Tuesday, December 31, 2019

அழகு மரம்

அழகு மரம்

இலையோடு பூவோடு
பிஞ்சோடு காயோடு
பழத்தோடு பறவையோடு
வண்ணப் பொலிவோடு
நிற்கின்ற மரமழகு

அத்தோடு நில்லாமல்

தலை கொட்டி
இலை கொட்டி
தடியோடும் கிளையோடும்
வரைகோட்டுச் சித்திரமாய்
பனிக்காலக் குளிர் நேரம்
விறைப்பாக நின்றிருக்கும்
இந்நிலையும் அதியழகேTuesday, August 20, 2019

மறந்திடுமோ நெஞ்சம்

பேரவையின் 32-ஆம் தமிழ் விழா மலருக்குத், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளில் யாம் எழுதிய கவிதை ஒன்று.

இக்கவிதையானது, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது இடம்பெற்ற துயரச் சம்பவத்தை நினைவு கூரும் முககமாக எழுதப்பட்டுள்ளது.

மறந்திடுமோ நெஞ்சம் 

அமுதென்ற தமிழுக்கு
அளவில்லாத் திருவுக்கு
அழகுசேர்க் கும்முகமாய்
ஆராய்ச்சி மாநாடு

வண. பிதா தனிநாயகம்
தொடக்கி வைத்த கூட்டங்கள்
தொடராகி நான்காகி
எழுபத்திநாலு தன்னில்
இடம்பெற்ற தீழத்தில்

தமிழ் மரபுத் திங்களாம்
தை பிறந்த வேளையிலே
அனைத்துலக அறிஞரும்
ஆர்வலரும் பார்வையரும்
ஆசையாய்க் களிகொள்ள
இறுதி நாள் நிகழ்ச்சியன்று
முத்தவெளி முன்றலிலே

முத்து முத்தாய்ப் பேச்சுகளும்
அணியணியாய்க் கலை நிகழ்வும்
நடந்துகொண்டு இருக்கையிலே
மக்களிடை புகுந்ததொரு
காவலர்கள் வண்டி
வழிவிடக் கேட்டு நின்றார்
கூட்டத்தை மிண்டி

எள் விழுந்தால் எண்ணையாகும்
அந்தப் பெருங் கூட்டத்தில்
எப்படித்தான் வழி விடுவார்
எக்காள மிட்டோர்க்கு

குழப்பமே நோக்கமாகக்
கொண்ட தீயோர்களுக்கு
வழி கிடைக்கா வலி சேர்ந்து
வன்முறையைக் கட்டவிழ்க்க
வழியொன்று கிடைத்ததுவே

கூட்டம் கலைக்கவென்று
கண்ணெரிக்கும் புகைக்குண்டும்
இடையிடையே நிசக்குண்டும்
பீறிட்டுப் பாய்ந்திடவே
கலங்கிய மக்களெல்லாம்
பதறியோடச் சிதறியோட
அங்கு அரங்கேறியது
அமிலமான அவலமொன்று

பாய்ந்துசென்ற குண்டுகளால்
உயிரோடு அறுபட்ட
மின்கடத்திக் கம்பிகளும்
விழுந்தனவே உயிர்தப்ப
ஓடிய எம் மக்கள் மேல்

மின்தாக்கிச் சிலர் மடிந்தார்
புண்பட்டுப் பலர் விழுந்தார்
நெரிபட்டு மிதிபட்டு
உடல்கெட்டு உயிர்கெட்டு
துயரத்தில் முடிந்ததந்த
அனைத்துலகத் தமிழாய்வு
நான்காவது மாநாடு

நலிந்துகெட்ட மாந்தருக்காய்
நாவெழுப்ப யாருமில்லை
நாதியென்றும் ஏதுமில்லை
நீதியொன்றும் சேரவில்லை

வீழ்ந்தவர்க்கு நினைவுக்கல்
நிறுவிடத்தான் முடிந்ததம்மா
எம்மக்கள் நினைவைவிட்டு
அத்துயரும் போய்விடுமா 


செயபாலன், ஏப்ரல் 9, 2019

நன்றி:  https://fetna.org/fetna-2019-souvenir/?fbclid=IwAR3Wn6jf8vSlZfudkiGJk40D6jcIST3tGmdWsNR-J9BBxHbnt7_91xIlE7Q


