Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Saturday, May 16, 2015

மறவோமே

மறவோமே


நிற்க நடக்க
நிம்மதியா படுத்துறங்கப்
பாந்தமாய் வாழ்ந்த நம்
பத்திரப் பூமி அது
பாட்டன் வழிச் சொத்தெனக்
கொண்டாடும் வீடது

மனிதனாய் வாழ்ந்து
நிம்மதியா மூச்சு விட்டு
நினைத்ததை வெளியாக
உரிமையோ டுரைத்திட்டு
திரிந்த நம் தேசம்
சிக்கித் தவித்தது
பலவந்தப் படுத்தும்
பலரின் கைகளிலே

அத்தனை ஆக்கிரமிப்பும்
அப்பப்ப முறியடித்துக்
காத்திரமாய் வாழ்ந்து வந்தோம்
எம் தாயின் மடியில் நாமே

மீண்டுமொரு அத்துமீறல்
வந்ததேயிந் நாளினிலே
அக்கிரமம் நிறைசூழ்க்
கடுந்துயர்க் காலமிதில்

சொந்த நாட்டு மக்களையே
சொத்தையென்று பிரித்தெடுத்து
தாண்டவமாடத்
தலைப்பட்ட தோரரசு

எதிரிக்கு நாம் பேசும்
மொழி முதலிற் பிடிக்கவில்லை
உதவிக்கு நாம் அழைக்கும்
கடவுளையும் பிடிக்கவில்லை
சமமாக வாழ வைக்க
மனதில் இடம் இருக்கவில்லை
மனித உரிமைகளை
மதித்து அவர் நடக்கவில்லை

தமிழன் தன் திறமையாற்
தலையெடுத்தால் பிடிக்கவில்லை
தரணிபுகழ் தமிழர்தம்
பண்பாடும் பிடிக்கவில்லை
தமிழனென்றோர் அடையாளம்
இருப்பதே பிடிக்கவில்லை
பூர்வீகக் குடிகளது
பூர்வீகம் பிடிக்கவில்லை
பூர்வீகம் பொய்யென்று
பொய்யுரைக்கக் கசக்கவில்லை

மதவெறி மொழிவெறி
மதம் பிடித்துக் கூவி நின்றார்
தமிழ்மக்கள் உரிமைகளை
பலங் கொண்டு மிதித்திட்டார்

அழித்து விட்டால் ஆருங் கேளார்
என்ற வழி தெரிந்திட்டார்
அந்தவழி செல்வதற்கு
அடித்தளமும் போட்டு விட்டார்
அங்கு கேட்டு இங்கு கேட்டு
ஆதரவும் பெற்றிட்டார்
அழிக்கும் படலத்தைப்
படிப்படியாய் தொடங்கிட்டார்

மக்கள் வாழ்விடங்கள் எல்லாம்
கடகடவெனத் தகர்த்திட்டார்
வீழ்ந்து பட்ட மாந்தர்க்கு
மருந்துகூட மறுத்திட்டார்

மந்தைகளாய் மக்களையே
முள்ளிவாய்க்கல் துரத்திட்டார்
பட்டிக்குள் ஆடுகளாய்
முட்டுக்குள் அடைத்திட்டார்

குந்தக் கூட இடமின்றி
நெருக்குப்பட்டு நின்றவரை
கொத்தாய்க் குதறிடவே
மூர்க்கமாய்த் துணிந்திட்டார்

ஏதிலியாய் நின்றவரின்
இறுதி நிலை உணர்ந்திட்ட
ஈர நெஞ்சம் படைத்தவர்கள்
ஓடி வந்து காக்க வரக்
கோரிக்கை வைத்த போது
கோர முக எதிரியவன்
கொலை வெறியோ டெதிர்த்திட்டான்

கொத்துக் கொத்தாய்ச் சாய்த்து விட்டான்
கொட்டும் கொடும் ஆயுதத்தால்
கொஞ்ச நேரப் பொழுதினிலே
கொலையுண்டோர் கொஞ்சமல்ல

குழந்தைகளா பெண்களா
குடுகுடு கிழங்களா
கொல்லடா கூண்டோடென்று
கூவிக் கூவிக் கொன்றொழித்தார்

மாண்டவர் மாண்டு விழ
மீதிருந்தோர் துவண்டு விழ
மான பங்கப் படுத்திட்டார்
அதைப் பார்த்து மகிழ்ந்திட்டார்

