நாம் இந்த விளையாட்டை மாரி காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடுவோம். மதராசப் பட்டினம் படத்திலும் இந்த விளையாட்டு விளையாடப்படுவதைப் பலர் அவதானித்திருக்கலாம்.
தாயம் என்பது தமிழரால் விளையாடப்படும் ஒரு விளையாட்டு. ஐந்துக்கு ஐந்து சதுரங்களால் அமைந்த ஒரு கோட்டுத் தளத்தில் நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் கன்னை கட்டுதல் என்றும் சொல்லப்படும்.
ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். இவற்றைத் தளத்தின் சதுரங்களினூடே பயணித்து மையத்திலிருக்கும் பழத்தை அடைந்து மீண்டு வருதலே விளயாட்டாகும். முதலில் நான்கு காய்களையும் மீண்டு கொண்டு வருபவர் வெற்றி பெறுவார்.
விளையாட்டுக் கருவி
சோகிகள்
நான்கு சோகிகளை ஒன்றாக எறிந்து பேறுகள் எடுக்கலாம்.- 1 சோகி திறந்து 3 சோகிகள் மூடி இருந்தால் அது தாயம் (1 எண்ணிக்கை)
- 2 சோகிகள் திறந்து 2 சோகிகள் மூடி இருந்தால் அது இரண்டு (2 எண்ணிக்கை)
- 3 சோகிகள் திறந்து 1 சோகி மூடி இருந்தால் அது மூன்று (3 எண்ணிக்கை)
- 4 ம் திறந்து இருந்தால் அது வெள்ளை (4 எண்ணிக்கை)
- 4 ம் மூடி இருந்தால் அது எட்டு (8 எண்ணிக்கை)
ஆட்டமிழக்காமல் இருக்க 1, 4 அல்லது 8 எறிய வேண்டும். 1, 4 அல்லது 8 எடுத்தால் தொடர்ந்து விளையாடலாம்.
2 அல்லது 3 எறிந்தால் ஆட்டமிழக்கப்படும். 2 அல்லது 3 எடுத்தால் அடுத்தவர் விளையாடுவார்.
காய்கள்
ஒவ்வொருவரும் நான்கு காய்களை வைத்திருக்க வேண்டும்.மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள, வெவ்வேறு நிறங்களில், அல்லது வடிவங்களில் அல்லது உருவங்களில் இவை இருக்க வேண்டும்.
ஊரி, சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு விதைகள் என்பவை சில உதாரணங்கள்.
நகர்வுகள்
எண்ணிக்கை அளவுக்குக் காய்கள் நகர்த்தப்படலாம். ஒரு எண்ணிக்கை ஒரு காய்க்கு ஒரு முறை மட்டும் நகர்த்தப் பாவிக்கப்படும்.
விளையாட்டு ஆரம்பத்தில், இரு பகுதியும் தமது காய்களைத் தமது இல்லத்தில் (மனைக்கு வெளியே) வைத்திருப்பார்கள்.
கோட்டிற்குள் செல்வதற்குத் தாயம் அவசியம். இது முழுக்கு என்று சொல்லப்படும். முழுகிய பின்னர் எல்லா எறிவுகளுக்கும் காயை நகர்த்த முடியும்.
உங்கள் காயைத் தந்திரமாக நகர்த்துவதற்கு உங்கள் எறிதல்களைப் பொருத்தமாகத் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.
ஒருவர் பக்கம் இருக்கும் நடுப் பெட்டியிலிருந்து (மனை) தொடங்கி வலஞ்சுழியாகச் சென்று, வெளிப் பெட்டிகளால் சுற்றி மீண்டும் உங்கள் மனைக்கு வரும்போது, மனைக்குட் செல்லாமல் உட் பெட்டிகளுக்குச் சென்று எல்லாப் பெட்டிகளினூடும் சுற்றி நகர்ந்து பழத்தை அடைய வேண்டும்.
பழுத்த காய்களைத் தாயம் மூலம் முதலில் இறக்கியவர் வென்றவராவார்.
உங்கள் நகர்வு முடிந்த்ததும் அடுத்தவர் விளையாடலாம்.
இறுக்கமும் வெட்டும்
கோட்டில் நுழைந்த பின், தடைகள் (எதிராளிகளின் காய்கள்) இல்லா விட்டால் எல்லா எறிதல்களும் நகர்வுக்குப் பயன்படும். ஒரு எண்ணிக்கை நகர்வின் ,முடிவிடத்தில் அடுத்தவர் காய் இருந்தால், அங்கே இருந்தவர் வெட்டப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார். ஒரு நகர்வின் முடிவிடத்திற்கு முன்பே
அடுத்தவர் காய் இருந்தால், நகர்வு தடுக்கப்படும். இது இறுக்கு நிலை எனப்படும். ஆனால், அடுத்தவர் காய், மனைகளில் இருந்தால் வெட்டும் இல்லை, தடையும் இல்லை. மனைகளிலும், பழத்திலும் எல்லோரும் பாதுகாப்பாக ஒன்றாக இருக்கலாம்.
வெற்றி
பழத்தை அடைந்து முதலில் தனது காய்களை வீட்டுக்கு இறக்குபவர் அல்லது இறக்கும் சோடி வெற்றி பெறும்.சில மேலதிக சட்டங்கள்
- எதிராளியை வெட்ட முன்னர் எந்தக் காயும் பழுக்க முடியாது
- ஒரு காய் வெட்டினால் மற்றக் காய்கள் வெட்ட வேண்டிய அவசியம் இல்லை
- கன்னைகள் ஒருவரை ஒருவர் வெட்ட முடியாது
- கன்னைகளில் ஒருவர் தனது பழங்களை இறக்கிய பின்னர், மற்றவருக்காக தனது முறை விளயாட்டை விளையாடலாம்
ஆண்ட்றோயிட் இல் தாயம்
இந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரயோகம் இங்கே காணப்படுகிறது.
Thayam TypeTamil
https://play.google.com/store/apps/developer?id=Kandiah%20Jeyapalasingham&hl=en
Thayam TypeTamil
https://play.google.com/store/apps/developer?id=Kandiah%20Jeyapalasingham&hl=en
2 comments:
இந்த விளையாட்டிற்கு தேய்த்த புளியங்கொட்டைகள் (கால்பகுதி) அவசியம் என்று நினைக்கிறேன்
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இது போன்ற மேலதிக தகவல்களுன் இந்தப் பக்கத்தை மெருகூட்டுகிறேன்.
Post a Comment