Sunday, May 05, 2019

பகுதி 8: இரத்தமும் காற்றோட்டமும்

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

நாம் உயிரோடு இருக்க நமது உடலெங்கும் எப்போதும் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் இந்த இரத்தம் இரத்தக்குழாய்கள் மூலம்தான் ஓடுகின்றது. நமது இதயத்திலிருந்து வெளிவரும் பெரிய இரத்தக்குழாய் தன்னிலிருந்து கிளைகளை உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கும் கொடுக்க, அக்கிளைகள் இன்னும் கிளைகளாக பிரிந்து சிறிதாகி, சிறிதாகி மிக நுண்ணிய குழாய்களாக மாற, எமது இரத்தம் எமது உடலின் மிக நுண்ணிய பகுதிகளுக்கெல்லாம் செல்கின்றது. இவ்விரத்தம் ஒரு சிறிய பகுதிக்குக்கூட செல்வதில் தடை ஏற்பட்டால் அந்தப்பகுதி இறந்துவிடும் அல்லது தொழிற்படாது.

குழாய்கள் மூலம் இரத்தத்தை உடலெங்கும் செலுத்தும் தொழிலை இதயம் செய்கின்றது. தனது தொழிலை ஒழுங்காகச் செய்து கொள்ள அதற்கும் இரத்தம் தேவை. அதனை தன்னிடமிருந்து செல்லும் பெரிய குழாயிலிருந்து வெளிவரும் கிளை ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்கின்றது.

சிலருக்கு பிளட்பிரஷர் இல்லை, கொலஸ்ரோல் மட்டம் சாதாரணமானது. போதாக்குறைக்கு சர்க்கரை வியாதியும் இல்லை. ஆனால் திடீரென்று பக்கவாத நோய்க்கு ஆளாவார்கள். இடதோ, வலதோ கை கால் வேலை செய்யாது. அத்துடன் சேர்த்து சிலருக்கு பேச்சு வராது. சிலருக்கு நாம் கூறுவதே விளங்கமுடியாமல் இருக்கும், ... இப்படி பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிலரது வாக்குமூலங்கள் (பக்கவாத நோயாளியின் குடும்பத்தவர்கள் வாயிலாக)

  • 'செயின் ஸ்மோக்கர் தான். புகைப்பதை நிறுத்தி ஆறு வருஷமாச்சு'
  • 'பயிர்களுக்கு அடிக்கும் கிருமிநாசினி கடையில் வருஷக்கணக்கில் வேலை செய்தவர்'
  • 'பக்டரியில் புகை வாற இடத்திலதான் வேல, வேற வருத்தங்கள் வாறல்ல. இடைக்கிடை இருமுவார்'

இவர்களின் CT ஸ்கான் றிப்போட் கூறுவதென்னவென்றால்--
-parietal, frontal, cerebellum, main artery block, branch block, clot...
(செரிபிறம் பறைட்டல், செறிபலம் அல்லது செரிசிறம் புறொண்டல்... மெயின் ஆட்டரி, ப்ளொக்,க்ளொட்)

மூளைக்கு இரத்தம் கொண்டுவரும் இரத்தக்குழாய்களின் கிளைகளில் ஒன்று இரத்தக்கட்டி வந்து அடைத்துள்ளது. இதனால் மூளையின் பகுதி ஒன்று பாதிக்கப்படுகின்றது.  CT scan, நரம்பியல் நிபுணர் இரண்டும் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு  பாதிப்பு ஏற்பட்டு மூன்று மணித்தியாலங்களுள் நோயாளியை கொண்டுசென்றால் இதிலிருந்து மீட்சி பெற வாய்ப்பு உண்டு.
இதே இரத்தக்கட்டி மூளைக்குப் போகாமல், இதய தசைகளுக்கு குருதி வழங்கும், இரத்தக்குழாயின் கிளைகள் ஒன்றுக்கும் சென்று அடைக்கலாம். இதயத்தில் ஒரு சிறு கிளைக்குழாய் அடைத்தால், வேறு கிளைகள் மூலம் குருதிவழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நமக்கு அசாதாரண நிலை எதுவும் ஏற்படாது. ஆனால், நாளடைவில் வெவ்வேறு குழாய்களில் அடைப்பு ஏற்பட, நெஞ்சுவலி, களைப்பு என்று ஏற்பட ECG, ECHO என்று போனால்; அன்ஜியோகிராம் மெயின் பிராஞ்ச் (main branch) 80% அடைப்பு அத்தோடு மூன்று சிறிய குழாய்களில் 100% அடைப்பு என்று முடிவுரைக்கும். அதன்படி bypass க்கு போகலாம், Stent வைக்கப்படலாம்.