முள்ளிவாய்க்காற் கொடுந்துயரம்
முட்டிமோதிக் கலங்க வைக்க
கடுந்துயரக் கொலைகள் எம்மைக்
கனவிற்கூடக் கதற வைக்க
ஆறாண்டு போனபின்னும்
அவரை நினைத் தரற்றுகின்றோம்
ஆறென்ன அறுபதென்ன
ஆயிர மாண்டானாலும்
அவர் துன்பம் மறவோமே

கோரத் தாண்டவத்தில்
மாண்டுவிட்ட எம் உறவை
ஊழிக் காலங்கள்
மீண்டுமீண்டு வந்தாலும்
மறவோமே மறவோமே
இன்னொருவர்க் கித்துயரம்
இனிவரஅனு மதியோமே

Saturday, December 04, 2010

ஆயிரத்தில் இரு வார்த்தைகள்

"எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!"  - ஆயிரத்தில் ஒரு வார்த்தை

இது யூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு செய்தியின் கடைசி வரி. எழுதியவருக்கு பாராட்டுகள். அற்புதமான வரிகள். செய்தி கீழே.
லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..

இந்த ஆறரைக் கோடியில் சில மக்கள் கோடியிற் சிலர் போல் இங்கே செயற் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

தங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்ட போலீசாரைப் பார்த்து, "உங்களுக்கு உணர்வே இல்லையா... யாருக்காக யாரை விரட்டுகிறீர்கள்...?" என்றனர் கோபத்துடன்.

-  ஆயிரத்தில் ஒரு வார்த்தை
செய்தி கீழே.
கோவையில் தமிழ் உணர்வாளர்கள் ஆவேசம்

Friday, January 29, 2010

கவர்ந்து போனாரே

காசு பணம் தேடிச் சென்றோம்
கோடி சுகம் நாடிச் சென்றோம்
ஓடி ஒளிந்தே பறந்தோம்
தாயகத்தையே துறந்தோம்


பட்டழிந்தோம் கெட்டழிந்தோம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம்
கட்டுக் காவல் கலைந்த நாட்டில்
தட்டி பிரித்தே நுழைந்தார்


காடு பறி போனதண்ணே - சுடு
காடும் பறி போனதண்ணே
வீடு பறி போனதண்ணே -அட
நாடே பறி போனதண்ணே


ஏர் உழுத ஈர நிலம்
ஏழை மக்கள் பாச நிலம்
கார் சூழ்ந்த கானகங்கள்
வேரோடே போனதண்ணே


மிச்ச சொச்ச சொந்தமெல்லாம்
பச்சைப் புழுவாய்த் துடித்தார்
பட்டி கட்டிக் கமஞ் செய்தார்
பட்டிக்குள் அடை பட்டார்


குஞ்சு குரால் பிஞ்செல்லாம்
பஞ்சையாய்ப் போனதண்ணே
கஞ்சிக்கே காவடியாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே


வஞ்சகர்கள் காலமெல்லாம்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே
பொன்விளையும் புஞ்சை எல்லாம்
வந்தமருங் கையிலோர் நாள்

Thursday, January 07, 2010

கனவா காவியமா

 கனவா காவியமா

கண் முன்னே விரிந்த தேசம்
கனவா கண்களே - புதிய

கரிகாலன் ஆண்ட தேசம்
கனவல்லக் கண்களே - சோழப்

புலிக் கொடிகள் பறந்த தேசம்
கனவா கண்களே - வீரப்

புலிப் படைகள் கண்ட தேசம்
கனவல்லக் கண்களே

காந்தி கண்ட கனவுத் தேசம்
கனவே கண்களே - அக்

கனவை நனவாக்கும் ஈழம்
கனவல்லக் கண்களே - இதைப்

பார்த்துப் பூரித்த தெல்லாம்
கனவா கண்களே - பொறா

மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
கனவல்லக் கண்களே - அற

வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
கனவா கண்களே - அன்பு

ஈழத்தை உடைத்தவர்கள்
கனவல்லக் கண்களே - நம்

விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கனவா கண்களே - எம்

கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கனவல்லக் கண்களே

பெருங் காவியமே தோன்றியதும்
கனவா கண்களே

மறு சோழமாகி நின்ற ஈழம்
கனவல்லக் கண்களே

புறநானூறு புகட்டா வீரம்
கனவா கண்களே

புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே

Tuesday, November 17, 2009

என்ன தான் காரணம்

என்ன தான் காரணம்
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்
தமிழக அரசுக்கு
என்ன தான் காரணம்
தமிழனைத் தவிக்க விட
என்ன தான் காரணம்

