Tuesday, November 22, 2016

யார் அசுரர்

அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்களைத் தமிழரின் முப்பாட்டன், பூட்டன்  என்று சிலர் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?

எடுத்துக்காட்டாக நாம் தெரிந்து வைத்திருக்கும் இரண்டு அசுரர்களைப் பார்ப்போம்.

இரணியன்: பிரகலாதனின் தந்தை. பிரகலாதன் அசுரன் இல்லை ஆனால் அவன் தந்தை அசுரன்.
கம்சன்: கண்ணனின் மாமன்.

இப்படியாக ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தவர்களைடையே அசுரரும் தேவரும் இருந்திருக்கிறார்கள். நல்லவரும் கெட்டவரும் அவர்களிடையே இருந்தார்கள். சண்டை போட்டார்கள் செத்தார்கள். கெட்டவர்கள் அழிந்தார்கள், அவர்கள் உறவினரே அசுரரை அழித்தார்கள்.
இப்படி இருக்கும் போது அசுரர்களாகக் காட்டப்படுபவர்கள் தமிழருக்கு எப்படி உறவாகலாம்? அப்படி உறவானால், கண்ணனும் மற்றையோரும் நம் உறவே?

இப்பொழுதும் எம்மிடையே காட்டிக் கொடுப்போரும், துரோகம் செய்வோரும் இருக்கிறார்கள் தானே? இவர்களைப் பிற்காலச் சந்ததிகள் தமிழர் என்று பாசத்துடன் உரிமை கோர வேண்டுமா?

ஆக மொத்தத்தில் அசுரர்களும் அவரை அழித்த மற்றவர்களும் நமக்கு உறவுமல்ல உரித்துமல்ல.

அசுரரை உறவென்று கொள்ளோம். அவர்களை விட்டு விலகி இருப்போம்.

Saturday, October 29, 2016

மகனின் பேச்சு

எமது மகன் புதிரன் பல்கலைக் கழகத்தில் தத்துவம் பயிலும் மாணவன்.
அவர் சாயிபாபா நிலையத்தில் ”உள் அமைதி” பற்றி ஆற்றும் ஆங்கில உரையின்  ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.

ஈன்ற பொழுது  பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோனெனக் கேட்ட தாய்


மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்

Inner Peace - Bro Puthi Jey
Saturday, October 22, 2016

வாத்துப் பெயர்வு

வடக்காயும் தெற்காயும்
வரிசைகளால் கூம்பமைத்து
ஆண்டிற்கு இரண்டு தரம்
இடம்பெயரும் வாத்துகளே

தொலைநோக்குக் காலநிலைக்
கருவிகள்தாம் நீவீரோ

எதிர்காலம் கணித்துவிடும்
சாத்திரிமார் உம் உறவோ

முக்காலம் உணர்ந்திருந்த
முனிவர்களும் உம் உறவோ

எப்போதும் புலம் பெயரும்
அகதிகளும் உம் போலோ

எப்படித்தான் நீரறிவிர்
வரப்போகும் மாறுதலை

பறப்பதிலும் ஓர் அழகு
அதில் இருக்கும் நேர்த்தி
வியூகமாய்ப் பறப்பதிலும்
புதைந்திருக்கும் அறிவு

உம்மறிவு எமக்கிருந்தால்
பல அழிவு தவிர்த்திருப்போம்
அவரவர்க்கு அதுவதுவே
பகர்வது மா உண்மையேSaturday, September 24, 2016

பாம்பும் ஏணியும்


வசதியாக வாழ்வதற்கும்
முன்னேற்றி வைப்பதற்கும்
எம்பி எம்பித் தூக்குதற்கும்
ஏணியாக எழுந்து நிற்கும்

குட்டிக் குனிவிக்கவும்
முன்னேற்ற முளைகளைக்
கிள்ளி அழிவிக்கவும்
விடமூச்சுப் பாம்பாக