இவையெல்லாம் விட்டு சிலருக்கு இதயத்திற்கான பெரிய இரத்தக்குழாய் க்ளொட் - இரத்தக்கட்டியினால் அடைபட்டால் ECG, ECHO எதுவும் தேவையில்லை-- கண்ணீர் அஞ்சலி, பதாதை விடை சொல்லும்.

உங்கள் வயது 35 - 40 க்கு மேலிருந்தால், நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், புகைபிடித்து விட்டிருந்தாலும், அல்லது ஏதாவது சந்தேகம் இருந்தாலோ பொதுவைத்திய நிபுணரையோ அல்லது இதய நோய் சிகிச்சை நிபுணரையோ கலந்தாலோசிப்பதன்மூலம் தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.  இரத்தக்கட்டி உருவாகாமலிருக்க மாத்திரைகள் தரப்படலாம்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் புகைபிடிப்பவராக இருந்தால், அவர்களுக்கு சிரங்குகள் ஆறுவது கடினம். அதேசமயம் அவர்களுக்கு  கால்விரல்கள், பாதம் கைவிரல்கள் என்று சிறிய பகுதிகளின் திசுக்கள் இருப்பது அடிக்கடி நடக்கும். இதுதான் கங்கிறீன் gangrene என்பது உருவாகி அந்தப்பகுதியை சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவார்கள். அதாவது விரல்கள் பாதம், முழங்காலுக்குகீழ் என்று எம்மில் அவயவம் இழக்கப்படும். சர்க்கரை வியாதிக்காரர்கள் புகைத்தலை, புகைவரும் இடங்களில் நிற்பதை நிறுத்தியே ஆகவேண்டும்.

சனநெருக்கடி - இடநெருக்கடி  - இன்று விரைவாக பரவிக்கொண்டிருக்க  வீடுகள் தங்களுக்கிடையேயான இடைவெளிகளை குறைத்துக்கொள்வது மாத்திரமின்றி ஒன்றைவிட ஒன்று உயர்ந்து, சில வீடுகளுக்கான காற்றோட்டத்தை குறைத்தே விடுகின்றன. காற்று வீசாவிட்டாலும் இயற்கையாக நாம் அறியாமலே ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு காற்றின் நகர்வு ஒன்று இருந்துகொண்டேயேயிருக்கும்.  இந்த நகர்வுக்கும் தடை ஏற்படும் சமயத்தில்  நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டுக்கு இடையிலான விகிதங்கள் மாறும். இந்த நேரத்தில் மின்விசிறியைப் பாவித்தாலும் அரைத்த மாவை அரைப்பதுபோல்  மாறிய விகிதங்கள் அப்படியேதான் இருக்கும்.

நாம் சுவாசிக்கும் சுத்தமான உலர்ந்த காற்றில் ஏறக்குறைய 78% நைதரசனும் 20%ஒட்சிசனும். 0.93% ஆகனும், 0.04% காபனீரொட்சைட்டும் உண்டு. இதில் நைதரசன் எமது சுவாசத்தைப் பொறுத்தமட்டில் அலட்டிக்கொள்ளாத வாயு. ஆகனும் அப்படித்தான். நாம் சுவாசிக்கும்பொழுது, உள்ளெடுக்கும் காற்றில் ஒட்சிசன் அளவு 20% ஆக இருக்கும். வெளிவிடும் காற்றில் காபனீரொட்சைட்டு 0.04% வீதத்திலும் கூடியதாக இருக்கும். காற்று நகராமல் இருந்தால் அக்காற்றில் ஒட்சிசன் சதவீதம் குறைந்து, காபனீரொட்சைட்டின் சதவீதம் கூடுகின்றது. நாம் நிமிடத்திற்கு 15-20 தடவைகள் சுவாசிக்கின்றோம். மணித்தியாலங்களுக்கு எவ்வளவு? நாளுக்கு எத்தனை என்பது உங்கள் கணக்கு.

