Saturday, October 21, 2023

 ஓர் அறிவு உயிர்  - ஓரறிவுயிர்  


உலக உயிரினங்களில் மிருகங்களைப் பொதுவாக ஐந்தறிவு உள்ளவை என்றும் மனிதர்களை ஆறறிவு படைத்தவர்கள் என்றும் நாம் வழங்கி  வருகிறோம்.

அப்படியானால் ஒன்று முதல் நான்கு வரையான அறிவு உள்ளவை என்ன என்று நாம் சிந்தித்திருக்கிறோமா?
அவற்றைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

“புல்லாகிப் பூடாகிப் புழுவாகி ....” என்று திருவாசகத்தில் பாடல் ஒன்று வருகிறது. இதில் புல்லையும் ஒரு உயிரினம் என்று உள்ளடக்கி விடுகிறார் மாணிக்கவாசகர்.

கொழுகொம்பு இல்லாத இடத்தில் முளைத்துவிட்ட முல்லைக் கொடிக்கு அதன் மேல் இரக்கப்பட்டு,  அது படர்ந்து வளர்வதற்காகத்  தன் தேரையே  விட்டுச்  சென்றார்  வள்ளல் பாரி.

"வாடிய பயிரைக்  காணும் போதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார்.

இப்படித் தாவரங்களின் உயிர்த் தன்மையைப் பல இடங்களில் பலரும் நினைவுறுத்திச்  சென்றுள்ளார்கள்.

இவற்றிற்கு உயிர் உள்ளது என்றும் அவற்றின் இயல்புகளைப்  பற்றியும்  ஆராய்ச்சி செய்து அதைப் பதிப்பித்தவர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பிரித்தானிய இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ்  சந்திரபோஸ்.

புல், பூண்டு, செடி, கொடி, மரம்  என்பவை  தொடுகை அல்லது தொட்டுணர்தல் என்ற உணர்வின் மூலம் தம் உயிர்ப்பையும் இருப்பையும் நிலை நாட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இது பலருக்கும் பல காலமாகவே விளங்கிய ஒரு தகவல் தான்.  சந்திரபோஸ் அவர்கள் செய்தது ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு நிறுவல் அவ்வளவே.

ஆனால் , தமிழர்கள் பெருமைப்படும் விதமாக எங்கள் பழந்தமிழ் நூல் கூறுவதைப் பார்ப்போமா?  
ஆம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எம் தமிழில் எழுதப்பட்ட நூலாம் தொல்காப்பியத்தில் சொல்லிவிட்டார் தொல்காப்பியர்.

உலகின் உயிரினங்கள் எல்லாவற்றையும் ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தி அவற்றை வரிசைப்படுத்தி உள்ளார் தொல்காப்பியர்.

அவற்றில், தாவரங்கள் ஓரறிவு உயிரினம் என்று மொழிகின்றார். மற்றைய நாம் அரிதாக அறிந்த இரண்டு, மூன்று, நான்கு அறிவுயிர்களையும் நமக்கு அறியத் தருகிறார்.

தொல்காப்பியமும் ஆய்ந்து அறிந்த பெரிய அறிஞரால் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட நூலே தான். ஆனால், காலம் வேறு. உறுதிப்படுத்திய சபைகள் வேறு. இன்றைய சபையில் ஏற்றப்பட வேண்டிய தேவை எழுகிறது. 

இதோ அந்தப் பாடல் வரிகள்.


தொல்காப்பியம்
    பொருளதிகாரம்
           மரபியல்

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
வண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே


(வளர் சஞ்சிகைக்கு 2023 இல் எழுதப்பட்டது.)

Tuesday, August 16, 2022

எழுத்து ஒலி மயக்கங்கள்

 


Monday, March 21, 2022

தமிழ் நூல்களின் தூய்மை

 ஆதி காலம் முதல் அண்மையில் ஒரு ஐநூறு ஆண்டுகள் முன்னர் வரை, தமிழில் எழுந்த நூல்கள் எல்லாம் பாடல் வடிவில் இருந்துள்ளன. அவையும் பேச்சுத்தமிழ் தவிர்த்து எழுத்துத் தமிழிலேயே ஆக்கப்பட்ட்டுள்ளன. அதற்கு ஒரு காரணம் இயற்றப்படும் நூல்கள் தமிழின் தரத்தை பேணவேண்டும் என்பதே. அத்தோடு இயற்றப்படும் நூல்கள் பல அறிஞர்கள் கூடிய ஒரு குழுமத்தில் அரங்கேற்றப்படல் வேண்டும். அந்த அரங்கேற்றத்தில், அந்த நூல்கள் தேற வேண்டும். தேறிய நூல்களே வெளியிடப்படும். தேறாதவை கிழித்தெறியப்படும். 

ஆக, அந்தக் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள், இலக்கியங்கள் எல்லாம் தரத்தேர்வுக்குள்ளாகித் தெரிவு செய்யப்பட்ட தரம் வாய்ந்த நூல்களே.

உரைநடையில் ஆக்கங்கள் இருந்திருக்கவில்லை. இலக்கியங்களோ நூல்களோ உரைநடையில் எழுதப்படுவது அந்தக் காலத்தில் வழைமையில் பின்பற்றப்படாதிருக்கலாம். அல்லது உரைநடையில் எழுதும்போது தமிழின் தரம் குறைவடையும் நிலை இருந்திருக்கலாம்.

இவ்வாறாக, தமிழின் தரம் குன்றாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக நூல்களை இயற்றி வெளியிட்டு வந்துள்ளனர் நம் மூதாதையர்.

மிக அண்மைக்காலமான ஒரு நூறு இருநூறு ஆண்டுகளாக, உரைநடை நூல்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அவையும் மிக அண்மைக் காலம் வரை, தரமான எழுத்து நடைத் தமிழில், தமிழின் தரம் கெட்டுப்போகா வண்ணம் கவனமெடுத்து இயற்றப்பட்டன.

ஆனால் பின்னர் தோன்றிய எழுத்தாளர்கள் பலர், பேச்சுத்தமிழில், வட்டார வழக்குகளில் என தரம் குறைந்த தமிழில் நூல்களை இயற்றி வருவதைக் காணலாம். தற்கால ஆக்கங்களுக்கு ஒரு தரத்தேர்வு இல்லை. யாரும் எதுவும் எழுதலாம். புத்தகங்களாக வெளியிடலாம் என்ற சுதந்திரம், மொழியைச் சிதைக்கும் பணியைச் செய்கிறது.

திரைப்படங்கள் கூட இந்த வகையில் தமிழ்  சிதைவுக்கு கை  கொடுத்து வருகின்றன. நாடகத் தமிழில் படம் எடுத்தால் ஓடாது என்று சொல்பவர்கள், பழைய படங்கள் எப்படி வெளிவந்தன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பாடசாலைப் பாடப் புத்தகங்களில் கூட இந்தத் தரமின்மை ஊடுருவி விட்டது. மழலைகள் பயிலும் பாடல்களில் கொச்சைத் தமிழ். குழந்தைகள் தவறான தமிழைப் பயின்று பெரியவர்களானபின், அவர்களும் எழுத்தாளர்களாக நேரிடும்போது, அவர்களின் ஆக்கங்களில் எப்படி நாம் தரத்தை எதிர்பார்க்கலாம்?

இலக்கியத் தமிழ் எல்லோருக்கும் புரியாது, அதனால் இப்படி எழுத வேண்டியுள்ளது என்று காரணங் காட்டினார்கள் இந்த நடையில் எழுதிய எழுத்தாளர்கள். தமிழ் படித்த ஒருவருக்கு எல்லாத் தமிழ் சொற்களும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. சொல்லறிவை வளர்க்கவும் தான் மக்கள் நூல்களை வாசிக்கிறார்கள். அப்படி வாசித்து வளர்ச்சி பெற நூல்கள் உதவும். தமிழறிவை வளர்க்க நூல்களை வாசிக்கும் ஒருவரின் கையில், தற்காலப் புத்தகங்கள் கிடைத்தால், அவர் அறியப்போவது தமிழா? அவ்வாறு அறியப்பட்ட தமிழ் பின்னர் இன்னொருவருக்குச் செல்லும்போது தமிழ் எப்படிச் சீரழியும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அதனால் தான் நம் முன்னோர் மிகவும் கட்டுக்கோப்பாக நூல்களை இயற்றி எங்க்களுக்கு விட்டுச் சென்றுள்ளனர். நாமும் எம் சந்ததிகளுக்கு நல்லதைக் கொடுப்போமாக.Monday, June 21, 2021

கத்திகள்

 • பன்னச்  சத்தகம்
  • பன்ன வேலையில் பயன்படும் ஒரு சிறிய கத்தி. பன்ன வேலையென்பது பனை ஓலையால் பெட்டி போன்றவை இழைக்கும் பணி.
 • புல்லுச் சத்தகம்
  • தோட்டங்களில் புல் புடுங்கப் பயன்படும் ஒரு வகைச் சிறிய ஆயுதம்
 • கொக்குச் சத்தகம்
  • கொக்கைத் தடி என்று சொல்லப்படும் நீண்ட தடியில் இணைக்கப்பட்டிருக்கும் கத்தி
 • பாளைக் கத்தி
  • தென்னை, பனை மரங்களில் பாளை சீவப் பயன்படும் மிகக் கூரான கத்தி
 • வெட்டுக் கத்தி
  • பெரிய வெட்டு வேலைகளுக்குப் பயன்படும் கத்தி
 • அருவாக் கத்தி
  • நெல், குரக்கன் போன்ற தானிய அறுவடைக்குப் பயன்படும் அரிவாள் கத்தி
Friday, January 22, 2021