ஈழ மாந்தர் இன்னுயிரை
இனவரக்கன் குடித்த போது
அழியு முயி ரதை விடவும்
ஆட்சியு மரச கட்டிலும்
உறவுஞ் சொகுசுமே
காத்திடப் போராட
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்

தன்னை நம்பி வந்தோரை
தவிக்க விட்டுத் தப்பாமல்
தன் மானந் தன் சபதம்
தனக்கென்ற கொள்கை
யெல்லாம் விட்டுவிட்டு
முன்னே வந்த தானைத்
தலைவனெங்கே - அவன்முன்னே
தரங்கெட்ட தலைகள் நீங்களெங்கே

பத்தோடு பதினொன்றாய்ப்
பத்தாம் பசலிகள்
பதுங்கி ஒழித்திருந்தால்
பாதகமேயில்லை ஐயா
பத்துத் தலையிருந்தால்
பத்துத் தண்டவாளத்தில்
பத்து ரயில் மறித்திடும்
பலங்கொண்ட நீயின்று
தவிக்க விட்டதேனையா
தனிக்க விட்டதேனையா

மனச் சாட்சி உறுத்தலையோ
மனதாரப் பொய் பேச
மண்ணுக்குட் போன பின்பும்
மாறாத வடு வந்து
மண்ணாண்ட உன்னையும்
உன்மக்கள் தன்னையும்
மதிப்புக் கெடுத்திடுமே
மானங் கெட்டிடுமே

காலை வாரிக்
கோலை ஓச்சக்
கேவலமாய் இல்லையா
காரணந்தான் என்னையா

Wednesday, October 14, 2009

கண்ணனின் கீதையும், கண்ணீரில் ஈழமும்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும்

இதுவே உலக நியதி

இந்த வரிகள் எல்லாம் எங்களில் பலருக்கு மிகவும் பழக்கமாகி விட்ட கண்ணனின் கீதையின் சாராம்சத்திலிருந்து சில வரிகள்.அனேகமானவர்களின் வீடுகளில் இந்த வாசகங்கள் காணப்படுகின்றன. வெறும் கண்ணன், அருச்சுனன் படமாக வீடுகளின் சுவர்களில் தொங்காமல் பெரும் பிரபஞ்ச உண்மையை உணர்த்தி நிற்கும் அதி உன்னத வார்த்தைகள். இப்போது ஏன் நான் இவற்றை ஊருக்கு உரைக்க வேண்டும்?

ஈழத்தின் துயரங்களைத் தாங்க முடியாது அவதிப்பட்ட நேரங்களில் எங்கோ விறைத்துப் பார்த்து மனத்தினுள்ளேயே குமுறிய நாட்களில் சுவரில் தட்டுப்பட்ட படத்திலிருந்த வாசகங்கள் கவலையைக் குறைக்க உதவி செய்தன. எக் காலமும் பொருந்தும் இத் தத்துவம் எம் மனக் கவலையைப் போக்கும் எனபதில் என்ன சந்தேகம்?

வன்னியின் வதை முகாம்கள் இன்று யாருடையனவோ
அவை நாளை வேறொருவனுடையவையாகி விடும்
நாளை மறுதினம் அவை மற்றொருவனுடையதாகும்

இதை எண்ணும் போது நல்லதும் கெட்டதும் எப்பொழுதும் ஒருவருக்கே சொந்தமாகாது என்பதும் இன்று அழுவோர் நாளை சிரிப்பதும், இன்று கொக்கரிப்போர் நாளை மக்கரித்துப் போவதும் கண் கூடே தெரியும் போது தானகவே அமைதி பிறக்கிறது.

எத்தனை கண் கூடான உதாரணங்களைப் பார்த்து விட்டோம். நமது மண் கூட எத்தனை முறை எத்தனை கைகள் மாறி விட்டது. அத்தனை மாற்றங்களின் போதும், எத்தனை வதை முகாம்கள், சித்திர வதைக் கூடங்கள், துரோகிகள், முதுகில் கத்தி செலுத்துவோர் இருந்திருக்கக் கூடும். யார் யார் வதை பட்டு இருப்பார்கள். யார் யார் கொக்கரித்திருப்பார்கள்.

