Monday, October 09, 2006

விஜய் வளர்கிறாரா?

நடிகர் விஜயின் வளர்ச்சிக்குச் சில வரிகள்.

அண்மைக் காலங்களில் நடிகர் விஜயின் படங்களை எல்லோரும் விரும்பிப் பார்க்குமளவிற்கு மக்கள் மத்தியில் அவை பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. குழந்தைகள் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக விஜயின் படங்களும் அவரது பாத்திரங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பும் ஒரு நடிகராக அவர் வளர்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே. நல்ல திசையில் அவரது தொழில்விருத்தி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய விடயமும் உள்ளது.

அண்மையில் அவரது ஆதி, பகவதி, சிவகாசி, மதுர போன்ற படங்களை பார்க்க நேர்ந்தது. படங்களில் அவர் வழக்கம் போலவே நல்ல மனிதனாக வந்து நல்லது செய்கிறார். பாடல்கள், நடனம் என்று குழந்தைகள் விரும்பும் அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவர் ஒரு மகா தவறைத் தனக்கும் தெரியாமல் இப் படங்களில் செய்திருப்பது குழந்தைகளின் செயல் மூலம் அவதானிக்கப்படக் கூடியதாக இருந்தது. குழந்தைகள் சண்டைக் காட்சிகளை ரசிக்கிறார்கள். ஆனால் மேற் சொன்ன படங்களில் இருப்பவை, சண்டைக் காட்சிகள் அல்ல கொலைக் காட்சிகள். அவற்றைக் காணக் குழந்தைகள் கிலி கொள்கிறார்கள், வெறுக்கிறார்கள், ஓடி ஒளிக்கிறார்கள். அவ்வளவுக்குப் பயங்கரமான காட்சிகள் அந்தச் சண்டைகள். குழந்தைகளின் அபிமான நடிகர் குழந்தைகளின் மனோ நிலையைப் புரிந்து சண்டை காட்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். வேறு பல படங்களிலும் மகா பயங்கரமான கொலைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால், அந்தப் படங்களின் நடிகர்கள் விஜய் போல் குழந்தைகளின் அபிமானம் பெற்றவர்களல்ல. சூர்யா சமீப காலமாக அந்த இடத்தை நெருங்கி வருகிறார், அவரும் இந்தக் கொலைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தக் குலை நடுங்க வைக்கும் கொலைப் பயங்கரங்களை விஜய் தன் படங்களில் இருந்து நீக்கா விட்டால் அவர் ஒரு ரசிகர் பட்டாளத்தை மிக மலிவாக இழக்கப் போகிறார். இன்றைய குழந்தைகள் தான் அவரை நாளை உச்ச நடிகர் என்ற தானத்திற்கு ஏற்றி வைக்கப் போகிறவர்கள் என்பதை விஜய் கருத்திற் கொண்டு தன் படங்களையும் காட்சிகளையும் தெரிவு செய்ய வேண்டும். காசாசையில், தயாரிப்பளர்களும், இயக்குனர்களும் எப்படிப் பட்ட கதைகளையும் காட்சிகளையும் கொண்டு வருவார்கள். அதைத் தணிக்கை செய்ய வேண்டியது முன்னணிக் கதாநாயகனின் பொறுப்பு. வளரும் நாயகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதோடு மட்டுமில்லாமல், குழந்தைகள் பார்க்கக் கூடிய படங்களும் வர வேண்டும் என்ற அற்ப ஆசையில் ஒரு எழுத்து.

Wednesday, October 04, 2006

கணினியில் தமிழ் - பகுதி 7-1- - -2- - -3- - -4- - -5- - -6-கணினியில் தமிழ் - பகுதி 7

இப்படியாகக் கணினியில் தமிழ் தவழத் தொடங்கி, எழுந்து நடை பயின்று, இன்று ஒருங்குறியாக நிமிர்ந்து நிற்கிறது. பற்பல இணையத் தளங்களும் மென் பொருட்களும் தேடல் இயந்திரங்களும் இப்பொழுது ஒருங்குறி மூலம் மிகப் பிரபலமாகி விட்டன. ஒருங்குறி எழுத்துருக்களை இப்பொழுது கணினியில் அடிப்படையிலேயே சேர்த்தும் விட்டார்கள். இதனால் எல்லோரும் இன்புற்றிருக்க இலகுவாகக் கோலோச்சுகிறது ஒருங்குறி.