பலமுகங்கள் கொண்டதுவே

சாதகங்கள் பலருக்கும்
பாதகங்கள் பலருக்கும்
வாரிக் கொடுக்குமிந்த
வலிமிக்க சாதியது

பள்ளியிலும் வேலையிலும்
மற்றும்பல இடங்களிலும்
பலபேரைத் தூக்கிவிடும்
பலபேரைத் தாழ்த்திவிடும்

படித்திருந்தும் அறிவின்றிப்
பின்பற்றுங் கற்றோரும்
படிப்பறிவே இல்லாத
பாமர மக்களும்

உரம்போட்டுச் செழிப்பிக்கும்
இம்மக்கள் தூ நிலையோர்
உலகதர முன்னேற்றம்
ஒருபோதுங் காணாரே

மானக் கேடு
வெட்கக் கேடு
நிறுத்தாமற்
போராடு

Saturday, September 10, 2016

தமிழின் கொடைஆங்கிலத்திற்கு ஒரு இட்டுக்கட்டு. (ஆங்கிலத்திற்கே? கொடுமை!)

தமிழர்கள் மத்தியில், ஆங்கிலத்தில் வார்த்தைகளை எழுத முடியாத அளவிற்கு ஆங்கில மொழிக்கு ஒரு குறை ஏற்பட்டுள்ளது.
அதனால் தமிழர்கள் தமிழ் மொழியில் ஆங்கிலத்தை எழுதி ஆங்கில மொழிக்குக் கை கொடுத்து வருகிறார்கள்.
பத்திரிகைகள், சஞ்சிகைகள் என  எங்கும் இந்தக் கொடை கண்கூடாகத் தெரிகிறது.
ஆங்கில வார்த்தைகளை இலகுவாக எழுத இப்பொழுது தமிழ் அரிச்சுவடி உதவுகிறது.
ஒரு சிறு உதாரணம்:
டபுள் ஹீரோயின்ஸுடன் டூயட்

முன்னொரு காலத்தில், சமசுக்கிருதத்திற்கும் கொடை வழங்கியது நம் தமிழே.

கொடையிலும் தமிழ் தான் முதலிடம்.

வாழ்க கொடுக்கும் தமிழர்கள்.

Wednesday, June 22, 2016

ஒட்டாவா தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா 2016

ஒட்டாவா தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவில் பதிந்த காட்சிகள்.


அனைத்துக் காட்சிகளும்

Sunday, June 12, 2016

பாரதியார் சில துளிகள்

பாரதி வாழ்வு


இற்றைக்கு நூற்றிமுப்பது
ஆண்டுகள் முன்பு
எட்டயபுரத்தில் பிறந்திருந்தான்
ஏறு போலொருவன்
இயற்பெயராய் அவனுக்கிட்டார்
சுப்பிரமணியன்
தமிழ்ப்புலமை கண்டு அரசினிட்டான்
பாரதியென்று

இள வயதிற் புகழடைந்த
பாரதிகண்டு
மனம் புழுங்கி மிகவே
எரிந்திருந்தான்
காந்திமதிநாதன்

மட்டந் தட்டப் போட்டிக்குக்
கூவியழைத்தான்
ஈற் றடிகொடுத்து
வெண்பாவொன்று
பாடச் சொன்னான்
பாரதியைப் பாடச் சொன்னான்.

ஈற்றடியாய்க் காந்திமதி
நாதன் கொடுத்தான்
பாரதிசின்னப் பயலென்று
முடிக்கச் சொன்னான்
வெண்பாவை
முடிக்கச்சொன்னான்
காரது எனப் பாரதியும்
தொடங்கிப் பாடியே
போட்டிவைத்த காந்திமதி நாதனையே
அதி சின்னப்பயலென்று
மடக்கி வைத்தான் - அன்று
மடக்கிவைத்தான்

பொதுநிகழ்வில் பங்கேற்றார்
பாரதி ஒருநாள்- அங்கே
வந்த வெள்ளை மாதொருத்தி
கேள்வி தொடுத்தாள்
நிகழ்ச்சிக்குன் மனைவியிங்கு
ஏன் வரவில்லை - உன்
வலது கைய விட்டு விட்டு
நீ வரலாமா? - என்ற 
கேள்வியினால்
ஞானம் பெற்ற அன்றிலிருந்தே
பெண் விடுதலையைத் தீவிரமாய்
உரக்கவே சொன்னான்