உலக நாடுகளையே உற்றுப் பார்த்தால் அண்மைக் காலங்களில் ஒரு ஐம்பது ஆண்டுகளாகத் தானே துன்பமில்லாத வாழ்க்கையைப் பல உலக நாடுகள் முன்னெடுத்து நிற்பதைப் பார்க்கிறோம். அதிலும் பல நாடுகளில் மக்கள் துயரம் இன்னமும் காணப்படுகின்றனவே. இவற்றைப் பார்த்துத் தான் நாம், நமக்குங் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடி நம்மைத் தேற்றிக் கொள்கிறோம்.

மன்னராட்சிக் காலங்களில் இன்னும் மோசமான வாழ்ககையைத் தானே அந்தந்த நாடுகளின் ஏதோ ஒரு வகை மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். உதாரணமாக சோழ மன்னராட்சிக் காலத்தில் பாண்டிய, சேர நாடுகளும் அதன் மக்களும் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கக் கூடும். அதே போல், பாண்டிய, சேர மன்னர்கள் கோலோச்சிய காலங்களில் சோழர் மற்றும் இதர நாட்டு மக்களில் பலர் பல விதத் துன்பங்களில் தானே வாழ்ந்திருப்பர். எல்லாமே ஒரு காலச் சக்கரத்தின் பயணத்தில் கண்ணனின் வாசகங்களை அனுசரித்துச் சென்றவை தானே. காலச் சக்கரம் சில சம்பவங்களை வேகமாகக் கடந்து விடுகிறது, சில சம்பவங்களை மெதுவாகக் கடந்து விடுகின்றது.

உலகின் நாகரீகத்தில் சிறந்து விழங்கிய எகிப்து நாட்டைப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆண்ட பேரரசர்களைப் பற்றி வாசிக்கும் போது இந்த நிலையில்லாமை மிகத் துல்லியமாக விளங்கி விடும். பெரும் பாலான பேரரசர்கள் 15 – 20 ஆண்டுகளுக்குத் தான் தம் ஆட்சிகளை வெற்றிகரமாக நடாத்தி யிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் பெரும் அழிவுகளுடன் தான் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவற்றோடு ஒப்பிடும் போது நம் நாடு ஒரு 20 – 25 வருடங்களுக்காவது நல்ல ஆட்சியில் இருந்ததுவே.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது கண்ணனின் கீதை மொழியின் ஆழம் புரிகிறது. இன்று வதம் செய்யும் கொடியவர்களின் அந்தம் தெரிகிறது. வதம் செய்யும் கொடியவர்களின் கொக்கரிப்புக்குத் துணை போகும் மகா கொடியவர்களின் காலம் முடியும் நாள் கண்ணனின் கீதை வழி தெரிகிறதே. இவர்கள் வீழும் போது ஈழம் வாழும். வன்னி நிமிரும். நாளை நமதே.

Wednesday, May 27, 2009

விஜய ராஜேந்தரின் உருக்கமான பாடல்

தமிழகத்தின் 75% மக்களுக்கு ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வும் பற்றிய விபரம் மிகக் குறைந்த அளவிலேயே தெரிந்திருக்கிறது. இந்தப் பாடல் மூலமாக அதி குறைந்தது அண்மைய இன அழிப்பு யுத்தத்தைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும். பொறுப்பான தமிழக ஊடகங்கள் அந்த வரலாற்றைத் தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ராஜேந்தருக்கு நன்றி.

Monday, March 30, 2009

ஈழத் தமிழரும் இனவழிப்பும்

அடக்கு முறையினர் ஆட்சியும்
ஆக்கிர மிப்புச் சூழ்ச்சியும்
இனவழிப்புப் போர்வெறியும்
ஈனக்கொலை காரரும்
உன்மத்தக் கயவரும்
ஊளயிடும் நரிகளும்
எக்காளப் படைகளும்
ஏவல் செய் நாய்களும்
ஐந்தாம் படைப் பேய்களும்
ஒற்றுமை மறுக்கவும்
ஓர்மமாய்க் கொல்லவும்
ஔவை சொன்னதல்ல
இஃதிங்கு தினந் தினமே

வலியோரே ஆழ்வதுவும்
எளியோரை அழிப்பதுவும்
புரையோடிய புண்ணாக
புதைந்திருக்கு மனிதத்தில்

பாகுபாடு பார்த்து நிற்கும்
பாவி மனிதன் பாசறையில்
செப்பட்டை அடியுடனும்
செங்குருதி வெறியுடனும்
உச்சக் கட்டச் செயல் வடிவம்
அப்பட்ட அ நாகரீகம்
இனவழிப்பு இனவழிப்பு

