Monday, August 22, 2005

தமிழை வளைக்காமல் வளர்ப்போம்

அரிச்சுவடி சொல்லித் தந்த வாத்தியார் அ முதல் ஃ வரையும் க முதல் ன வரையும் சொல்லித்தந்தார். உயிரெழுத்து, மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து என இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களையும் எழுத வாசிக்கக் கற்றுத் தந்தார். அதற்கு மேல் சில எழுத்துக்கள் சிலரது பெயர்களில் இருந்ததை விளக்க அவர் சொன்னது அப்போது புரியவில்லை. அதாவது வடமொழி எழுத்துக்கள் என்றார் கிரந்தம் என்றார், ஒன்றும் புரியவில்லை ஆனால் தமிழல்லாத எழுத்துக்கள் தமிழில் பாவனையில் இருக்கின்றன என்பது புரிந்தது.

சிறு வயதிலிருந்தே இது என்னை உறுத்தியது. தமிழுக்குள் ஏன் தமிழல்லாத எழுத்துக்கள் புகுந்துள்ளன? புகுந்தது தவிர்க்க முடியாதது தான்; கூடுதல் விளக்கத்திற்கு தேவையானது தான் என்றால் அந்த எழுத்துக்களை ஏன் தமிழோடு இணைக்கவில்லை? அரிச்சுவடிக்குள் புகுத்த முடியாவிட்டால் அதற்கு என்ன தனிச் சுவடி வேண்டிக் கிடக்கு.

சுருங்கி வரும் அகண்ட உலகைத் தமிழுக்குள் அடக்கக் கிரந்தம் தேவை தானா? தமிழ் வளைந்து கொடுக்க வேண்டுமா? அல்லது வளர்ந்து கொழுக்க வேண்டுமா?

தமிழை வளைத்து தரமிழக்க வைக்காமல், அதை வளர்த்து தமிழனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.

தற்கால ஆங்கில மொழியில் புதுப் புதுச் சொற்களை ஆண்டு தோறும் அறிமுகப் படுத்தி அகராதியில் உத்தியோக பூர்வமாக இணைத்து விடுகிறார்கள். இப் புதிய சொற்கள் ஆங்கிலத்தில் புதிதாகத் தோன்றியவையும் பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்தவையும் ஆகும். பிற மொழியில் இருந்து வரும் சொற்களை ஆங்கிலமாகத் தான் சேர்த்துக் கொள்கிறார்கள். சிறந்த உதாரணம், தமிழ். தமிழ் என்ற சொல்லில் உள்ள "ழ்" என்ற எழுத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? முடியாது. அதற்காக அவர்கள் "ழ்" ஐ ஆங்கிலத்தில் உள் வாங்கிக் கொள்ளவில்லை. "ல்" ஐப் பயன் படுத்திவிட்டார்கள். ஆங்கிலத்தை வளைக்காமல் ஒரு புதுச் சொல்லை உருவாக்கி விட்டார்கள். இது தான் தமிழுக்குத் தேவை. கோடிக் கணக்கில் சொற்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரட்டும். அதை தமிழாக்கித் தமிழை வளர்ப்போம்.


தமிழை வளையோம்
தரத்துடன் வளர்ப்போம்
தமிழ் நாடரசே செயலில் காட்டு
தயங் காதுநீ தலைமை யேற்று

Thursday, May 05, 2005

தூலிப்பூ விழா - Tulip festival

தூலிப்பூத் திருவிழா
===============

கனடாவின் தலை நகரம் ஓட்டவாவில் வருடம் தோறும் மே மாதத்தில் கொண்டாடப் படுகிறது தூலிப்பூ விழா. மிக அழகான சிறப்பான ஒரு திருவிழா. இந்தத் திருவிழாவிற்கும் இரண்டாம் உலகப் போருக்கும் தொடர்பிருக்கிறது.

அதாவது, இரண்டாம் உலகப் போரில் ஒல்லாந்து நாட்டை நாசிப் படைகள் கைப்பற்றிய போது ஒல்லாந்தின் அரசி கனடாவில் தஞ்சம் புகுந்திருந்தார். அந் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறக்க இருந்தது. மகப் பேற்றுக்காக அனுமதிக்கப் பட்டிருந்த வைத்தியசாலை அறையை தற்காலிகமாக ஒல்லாந்து நாட்டுப் பிரதேசமாக அப்போதைய கனடாப் பாராளுமன்றம் பிரகடனப் படுத்தியது. ஏனெனில் பிறக்கப் போகும் குழந்தை ஒல்லாந்து மண்ணில் பிறக்கட்டும் என்று.

1945 மே 6ம் திகதி கனடியப் படைகள் ஒல்லாந்தை நாசிகளிடமிருந்து மீட்ட நாள். நாடு மீட்கப் பட்டு, அரசியும் நாடு மீண்டார். கனடா செய்த இப் பெரிய உதவிக்கு நன்றி செலுத்த நினைத்த ஒல்லாந்து அரசி, பெருமளவு தூலிப் பூக்களை கனடாவுக்கு வருடந் தோறும் அனுப்ப முடிவு செய்தார். அப்படி அனுப்பப் படும் தூலிப் பூச் செடிகளும் பூக்களும் மே மாத முதலிரு வாரங்களுக்கும் ஒரு பூங்காவில் அழகுற நடப் பட்டிருக்கும். இந்த இரு வாரங்களும் வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப் பட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அது சரி, இது என்ன தூலிப்பூ?