ஒருவரை காற்றுப்புகாத பெட்டி ஒன்றினுள் வைத்துப் பூட்டினால், அவரைச் சுற்றியுள்ள சாதாரண காற்றின் விகிதம் அவர் சுவாசிக்க சுவாசிக்க மாறிக்கொண்டேவந்து ஒட்சிசன் குறைய, அவர் மயக்கமுற்று முடிவில் இறந்தே போவார்.

கள்ளத்தனமாக ஒரு நாட்டில் இருந்து, இன்னொரு நாட்டிற்கு புலம் பெயர ஆசைப்பட்டவர்கள்  25-30 பேரை உள்வாங்கிக் கொள்ளும் அடைக்கப்பட்ட container அடுத்த நாட்டிற்கு சென்றதும், பிணங்களாய் கொட்டிய செய்திகள் எல்லாம் நாம் அறிந்தவையே.

இயற்கை காற்று வீச்சு குறைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு ஜலதோசம், தலைவலி, தோல்வியாதிகள் இடைக்கிடையே வரக்கூடும். மேலும் ஆஸ்துமா வியாதி உள்ளவர்களுக்கு அதன் உக்கிரம் கூடும். சிறார்களுக்கு திடீரென உடம்பெல்லாம் திட்டு திட்டாய் தடித்து, சிலவேளை மெல்லிய ஜுரம், அரிப்பும் ஏற்படலாம். வைத்தியசாலையில்  என்ன ஒவ்வாத சாப்பாடு கொடுத்தீர்கள் ஸ்டிரோய்ட் ஊசி போடவேண்டும் என்று சொல்வார்கள்.
நாங்கள் நுளம்பு (கொசு) அறையினுள்ளே வரக்கூடும் என்ற பயத்திலும், திருடர்கள் பயத்திலும் ஜன்னல், கதவுகளை இறுக்கப் பூட்டிக்கொண்டு, தூங்குகின்றோம். மின்விசிறி வேலை செய்தால் போதுமென்று நினைக்கின்றோம். இதுமுன்பு சொன்னதுபோல்...அரைத்தமாவு கதை.  காற்றின் விகிதார குறை.

அறைக்கு இருக்கும் ஜன்னல்கள் பகலிலும் சரி, இரவிலும் சரி திறந்து வையுங்கள். அத்துடன் அதற்கு எதிராகவோ, பக்கவாட்டிலோ வேறு ஜன்னல்கள், கதவுகள் இருந்தால் அவற்றையும் திறந்து வைத்தால் நல்லது. இயற்கை காற்று ஒருவழியால் வந்து, மறுவழியால் நகரும். மின்விசிறியும் சேர்ந்து பாவிக்கலாம்.

திருடர் பயம், நுளம்பு பயம் போக்க உங்கள் அறிவாற்றலை கொண்டு ஏதாவது செய்வீர்கள்.

'இரவு பத்து மணி மட்டும் TV பார்த்துவிட்டு, சிரிச்சு, கதையெல்லாம் கதைத்துவிட்டு,  அறைக் கதவைப் பூட்டிவிட்டு, படுக்கப்போனவர் ஆறரைமணியாகியும் எழும்பி வரவில்லையே எண்டு(என்று)  உள்ளே போய் லைட்டைப் போட்டுப்பார்த்தால் fan வேலை செய்யுது...நான் என்னத்த சொல்லுவன்....ஒண்டும் சொல்லாம கொள்ளாமல் போயிட்டாரே....'
இது இடைக்கிடை நாம் கேட்கின்ற சோகம் கலந்த அழுகுரலின் ஒரு பகுதி...பூட்டிய அறை, காற்றோட்டம் குறைவு...என்பதெல்லாம் உங்களுக்கு விளக்கத் தேவை இல்லை.