சிவப்பு இந்தியர்
சிதைந்து போனதும்
கறுப்பு அடிமைகள்
கண்ணீரில் வாழ்ந்ததும்
கன நூறு வருடக்
கல்லினும் திண்ணிய
கனவான் மார்களின்
கைங்கரியம் அன்றோ
ஏனென்று கேட்க
ஆருமே இல்லாது
கெட்டழிந்து போனதன்றோ
கெட்டழிந்து போனதன்றோ

அன்று தொட்டு
இன்று வரை
தொன்று தொட்ட
தந்திரமாய்த்
தொடர்ந்து வருமழிவரக்கன்
கையிலின்று அகப்பட்டுச்
சின்னா பின்னமாகச்
சிதறி ஓடுது
சன்னமும் குண்டும்
சரமாரியாய் வரவதில்
சிக்கிச் சாகுது
ஈழத் தமிழினம்
வாழத் தவிக்குது
வாழ்ந்த தமிழினம்

வெட்டை வெளியில்
அட்டை போட்டு
அடக்கி அழிக்குது
சிங்கள அரசு
அழிந்து போகுது
அழியாத் தமிழினம்

ஏனென்று கேள்வி கேட்க
ஏராளம் பேருண்டு
கேட்டுக் கொள்வதறற்கு
ஒன்றேனுங் காதுண்டோ

தந்தை மண்ணாம் தமிழகம்
கை கொடுக்கத் துடிக்கையில்
விந்தை மண்ணை ஆளும் கை
விரல் காட்டித் தடுக்குது

புலம் பெயர்ந்த சொந்த பந்தம்
பலம் கொண்டு நித்த நித்தம்
தினந் தோறும் போராட்டம்
நிற்காத ஆர்ப்பாட்டம்
பல வடிவில் செய்து கொண்டு
மன்றிலெங்கும் நீதி கேட்பு
மனுக்களெல்லாம் தள்ளுபடி

இன்று எளியோன்
நாளை வலியோன்
என்று நிலை மாறி விடும்
எம் துயரும் மாறி விடும்
மாறி விடும் அந்நேரம்
நாம் செய்யோம் இனவழிப்பு
செய்திடுவோம் புதிய பூமி
மானிடத்தை உயர்த்திப் பாடி

Wednesday, March 04, 2009

பிடி சாபம்

பிடி சாபம்

அரச படையினர் தாயைக் கட்டி வைத்து அவர் கண் முன்னாலாயே 14 வயதுச் சிறுமி மேல் பாலியல் தாக்குதல்.
இதற்கு நீதி கேட்டமைக்காக,அடுத்த நாளே, அதே அரச படை வீணர்களால் அந்தத் தாய் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொடுமையை அந்தப் பெண்ணின் கணவனை அடித்துக் கட்டி வைத்து விட்டு அவர் கண் முன்னே செய்தார்கள்.

சன நாயக நாடொன்றில் இது நடந்தால் நீதி மன்றில் நீதி கிடைக்கும்.
சன நாயகமற்ற நாடென்றால், அங்கும் கூட, தலை போயிருக்கலாம், தண்டனை கிடைத்திருக்கலாம்.
ஆனால் இது நடந்திருப்பதோ சிறீ லங்காவில். இங்கே செய்தவன் சிங்களவன், செத்தவன் தமிழன் என்றால் என்ன தீர்ப்பு?
குறைந்த பட்சம் லங்கா ரத்னா விருது கிடைக்கலாம்.

என்ன கொடுமை இது?
எந்த யுகத்தில் நாம் வாழ்கிறோம்?
5000 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் விட்டோமா?
நாமும் அந்த யுகத்துக்கே போய் எம் தீர்ப்பை வழங்குவோம்.

இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கும், அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் அனைத்து மட்ட உயரதிகாரிகளுக்கும் உயர்ந்த பட்சத் தண்டனையாக எது பொருந்துமோ அது வந்து சேர நம் சக்தியெல்லம் திரட்டிச் சாபமிடுவோம். பிடி சாபம்.
இந்தக் கொடுமையை இன்னும் விசாரிக்காமலிருக்கும் அந்த அரசிற்கும் சாபம். பிடி சாபம். நாசமாய்ப் போவீர்களாக.பிடி சாபம்.
பிடி சாபம்.

