தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கும் தமிழ் மக்கள், ஒவ்வொரு வருடமும், தை மாத முதல் நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டாடுவது பொங்கல் திருநாளாகும். தை மாதம் என்பது ஆங்கில மாதமான சனவரியின் நடுப் பகுதி முதல் பெப்ரவரி நடுப் பகுதி வரையான காலமாகும்.
தமிழரின் முக்கிய உணவுப் பயிரான நெல் அறுவடை முடித்து எடுத்த புத்தரிசியுடன் பொங்கிய பொங்கலுடன் முக்கனிகளும் கரும்பு, மஞ்சள் போன்றவையும் சேர்த்துக் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதத்திற் படையல் செய்கிறோம்.
சூரியனுக்குப் படைக்குமங் காரணம் என்னவென்று பார்ப்போம். பஞ்ச பூதங்கள் என்று அறியப்பட்ட நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்பவை எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவாக விளங்குவது சூரியன். தமிழரின் பிரதான உணவான அரிசியைத் தரும் நெற் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான ஒளி, நீர், காற்று, வெப்பம், இடம் என்பவற்றைப் பருவத்திற் கேற்றாற் போலத் தந்து உதவுவது சூரியன் தான். இந்த உதவியால் பயிர்ச் செய்கை சிறந்து, பசி பட்டினி இல்லாமல் மக்கள் வாழ வழி பிறக்கிறது.
ஒரு நாட்டின் மன்னனை ஒருமுறை வாழ்த்தும் போது, இதையே கருவாக வைத்து, ஔவையார் அழகாக ஒரு வரியில் வாழ்த்தினார் “வரப்புயர” என்று. அதாவது,
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
ஆக, ஒரு நாடு சிறப்பாக வாழ உதவும் சூரியனை நன்றியுடன் கொண்டாடுவது மிக அவசியமல்லவா?
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளைக் கொண்டாடுவதற்காக, நாம் அதி காலையில் எழுந்து, பொங்கல் செய்து அதைச் சூரியனுக்குப் படைத்துப் பின் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி வருவது வழக்கம். பொங்கலை அண்டை அயலவர்களுன் பகிர்ந்துண்டு, உறவினர் வீடுகளுக்குப் போவதும், வருபவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தும் பொங்கலை உண்டு கொண்டாடுவோம்.
தைப்பொங்கல் கொண்டாடுவதன் மூலம் சில முக்கியமான பண்புகளும் எம் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன. நன்றி தெரிவிக்கும் பண்பு மட்டுமல்லாமல், எதையும் பகிர்ந்துண்ணும் இயல்பும், விருந்தோம்பல், உபசரிப்புப் போன்ற குணங்களும் எங்கள் மூதாதையர்களால் எங்களுக்கு இந்தப் பண்டிகையினூடாகக் காலங் காலமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதையும் கண்கூடாகக் காண்கிறோம்.
இத் திருநாளை நாம் தவறாமற் கொண்டாடுவதன் மூலம் தமிழர் தாயகங்களை விட்டுப் புலம் பெயர்ந்து வாழும், வளரும் எமது சந்தத்தியினருக்கும் எங்கள் பண்பாட்டை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பொங்கலோ பொங்கல்.