பல்கலைக்கழக வாசம்

 எண்ணம் வந்து தேங்குதே 

என்னை ஏதோ செய்யுதே

எல்லாம் இருந்தும் என்னை 

ஏழையாக்கிப்  பார்க்குதே 


துள்ளி ஓடித் திரிந்த காலம் 

பள்ளி நாள் வாலைக் கோலம் 

தள்ளி விட்டுப் புகுந்தோம் நாம் 

பல்கலைக் கழக வாசம்


புத்தம் புதுச் சூழல் 

சத்தம் நிறை தோழர் 

கொட்டம் களியாட்டம் 

கொண்டாட்ட மேதினம்


காலை மாலை பேதமில்லை 

படிப்பையுங் கைவிடுவதில்லை 

எதையும் பெரிதாய் எடுத்ததில்லை 

துவண்டு நாமும் விழுந்ததில்லை


என் உடமை ஒன்றுமில்லை 

பொதுவுடமை எங்கள் கொள்கை 

தனி ஒருவர் துயர் போக்க 

எம்மாலான தெல்லாம் செய்வோம் 


அடிதடி சண்டைகள் அண்ட விடவும் இல்லை 

தடியடி வந்தவேளை தடுத்துத் தாக்கவில்லை 

படிப்பை முடிக்கத் தயக்கப்படவில்லை 

முக்கி முனகி முடிக்கத் தவறவில்லை 


வாலிபப் பருவமதில் 

வாலில்லாக் குரங்குகளாய் 

ஆட்டமும் பாடலும் 

ஆரவாரக் கூச்சலும் 

போட்டுத் திரிந்தோமே 

போதையேறியோர் போல

களைத்துச் சோர்வோமே  

காசில்லாது போகையிலே 


காசு வரும் சேதி வரும் 

கனிவோடு பாசம் வரும் 

காகிதம் காண்கையிலே 

வீட்டுக் காய்ச்சல் கொஞ்சம் வரும் 


பிரச்சினைகள் இருந்தாலும் 

புன்னகையே என்றும் வரும்

நண்பர்கள் சூழ்ந்திருக்க 

கவலை யெலாம் ஓடிவிடும் 


எத்தனை படிகள் நாம் 

ஏறி ஏறிச் சென்றாலும் 

பேராதனைக் காலம் 

நம் வாழ்வின் பொற்காலம் 


இன்று எண்ணிப் பார்க்கையிலே 

இதமாகக் கொல்லுதையோ 

அந்த வாழ்க்கை இனி வருமோ 

ஆயிமாய்க் கொடுத்தாலும்

Wednesday, July 01, 2020

நிறவெறி

பென்னம்பெரும் பூமி சின்னஞ்சிறி தாச்சு
வண்ணம் நிறை மாந்தர் எங்கும் வதிவாச்சு
வெள்ளை பெரிதென்று எண்ணுகிற நச்சு
கொள்ளை யிடுகிறதே நிறமக்கள் மூச்சு

மதமென்றும் மொழியென்றும் நிறமென்றும் இனமென்றும்
பரந்துவாழ் மக்களிலே காண்பதொரு பொருட்டல்ல
பெரிதென்றும் சிறிதென்றும் படுத்துவது பண்பல்ல
சார்புநிலைத் தத்துவத்தில் பெரிதென்றும் பெரிதுமல்ல

மனிதரிலே கிளைவிட்ட பல்வேறு குழுமங்கள்
பலமிக்க கூட்டத்தால் தாழ்த்தியே வீழ்த்திவிடும்
புரையோடிப் புழுத்திருக்கும் பாகுபாட்டுப் பேய்தன்னை
துடைத்தழித்து வீறுநடை நாம் போடவேண்டாமோ

நிறங்களின் கோலம் அழகென ரசிப்போரே
மனிதரில் தோல்நிறம் கண்டு வெறுப்பு ஏனோ
வெள்ளை உயர்வென வண்ணம் மிதிப்பீரோ
சிந்தை சிதைந்த பேதமைப் பேயரே

எந்தவொரு பாகுபாடும் வெறிகொண்டு திமிறயிலே
வெந்தழியும் நாடுகளும் பண்பாடும் மனிதமுமே
இந்த நிலை மாறிவிட நற் தலைமை எழுந்தோங்கி
துணிவோடு வழிகாட்ட மக்களதைப் பின்தொடர்வார்

குறைவென்று மற்றவரைக் கொடுமைப்படுத்தும் வலி
தமக்கே நிகழுவதாய்க் கொஞ்சமெண்ணிப் பார்த்தாலே
கொடிதினிநாம் செயலாகா என்றுணர்ந்து குறுகுவரே
கொலைவரையே சென்றுவிடும் நிறவெறியைத் தகர்ப்பாரே

பாகுபாடு பேசாத அனைவரையும் நேசிக்கும்
கல்வியினைப் பிள்ளைகட்குப் புகட்டிநாம் வளர்த்தாலே
மனிதநேயம் வளர்ந்துவிடும் இனவெறியும் அழிந்துவிடும்
இந்த அவனி வந்தவர்கள் இன்பமாய் வாழ்ந்திடுவர்

ஆக்கம்: . செயபாலன், 2020

பேராதனை 80

வானுயர் மலைகள் சூழ் கண்டி மாநகரம்
ஞானியர் விளையும் பேராதனை வளாகம்

ஆவலாய் விஞ்ஞான பீடமதிற் சேர்ந்து
கல்வியும் கேள்வியும் சிறக்கவென வெண்ணி
எண்பதாம் ஆண்டார்கள் வருகிறார் பிந்தி
விடுவிடென நுழைகிறார் எண்பத்து ஒன்றில்

விடுதிகளிற் புகுந்தவுடன் தொடங்கியது பகிடிவதை
விரிவுரைகள் கேட்கமுதல் விதவிதமாய்க் கண்டுகேட்டோம்
வெட்கத்தைக் கொன்றார்கள் கூச்சத்தை வென்றார்கள்
வெட்கமே வெட்கித் தலை குனிய வைத்தார்கள்

இடம்புதிது வளம்புதிது முகம்புதிது என்றாக
காலை உணவுக்குக் கடைவாசல் தேடி வந்து
பாண் பாகையாய் பரிப்பெக்காய் என்று கேட்டு
பழகினோம் புதியவற்றைப் பலதரப்பு மக்களுடன்

படித்தோம் கிழித்தோம் சிரித்தோம் களித்தோம்
சுற்றுலாக்களும் சென்றோம் சுத்தினோம் நாடளாவி
பத்தியம் தவறியதால் பாதியிலே வயிற்றோட்டம்
கபரணக் காட்டினிலே கலக்கி அடித்ததடா

அடிக்கின்ற அடியினிலே கழிப்பறையா தேடநேரம்
அங்கங்கே நிப்பாட்டி அவசர நிவாரணம்
அந்த அவத்தையிலும் அடித்தானே ஒரு பகிடி
மருசிறா இடம் மச்சான் அமத்தி வாசியடா

வழிபடவும் விழிபடவும் மலைமீது வீற்றிருக்கும்
குறிஞ்சிக் குமரனிடம் வெள்ளிகளில் பொடி நடை
போகமுதல் கேட்டிடுவான் சோறா சோட்டீற்சா
அதற்கேற்ப வயிற்றிலிடம் ஒதுக்கிவிட வேண்டுமன்றோ

பேராதனை வந்தும் பேடு தேடியோரும் உண்டு
தேடியவர் சிலருக்கு விழுந்தும் விட்டுதுகள்
போட்டவர்க்கு நீராட்டு அல்விஸ் குட்டையிலே
போடாதோர் தாமாக ஏன் குதித்தார் தெரியலையே

கலைவிழாக்கள் என்றாலே எம் பங்குமென்று முண்டு
மேடையிலே ஏறிடுவோம் பாட்டுக்கும் கூத்துக்கும்
அழற்பட்டோர் ஒலிவாங்கி பறித்தே எறிந்தாலும்
விடாது நம் கச்சேரி நடாத்தி முடித்தவர் நாம்

 தென்னிலங்கை நம்வாசம் எண்பது களிலென்றால்
எண்பத்து மூன்றுதனைக் கண்டவரில் நாமுமுண்டே
பண்பாடு தொலைத்தோரால் பலமாகத் தாக்குண்டோம்
பட்டதனாற் பழகிவிட்டோம் தடை தகர்த்து வாழ்வதற்கே

பல்லாண்டு போனதுவே நம்பயணம் புறப்பட்டு
நடுவழியில் இரு நண்பர் பிரிந்திட்டார் நமைவிட்டு
இப்போது செல்கின்றோம் பின்னாளில் நீர் வாரும்
என்றெண்ணிப் போய்விட்டார் மறக்கேலா தோழர்கள்

பசுமரத்து ஆணி போல பதிந்துவிட்ட நினைவுகளை
பலதடவை இரைமீட்டு பகிர்ந்து மகிழ்கின்றோம்
பாண்மனோ கினிகூரு ஜிம்கலி டோப்பென்று
பட்டப் பெயர்கள் பல மறக்காமல் உரைக்கின்றோம்

பட்டப்பெயர் கொண்டோம் பட்டங்களும் பெற்றோம்
பல்வேறு திசைகளிலே தூக்கி எறியப்பட்டோம்
இருந்தாலும் இடைக்கிடையே  கூடிக் களிக்கின்றோம்
இளைய நினைவுகளை இனிதே சுமக்கின்றோம்

செயபாலன் 2020

Tuesday, June 02, 2020

சுத்தும் சில்லு

இளவயதில் மத்தியானம்
கோப்பை தட்டிக்கூப்பாடு
சாப்பாட்டுக் கம்மாவிடம்
இப்போதும் அது தொடரும்
என்னிடமே என் மகவு

Sunday, May 24, 2020

காதல் யோகா

காதல் யோகா செய்யுங்காலை
காணுகின்ற சுகமோ கொள்ளை
தாகந் தீர்க்குந் தண்ணீர்போலே
போகந் தூர்க்கும் மருந்து வில்லை

முன்னைப் பொழுதில் உன்னை நானும்
எண்ணிப் பார்க்கும் போதே இன்பம்
உந்தன் பெயரை எழுதிப் பார்த்து
சிந்தை சிலிர்த்துக் கிறங்கி வீழும்

நானிருக்கும் இடங்களிலே நீயிருந்தால் துள்ளும்
அருகில் நீயும் நடந்து சென்றால்
இடித்து மாளும் இதயம்
இத்தனைக்கும் நீயாரோ நான் யாரோவன்றோ

சொல்லிவிட வேண்டும் அன்பை
நல்ல ஒரு நாளில்
எள்ளி நீயும் நகைத்து விட்டால்
கொள்ளியன்றோ என்னில்

காத்திருந்து பூத்தன என் கண்கள் இரண்டும்
கனிந்தது ஓர்நாளில் என் காதல் வசந்தம்
கைக்கு வந்த காதலினால் பேரானந்தம்
வாழ்க்கையிலே முக்கிய மான அங்கம்

செயபாலன்  2020 மே 22

Friday, April 24, 2020

கொரொனா வைரசு நியதி
கோவிட் 19 வைரசால் 
புது நியதி

திங்கள் வருது
ஒரு நாள் பிந்தி
வெள்ளி வருது
ஒரு நாள் முந்தி
இடையில் இருப்பது
ஒரு நாள் மட்டும்
என்ன மாயம்
வாரமிங்கு 
சுருங்கியதேனோ