இணையக் கடைகள், பிறரின் கணினிகள் போன்றவற்றில் ஈ-கலப்பையோ அல்லது கீ-மானோ இல்லாதவிடத்து, சுடச் சுட ஒருங்குறியில் அல்லது பாமினியில் தமிழை அடிப்பதற்கு உதவியாக திரு. சுரதா யாழ்வாணன் , ஈழம் எழுதி என்ற கருவியையும் இணையத்தில் தந்துளார். அதன் தொடுப்பைப் பின்னாலே தருகிறேன்.

ஒருங்குறித் தமிழ் இப்பொழுது எதிலும், ஏன் எமது வலைப் பூக்களிலுங் கூடக் கோலோச்சுகின்ற போதும், ஆங்காங்கே பல வல்லுனர்கள் கணினியில் தமிழின் இருப்பைச் செம்மை செய்ய அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் கூட டாப் (TAB), டியூன் (TUNE) என்றெல்லாம் பல முனைகளில் ஆய்வுகள் நடக்கின்றன. எல்லாம் நன்மையைத் தமிழுக்கும் தமிழருக்கும் தரட்டும்.

இதுவரை என் தொடரைத் தொடர்ந்து வந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இதில் இருக்கும் குறைகள், தவறுகள் என்பவற்றை தயவு செய்து மன்னியுங்கள். அப்படியே, உங்கள் கருத்துக்களை எனக்குப் பின்னூட்டமாகவோ தனி மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள்.

மீண்டும் நன்றி, வணக்கம்.


பிற் குறிப்பு:

மேலதிகமாக வாசிக்க விரும்புபவர்களுக்காக சில இணையத் தளங்களின் முகவரிகளைக் கீழே தருகிறேன். இவை தவிர மேலும் முகவரிகள் தெரிந்தவர்கள் இங்கே அவற்றை இடுங்கள்.

கீ-மான்:: keyman
ஈ-கலப்பை:: http://thamizha.com/modules/mydownloads
ஈழம் எழுதி :: http://www.suratha.com/eelam.htm
ஒருங்குறி :: http://unicode.org/faq/tamil.html
தகுதரம் :: http://www.tscii.org/
தமிழா :: http://thamizha.com/
விக்கிபீடியா :: http://ta.wikipedia.org
தமிழ்.நெட் :: http://www.tamil.net/
அகத்தியர் மடற்குழு :: http://groups.yahoo.com/group/agathiyar/
அகத்தியர் ஆவணம் :: http://www.treasurehouseofagathiyar.net/
தமிழாராய்ச்சி மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil_araichchi
தமிழாராய்ச்சி :: http://www.araichchi.net/
மெய்கண்டார் மடற்குழு :: http://groups.yahoo.com/group/meykandar/
தமிழுலகம் மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil-ulagam/
உத்தமம் :: http://www.infitt.org/
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் :: http://www.tamilvu.org/
தமிழ் மின்னூலகம் :: http://tamilelibrary.org/
மதுரைத் திட்டம் :: http://www.tamil.net/projectmadurai/
இதர :: http://www.geocities.com/athens/7444/


-1- - -2- - -3- - -4- - -5- - -6-

Tuesday, October 03, 2006

கணினியில் தமிழ் - பகுதி 6-1- - -2- - -3- - -4- - -5- - -7-பகுதி 6

பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, “இயங்கு எழுத்துரு” (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை ஒரு தனியார் நிறுவனம் (bitstream) தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத்தளங்களைப் பார்வையிட முடிந்தது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன.

இவறிற்கெல்லாம் முடிவு கட்டத் தான் நியம வேலையில் பலரும் மூழ்கினர்.
இதிலொன்று தகுதரம். ஆயினும் தகுதரத்திற்கும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி (unicode.org) என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தயும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து நியமங்களையும் அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி நியமம் உருப் பெற்றது. இது தகுதரத்தின் நியமத்தை ஒத்திருக்கவில்லை.

இந்தத் தறுவாயில், தமிழக அரசு தமிழின் நியமம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரச ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு நியமச் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. இதை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் அங்கீகரிக்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி நியமமே எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்டு இயல்பாகவே பாவனைக்கும் வந்து விட்டது. தமிழ்நெட் என்னும் தலைப்பில் வருடந்தோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. உத்தமம் என்ற ஒரு அமைப்பும் இவற்றோடு சம்பந்தமுடையது.

முரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, கீமான் (keyman) என்னும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயயரிக்கப் பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்தக் கீமான் மூலம் தமிழை அடிப்பதும் இலகுவாக்கம் பெற்றது. இதைப் பாவித்து ஈ-கலப்பை என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப் பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், நாங்கள் அடிப்பதற்கு வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது பாமினியா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் இங்கே உண்டு.

தகுதரம், ஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாளாந்தப் பாவனையிலும் பூத்துக் குலுங்குகிறது.

தமிழ்க் கணினி அறிஞர்களையும் தமிழறிஞர்கள் பலரையும் ஒன்று பட வைத்த பெருமை “தமிழ்.நெட்” க்கு உரியது. ஒன்று பட்டது மட்டுமல்ல பல ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளுக்கும் இது வடிகாலாக இருந்தது. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் ஆக்க பூர்வமாகத் தனித் தனியே பிரிந்து “தமிழ்” என்ற நோக்கைக் கை விடாமல் இன்றும் இயங்குவது கண்கூடு.

தமிழ்.நெட் இல் ஆரம்ப காலம் தொட்டே மிகப் பெரும் பங்காற்றியவர் மலேசிய வைத்தியக் கலாநிதி ஜெயபாரதி அவர்கள். தமிழில் எல்லாத் துறைகளையும் பற்றிச் சரளமாக எழுதி வந்தார். மேலும் அவர் அகத்தியர் என்ற ஒரு யாஹூ மடலாடற் குழுவை ஆரம்பித்து இன்றும் அயராது அரும் பெரும் விடயங்களைப் பற்றி அங்கே எழுதி வருகின்றார். அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்பது அவருடைய படைப்புகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். கணினியில் அவரின் தமிழ்த் தொண்டு இன்றும் தொடர்கிறது. இணையம் (Internet), வைய விரி வலை (World wide web) போன்ற தமிழ்ச் சொற்களை எங்களுக்குத் தந்தவர் இவரே.

இது போல் தமிழுலகம், தமிழாராய்ச்சி போன்ற பல குழுக்களும் இப்பொழுது இருக்கின்றன. மேலும், சுமேருவில் வாழ்ந்தவர்கள் தமிழரென்று சுமேருத் தமிழ் பற்றியும் ஆதாரங்களோடு எழுதி வந்தவர் கலாநிதி லோகநாதன் அவர்கள். அவரது எழுத்துக்களை மெய்கண்டார் என்னும் மடலாடற் குழுவில் காணலாம். பல மடலாடற்குழுக்கள் ஒருங்குறியிலும், பல இன்னமும் தகுதரத்தோடும் தகுதர ஆவரங்கால் எழுத்துருவோடும் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றன.

… அடுத்த பகுதியுடன் முடியும்.


-1- - -2- - -3- - -4- - -5- - -7-

Sunday, October 01, 2006

கணினியில் தமிழ் - பகுதி 5-1- - -2- - -3- - -4- - -6- - -7-யாஹூ மடலாடற் குழுக்களுக் கெல்லாம் முன்பே அது தோன்றியது. முரசு அறிமுகமான காலத்தில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலாப்பிள்ளை என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (www.tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடல்களைச் செய்தனர். முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. முரசு அஞ்சலோடு யூடோராவில் வெற்றிகரமாக அமுலுக்கு வந்த எழுத்துரு ஆவரங்கால்.

உலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுனர்கள், தமிழ் வல்லுனர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. கணினியில் தமிழ் - பகுதி 4 இல் குறிப்பிடப் பட்டவர்களும், அதில் இருக்கும் பின்னூட்டில் குறிப்பிடப் பட்டிருப்பவர்களும் இன்னும் பலரும் இதில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியம (standard) நிலையைச் சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரயாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துருக்களை நியமப் படுத்த முடிந்தது. ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுற்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை.

ஆவரங்கால் எழுத்துருவும் முரசு விசைப்பலகையும் பாவனைக்கு வந்ததும், பலரும் ஆவரங்கால் எழுத்துருவைத் தங்கள் கணினியில் நிறுவி வைத்திருந்தனர். அத்தோடு பல இணையத் தளங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு வந்து கொண்டேயிருந்தன. தகுதரம் வந்து இணைய வேலைகளை இலகுவாக்கியது.
இவை தவிர தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணையத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கின. விகடன், குமுதம், வீரகேசரி மற்றும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் பிரபலமாகின. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவை இறக்கம் செய்து கொண்டால் போதும்.

………………… தொடரும்


-1- - -2- - -3- - -4- - -6- - -7-