சமத்துவமே மகத்துவமெனப்
போற்றி வாழ்ந்தான்
பின்பற்றி வாழ்ந்தான்
ஏற்றத் தாழ்வு போற்றுவோரைச்
சாடிப் பாடினான் - அதை
நீக்கப்பாடினான்
அதற்கொரு பதமாய்
வெள்ளை நிறத்தொரு பூனை

பறவை மிருகம் மரங்கள் நிறங்கள்
அழகை வியந்தான் - அவை
பேணிக் காக்க வேண்டி நின்று
பாடியே வைத்தான் - பாரதி
பாடியதே இந்தச்
சின்னங்சிறு குருவி போலே

தன் திறமை  தன் நிலைமை
நன்கறிந்த பாரதி
நயமாகப் பாடிவைத்தான்
நல்லதோர் வீணை

பன்மொழியில் அவர்க்கிருந்த
புலமையினாலே - அவை
அனைத்திலுமே சிறந்ததெங்கள்
தமிழ்மொழியென்று
பாரறியப் புகழ்ந்து நிற்கும்
பாவது
யாமறிந்த
எனத்தொடங்கும்
பாவது

பாரதியின் பாடல்களைச்
சமகாலத்தில்
பலவிடத்தில் பாடிவந்தார்
பாடகர் ஒருவர்
அறிந்திராத பாரதியின்
பழக்கம் கிடைத்ததும் - தன்
பெயரைக் கூட
மாற்றி விட்டார்
சுப்புரத்தினம் - கனக
சுப்புரத்தினம்
தாசன் என்றே தனை அழைத்த
அந்த இரத்தினம் - பாரதி
தாசன் என்று புகழ்பூத்த
புரட்சிக்கவிஞன்

ஆதி அந்தம் இல்லாத
தமிழ் மொழி தன்னை
மறைந்து போகக் கூடுமென்று
சொன்ன மூடரை
பேதை என்று அறைந்து
வடித்த கவிதை தன்னை
பொருள் விளங்கா
மக்கள் சிலர்
பொய்ப் பரப்புச்
செய்வதனை
விழிப்புணர்வோ
டிடித்த்திடுவீர்

முப்பத்தெட்டாம் வயதினிலே
விபத்து நடந்ததே - ஒரு
விபத்து நடந்ததே
யானை ஒன்று பாரதியை
தாக்கி வீழ்த்தியே -கொஞ்சம்
காயப்படுத்தவே
அதிலிருந்து தேறி வந்தார்
ஆர்வமாகப் பணிகள் செய்தார்

காலமதைக் காலால்
உதைக்கும் துணிவு மிக்கவர் -அவர்
துணிவு மிக்கவர்

யானை தாக்கி மாளவில்லை
அறிஞன் பாரதி
வேறு நோயுற்றுக்
காலமானான் கவிஞன்
பாரதி
                                                                            
அகிலம் போற்றும் நல்ல கவி
தமிழ்மொழிக்குப் புதிய ஒளி
விடிவு வேண்டி வேட்கை கொண்ட
வீரக் கவி சாய்ந்ததுவே
வீழ்ந்த வயதென்னவோ
வெறும் முப்பத்து
ஒன்பதே

------- ஒரு பாடசாலை நிகழ்ச்சிக்காக எழுதியது, சில மாற்றங்களுடன், இங்கே.

Saturday, April 02, 2016

தாரை தப்பட்டை - படம்


பாலாவின் படங்கள் ஆலையிற் சிக்கிய கரும்பாக மனங்களைக் கசக்கிப் பிழிந்து, வடுக்கள் மாறப் பல நாள் எடுக்கும் படைப்புகள். முதல் இரண்டு மூன்று படங்களுடன், பார்ப்பது எனக்கு உகந்ததல்ல என்று முடிவெடுத்து நிறுத்தி வைத்திருந்தேன்.

ஆர்வத்தை அடக்க முடியாமல், தாரை தப்பட்டை படம், சும்மா மேலோட்டமாகப் பார்ப்போம், கசக்கிப் பிழியும் ஆலை தயாரகும் போது நிறுத்துவோம் என்றெண்ணிப் பார்க்கத் தொடங்கினேன். கொஞ்சம் பார்க்கக் கூடியதாக இருந்தது, ஆகவே பார்த்து முடித்து விட்டேன். பார்த்து ஒரு கிழமையாகியும் அதை நினைத்து எழுத வைக்கும் திறமை, பாலா தான்.

காலங் காலமாகத் தமிழ்க் கலைகளைக் கட்டிக் காத்து வந்த விளிம்பு நிலை மக்களின் பாடு தான் களம். வெற்றி. வாழ்த்துக்கள் பாலா.

அருகி வருங் கலைகளில் தவிலையும் குழலையும் இணைத்திருந்தது ஏனோ?

நாயகன், நாயகி, மாமனார், இசை (இசைராசாவே பணிவான வணக்கம்), இயக்கம் எல்லாமே சிறப்பு.
இசைக் கோர்வை மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. ”ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே ....” ஒரு மீள்பதிவாக இருந்தும், மிக அருமை. அடுத்த ”இடரினும் ..” மிக மிக அருமை. மிகச் செறிவான பொருள். சௌந்தரராசனைத் தேட வைக்கும் பாடல். அவர் இருந்து பாடியிருந்தால், நிலை வேறு. இசையில் இன்னொரு இளையராசாவின் பாடல் ஞாபகம் வருகிறதே?

படத்தின் இறுதிக் கட்டம் நாயகனின் வீரத்தால் நகர்கிறது. இது பாலாவின் பாணியல்ல இருந்தும், ஆலை வாய்ப்பட இருந்த கரும்பைக் காப்பாற்றியிருக்கிறார். இவ்வளவு தூரம் இறங்கிய பாலா, இன்னுங் கொஞ்சம் மாற்றி முடித்திருக்கலாம்.

விசில் சைகை தடைப்படுவதையும், குடிபோதையையும் காரணமாகக் கொண்டு அறுவைப் (கொலைப்) பிரசவத்தைத் தவிர்த்து, நாயகன், நாயகியைக் காப்பாற்றி மீட்டிருக்க வைத்திருக்கலாம். அப்படி ஒரு வாழ்வு கொடுத்தால், இந்தியப் பண்பாடென்னாவது என்று பயந்து விட்டார் போலும் பாலா.

Saturday, March 05, 2016

கட்சி காக்கும் பூதங்கள்


கட்சி காக்கும் பூதங்கள்

புதையல் காக்கும்
பூதங் கள்போல் 
அரச கட்சிகள் 
கட்டிக் காக்கும் 
தலையாரிகள்

அவரிலிருந்து காப்பாற்ற
முடியா வேளை 
முழைக்கும் புதுசா
புதிய புதிய கட்சிகள்

பூதங் காத்த கட்சிகள்
புதையல் ஆகிப்
பின்னர் பாட்டன்
சொத்தென் றாகி
காலச் சக்கரம்
சுழன்று வரும்

புதிய கட்சிகள்
எப்படிப் போகும்
முதலிலிருந்து
மீண்டுந் தொடங்கும்.
காலம் முழுக்க
முதல் கல்லே 
தாண்டா திருந்து
ஏமாறும் அறியா 
மக்கள் நாமே 

எத்தனை கூட்டு
எத்தனை பிரிவு
அத்தனையும்
அடிக்கடி பார்த்தும்
நம்பிக்கையுடன் 
நம் மக்கள்

பாடப் புத்தகம் 
பல முறை எடுத்துப் 
படிக்கத் துவங்கி
முதல் பக்கம்
மட்டும் படித்த
மாணாக்கன் போல

இன்றும் நாம் 

போற்றிக் கவி

என்னைப் போற்றிக்
கவி பாடக் 
கேட்டார் நண்பர்
என்னிடமே

என்னைப் பற்றி
எழுதக் கூடும்
போற்றி எழுத
எப்படி முடியும்

உமது திறன்கள்
உமக்குத் தெரியும்
கவிதை எழுத்தும்
உம்மால் முடியும்
எழுதித் தாரும்
விரைவாய் நீரும்

என்னில் எனக்குத்
தெரிவ தெல்லாம்
குற்றங் குறைகள்
மட்டுந் தான்

அவற்றை எழுத்தில்
வடித்தாலோ
அவமா னந்தான்
வரவாகும்

போற்றப் படவே
நானொன்றும்
போதனை சொன்ன
புத்தனில்லை
போதியில் ஞானம்
கிட்டவில்லை

இதெல்லாம் உமக்கு
வீண்வேலை
விரைந்து நீரும்

சென்றிடுவீர்

Sunday, February 28, 2016

தாயம் விளையாட்டு

நாம் இந்த விளையாட்டை மாரி காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடுவோம். மதராசப் பட்டினம் படத்திலும் இந்த விளையாட்டு விளையாடப்படுவதைப் பலர் அவதானித்திருக்கலாம்.

தாயம் என்பது தமிழரால் விளையாடப்படும் ஒரு விளையாட்டு. ஐந்துக்கு ஐந்து சதுரங்களால் அமைந்த ஒரு கோட்டுத் தளத்தில் நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் கன்னை கட்டுதல் என்றும் சொல்லப்படும்.ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். இவற்றைத் தளத்தின் சதுரங்களினூடே பயணித்து மையத்திலிருக்கும் பழத்தை அடைந்து மீண்டு வருதலே விளயாட்டாகும். முதலில் நான்கு காய்களையும் மீண்டு கொண்டு வருபவர் வெற்றி பெறுவார்.

விளையாட்டுக் கருவி

சோகிகள்

நான்கு சோகிகளை ஒன்றாக எறிந்து பேறுகள் எடுக்கலாம்.
  • 1 சோகி திறந்து 3 சோகிகள் மூடி இருந்தால் அது தாயம் (1 எண்ணிக்கை)
  • 2 சோகிகள் திறந்து 2 சோகிகள் மூடி இருந்தால் அது இரண்டு (2 எண்ணிக்கை)
  • 3 சோகிகள் திறந்து 1 சோகி மூடி இருந்தால் அது மூன்று (3 எண்ணிக்கை)
  • 4 ம் திறந்து இருந்தால் அது வெள்ளை (4 எண்ணிக்கை)
  • 4 ம் மூடி இருந்தால் அது எட்டு (8 எண்ணிக்கை)

ஆட்டமிழக்காமல் இருக்க 1, 4 அல்லது 8 எறிய வேண்டும். 1, 4 அல்லது  8 எடுத்தால் தொடர்ந்து விளையாடலாம்.
2 அல்லது 3 எறிந்தால் ஆட்டமிழக்கப்படும். 2 அல்லது  3 எடுத்தால் அடுத்தவர் விளையாடுவார்.

காய்கள்

ஒவ்வொருவரும் நான்கு காய்களை வைத்திருக்க வேண்டும்.
மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள, வெவ்வேறு நிறங்களில், அல்லது வடிவங்களில் அல்லது உருவங்களில் இவை இருக்க வேண்டும்.
ஊரி, சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு விதைகள் என்பவை சில உதாரணங்கள்.

நகர்வுகள்எண்ணிக்கை அளவுக்குக் காய்கள் நகர்த்தப்படலாம். ஒரு எண்ணிக்கை ஒரு காய்க்கு ஒரு முறை மட்டும் நகர்த்தப் பாவிக்கப்படும்.

விளையாட்டு ஆரம்பத்தில், இரு பகுதியும் தமது காய்களைத் தமது இல்லத்தில் (மனைக்கு வெளியே) வைத்திருப்பார்கள்.

கோட்டிற்குள் செல்வதற்குத் தாயம் அவசியம். இது முழுக்கு என்று சொல்லப்படும். முழுகிய பின்னர் எல்லா எறிவுகளுக்கும் காயை நகர்த்த முடியும்.

உங்கள் காயைத் தந்திரமாக நகர்த்துவதற்கு உங்கள் எறிதல்களைப் பொருத்தமாகத் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒருவர் பக்கம் இருக்கும் நடுப் பெட்டியிலிருந்து (மனை)  தொடங்கி வலஞ்சுழியாகச் சென்று, வெளிப் பெட்டிகளால் சுற்றி மீண்டும் உங்கள் மனைக்கு வரும்போது, மனைக்குட் செல்லாமல் உட் பெட்டிகளுக்குச் சென்று எல்லாப் பெட்டிகளினூடும் சுற்றி நகர்ந்து  பழத்தை அடைய வேண்டும்.

பழுத்த காய்களைத் தாயம் மூலம் முதலில் இறக்கியவர் வென்றவராவார்.

உங்கள் நகர்வு முடிந்த்ததும் அடுத்தவர் விளையாடலாம்.

இறுக்கமும் வெட்டும்

கோட்டில் நுழைந்த பின், தடைகள் (எதிராளிகளின் காய்கள்) இல்லா விட்டால் எல்லா எறிதல்களும் நகர்வுக்குப் பயன்படும். ஒரு எண்ணிக்கை நகர்வின் ,
முடிவிடத்தில் அடுத்தவர் காய் இருந்தால், அங்கே இருந்தவர் வெட்டப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்.   ஒரு நகர்வின் முடிவிடத்திற்கு முன்பே
அடுத்தவர் காய் இருந்தால், நகர்வு தடுக்கப்படும். இது இறுக்கு நிலை எனப்படும். ஆனால், அடுத்தவர் காய், மனைகளில் இருந்தால் வெட்டும் இல்லை, தடையும் இல்லை. மனைகளிலும், பழத்திலும் எல்லோரும் பாதுகாப்பாக ஒன்றாக இருக்கலாம்.

வெற்றி

பழத்தை அடைந்து முதலில் தனது காய்களை வீட்டுக்கு இறக்குபவர் அல்லது இறக்கும் சோடி வெற்றி பெறும்.

சில மேலதிக சட்டங்கள்


  • எதிராளியை வெட்ட முன்னர் எந்தக் காயும் பழுக்க முடியாது
  • ஒரு காய் வெட்டினால் மற்றக் காய்கள் வெட்ட வேண்டிய அவசியம் இல்லை
  • கன்னைகள் ஒருவரை ஒருவர் வெட்ட முடியாது
  • கன்னைகளில் ஒருவர் தனது பழங்களை இறக்கிய பின்னர், மற்றவருக்காக தனது முறை விளயாட்டை விளையாடலாம்

ஆண்ட்றோயிட் இல் தாயம்

இந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரயோகம் இங்கே காணப்படுகிறது.

Thayam TypeTamil

https://play.google.com/store/apps/developer?id=Kandiah%20Jeyapalasingham&hl=en

Saturday, February 20, 2016

உந்தப் புத்தகம்

உந்தப் புத்தகம்

இலகு தமிழில் இனிக்கும் இலக்கணம்
(தமிழக அரசின் முதற் பரிசு பெற்ற நூல்!)
என்ற புத்தகம் 2010 இல் வெளிவந்துள்ளது. 600க்கும் மேலான பக்கங்களுடன் ஒரு நல்ல முயற்சி.

இதில் ஒரு தவறான தகவல் இருப்பதால் அதைத் திருத்துமாறு ஒரு கோரிக்கை.

உவன்உதுஉந்தஉங்கே“ என்ற சொற் பிரயோகம் முற்றாக வழக்கொழிந்து விட்டது என்று இப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது தவறு. தமிழறிந்த ஈழத் தமிழர்களுக்கு இந்தச் சொற்களின் பிரயோகம் இன்றும் புழக்கத்திலிருப்பது நன்கு தெரியும்.
பொறுப்பான செயலானபுத்தகம் எழுதுவோர்கள்இப்படியான பாரதூரமான தவறுகளைத் திருத்த வேண்டும்.
இப்புத்தகத்தின்திருத்திய பதிப்பை இதை ஆக்கியவர்கள் வெளியிடுதல் அவசியம்.