தூலிப்பூ என்பது ஆங்கிலத்தில் Tulip என்று சொல்லப் படுகிறது. இதையே நான் தமிழ்ப் படுத்தியுள்ளேன். சரியான தமிழ் தெரியவில்லை. தமிழில் இந்தப் பூவிற்குப் பெயர் இருக்குமா என்பதும் தெரியவில்லை. உண்மையில் இந்தப் பெயரின் மூலம் துருக்கி மொழி என அறிகிறேன். இந்தப் பூவும் துருக்கியில் இருந்தே கி.பி. 1000 ஆண்டளவில் உலகுக்கு அறிமுகமாக்கப் பட்டதாம். துருக்கிய மொழியில் தூலிப் என்றால் தலைப் பாகை என்று பொருள்.

இந்தப் பூ வசந்த காலத்தில் துளிர்க்கும். ஒரு மாதம் நின்று பிடித்து விட்டு பின்னர் பட்டு விடும். ஆனால் சாகாது. பனிக் குளிர் காலத்தையும் தாங்கி மறு படியும் வசந்த காலத்தில் துளிர்க்கும். பலப் பல அழகிய நிறங்களில் மிக அழகாகப் பூக்கும்.

தூலிப் ஒரு வகைக் கிழங்கிலிருந்தே முளைக்கும். இந்தக் கிழங்கை யுத்த காலத்தில் பஞ்ச நேரத்தில் சனங்கள் சாப்பிட்டும் இருக்கிறார்கள்.

Wednesday, May 04, 2005

சில பழமொழிகள்

பழமொழி சொல்லிப் பிள்ளை வளர்க்காத பெற்றோர் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரையும் போலவே, எனது பெற்றோரும் அவ்வப்போது சொன்னவை இப்பொழுது உறைக்கின்றன. அவற்றில் சில உங்களுடன் பகிர்ந்து கொள்ள.

  • நம்ப நட, நம்பி நடவாதே

  • எல்லோர் நம்பிக்கையையும் நீ பெறும் படியாக நடந்து கொள். ஆனால் எல்லோரையும் நம்பி நடந்து அதனால் ஏமாந்து துன்பத்தைத் தேடிக் கொள்ளாதே

  • கட்டிலில் ஏற முன்னர் காலை ஆட்டாதே

  • இதையொத்த பல பழமொழிகள் உண்டு. அதாவது, கிடைக்க முன் அனுபவிக்க நினைக்காதே. கட்டிலில் ஏற முன் காலை ஆட்டினால் விழுந்து விடுவாயேயல்லாது, சொகுசாக இழைப்பாற முடியாது.

  • ஓடும் புளியம் பழமும் போல் இரு

  • எந்தவொரு விடயத்திலும் ஒட்டி ஊறி விடாதே. புளியம் பழமும் அதன் ஓடும் போல் ஒன்றாக இரு. ஆனால் ஒட்டி இராதே. அதிகம் ஒட்டினால் இழப்புக்களைத் தாங்குவது மகா கடினம்.

  • தோழனோடும் ஏழமை பேசேல்

  • எப்படிப்பட்ட தோழனாயினும், உனது ஏழ்மையையோ பலவீனங்களையோ பகிர்ந்து கொள்வது நல்லதல்ல.

2005-05-04

Tuesday, April 19, 2005

பெயரில் நளினம் - நீரோ

ஒரு கணனி மென்பொருளுக்குப் பெயர் வைக்கும் போது எவ்வளவு நயமாகச் சிந்தித்திருக்கிறார்கள் என்று வியந்ததில் விளைந்தது இது.

நீரோ என்று ஒரு மென்பொருள். சிறுவட்டுக்கள் பதியும் ஒரு மென்பொருள். இந்த வட்டுப் பதியும் முறையை ஆங்கிலத்தில் எரித்தல் எனும் பொருள் பட அழைப்பார்கள். எரிப்பதோடு சம்பந்தப் பட்ட பிரபலம் யார்? நீரோ, ஞாபகமா? உரோமாபுரி எரியும் போது பிடில் வாசித்த மன்னன். ஆகா, இதை விட நல்ல பெயர் ஒரு எரிக்கும் (பதியும்) மென்பொருளுக்குக் கிடைக்குமா? வாழ்க நீரோ!!!!

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விசயம், நீரோ உரோமாபுரியை எரித்தவன் அல்ல. எரிந்து கொண்டிருக்கும் நகரைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்த ஒருவன். இசைப் பித்தனா அல்லது முழுப் பித்தனா அல்லது வேறு ஏதுமா தெரியாது.

ஆனால் தொடர்பு படுத்திப் பெயரைக் கொடுத்து விட்டார்கள்.
“Nero Burning Rom” என்பது தான் பெயர்.
Rome இற்குப் பதில் ROM. - ROM stands for Read Only Memory
மிக அழகாகச் சிந்தித்துக் கொடுக்கப்பட்ட பெயர்.

எங்கள் வாழ்வில் அறியப்பட்ட எரிவு நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் நினைவுக்கு வருபவை:

புராண இலங்கையை எரித்த அனுமான்
மதுரையை எரித்த கண்ணகி
மன்மதனை எரித்த சிவன்

ஈழத்தில் எங்கள் கண் முன்னே எரிந்தவை:

அரக்கர்கள் எரித்த யாழ் நூலகம் (தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் 80 களில்)
அரக்கர்கள் எரித்த சன்னதிமுருகன் தேர் (3 முறை எரிந்தது)
அரக்கர்கள் 83ல் எரித்த உயிர்கள் (உயிருடன் எரிக்கப் பட்டதால்)
அரக்கர்கள் என்றென்றும் எரிக்கும் தமிழர் கடைகள், வீடுகள்

எரித்தது யாரென்பது உள்ளங்கை நெல்லிக் கனி. ஆதலால் அவர்கள் பெயரைப் போடவில்லை.

எதையெழுதத் தொடங்கினாலும் எம் துயர் சம்பந்தமில்லாமல் சிந்தனையை ஓட்டுவது மிகக் கடினமே.