மேலும்

சனியும் வருது
ஒரு நாள் முந்தி
ஞாயிறு வருது
ஒரு நாள் பிந்தி
இடையில் கிடைத்தன
மேலிரு நாட்கள்
என்ன மாயம்
வாரவிறுதி 
நீண்டதுமேனோ

கோவிட் வைரசு
வந்து தாக்குது
வேலையில் நாட்கள்
குறைந்து போச்சுது
இதுவே இனிமேல்
புதிய வழமை

புரட்டிப் போட்டது
ஞாலத்தையே
குழப்பிப் போட்டது
சீலத்தையே

======
குறிப்பு:
இக் கவிதை பிறந்தது முதலில் ஆங்கில மூலத்தில். பின்னர் தான் தமிழில் அது பெருப்பிக்கப்பட்டது.
இதோ ஆங்கில மூலம்:

Monday for me 
One day late
Friday for me
One day soon
In between is 
Just three days
This is Covid
Nineteen week


Friday, April 10, 2020

கடை பிடிக்க வேண்டும்


கடை பிடிக்க வேண்டும்

கடைப்பிடிக்க வேண்டியதைக்
கடை பிடிக்க வேண்டுமென்று
கடை பிடித்துத் தமிழழிவைக்
கூவி விற்பார் சிலரிங்கு

முறையாகத் தமிழ் கற்றுச்
சொற்புணர்ச்சி அறிந்துகொண்டு
இலக்கணமாய் எழுதிவர
இயலவில்லைச் சிலருக்கு

சாகாதோ தமிழென்று
கொலை வெறியோடொரு கூட்டம்
காத்திருக்கும் வேளையிலே
அவருக்குக் கைகொடுத்துக்
களமிறங்கிப் பணியாற்றும்
கோடாலிக் காம்புகளின்
கோலமதைப் பாருங்கள்


ஊக்கிகள்:
கட்டி போட்டாயா
கேள்வி பட்டு
கடைபிடித்து
அடைப்பட்டு

Tuesday, February 04, 2020

Lean Tamil Easy

எளிய முறையில் தமிழ் கற்போம் என்ற ஒரு காணொளிப்பதிவு ஏற்றம் காண்கிறது.
தேவையானோர்க்குப் பயன் தர வேண்டும்.https://www.youtube.com/channel/UCG3mBMLePj98gHAoUk7YEgA/


Saturday, January 11, 2020

தேசிய வாதம் – நாம் தமிழரா?

தேசிய வாதம் – நாம் தமிழரா?

மனிதர்கள் இயல்பாகவே இடம் பெயர்ந்து கொண்டு இருப்பவர்கள். அரசியல், பொருளாதார, சமூக அழுத்தங்களால் மக்கள் இடம் பெயர்வதும் பெயர்ந்த இடங்களிலேயே நிலையாகி விடுவதும் காலங் காலமாக நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு இடங்களிலும் மக்களின் மொழியாக இருக்கும் மொழி, அவ் விடங்களுக்கு இடம் பெயர்ந்த மக்களின் மொழியாகி விடுவது இயல்பே. இவ்வாறு ஒரு இடத்தில் பெரும்பான்மையோரால் புரிந்து கொள்ளப்படும் நிலையிலிருக்கும் மொழியை வந்தோர் ஏற்றுக் கொள்வதும் காலப் போக்கில் அவர்களுக்கும் அதுவே தாய் மொழியாகி விடுவதும் நிகழும்.

தமிழ் நாட்டிற்குப் பல் வேறு கால கட்டங்களில் பல் வேறு மக்கள் பல் வேறு காரணங்களால் குடியேறி வந்திருக்கிறார்கள். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கட்டங் கட்டமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி வந்தவர்கள், வருபவர்கள் ஓரிரு தலைமுறைகளுக்குத் தம் மொழியைத் தம்முள் வைத்திருப்பார்கள். காலப் போக்கில் உள்ளூர் மொழியே அவர்களுக்கும் தாய் மொழியாகி விடும் நிலைமை தான் எங்கும்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கொண்டு வந்த மொழியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஒன்று, உள்ளூர் மக்களுடன் கலந்து, கலப்பு மக்கள் உருவாகி விடுவது இன்னொன்று.

எது எப்படியோ, மக்களோடு மக்களாக ஓர் அடையாளத்தின் பேரால் வந்தோரும், இருந்தோரும் இணைந்து இருக்கும் போது அது ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகமாகும். இதைக் குலைக்க நினைப்பது நல்லதல்ல.

தமிழ்நாட்டினர், தமிழர்களாக மொழி அடையாளம் ஒரு மக்களாக உணரப்படுவது ஒரு சிறப்பு. இந்த அடையாளத்திற்கு யார் உரித்து உடையவர்கள் அல்லது அற்றவர்கள் என்று பிரிவினை செய்வது தவறு.
பல நூற்றாண்டுகள் கடந்த பின்னருங்கூட சிலரின் பூர்வீகங்களைத் தேடித் துருவி, அவர்கள் தற்போது கொண்டிருக்கும் அடையாளத்திற்கு உரியவர்கள் அல்ல என்று பிரித்துப் பார்ப்பது ஒரு பண்பாடற்ற செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல், தமிழர்  யார் என்று அறிவதற்கு நதிமூலம் ரிசிமூலம் ஆய்ந்து சென்று அடையாளம் காணப்படுவது ஒரு குறுகிய மனப்பான்மையான பழக்கமாகும்.

நானும் இந் நாட்டான் தான், நானும் தமிழன் தான் என்று உணர்வோடு தலை நிமிர்த்துபவர்களை எல்லோரும் மதிக்க வேண்டும். அவ்வாறு போற்றாமல் பிரிவினைகளைத் தூண்டுவதால் தீங்கு நேரிடும் என்பதற்குப் பல சான்றுகள் நம் கண் முன்னே உள்ளன.

உதாரணமாக, திராவிடம் பேசிய அரசியற் கட்சிகள் முன் வைத்த சில வாதங்களால், பலர் அன்னியப் படுத்தப்பட்டு அவர்களின் தமிழ் அடையாளம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. இது அம் மக்கள் மனதில் கூட ஒரு குழப்ப நிலையத் தோற்றுவித்துத் தாமே தம்மைத் தனிமைப்படுத்தி வாழத் தலைப்பட ஏதுவாகியிருந்தது. தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் பெரும் பங்காற்றிய உ.வே. சாமிநாதையர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் சிறப்பை யார் மறுக்க முடியும்?

இப்போது தமிழ்த் தேசியம் உத்வேகமடைந்து திராவிடம் என்று ஆரம்பித்த போக்கையும் தள்ளி விட்டு, இன்னும் குறுகி, தமிழரைத் தமிழரே ஆள வேண்டும் என்று பேசப்படுகிறது. தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டான் ஆள வேண்டும் என்று முழங்கினால் எவ்வளவு பலமாக இருக்கும்? உலகின் பல நாடுகளை உற்றுக் கவனித்தால் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.

திராவிடக் கட்சிகளில் இருந்த, இருக்கும் வைகோ, கலைஞர் போன்றோரைத் தமிழரல்லாதவர் என்று சொல்வது சரியல்ல. வான்புகழ் வள்ளுவனுக்கு வானுயர் சிலை வைத்த கலைஞர், தமீழ மக்கள் நலன் கருதிப் பல செயலாற்றிய வைகோ, விசயகாந்த் போன்றோரை நாம் அன்னியப்படுத்துவதா? எண்ணற்ற மனிதர்களின் பெயர்கள் ஞாபகம் வருகிறதே. உள்ளத்தால் உணர்வால் தமிழரென்று உணர்ந்து செயற்பட்டவர்களைக் காயப்படுத்துவது தவறு.

“தமிழர் மட்டும்” என்று இப்பொழுது பிளவுபடும் மக்கள், நாளை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று தம்முள்ளே மேலும் பிளவுபட்டு சிதைந்து விட மாட்டார்களா? சிதைந்திருந்து கெட்டதும் வரலாறு தானே.

மாபெரும் இராச்சியங்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்நாட்டைப் பிரித்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒருவரையொருவர் கொன்று வென்று தானே வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகள் எம்முன்னே நின்று எம்மை நோக்கிக் கை கொட்டிச் சிரிக்கவில்லையா? உதாரணத்திற்கு ஒன்று; மலையாளம் தமிழ் பேதம்.

எல்லா மக்களிடையேயும் நல்லவரும் தீயோரும் இருக்கிறார்கள். இல்லா விட்டால் எட்டப்பன், காக்கை வன்னியன் போன்றோர் எப்படி உருவாகிறார்கள்? அவர்களும் தமிழர் தானே? கோபம், துரோகம், உயிர்ப் பயம், தீராப் பகை, மித மிஞ்சிய சுயநலம் போன்ற குணங்கள் மக்களைத் தம்மிடையே பிரித்துத் தீயவர்களாக்கி விட்டது தான் வரலாறு.

நாம் மட்டும் தான் தமிழரென்று கூவித் திரியும் நாங்கள் எங்கள் குடும்பங்களில் உறவுகளில் காலங் காலமாகக் கலந்திருக்கும் பிறரைப் புறந்தள்ளி விட்டோமா? இந்தத் தனித் தமிழ் அடையாள வாதம் நம்மைப் பிரித்துப் பிரித்து உதறி உதறி இறுதியில் ஓரிருவரில் மட்டும் எஞ்சி நிற்கும். ஏனெனில் இங்கே எந்த ஒரு இனமும் தனியாக இல்லை. பல மக்களின் கலப்பாகவும் கலவையாகவுமே எல்லோரும் உள்ளார்கள்.

இந்தப் பிரிவினை தேடுபவர்கள் கடைசியில் உண்மைய உணரும் போது காலம் கடந்து விடும்.

தோளோடு தோள் கொடுத்து ஒன்றாகப் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் அன்னியப் படுத்தப்பட்டு விலக்கி நிற்க வைக்கப்படும் நாளில் மீதமிருக்கப் போவது வெறும் வெறுமையும், தோல்வியும், வெறுப்பும் விரக்தியும் தான்.
ஆகவே நாமெல்லரும் தமிழர் என்ற உணர்வால் ஒன்றுபட்டு உயர்வடைய வேண்டும்.

தமிழ் மொழியும் அதன் சிறப்பு, தொன்மை, பண்பாடு என்பவையும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக மிக முக்கியம். ஆனால் அதன் பேரால் தமிழரையே சொத்தை பிரித்தெடுப்பது இழிவு. நாம் எல்லாம் தமிழரென்ற உணர்வை அனவருக்கும் ஊட்டி உணர்த்தி வளர்த்தெடுத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும்.