அவர், இதயநோய் அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ இருந்திருக்கலாம். அல்லது அவர் ஆரோக்கியமானவராகவும் இருந்திருக்கலாம்.
பூட்டிய ஜன்னல், கதவுகள்தான் அவரது கடைசிமூச்சைக் கண்டிருக்கும். உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை முதலில் நம் கையை மூக்கின் அருகே கொண்டு சென்றுதான் பார்க்கிறோம். உயிருக்கு உயிரான காற்றை (மூச்சு) கொண்டுதான் கணிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

Wednesday, May 01, 2019

பகுதி 7: காற்று

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


காற்று என்பது உயிரான விஷயம். அதுவும் சுத்தமான காற்றானது உயிருக்கு உயிரானது. ஆனால் அது உயிரற்ற பொருள் (சடப்பொருள்) உலகத்தில் அனைத்து விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது. 

நைதரசன், ஒட்சிசன், ஆகன், காபனீரொட்சைட் மிக மிகச் சிறிய அளவில் வேறுசில வாயுக்களையும் சேர்த்து கலவையாக்கி, அந்த வாயுக்களின் கலப்பு விகிதம் கிட்டத்தட்ட மாறாமல் வைத்துக்கொண்டு தூசு, புகை, இரசாயன நெடி போன்றவற்றுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளாத காற்று சுத்தமான காற்று. 

கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் வசிப்பவர்கள் இழந்துவிட்ட சொர்க்கம் அது. கிராமப்புறங்களில் தென்னங்காற்று, வேப்பங்காற்று, அரச மரக்காற்று, புளியமரக்காற்று...பூங்காற்று என வெவ்வேறு காரக்டர்களில் சுதந்திரமாக உலாவந்து, எமது ஆரோக்கியம் பேணும் காற்று. 

நகரங்களில் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் இருந்து வரும் புகை, காற்றின் சாதாரண நகர்வையும் மீறி, காற்றை கலப்படக்காற்றாக்கி, நகரை முக்கியமாக பகலில் சூழ்ந்து வீதியோரங்களில் உள்ள வீடுகளில் கடைகளில் இருப்போர், பாதசாரிகள் என பல பேரின் மூச்சுக்காற்றாக அது அமைகின்றது. 

விளைவு - அடிக்கடி ஜலதோசம், இடைக்கிடை தலைவலி, கூடவே தொண்டை அரிப்பு, ஆஸ்துமாவை கூடவே வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதன் உக்கிர தாக்கம் போன்றவை நம்மோடு உறவு வைத்துக்கொள்ள, சிலரை மார்பு நோய் சிகிச்சை நிலையங்களுக்கும், புற்றுநோய் சிகிச்சை நிலையங்களுக்கும் வழிதேடவைக்கும். 
ஆனால் தற்போது இலங்கையில்- வாகனப்புகை பரிசோதனை - புகை இல்லை என்ற சான்றிதழ் - சுற்றுச்சூழல் தூய்மைத்திட்டம் என்று வந்தபிறகு, வாகனப்புகை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் வீதியில் இருந்திருந்தாற்போல் சில வாகனகங்கள் செல்லும்போது , மூக்கைப் பொத்த வேண்டியுள்ளது. இவ்வாகனங்கள் ஊழலின் பலகூறுகளில் இரண்டான கையூட்டம், குறுக்குவழி என்பவற்றினூடாக சென்றுவந்திருக்கலாம் என்பது என் எண்ணம். பெரும்பாலான ஆசிய நாடுகள் தங்களுடைய பொதுவான உருவமில்லாத தேசிய அடையாளமாக ஊழலை வைத்திருப்பதால், இதெல்லாம் ஆச்சரியமில்லா விஷயங்களில் ஒன்று.

சிகரெட், பீடி, சுருட்டு புகையை பொது இடங்களில் இருந்தும், பொது போக்குவரத்து  வாகனங்களிலும் இருந்தும் விரட்டிவிட்டோம். நல்ல விடயம். ஆனால் சிலர் சிறார்கள், மற்றவர்கள் இருக்க வீட்டில் புகைக்கிறார்கள். இதனை அவர்கள் வீட்டின் வெளியே வைத்துக்கொள்வது நல்லது. அல்லது புகைத்தலை நிறுத்துவது மிக மிக நல்லது. அவர்கள் யாரும் இல்லையென்று வீட்டினுள் பிகை பிடித்தாலும், அப்புகை சில மணிநேரம் வீட்டினுள்ளேயே அடங்கி இருக்கும். மற்றவர்கள், முக்கியமாக சிறார்கள் சிகரெட்டைத் தொடாமலே புகைபிடிப்பவர்களாகி விடுவார்கள்.

புகை என்றாலே எந்தப்புகை என்றாலும் சிறார்களோ, பெர்யவர்களோ அதனை சுவாசிப்பதை அதாவது புகையில் நிற்பதைத் தவிர்க்கவேண்டும். சிறார்களுக்கு சுவாசப்பை நோய்கள், தோல் நோய்கள் ஏற்பட இடமுண்டு. ஆனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் குருதியில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். அவர்கள் புகைப்பதை நிறுத்தி, பல வருடங்கள் ஆனாலும் இது ஏற்படுகின்றது. சுவாசப்பை நோய்கள், மார்பு புற்றுநோய் எதுவும் வரவில்லையே என்று அவர்கள் திருப்தியடைந்தாலும் இரத்த ஓட்டத்தில் திடீரென்று எந்தச் சமயத்திலும் இக்கட்டிகள் உருவாகலாம். இது எனது நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தில் பெற்ற உண்மை.

மருத்துவ அல்லது நமது உடற்தொழிற்பாடு பற்றி அறியாதவர்கள், இனி நான் கூறப்போவதை விளங்கிக் கொள்ள முடிகின்றதா என்பதைப் பாருங்கள். சுருக்கம் மிகமிகச் சுருக்கம்.

Tuesday, April 16, 2019

பகுதி 6 - கண்டல் காயங்கள்

சுகாதாரத் துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

கண்டல் – contusion

இனி அடிபட்ட, தாக்குப்பட்ட அவயங்களுக்கு வருவோம். அவயங்களில் வலி வீக்கம் என்பன இருந்தால், சிலரது அனுபவ ஏழாம் அறிவே முறிவு உள்ளது அல்லது இல்லை என்றே சொல்லி விடும். அதற்கு மேலே எக்ஸ்றே எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஏதோவகையில் முறிவு இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டால் --தசையோ, முள்ளந்தண்டோ, நெஞ்சோ, முதுகோ அவயங்களிலோ வலி, வீக்கம் இருந்தால் அந்த இடத்தை  முடிந்தவரை அசையாமல் ஓய்வில் வைத்திருப்பது நல்லது. உடனடியாக அந்த இடத்தை கசக்குவதோ, உரஞ்சுவதோ, நோவு தீர்க்கும் தைல வகைகள் பூசுவதோ கூடாது.
ஐஸ் பை மாத்திரம் பிடிக்கவேண்டும். 3- 5 நிமிடங்களுக்கு Ice pack ஐ பாதிக்கப்பட்ட இடத்திற்கு மேலாகவும் சுற்றியும் மெதுவாக தடவ வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட நேரத்திலிருந்து 3- 4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை செய்யவேண்டும். அடுத்ததாக பாதிக்கப்பட்டபகுதி, தலையணைகளின் உதவியுடனோ, எப்படியோ ஓரளவு உயரமாக வைக்கப்படல் வேண்டும்.

ஐஸ் துண்டுகளை சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டால் அதுதான் ஐஸ் pack ஐஸ் கட்டிகள் இல்லாவிட்டால் குளிர் தண்ணீர் கூட பயன்படுத்தலாம்.
இப்படிச் செய்ய வலி, வீக்கம் குறைந்து கொண்டே வரும். 48 மணித்தியாலங்களுக்குப் பிறகு இருக்கும் வலியை குறைக்க சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அதனையும் ஒரு நாளைக்கு 3 - 4 தடவை விட்டு விட்டு  செய்யலாம். ஒத்தடம் சுடு நீராகவோ அல்லது சுடு சோறாகவோ இருக்கலாம். நோவு தீர்க்கும் தைலம் பாவிக்கலாம். ஆரம்பத்தில் அழுத்தி மசாