பாலாவின் படங்கள்
ஆலையிற் சிக்கிய கரும்பாக மனங்களைக் கசக்கிப் பிழிந்து, வடுக்கள் மாறப் பல நாள் எடுக்கும்
படைப்புகள். முதல் இரண்டு மூன்று படங்களுடன், பார்ப்பது எனக்கு உகந்ததல்ல என்று முடிவெடுத்து
நிறுத்தி வைத்திருந்தேன்.
ஆர்வத்தை அடக்க முடியாமல், தாரை தப்பட்டை
படம், சும்மா மேலோட்டமாகப் பார்ப்போம், கசக்கிப் பிழியும் ஆலை தயாரகும் போது நிறுத்துவோம்
என்றெண்ணிப் பார்க்கத் தொடங்கினேன். கொஞ்சம் பார்க்கக் கூடியதாக இருந்தது, ஆகவே பார்த்து
முடித்து விட்டேன். பார்த்து ஒரு கிழமையாகியும் அதை நினைத்து எழுத வைக்கும் திறமை, பாலா தான்.
காலங் காலமாகத்
தமிழ்க் கலைகளைக் கட்டிக் காத்து வந்த விளிம்பு நிலை மக்களின் பாடு தான் களம். வெற்றி.
வாழ்த்துக்கள் பாலா.
அருகி வருங் கலைகளில்
தவிலையும் குழலையும் இணைத்திருந்தது ஏனோ?
நாயகன், நாயகி,
மாமனார், இசை (இசைராசாவே பணிவான வணக்கம்), இயக்கம் எல்லாமே சிறப்பு.
இசைக் கோர்வை மிகச்
சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. ”ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே ....” ஒரு மீள்பதிவாக இருந்தும்,
மிக அருமை. அடுத்த ”இடரினும் ..” மிக மிக அருமை. மிகச் செறிவான பொருள். சௌந்தரராசனைத்
தேட வைக்கும் பாடல். அவர் இருந்து பாடியிருந்தால், நிலை வேறு.
இசையில் இன்னொரு இளையராசாவின் பாடல் ஞாபகம் வருகிறதே?
படத்தின் இறுதிக்
கட்டம் நாயகனின் வீரத்தால் நகர்கிறது. இது பாலாவின் பாணியல்ல இருந்தும், ஆலை வாய்ப்பட
இருந்த கரும்பைக் காப்பாற்றியிருக்கிறார். இவ்வளவு தூரம் இறங்கிய பாலா, இன்னுங் கொஞ்சம்
மாற்றி முடித்திருக்கலாம்.
விசில் சைகை தடைப்படுவதையும்,
குடிபோதையையும் காரணமாகக் கொண்டு அறுவைப் (கொலைப்) பிரசவத்தைத் தவிர்த்து, நாயகன்,
நாயகியைக் காப்பாற்றி மீட்டிருக்க வைத்திருக்கலாம். அப்படி ஒரு வாழ்வு கொடுத்தால், இந்தியப் பண்பாடென்னாவது என்று பயந்து விட்டார் போலும் பாலா.
2 comments:
என்னது சிவாஜி செத்துட்டாரா ?
அந்த மாதிரி தான் இருக்கு எப்போ வந்த படத்துக்கு எப்போ விமர்சனம் எழுதுறது ?
எழுதுவது தாமதத்தை விடப் பரவாயில்லையே
Post a Comment