Friday, January 03, 2020

வந்தாரை வாழ வைக்கும் நம்மூர்

வந்தாரை வாழ வைக்கும் நம்மூர்


தமிழகம், வந்தாரை வாழ வைக்கும் இடமென்று அம் மக்கள் அடிக்கடி பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். இதை உற்று நோக்கி நம் ஈழநாட்டின் நிலையையும் யோசித்து எம்மிடையே ஈழநாட்டவராக வாழ்ந்த பலரைப் பற்றி எண்ணிய போது நமக்கும் வந்தாரை வாழவைக்கும் பண்பிருப்பதை உணர முடிந்தது.

கோவில்களில் பூசைசெய்ய வரவழைக்கப்பட்டவர்கள், வியாபார நோக்கில் வந்தவர்கள், கலைகளைக் கற்பிக்க வந்தவர்கள் என பலதரப்பட்டவர்கள் தமிழரோடு தமிழ் பேசி வாழ்ந்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, கேரளா போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள் சிங்களவரோடு சேர்ந்து வாழ்ந்தும் வருகிறார்கள்.
ஆகவே இலங்கையும் வந்தாரை வாழவைக்கும் ஒரு இடம் தான்.

Thursday, January 02, 2020

ஒட்டாவா தமிழ்ப்பள்ளி

ஒட்டாவா தமிழ்ப்பள்ளி

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
அந்தக் காலப் பழமொழி அது
அன்று தொட்டு இன்று வரைக்கும்
தமிழர் பெயர்வார் எந்தக் கரைக்கும்

கல்வி செல்வம் வேலைவாய்ப்பு
தீயோர் குலைக்கும் பாதுகாப்பு
தேடப்படும் திரவியமாய்
தேடி வந்தார் கனடாவை

ஐம்பது அறுபது ஆண்டுகளாய்
ஐம்பதோ அறுபதோ தலைக்கணக்காய்
வந்த மக்கள் பல்கிப் பெருக
குழந்தைகளும் பிறந்தனவே

குழந்தைகளும் தமிழ் கற்க
முப்பதுதாண்டு முன்னர் கூடி
ஆரம்பித்தார் கல்விக்கூடம்
ஒட்டாவா தமிழ்ப் பள்ளி

சினஞ்சிறிய பிள்ளைகட்கு
தன்னார்வலர்த் தொண்டர்கூடி
சிறிய அளவில் தொடங்கியதே
சீரிய தமிழ்ப் பள்ளிக்கூடம்

சிலரோடு சில வகுப்பாய்
தொடங்கிய தமிழ்க்கல்விக்கூடம்
நூற்றுக்கணக்கில் மாணவராய்
பூத்துக் குலுங்கும் பூங்காவாய்

புது நாட்டின் புது மொழிகள்
மூளையிலே ஆதிக்கங்கள்
இருந்தும் தமிழை நன்கு கற்று
தமிழினிலே தேர்ச்சி பெற்றார்

தமிழைக் கற்று மொழியின் வேரில்
தழைத்து நிற்கும் தமிழ்ப்பண்பாட்டை
தலையாய்ப் பேணி இனிதாய் வாழும்
தமிழர் தமக்குத் துணையாய் நிற்கும்

ஒட்டாவா தமிழ்ப் பள்ளி
வாழ்க வாழ்க வாழ்கவே

Wednesday, January 01, 2020

பனி பூத்த நீர்

ஆர்ப்பரிக்கும் ஆறு
அடங்கிக்கிடக்குது பாரு
அடியிலே ஓடுது
இன்னும் ஆறு
நீறு பூத்த  நெருப்பல்ல
பனி பூத்த நீர்


மரக்கறி

கரட்சம்பல் முதலெடுத்தேன்
கத்தரிக்காய் அடுத்தெடுத்தேன்
நீட்டு நீட்டு முருங்கைக்காய்
குழம்புக்கறியும் எடுத்தேன்

வட்ட வட்ட வெண்டிக்காய்
பாற்கறியில் சிறிதெடுத்தேன்
வாழைப்பொத்தி வறையும் கூட
விருப்புடனே நானெடுத்தேன்

பாகற்காய் குழம்புக்கறி
பக்கத்தில் பருப்புக்கறி
அதுக்கப்பாற் கீரைக்கறி
வதக்கி வைத்த வெந்தயக்கறி

இத்துணையாய் மரக்கறிகள்
விதவிதமாய் நாடோறும்
விருப்புடனே பரிமாறும்
என் வீட்டுக்காரியோர்
வித்தகி தானே சொல்

Tuesday, December 31, 2019

அழகு மரம்

அழகு மரம்

இலையோடு பூவோடு
பிஞ்சோடு காயோடு
பழத்தோடு பறவையோடு
வண்ணப் பொலிவோடு
நிற்கின்ற மரமழகு

அத்தோடு நில்லாமல்

தலை கொட்டி
இலை கொட்டி
தடியோடும் கிளையோடும்
வரைகோட்டுச் சித்திரமாய்
பனிக்காலக் குளிர் நேரம்
விறைப்பாக நின்றிருக்கும்
இந்நிலையும் அதியழகேTuesday, August 20, 2019

மறந்திடுமோ நெஞ்சம்

பேரவையின் 32-ஆம் தமிழ் விழா மலருக்குத், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளில் யாம் எழுதிய கவிதை ஒன்று.

இக்கவிதையானது, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது இடம்பெற்ற துயரச் சம்பவத்தை நினைவு கூரும் முககமாக எழுதப்பட்டுள்ளது.

மறந்திடுமோ நெஞ்சம் 

அமுதென்ற தமிழுக்கு
அளவில்லாத் திருவுக்கு
அழகுசேர்க் கும்முகமாய்
ஆராய்ச்சி மாநாடு

வண. பிதா தனிநாயகம்
தொடக்கி வைத்த கூட்டங்கள்
தொடராகி நான்காகி
எழுபத்திநாலு தன்னில்
இடம்பெற்ற தீழத்தில்

தமிழ் மரபுத் திங்களாம்
தை பிறந்த வேளையிலே
அனைத்துலக அறிஞரும்
ஆர்வலரும் பார்வையரும்
ஆசையாய்க் களிகொள்ள
இறுதி நாள் நிகழ்ச்சியன்று
முத்தவெளி முன்றலிலே

முத்து முத்தாய்ப் பேச்சுகளும்
அணியணியாய்க் கலை நிகழ்வும்
நடந்துகொண்டு இருக்கையிலே
மக்களிடை புகுந்ததொரு
காவலர்கள் வண்டி
வழிவிடக் கேட்டு நின்றார்
கூட்டத்தை மிண்டி

எள் விழுந்தால் எண்ணையாகும்
அந்தப் பெருங் கூட்டத்தில்
எப்படித்தான் வழி விடுவார்
எக்காள மிட்டோர்க்கு

குழப்பமே நோக்கமாகக்
கொண்ட தீயோர்களுக்கு
வழி கிடைக்கா வலி சேர்ந்து
வன்முறையைக் கட்டவிழ்க்க
வழியொன்று கிடைத்ததுவே

கூட்டம் கலைக்கவென்று
கண்ணெரிக்கும் புகைக்குண்டும்
இடையிடையே நிசக்குண்டும்
பீறிட்டுப் பாய்ந்திடவே
கலங்கிய மக்களெல்லாம்
பதறியோடச் சிதறியோட
அங்கு அரங்கேறியது
அமிலமான அவலமொன்று

பாய்ந்துசென்ற குண்டுகளால்
உயிரோடு அறுபட்ட
மின்கடத்திக் கம்பிகளும்
விழுந்தனவே உயிர்தப்ப
ஓடிய எம் மக்கள் மேல்

மின்தாக்கிச் சிலர் மடிந்தார்
புண்பட்டுப் பலர் விழுந்தார்
நெரிபட்டு மிதிபட்டு
உடல்கெட்டு உயிர்கெட்டு
துயரத்தில் முடிந்ததந்த
அனைத்துலகத் தமிழாய்வு
நான்காவது மாநாடு

நலிந்துகெட்ட மாந்தருக்காய்
நாவெழுப்ப யாருமில்லை
நாதியென்றும் ஏதுமில்லை
நீதியொன்றும் சேரவில்லை

வீழ்ந்தவர்க்கு நினைவுக்கல்
நிறுவிடத்தான் முடிந்ததம்மா
எம்மக்கள் நினைவைவிட்டு
அத்துயரும் போய்விடுமா 


செயபாலன், ஏப்ரல் 9, 2019

நன்றி:  https://fetna.org/fetna-2019-souvenir/?fbclid=IwAR3Wn6jf8vSlZfudkiGJk40D6jcIST3tGmdWsNR-J9BBxHbnt7_91xIlE7Q


Sunday, May 05, 2019

பகுதி 8: இரத்தமும் காற்றோட்டமும்

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

நாம் உயிரோடு இருக்க நமது உடலெங்கும் எப்போதும் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் இந்த இரத்தம் இரத்தக்குழாய்கள் மூலம்தான் ஓடுகின்றது. நமது இதயத்திலிருந்து வெளிவரும் பெரிய இரத்தக்குழாய் தன்னிலிருந்து கிளைகளை உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கும் கொடுக்க, அக்கிளைகள் இன்னும் கிளைகளாக பிரிந்து சிறிதாகி, சிறிதாகி மிக நுண்ணிய குழாய்களாக மாற, எமது இரத்தம் எமது உடலின் மிக நுண்ணிய பகுதிகளுக்கெல்லாம் செல்கின்றது. இவ்விரத்தம் ஒரு சிறிய பகுதிக்குக்கூட செல்வதில் தடை ஏற்பட்டால் அந்தப்பகுதி இறந்துவிடும் அல்லது தொழிற்படாது.

குழாய்கள் மூலம் இரத்தத்தை உடலெங்கும் செலுத்தும் தொழிலை இதயம் செய்கின்றது. தனது தொழிலை ஒழுங்காகச் செய்து கொள்ள அதற்கும் இரத்தம் தேவை. அதனை தன்னிடமிருந்து செல்லும் பெரிய குழாயிலிருந்து வெளிவரும் கிளை ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்கின்றது.

சிலருக்கு பிளட்பிரஷர் இல்லை, கொலஸ்ரோல் மட்டம் சாதாரணமானது. போதாக்குறைக்கு சர்க்கரை வியாதியும் இல்லை. ஆனால் திடீரென்று பக்கவாத நோய்க்கு ஆளாவார்கள். இடதோ, வலதோ கை கால் வேலை செய்யாது. அத்துடன் சேர்த்து சிலருக்கு பேச்சு வராது. சிலருக்கு நாம் கூறுவதே விளங்கமுடியாமல் இருக்கும், ... இப்படி பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிலரது வாக்குமூலங்கள் (பக்கவாத நோயாளியின் குடும்பத்தவர்கள் வாயிலாக)

 • 'செயின் ஸ்மோக்கர் தான். புகைப்பதை நிறுத்தி ஆறு வருஷமாச்சு'
 • 'பயிர்களுக்கு அடிக்கும் கிருமிநாசினி கடையில் வருஷக்கணக்கில் வேலை செய்தவர்'
 • 'பக்டரியில் புகை வாற இடத்திலதான் வேல, வேற வருத்தங்கள் வாறல்ல. இடைக்கிடை இருமுவார்'

இவர்களின் CT ஸ்கான் றிப்போட் கூறுவதென்னவென்றால்--
-parietal, frontal, cerebellum, main artery block, branch block, clot...
(செரிபிறம் பறைட்டல், செறிபலம் அல்லது செரிசிறம் புறொண்டல்... மெயின் ஆட்டரி, ப்ளொக்,க்ளொட்)

மூளைக்கு இரத்தம் கொண்டுவரும் இரத்தக்குழாய்களின் கிளைகளில் ஒன்று இரத்தக்கட்டி வந்து அடைத்துள்ளது. இதனால் மூளையின் பகுதி ஒன்று பாதிக்கப்படுகின்றது.  CT scan, நரம்பியல் நிபுணர் இரண்டும் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு  பாதிப்பு ஏற்பட்டு மூன்று மணித்தியாலங்களுள் நோயாளியை கொண்டுசென்றால் இதிலிருந்து மீட்சி பெற வாய்ப்பு உண்டு.
இதே இரத்தக்கட்டி மூளைக்குப் போகாமல், இதய தசைகளுக்கு குருதி வழங்கும், இரத்தக்குழாயின் கிளைகள் ஒன்றுக்கும் சென்று அடைக்கலாம். இதயத்தில் ஒரு சிறு கிளைக்குழாய் அடைத்தால், வேறு கிளைகள் மூலம் குருதிவழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நமக்கு அசாதாரண நிலை எதுவும் ஏற்படாது. ஆனால், நாளடைவில் வெவ்வேறு குழாய்களில் அடைப்பு ஏற்பட, நெஞ்சுவலி, களைப்பு என்று ஏற்பட ECG, ECHO என்று போனால்; அன்ஜியோகிராம் மெயின் பிராஞ்ச் (main branch) 80% அடைப்பு அத்தோடு மூன்று சிறிய குழாய்களில் 100% அடைப்பு என்று முடிவுரைக்கும். அதன்படி bypass க்கு போகலாம், Stent வைக்கப்படலாம்.

இவையெல்லாம் விட்டு சிலருக்கு இதயத்திற்கான பெரிய இரத்தக்குழாய் க்ளொட் - இரத்தக்கட்டியினால் அடைபட்டால் ECG, ECHO எதுவும் தேவையில்லை-- கண்ணீர் அஞ்சலி, பதாதை விடை சொல்லும்.

உங்கள் வயது 35 - 40 க்கு மேலிருந்தால், நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், புகைபிடித்து விட்டிருந்தாலும், அல்லது ஏதாவது சந்தேகம் இருந்தாலோ பொதுவைத்திய நிபுணரையோ அல்லது இதய நோய் சிகிச்சை நிபுணரையோ கலந்தாலோசிப்பதன்மூலம் தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.  இரத்தக்கட்டி உருவாகாமலிருக்க மாத்திரைகள் தரப்படலாம்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் புகைபிடிப்பவராக இருந்தால், அவர்களுக்கு சிரங்குகள் ஆறுவது கடினம். அதேசமயம் அவர்களுக்கு  கால்விரல்கள், பாதம் கைவிரல்கள் என்று சிறிய பகுதிகளின் திசுக்கள் இருப்பது அடிக்கடி நடக்கும். இதுதான் கங்கிறீன் gangrene என்பது உருவாகி அந்தப்பகுதியை சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவார்கள். அதாவது விரல்கள் பாதம், முழங்காலுக்குகீழ் என்று எம்மில் அவயவம் இழக்கப்படும். சர்க்கரை வியாதிக்காரர்கள் புகைத்தலை, புகைவரும் இடங்களில் நிற்பதை நிறுத்தியே ஆகவேண்டும்.

சனநெருக்கடி - இடநெருக்கடி  - இன்று விரைவாக பரவிக்கொண்டிருக்க  வீடுகள் தங்களுக்கிடையேயான இடைவெளிகளை குறைத்துக்கொள்வது மாத்திரமின்றி ஒன்றைவிட ஒன்று உயர்ந்து, சில வீடுகளுக்கான காற்றோட்டத்தை குறைத்தே விடுகின்றன. காற்று வீசாவிட்டாலும் இயற்கையாக நாம் அறியாமலே ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு காற்றின் நகர்வு ஒன்று இருந்துகொண்டேயேயிருக்கும்.  இந்த நகர்வுக்கும் தடை ஏற்படும் சமயத்தில்  நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டுக்கு இடையிலான விகிதங்கள் மாறும். இந்த நேரத்தில் மின்விசிறியைப் பாவித்தாலும் அரைத்த மாவை அரைப்பதுபோல்  மாறிய விகிதங்கள் அப்படியேதான் இருக்கும்.

நாம் சுவாசிக்கும் சுத்தமான உலர்ந்த காற்றில் ஏறக்குறைய 78% நைதரசனும் 20%ஒட்சிசனும். 0.93% ஆகனும், 0.04% காபனீரொட்சைட்டும் உண்டு. இதில் நைதரசன் எமது சுவாசத்தைப் பொறுத்தமட்டில் அலட்டிக்கொள்ளாத வாயு. ஆகனும் அப்படித்தான். நாம் சுவாசிக்கும்பொழுது, உள்ளெடுக்கும் காற்றில் ஒட்சிசன் அளவு 20% ஆக இருக்கும். வெளிவிடும் காற்றில் காபனீரொட்சைட்டு 0.04% வீதத்திலும் கூடியதாக இருக்கும். காற்று நகராமல் இருந்தால் அக்காற்றில் ஒட்சிசன் சதவீதம் குறைந்து, காபனீரொட்சைட்டின் சதவீதம் கூடுகின்றது. நாம் நிமிடத்திற்கு 15-20 தடவைகள் சுவாசிக்கின்றோம். மணித்தியாலங்களுக்கு எவ்வளவு? நாளுக்கு எத்தனை என்பது உங்கள் கணக்கு.

ஒருவரை காற்றுப்புகாத பெட்டி ஒன்றினுள் வைத்துப் பூட்டினால், அவரைச் சுற்றியுள்ள சாதாரண காற்றின் விகிதம் அவர் சுவாசிக்க சுவாசிக்க மாறிக்கொண்டேவந்து ஒட்சிசன் குறைய, அவர் மயக்கமுற்று முடிவில் இறந்தே போவார்.

கள்ளத்தனமாக ஒரு நாட்டில் இருந்து, இன்னொரு நாட்டிற்கு புலம் பெயர ஆசைப்பட்டவர்கள்  25-30 பேரை உள்வாங்கிக் கொள்ளும் அடைக்கப்பட்ட container அடுத்த நாட்டிற்கு சென்றதும், பிணங்களாய் கொட்டிய செய்திகள் எல்லாம் நாம் அறிந்தவையே.

இயற்கை காற்று வீச்சு குறைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு ஜலதோசம், தலைவலி, தோல்வியாதிகள் இடைக்கிடையே வரக்கூடும். மேலும் ஆஸ்துமா வியாதி உள்ளவர்களுக்கு அதன் உக்கிரம் கூடும். சிறார்களுக்கு திடீரென உடம்பெல்லாம் திட்டு திட்டாய் தடித்து, சிலவேளை மெல்லிய ஜுரம், அரிப்பும் ஏற்படலாம். வைத்தியசாலையில்  என்ன ஒவ்வாத சாப்பாடு கொடுத்தீர்கள் ஸ்டிரோய்ட் ஊசி போடவேண்டும் என்று சொல்வார்கள்.
நாங்கள் நுளம்பு (கொசு) அறையினுள்ளே வரக்கூடும் என்ற பயத்திலும், திருடர்கள் பயத்திலும் ஜன்னல், கதவுகளை இறுக்கப் பூட்டிக்கொண்டு, தூங்குகின்றோம். மின்விசிறி வேலை செய்தால் போதுமென்று நினைக்கின்றோம். இதுமுன்பு சொன்னதுபோல்...அரைத்தமாவு கதை.  காற்றின் விகிதார குறை.

அறைக்கு இருக்கும் ஜன்னல்கள் பகலிலும் சரி, இரவிலும் சரி திறந்து வையுங்கள். அத்துடன் அதற்கு எதிராகவோ, பக்கவாட்டிலோ வேறு ஜன்னல்கள், கதவுகள் இருந்தால் அவற்றையும் திறந்து வைத்தால் நல்லது. இயற்கை காற்று ஒருவழியால் வந்து, மறுவழியால் நகரும். மின்விசிறியும் சேர்ந்து பாவிக்கலாம்.

திருடர் பயம், நுளம்பு பயம் போக்க உங்கள் அறிவாற்றலை கொண்டு ஏதாவது செய்வீர்கள்.

'இரவு பத்து மணி மட்டும் TV பார்த்துவிட்டு, சிரிச்சு, கதையெல்லாம் கதைத்துவிட்டு,  அறைக் கதவைப் பூட்டிவிட்டு, படுக்கப்போனவர் ஆறரைமணியாகியும் எழும்பி வரவில்லையே எண்டு(என்று)  உள்ளே போய் லைட்டைப் போட்டுப்பார்த்தால் fan வேலை செய்யுது...நான் என்னத்த சொல்லுவன்....ஒண்டும் சொல்லாம கொள்ளாமல் போயிட்டாரே....'
இது இடைக்கிடை நாம் கேட்கின்ற சோகம் கலந்த அழுகுரலின் ஒரு பகுதி...பூட்டிய அறை, காற்றோட்டம் குறைவு...என்பதெல்லாம் உங்களுக்கு விளக்கத் தேவை இல்லை.

