்டதால்)
அரக்கர்கள் என்றென்றும் எரிக்கும் தமிழர் கடைகள், வீடுகள்

எரித்தது யாரென்பது உள்ளங்கை நெல்லிக் கனி. ஆதலால் அவர்கள் பெயரைப் போடவில்லை.

எதையெழுதத் தொடங்கினாலும் எம் துயர் சம்பந்தமில்லாமல் சிந்தனையை ஓட்டுவது மிகக் கடினமே.