செய்தி இங்கு காண்க
சாரம் இதோ:

STF kills mother of raped girl in Batticaloa
[TamilNet, Tuesday, 03 March 2009, 11:04 GMT]
Sri Lankan Special Task Force (STF) commandos who had sexually assaulted a 14-year-old Tamil girl Sunday in Vellaave’li police division, again went to the girl’s house Monday between 8:00 p.m and 9:00 p.m where they assaulted her father first and then severely tortured her mother before killing and dumping her body in the well as punishment for complaining against the STF with Batticaloa police for raping her daughter. The father was held bound while the commandos beat the mother to death, the neighbors said.

Tuesday, February 03, 2009

கலைஞரே காணும்


கலைஞரே காணும்


பொறுத்தது போதும்
பொறுத்தது போதும்
பொங்கியெழு மறத்தமிழா

பொறுத்தம னோகரனை
நொருக்கச் சொன்ன மு.க.
நீர் பொங்குவதெப்போ
பொறுப்பதே உம் பிழைப்போ

பொறுத்துப் பொறுத்துப்
பூத்த கண்ணால்
பூஞ்சிப் பார்த்தும்
புரியவில்லை
மு.க. நிலை - தி.
மு.க. நிலை
வெறுத்துப் போனோம்
வெல வெலத்துப் போனோம்

மு.க., தி.மு.க.
இன்று தமிழீழம்
நாளை தமிழகம்
என்று நிரல்
நீளும் போது
எங்கு போவீர்
என்ன செய்வீர்

மு.க. முழங்காத தமிழா
நாக்கால் வழங்காத பொருளா
கைப்புண்ணுக்குக் கண்ணாடியா
கலைஞருக்கே ஏடெழுதவா

காணும் ஐயா
ஓடலும் சாதலும்
காணும் ஐயா
தமிழன் மாய்தலை
காரும் ஐயா - உம்
பலம் கொண்டு
சேரும் ஐயா
பெருஞ் சிறப்புமக்கு

உம் கதவை நாமும்
உம் காதை ஊரும்
இன்னொரு முறை தேடாது
உம் புகழும் பெயரும்
உருக்குலைய முன்னே
உன்னி எழுந்து விடும்
உத்வேகம் பெற்று விடும்

உம்மால் முடியா விட்டால்
ஒதுங்கி வழி விடும் - உம்
இளைய தலைமுறையை
உசுப்பி அனுப்பிடும்

முன்னால் நின்று கொண்டு
தானும் செய்யான்
தள்ளியும் நில்லான்
என்றெல்லாம் தூற்றமுன்

செய்பவனைச் செய்ய விடும்
வெந்த புண்ணை ஆற விடும்

============================
காணும் = கண்டு கொள்ளும்
காணும் = போதும்
============================

பின்னூட்டச் செருகல்:

உம் மக்களுக்கு மந்திரி
பதவியில்லையா 'எந்திரி'

ஈழ மக்களுக்கு எவ்வொரு
நாதியில்லையா தந்திரி

நீ தந்தியடி தபாலடி
தமிழுலகம் தயாரடி

Tuesday, January 02, 2007

தேசத்தின் குரல் - இரங்கல்

“தேசத்தின் குரல்” பாலசிங்கம் அவர்கள் மறைவு ஒரு பேரிழப்பு. அவர் கடும் சுகவீனமுற்ற செய்தி முன்னரே வந்து அதிர்ச்சியைத் தந்திருந்ததால், அவரின் இறப்புச் செய்தி பேரதிர்ச்சியை எமக்கு அளிக்கவில்லை. ஆனாலும், இறப்பு, அதுவும் ஒரு பெரும் சாணக்கியனின் இறப்பு, தாங்க முடியாத சோகமாகக் கவிழ்ந்தது எம் மேல். அவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்ளும் அதிட்டம் எங்கள் குடும்பததவர்க்குக் கிடைத்தது சோகத்திலும் ஒரு நற் பாக்கியம்.

வாகனங்களால் நிரம்பி வழிந்த தெருக்களில் வாகன நெரிச்சலைக் கட்டுப் படுத்த இலண்டன் பொலிசார் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மக்கள் வெள்ளமோ மண்டபத்தின் வெளியே மலைச் சரிவில் போடப்பட்ட வீதி போல் நெளிந்து நெளிந்து தெரு வரை இருக்க நாமும் அதில் இணைந்து எம் அஞ்சலியையும், வீர தீர வணக்கத்தையும் செலுத்தக் கூடியதாக இருந்தது.

அவர் மறைவிற்கு இரங்கல்:

பறந்து விட்டது பாலா உயிர்
இறந்து விட்டது பண்புப் பயிர்
அணைந்து விட்டது அறிவுச் சுடர்
தொலைந்து விட்டது துருவக் கதிர்

கலங்கி நிற்குது களமாடுந் தலை
கசங்கி நிற்குதுன் கனிவான துணை
குலுங்கி அழுகிற குரல் கேளாயோ
கலங்காது சாவைக் கரம் பற்றியோனே

சேனைத் தலைவன் தேடும் ஆணித் தரம்
சர்வ தேசத்தில் ஒலித்த சிங்கக் குரல்
இராச சாணக்கியத்தில் தேசக் குரல்
பால சிங்கத்தின்பட் டாசுக் குரல்

தேசத்தின் குரல் தாங்கி நிற்கும்
சாணக்கியன் குரல் தூங்கி நிற்கும்
சோகத்திலும் நாம் வேண்டி நிற்பது
தேசப் பெருமகனின் புகழுடல்

Monday, August 14, 2006

எப்படிப் பாடுவீரோ


தேவாலயந் தகர்ந்தது
செஞ்சோலை சிதறியது
சோலையின் தளிர்கள்
கருகின தீய்ந்தன
கயவர்தம் காட்டுக்
கடும்போக்கில்

ஐநாவே ஐயா நாட்டோரே
அனைத்துலகச் சட்டங்கள்
அழித்தோரைச் சாடாவோ
அல்லது
அழித்தவர் குருக்களோ

பாடுவீரோ சரணம்
பலியானது புலிகள் என்று

பாடுவீரோ பல்லவி
பக்கத்திற் சென்று பார்க்கப்
பாதுகாப்பு இல்லை என்று

பாடுவீரோ மங்களம்

பேசுவீர் பேசுவீர்
பேதங்கள் களைவீர்
பேசியதன் செயல்வடிவம்
பேய்வடிவில் பெறுவீர் என்று

பாடுவீரோ
எப்படிப் பாடுவீரோ


செயபால், 2006/08/14

Wednesday, July 26, 2006

இந்தப் பைத்தியக் காரத்தனம் அரசியலரங்கில் மிகவும் அதிகமாகக் காணப்படும் ஒரு சரக்கு. பல நாடுகளில், பல காலமாகப் பாவனையில் இருக்கும் ஒரு தந்திரம். அரசியல் அனர்த்தங்கள், படுகொலைகள், சதி வேலைகள் நடைபெறும் போது உதவிக்கு வருவது இந்தப் பைத்திய மருந்து. அரசியல் சதிகாரர்கள், கொலைகாரர்கள், பாதகர்கள் மாட்டிக் கொள்ளும் போது அவர்கள் சார்புடைய அரசுகள் பதிவியிலிருக்கும் போது அந்த அரசுகள் அவர்களைப் பாதுகாக்கத் தவறுவதில்லை. அதற்கு அவர்கள் பாவிக்கும் அரச தந்திரந் தான் பைத்தியக் காரப் பட்டம்.

சமீபத்திய உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவை சில. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்றவரைப் பைத்தியம் என்று கூறி விடுதலை செய்யப் பட்டது ஒன்று. அண்மையில் யாழ்நகரில் நீதிபதியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து தாக்க முற்பட்ட சம்பவத்தில் கைதானோருக்கும் பைத்திய வைத்தியம் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது. இப்படிப் பல.

இங்கே நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பைத்தியம் யாருக்கு என்பது தான். பைத்தியக் காரரை வேலைக்கு வைத்திருப்பவர்களா? அல்லது வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கும் பைத்தியமா? அல்லது அவர்களையெல்லாம் பதவிக்கு அனுப்பி வைக்கிறோமே எங்களுக்குப் பைத்தியமா?

என்னவோ ஏதோ இந்தப் பைத்தியக்காரப் பதவியால் பலரின் காட்டில் மழை.

Monday, June 12, 2006

மனிதரா மதியிலாப் பதர்களா

அல்லைப் பிட்டியின்
அவலக் குரல்
ஓயமுன் எழுந்தது
வங்காலை வன்துயர்
எங்காலை சொல்வது
எம்காலை எப்படி
விடியுமென்று

கயவர் வந்தனர்
காமுகம் புரியவே
கார்முகங் கொண்டு
கயவர் வந்தனர்

தாயையும் சேயையும்
தந்தையையும் தனயனையும்
குத்திக் கிழித்துக் குதறிக்
கொலை செய்த பின்

சந்தையிலே தொங்கும்
மந்தை மாமிசம்போல்
தொங்க விட்டுச் சென்ற
அந்த மனித மாமிசங்கள்
மனிதரா மதியிலாப் பதர்களா?

மிருகச் செயல் புரிந்தாரென்றால்
மிருகங்கள் செயலிழந்து கெஞ்சும்
இது நாம் செய்வதில்லை
நம்மை இவரோடு சேர்க்காதீரென்று

புல்லர்களே என்றால்
புல்லினம் குறை சொல்லும்
தம் பேரையிழுக்க
வந்தது பேரிழுக்கென்று

என்னவென்று அழைக்க - மண்டையில்
ஏதுமற்ற அரக்கரை
நீங்களும் ஒரு தாய் மக்களா?
நாளை மக்களைப் பெறும் மக்கரா?

ஜெயபால் 2006-06-12

Monday, May 29, 2006

உரிமைக் குரலாறு

மே இருபத்தொன்பது
இரண்டாயிரத்தாறு
உலகெலாம் பாயுது
உரிமைக்குரலாறு

துடித்துப் போன உடன் பிறப்புகள்
தூங்கவில்லை நாமென்று
தூக்கிப் பிடிக்குது
துயர்ச் செய்தி மட்டைகளை
புலம் பெயர்ந்த தமிழர்க்குப்
புகலிடம் தந்து காத்த
புகுந்த நாடுகளில்
சுதந்திர வீடுகளில்.

பெண்டுகளும் பிஞ்சுகளும்
பழசாப்போன பஞ்சுகளும்
பேதமின்றிக் கோரமாகக்
கொல்லப் படவும்
கொடுமைப் படவும்

பார்த்தும் பாராதிருக்கும்
பலநாட்டு மக்களே!
மன்னரே!
என்ன இந்த மெளனம்?
கொலையைப் பார்த்தும்
குரவை இல்லையா?
கொன்றது யாரென்று
கண்டு கொண்டால் தான்
திறக்கும் உன் குரல்வளையா?

நல்ல நியாயம் இது
நலிந்தவர்க்கு உதவாதது
மனிதமும் சாக முன்
மனதைத் திறந்து விடு

தந்தை மண்ணே தமிழகமே
நீயுமா காக்கிறாய் மெளன மொழி?
இன்று எழாவிடில் என்று எழுவாய்?
இழவு விழுந்தபின் தான்
வந்துநிற் பாயோ?

சொந்தச் சகோதரர் நாம்
துன்பத்தில் சாகிறோம் - இதைச்
சொல்லிக் காட்டப்
பாரதியா வேண்டும்?

சாத்வீக ஆதரவுக்கே
சனநாயகத்தில் பயமா
உணர்ச்சிகளைக் காட்டக் கூட
உரிமையில்லையா அண்ணா
உங்கள் உணர்வுகளை
உறங்க விடாதீர் - எங்களை
உயிரோடே உறையவிடாதீர்

நாமொருநாள் வெல்வோம்
உரிமைகளைக் கொள்வோம்
அன்று ஊதுவோம் சங்கு
வென்று விட்டோம் என்று

-ஜெயபால்

Wednesday, May 17, 2006

2006 - விசாகம் (வெசாக்) படு கொலைப் பரிசு

புத்தர் பெருமான் சகலதும் பெற்ற நாளைக் கொண்டாடு முகமாகச் சிங்களப் பெளத்தர்களிடமிருந்து ஈழத் தமிழருக்குக் கிடைத்த வைகாசி விசாகத் திருநாட் பரிசு.

இந்தச் சுட்டியில் இருப்பது அகிலக் கவியின் கவிதை!

என் அழுகை கீழே!!
==================

ஈரற் குலை நடுங்குதையா
ஈனக் கொலை நடக்குதையா
ஈழநல் நாட்டி லெம்
இரத்தம் ஆறாய் ஓடுதையா

இன்றில்லையேல் இன்னொருநாள் - நீ
நின்று பதில் சொல்லிடுவாய்
பண்பு கெட்ட படு கொலைகாரா
பலிக் காதுன் கொலைத் தந்திரம்

அல்லைப் பிட்டியில் ஆறு பேர்
அம் பாறையில் ஐந்து பேர்
அதிலடங்கும் பிஞ்சுகள் பெயர்
அழுதுமுடியுமோ எம் துயர்

கொன்று குவிக்கும் சிங்கள நாடே
இன்றிதைப் பார்த்தும் பாரா விடுத்து
மென்று விழுங்கும் உலகத்தோரே
கன்றைக் கூடக் கொல்லும் கூட்டம்
என்றைக் குத்தான் திருந்தும் ஐயா


-ஜெயபால்