அவர், இதயநோய் அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ இருந்திருக்கலாம். அல்லது அவர் ஆரோக்கியமானவராகவும் இருந்திருக்கலாம்.
பூட்டிய ஜன்னல், கதவுகள்தான் அவரது கடைசிமூச்சைக் கண்டிருக்கும். உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை முதலில் நம் கையை மூக்கின் அருகே கொண்டு சென்றுதான் பார்க்கிறோம். உயிருக்கு உயிரான காற்றை (மூச்சு) கொண்டுதான் கணிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

Wednesday, May 01, 2019

பகுதி 7: காற்று

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


காற்று என்பது உயிரான விஷயம். அதுவும் சுத்தமான காற்றானது உயிருக்கு உயிரானது. ஆனால் அது உயிரற்ற பொருள் (சடப்பொருள்) உலகத்தில் அனைத்து விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது. 

நைதரசன், ஒட்சிசன், ஆகன், காபனீரொட்சைட் மிக மிகச் சிறிய அளவில் வேறுசில வாயுக்களையும் சேர்த்து கலவையாக்கி, அந்த வாயுக்களின் கலப்பு விகிதம் கிட்டத்தட்ட மாறாமல் வைத்துக்கொண்டு தூசு, புகை, இரசாயன நெடி போன்றவற்றுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளாத காற்று சுத்தமான காற்று. 

கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் வசிப்பவர்கள் இழந்துவிட்ட சொர்க்கம் அது. கிராமப்புறங்களில் தென்னங்காற்று, வேப்பங்காற்று, அரச மரக்காற்று, புளியமரக்காற்று...பூங்காற்று என வெவ்வேறு காரக்டர்களில் சுதந்திரமாக உலாவந்து, எமது ஆரோக்கியம் பேணும் காற்று. 

நகரங்களில் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் இருந்து வரும் புகை, காற்றின் சாதாரண நகர்வையும் மீறி, காற்றை கலப்படக்காற்றாக்கி, நகரை முக்கியமாக பகலில் சூழ்ந்து வீதியோரங்களில் உள்ள வீடுகளில் கடைகளில் இருப்போர், பாதசாரிகள் என பல பேரின் மூச்சுக்காற்றாக அது அமைகின்றது. 

விளைவு - அடிக்கடி ஜலதோசம், இடைக்கிடை தலைவலி, கூடவே தொண்டை அரிப்பு, ஆஸ்துமாவை கூடவே வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதன் உக்கிர தாக்கம் போன்றவை நம்மோடு உறவு வைத்துக்கொள்ள, சிலரை மார்பு நோய் சிகிச்சை நிலையங்களுக்கும், புற்றுநோய் சிகிச்சை நிலையங்களுக்கும் வழிதேடவைக்கும். 
ஆனால் தற்போது இலங்கையில்- வாகனப்புகை பரிசோதனை - புகை இல்லை என்ற சான்றிதழ் - சுற்றுச்சூழல் தூய்மைத்திட்டம் என்று வந்தபிறகு, வாகனப்புகை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் வீதியில் இருந்திருந்தாற்போல் சில வாகனகங்கள் செல்லும்போது , மூக்கைப் பொத்த வேண்டியுள்ளது. இவ்வாகனங்கள் ஊழலின் பலகூறுகளில் இரண்டான கையூட்டம், குறுக்குவழி என்பவற்றினூடாக சென்றுவந்திருக்கலாம் என்பது என் எண்ணம். பெரும்பாலான ஆசிய நாடுகள் தங்களுடைய பொதுவான உருவமில்லாத தேசிய அடையாளமாக ஊழலை வைத்திருப்பதால், இதெல்லாம் ஆச்சரியமில்லா விஷயங்களில் ஒன்று.

சிகரெட், பீடி, சுருட்டு புகையை பொது இடங்களில் இருந்தும், பொது போக்குவரத்து  வாகனங்களிலும் இருந்தும் விரட்டிவிட்டோம். நல்ல விடயம். ஆனால் சிலர் சிறார்கள், மற்றவர்கள் இருக்க வீட்டில் புகைக்கிறார்கள். இதனை அவர்கள் வீட்டின் வெளியே வைத்துக்கொள்வது நல்லது. அல்லது புகைத்தலை நிறுத்துவது மிக மிக நல்லது. அவர்கள் யாரும் இல்லையென்று வீட்டினுள் பிகை பிடித்தாலும், அப்புகை சில மணிநேரம் வீட்டினுள்ளேயே அடங்கி இருக்கும். மற்றவர்கள், முக்கியமாக சிறார்கள் சிகரெட்டைத் தொடாமலே புகைபிடிப்பவர்களாகி விடுவார்கள்.

புகை என்றாலே எந்தப்புகை என்றாலும் சிறார்களோ, பெர்யவர்களோ அதனை சுவாசிப்பதை அதாவது புகையில் நிற்பதைத் தவிர்க்கவேண்டும். சிறார்களுக்கு சுவாசப்பை நோய்கள், தோல் நோய்கள் ஏற்பட இடமுண்டு. ஆனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் குருதியில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். அவர்கள் புகைப்பதை நிறுத்தி, பல வருடங்கள் ஆனாலும் இது ஏற்படுகின்றது. சுவாசப்பை நோய்கள், மார்பு புற்றுநோய் எதுவும் வரவில்லையே என்று அவர்கள் திருப்தியடைந்தாலும் இரத்த ஓட்டத்தில் திடீரென்று எந்தச் சமயத்திலும் இக்கட்டிகள் உருவாகலாம். இது எனது நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தில் பெற்ற உண்மை.

மருத்துவ அல்லது நமது உடற்தொழிற்பாடு பற்றி அறியாதவர்கள், இனி நான் கூறப்போவதை விளங்கிக் கொள்ள முடிகின்றதா என்பதைப் பாருங்கள். சுருக்கம் மிகமிகச் சுருக்கம்.

Tuesday, April 16, 2019

பகுதி 6 - கண்டல் காயங்கள்

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

கண்டல் – contusion

இனி அடிபட்ட, தாக்குப்பட்ட அவயங்களுக்கு வருவோம். அவயங்களில் வலி வீக்கம் என்பன இருந்தால், சிலரது அனுபவ ஏழாம் அறிவே முறிவு உள்ளது அல்லது இல்லை என்றே சொல்லி விடும். அதற்கு மேலே எக்ஸ்றே எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஏதோவகையில் முறிவு இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டால் --தசையோ, முள்ளந்தண்டோ, நெஞ்சோ, முதுகோ அவயங்களிலோ வலி, வீக்கம் இருந்தால் அந்த இடத்தை  முடிந்தவரை அசையாமல் ஓய்வில் வைத்திருப்பது நல்லது. உடனடியாக அந்த இடத்தை கசக்குவதோ, உரஞ்சுவதோ, நோவு தீர்க்கும் தைல வகைகள் பூசுவதோ கூடாது.
ஐஸ் பை மாத்திரம் பிடிக்கவேண்டும். 3- 5 நிமிடங்களுக்கு Ice pack ஐ பாதிக்கப்பட்ட இடத்திற்கு மேலாகவும் சுற்றியும் மெதுவாக தடவ வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட நேரத்திலிருந்து 3- 4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை செய்யவேண்டும். அடுத்ததாக பாதிக்கப்பட்டபகுதி, தலையணைகளின் உதவியுடனோ, எப்படியோ ஓரளவு உயரமாக வைக்கப்படல் வேண்டும்.

ஐஸ் துண்டுகளை சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டால் அதுதான் ஐஸ் pack ஐஸ் கட்டிகள் இல்லாவிட்டால் குளிர் தண்ணீர் கூட பயன்படுத்தலாம்.
இப்படிச் செய்ய வலி, வீக்கம் குறைந்து கொண்டே வரும். 48 மணித்தியாலங்களுக்குப் பிறகு இருக்கும் வலியை குறைக்க சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அதனையும் ஒரு நாளைக்கு 3 - 4 தடவை விட்டு விட்டு  செய்யலாம். ஒத்தடம் சுடு நீராகவோ அல்லது சுடு சோறாகவோ இருக்கலாம். நோவு தீர்க்கும் தைலம் பாவிக்கலாம். ஆரம்பத்தில் அழுத்தி மசாஜ் பண்ணாமல் படிப்படியாக அழுத்தம் கூட்டலாம். உங்கள் வீட்டில் infrared lamp இருந்தால் ஒத்தடத்திற்குப் பதிலாக அதன்மூலம் சூடு பிடிக்கலாம்.  தைலம் gel போட்டு உருவி விடுவதாயிருந்தால் மேல்நோக்கி அதாவது உங்கள் இதயம் எங்கிருக்கின்றதோ அந்த திசையில் உருவ வேண்டும். எனவே கழுத்து தலை என்று வரும்போது கீழ்நோக்கி உருவ வேண்டும். இந்த விதியை மீறவேண்டாம். மேலும் வலி, நீக்கம் என்பன குறைந்துவிட்டால் உங்கள் சிகிச்சையை நிறுத்தலாம்.

சிலசமயங்களில் தாக்குதலுக்கு அல்லது பாதிப்புக்கு உள்ளான இடம் வலி வீக்கத்துடன் இருந்தும் காயம் இல்லாது இருந்தாலும் தோலின் கீழே இரத்தம் கசிந்து, நீலமாக அல்லது சற்று கறுப்பாக அல்லது இரண்டும் கலந்தோ, உலக வரைபடத்தில் காணப்படும் நாடுகளின் வடிவமாகவோ அல்லது வட்டமாக இருக்கும். இது contusion (கண்டல்) எனப்படும்.
எப்படியிருந்தாலும் அடிபட்ட இடத்திற்கு உடனேயே ஐஸ் (ice pack) சிகிச்சை    4-5 நிமிடங்களுக்கு, 3-4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவையாக இரண்டு நாட்களுக்கு செய்ய வேண்டும். பின்பு மெல்லிய சூடு ஒத்தடம்.
4-5 நாட்களுக்குப் பிறகு நோவு தீர்க்கும் தைலம் போட்டு contusion உண்டான இடத்தின் விளிம்பைச் சுற்றி 25-30 தடவைகள் சற்று அழுத்தி (மசாஜ்) உருவ வேண்டும். 3-4 தடவை தினமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்கையில் அந்த contusion வரைபட அளவு சிறிதாகி மறையும். அது மறைந்த பின்பும் அவ்விடம் தோற்றத்தில் எல்லாம் சரியாக இருந்தாலும், உள்ளே தடிப்பாக அல்லது இறுக்கமாக இருக்கலாம். அதனையும் அழுத்தி மசாஜ் பண்ணி சரியான திசையில் உருவி இல்லாமல் செய்யவேண்டும். அது கடைசிவரை இல்லாமல் போகுமட்டும் மசாஜ் செய்யவேண்டும். இது மிக முக்கியம்.

கீழ்வரும் பிறர் கூற்றுக்களைப் படியுங்கள்.
 • 'முச்சக்கரவண்டி குடைசாய்ந்து, கம்பி தொடையில் பலமாக அடிபட்டு, நோவெல்லாம் வந்து சுகமாகி ஐந்தாறு வருஷம்...'
 • 'கிரிக்கெட் பந்து தொடையில் பட்டு, கண்டிச்சு எல்லாம் சரியாகி மூன்று வருஷத்திற்கு மேல்...'
 • 'படியில் ஏறும்போது சறுக்கி விழுந்து படியின் விளிம்பு தொடையில் அடித்து, கஷ்டப்பட்டு, சரியாகி நீண்டகாலம்...'
இவை என் அனுபவப் பாதையில் சந்தித்த பல நோயாளர்களில் சிலரின் முன்கதைச் சுருக்கங்கள்.

அவர்கள் எல்லோருமே தொடையில் மயலோமா (myeloma), ஒஸ்டியோமா (osteoma) என புற்று நோயின் அவதாரங்களில் ஒன்றை கொண்டிருந்தனர்.
கால் இழந்து, எலும்பு துண்டாகி வெட்டியெடுக்கப்பட்டு, புற்றுநோய் வேறு இடங்களுக்கு வியாபித்து என்று பல்வேறு நிலைகளில் அவர்கள் இருந்தனர்.
தொடையில் அடிபடுவதற்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தமோ அல்லது ஒப்பந்தமோ நான் அறியேன். நான் சந்திக்காத இதே போன்ற ஆட்கள் உலகில் எத்தனையோ நானறியேன்.
ஆனால் நீங்கள் அறிந்து - இப்படியான அடிபடுதல் - தாக்குதல் உங்களுக்காவது - மற்றவர்களுக்காவது விசேடமாக தொடையில் நிகழ்ந்தால் ஐஸ் - பின்பு சூடு - மஜாஜ் செய்து எந்த தடிப்போ - கட்டியோ இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம்.

கடைசியில் ஐஸ் விடயமொன்று.

ஐஸ் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த இளஞன் ஒருவன் தவறுதலாக விழுந்து, ஐஸ் தரையில் பலதடவை உருண்டு, பிரண்டு எழும்ப, இடது தோளில் பலத்த அடி. வீட்டில் தாங்கமுடியாத வலி வீக்கத்தால் அவதிப்பட்டு, நகரத்திலேயே பெயர்பெற்ற எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணரிடம் சென்றான். அவர் திருப்பித் திருப்பி கையை பரிசோதித்து விட்டு, 'முறிவு ஏதும் இல்லை. 3 -4 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 5 நிமிடம் வரை, தடவிக்கொண்டிருங்கள், தடவிய பின்பு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, மீண்டும் மீண்டும் பாவியுங்கள். சரியாகிவிடும்.' என்று , ஐஸ் பை (ice pack) ஒன்றைக் கொடுக்க, அவன் முறைப்புடன் பீஸ் கொடுத்ததெல்லாம் சரித்திரங்கள்.
அடுத்து வரவிருப்பது - காற்று

Sunday, April 14, 2019

பகுதி 5: முள்ளந்தண்டு பாதிப்பு

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம்.

மேலிருந்து விழுந்து, விபத்தில் அடிபட்டு இருக்கும் ஒருவருக்கு இப்படி நேரலாம். அல்லது நேரவைப்பதற்கு ஏற்கனவே உடைந்த, விலகிய துண்டுகள் தருணம் பார்த்து இருக்கலாம். பாதிக்கப்பட்டவர் வலியால் அவதியுறுவார். அவரை நாம் தூக்குவதாலோ, எழுப்பி நிறுத்துவதாலோ இருக்க வைப்பதாலோ உடைந்து விலகிய துண்டுகளுக்கு நாம் சந்தர்ப்பம் கொடுத்துவிடுவோம். முண்ணான் சிதைவுறும்.

பாதிக்கப்பட்டவர் படுக்கை நிலையிலேயே இருக்கவேண்டும். குப்புறப்படுத்தியிருந்தால் நல்லது. அவரை மெதுமெதுவாக பக்கவாட்டாக படுத்தநிலையிலேயே பலகை அல்லது கை ஸ்ரெச்சர் (hand stretcher) ஒன்றுக்கு மாற்றி வைத்தியசாலையை நாடவேண்டும். அங்கு நமது செயற்கை ஏழாம் அறிவு - X-Ray, உடைவு, விலகல் என்பதற்குரிய விடை சொல்லிவிடும். உடைவு, விலகல் இல்லையென்றால் வலி போன்ற விடயங்களை குறைக்கும் வழி இறுதியில் சொல்லப்படும்.

இதற்கும் மேலாக, எலும்பு, டிஸ்க் விலகல், முண்ணான் பாதிப்பு என்று எது இருந்தாலும் அவற்றை எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் (orthopedic surgeon) நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் (neurosurgeon) என்று இருவரோ அல்லது ஒருவரோ கையாள்வார்கள். அவர்களுக்கும் தெளிவாக பாதிப்பை அறிந்து கொள்ள இருக்கவே இருக்கிறது செயற்கை எட்டாம் அறிவு - C.T. scan - அதற்கு மேல் செயற்கை ஒன்பதாம் அறிவை கொண்டிருக்கின்றது. M.R.I.

முண்ணானில் அல்லது நரம்பில் ஏற்படும் பாதிப்பு, சிகிச்சை மூலம் பழைய நிலைக்கு திரும்பும் என்பது கேள்விக்குறி போடவேண்டிய விஷயம். எதிர்காலத்தில் செயற்கை பத்தாம் அறிவு வந்து (Aliens) ஏலியன்களுடன் கலந்து பேசி, புதியமுறை மூலம் பாதிக்கப்பட்டவர் நூறு சதவீதம் குணமடைந்தால், உலகில் படுக்கையிலும், தள்ளுவண்டியிலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானவர்கள் மகிழ்ச்சியடையவார்கள்.
அடுத்து வரவிருப்பது கண்டல் காயங்கள்

Saturday, April 13, 2019

பகுதி 4 - விபத்துகளும் காயங்களும்

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.
அடிபடுதல் - விழுதல் - மோதுதல் - விபத்துக்கு உட்படுதல் etc
இவற்றில் ஏதாவது நடந்து, இரத்தம் சிந்தும் காயங்கள், ஏதும் ஏற்படாமல் இருந்தால் 'அப்பாடா, தப்பியாச்சு...' என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் ஏற்படும்.
ஆனால், தாக்கத்திற்கு ஆளான உடலின் பகுதி வீங்கலாம், வலி ஏற்படலாம், சூடாகலாம். சிவப்போ, வேறு நிறமோ ஆகலாம். இவை அத்தனையும் சேர்ந்தே வரலாம்.
இங்கு குறிப்பிடப்போவது மேற்கூறிய பிரச்சினைகளை இலகுவாகவும், விரைவாகவும் குறைக்கின்ற முறை.
ஆனால், அடிபடுதல் போன்ற மேற்கூறிய சமாச்சாரங்கள் உடலின் எந்தப்பகுதியில் நிகழ்ந்தது - பாதிக்கப்பட்டது என்பதில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். அப்படியெனும்போது - முதலில் வருபவர்கள் தலை, முதுகுத்தண்டு, முதுகெலும்பு என்பன.

தலை அடிபடுதல்

தலை பாதிக்கப்பட்டு - சிறிய மயக்கமோ அல்லது பெரிய மயக்கமோ, தனியாக வாந்தியோ, அல்லது மயக்கத்துடன் வாந்தியோ ஏற்பட்டால் - உடனடியாக நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். அத்துடன், அவரது தலை உடலின் மேற்பகுதியுடன் சேர்த்து 30-45 பாகை உயர்த்திப் பிடித்தவாறு வைத்திருத்தல் வேண்டும். இதனை மற்றவர்களின் மடி அல்லது தலையணை மூலம் செய்யலாம்.

வைத்தியசாலையில் குறைந்தது 48 மணித்தியாலங்கள் வைத்திய கண்காணிப்பில் இருக்கவேண்டும். தலை உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதா? என்பதில் மற்றவர்கள் மறந்தாலும், நீங்கள் கவனமெடுப்பது நல்லது. மற்றவற்றை வைத்திய சேவையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மயக்கம், வாந்தி இல்லாது தலை பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையை நீங்களே செய்து கொள்ளலாம். ஆனால், அடிபட்டவர் குழந்தையோ, பெரியவரோ, அவரது பாதிக்கபட்ட இடத்தை உடனே நமது கையால் கசக்குவதும், நோவு தீர்க்கும் எந்த வித கிறீம் அல்லது ஜெல் போட்டு உரஞ்சுவதும் பாதிப்பை பலமடங்கு கூட்டும். வலி குறைந்து, வீக்கம் (swelling) குறைந்து சாதாரணநிலைக்கு வரும் காலம் கூடும். இதற்கான தீர்வு உடலின் ஏனைய பாகங்களில் உண்டாகும் பாதிப்புகளில் எடுக்கவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை முடிந்தவரை சுருக்கமாக பார்த்த பின், கூறப்படும்.

முதுகெலும்பு

முள்ளந்தண்டு விடயத்தை அனாடமி, பிஸியோலொஜி பாடங்களெல்லாம் சேர்த்து விளக்கமுற்பட்டால் இன்னொரு மகாபாரதமாகி வியாசர் கோபிப்பார். அதைவிட இன்னும் பாடங்களா? என்று நீங்கள் கோபிப்பீர்கள். முடிந்தவரை சுருக்கிக்கொள்கிறேன்.

முதுகெலும்பு, நம் கைபிடி சைஸை விட சற்று குறைவான பருமனில் உள்ள எலும்புத்துண்டுகளால் ஆனது. அவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் சிறிய பருமனில் உள்ள டிஸ்க் எனும் சற்று தடித்த தட்டு வைக்கப்பட்டு , மேலும் தசைகள்  ligament எனப்படும் நார்களால் வலுவான முதுகெலும்பாக அமைந்து உடற்கூட்டை அமைப்பதில் தனது தொழில்களில் ஒன்றாக கொண்டுள்ளது.
ஒவ்வொரு முதுகெலும்புத் துண்டுகளும் தங்களது டிஸ்க் அமைந்துள்ள பாகத்தை விட்டு பின்பக்கமாக மீதிப் பாகங்களைக்கொண்டு துவாரமொன்றை அமைக்க, அது அடுக்கப்படும்போது, துவாரங்கள் எல்லம் சேர்ந்து குழாய் அமைப்பொன்று உருவாக்கப்படுகின்றது. இக்குழாய் மண்டையோட்டின் கீழே உள்ள துளையுள் தொடர்பாயுள்ளது. 
மண்டையோட்டினுள் மூளை உள்ளது என சிறுவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மூளை இல்லாதவனுக்கும் தெரியும். 
நரம்புக்கலங்கள் பலசேர்ந்து, விசேட அமைப்புகள் பல அமையப்பெற்று மண்டையோட்டை நிரப்பிக் கொண்டிருக்கும் மூளையிலிருந்து நரம்புகளும் அவற்றின் இணைப்புக்கலங்களும் சேர்ந்து, வாழையின் நடுப்பகுதித் தண்டுபோல், மண்டையோட்டின் கீழ் துவாரத்தினூடாக - அதாவது மண்டையோட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து, நமது முதுகெலும்புக் குழாய்க்குள் நுழைந்து, இடுப்பு முள்ளந்தண்டுவரை செல்கின்றது. இது முண்ணான் (spiral cord) என பெயர் கொண்டுள்ளது. (சீரான புடலங்காய் அல்லது முருங்கைக்காய் என்று உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.)


நமது உடம்பின் அனைத்துப்பகுதியிலிருந்தும் நரம்புகள் இந்த முருங்கைக்காய் முண்ணானுடன் தொடர்பு கொள்ள, இந்த முண்ணானிலிருந்து நரம்புகள் வெளிவந்து உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல -நரம்புகளின் வலைப்பின்னல் உடம்பு முழுவதும் உள்ளது.
சூடாக உள்ளதா? குளிரா ? பூச்சி ஊர்கின்றதா? நுளம்பு (கொசு) கடிக்கின்றதா? ஊசி குத்துகின்றதா? etc போன்ற உணர்வுகள், கை, கால் அசைவு, உடம்பு அசைவு போன்றவற்றை இந்த நரம்புகள், முண்ணான், மூளை என்பன இணைந்து செய்கின்றன.
ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்பட்டால், அதற்குரிய பகுதியில் உணர்வுகள், அசைவுகள் நம்மிடமிருந்து விடைபெறும். இதையும் விட முண்ணானின் பகுதி ஒரு மட்டத்தில் பாதிக்கப்பட்டால், சிதைவடைந்தால், அந்த மட்டத்திற்கு  கீழே உள்ள உடற்பகுதி எல்லாமே இயக்கம், உணர்வு என்பவற்றை இழந்துவிடும்.

இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம். 
அடுத்து வரவிருப்பது - முதுகெலும்பு பாதிப்பு

Saturday, April 06, 2019

பகுதி 3: பதட்டம் தவிர்க்கும் மூச்சுப் பயிற்சி


சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


மூச்சுப் பயிற்சி

உங்களைச் சுற்றியுள்ள சுத்தமான இயற்கைக் காற்றை மூக்கின் மூலமாக, அவசரப்படாமல் மெதுவாக இழுங்கள். முடிந்தவை உள் இழுத்து அதேசமயத்தில் உங்கள்  இடது கை விரல்களில் பெருவிரல் நுனியையும், சுட்டுவிரல் நுனியையும் தொட்டவாறு இருந்தால் நல்லது. இழுத்த காற்றை 4-5 செக்கன்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு இதுவரைக்கும் சாதரணமாக மூடியிருந்த வாயை திறந்து, காற்றை வாய் மூலமாக வெளியிடுங்கள். அவசரப்படாமல் இதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். இதனை 4-5 தடவை செய்யலாம்.

இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்? பக்கத்தில் யார் யார் நிற்கின்றார்கள்? எல்லாமே தெரிய வரும். இப்போது நீங்கள் தளர்வு நிலைக்கு வந்திருக்கின்றீர்கள்.
இன்னுமொரு காட்சிக்கு வருவோம்.

உங்கள் வயதை நாற்பதுக்கு மேல் என எண்ணிக்கொண்டு , இக்காட்சியில் உங்களையே கதாநாயகனாக ஆக்கிக் கொள்கிறேன்.
நீங்கள் ஒரு விடயமாக அலுவலகம் ஒன்றினுள் நுழைகிறீர்கள். ஏற்கனவே, அந்த விடயமாக நான்கு தடவைகளுக்கு மேல் அங்கு போயிருக்கிறீர்கள். விடயம் சரியாவந்த பாடாயில்லை. கடைசியாக ஒரு பத்திரத்தின் மூலப்பிரதி கேட்டு அதையும் கையளித்திருக்கிறீர்கள். எட்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உங்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் இங்கு வருகின்றீர்கள்.
இப்போது குறிப்பிட்ட ஒரு உத்தியோகத்தரிடம் போய் நிற்கிறீர்கள். ஏற்கனவே பல தடவை, அவரிடம் போயிருந்தும், இப்போது அந்த உத்தியோகத்தர் உங்களிடம் 'என்ன வேண்டும்?' எனக் கேட்கிறார்.
நீங்கள் விடயத்தச் சொல்ல உத்தியோகத்தர் ஒரு கோப்பை எடுத்து, திறந்து பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே கையளித்த மூலப் பிரதியை கேட்கிறார்.
நீங்கள் ஏற்கனவே தந்துவிட்டதைச் சொல்கிறீர்கள் அவர் மறுக்கிறார். வாக்குவாதம் வலுக்கிறது. உங்களுக்கு ரென்சன் கூடி கோபம் தலைக்கேறுகின்றது. 

ஏற்கனவே உங்களுக்கு பிளட்பிரஷர் அதிகம். பிளட்பிரஷர் கூடுகின்றது. அதிக பிளட்பிரஷரால் உங்களுடைய மூளையில் உள்ள சிறிய இரத்தக்குழாய் வெடிக்கலாம். விளைவு பக்கவாத நோயாளியாக உங்களை சரிந்து விழச் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் சிலசமயம் உங்களை பிணமாகவே மாற்றலாம்.
இது எதுவும் நடக்காமல் கடகட வென அலுவலகத்தை விட்டு வெளியேறி, வீதிக்கு வந்து பேருந்து தரிப்பிடத்தில் நிற்கிறீர்கள். உங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இரண்டு பேருந்துகள் உங்களைக் கடந்து செல்கின்றன. அவை எந்த ஊருக்கு போகின்றன என்று பெயர்ப்பலகையைப் பார்க்காததால் தவறவிடுகிறீர்கள். பக்கத்தில் நிற்பவர் யார் யார் என்று கூட உணராமல், மூளைக்குள் காரியாலயத்தில் நடந்த சம்பவமே நிரம்பியிருக்கின்றது.

இந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், இனிமேலும் தினமும் இடைக்கிடை என்ன செய்ய வேண்டும்.
மூச்சுப் பயிற்சியைச் செய்கிறீர்கள்.
இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் என்பது புரிகிறது. இப்போதுதான் உணர்கிறீர்கள் உங்கள் குடையையும் இன்னுமொரு சிறிய பையையும் உத்தியோகத்தர் மேசைமேல் மறந்து வைத்துவிட்டு வந்ததை.
மூச்சு விடயத்தை விடாது செய்துகொண்டு காரியாலயத்தினுள் நுழைகின்றீர்கள். நீங்கள் செய்வது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  உத்தியோகத்தரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். அவரும் உங்களிடம் 'நான் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதோ இருக்கிறது உங்கள் பத்திரத்தின் மூலப்பிரதி, வேலைப் பழுவில் வேறு இடத்தில் வைத்துவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் உங்கள் விடயம் பூர்த்தியாக கடிதம் உங்களுக்கு வரும்' என்று புன்னகையுடன் சொல்கிறார்.  தான் எடுத்து வைத்திருந்த குடையையும், சின்ன கைப்பையையும் கொடுக்கிறார். 

நன்றி சொன்ன உங்கள் முகத்தில் புன்னகை. காரியாலயத்தில் இருந்த அனைவர் முகத்திலும் புன்னகை. அவர்களிடம் புன்னகையாலே விடைபெற்று வெளியே வருகின்றீர்கள்.
இப்போது பேருந்தில் வீட்டிற்கு பயணம் செய்யும் நீங்கள் விட்டு விட்டு தேவையான போதெல்லாம் மூச்சுப் பயிற்சி செய்கிறீர்கள். ஆறுதல் அடைகிறீர்கள்.

அந்தக் குடும்பத்தலைவியும் கணவனும் கூட காலைப் பரபரப்புக்கிடையில் வேலை செய்துகொண்டே மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்களானால் அவர்களுக்கு ஏற்பட்ட ரென்சன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த இலகுவான பயிற்சியை விட்டு விட்டு உங்களால்  நாள்முழுக்க செய்ய முடியும்போதெல்லாம் செய்யுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட சிலர் தொடர்ச்சியான ரென்சனுக்கு ஆளாகி இருப்பர். அவர்களுக்கு தூக்கமின்மை, கோபம், புலனை ரிவி பார்த்தல், பத்திரிகை வாசித்தல் போன்றவற்றில் செலுத்த முடியாமை, பசியின்மை. தொழிலில் அக்கறை காட்டாமை , சமூகத்தொடர்பை தவிர்த்தல் என்று பல பிரச்சினைகளுடன் இருப்பார்கள். மனநோயாளியான நிலைதான்.

போரிலோ அல்லது அடக்குமுறையாளர்களால் தொடர்ச்சியான சித்திரவதைக்குள்ளானவர்கள், பலாத்கார வன்புணர்வுக்கு உள்ளானவர்கள், குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது வேறு ஆட்கள் விபத்தில் அல்லது வேறு வகையில் கொல்லப்படுவதை நேரில் பார்த்தவர்கள் போன்றோர் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாவார்கள்.

இவர்களுக்கு மனோவைத்திய நிபுணர் அல்லது அது பற்றி அறிவுள்ள சாதாரண வைத்தியர் அல்லது ஆற்றுப்படுத்துவோர் என தமிழில் அழைக்கப்படும் கவுன்சிலர், பிஸியோதெறபிஸ்ட் ஆகியோர் கொண்ட குழு வைத்தியம் பார்த்து குணமடையச் செய்வர்.

மூச்சுப்பயிற்சி நீங்களாகவே செய்து உங்களுக்கே பயன் கிடைக்க கூடிய ஒரு வழி.
பயிற்சி செய்கின்றீர்கள்!
ஆறுதல் அடைகிறீர்கள்!

அடுத்து வரவிருப்பது - விபத்துகளும் காயங்களும்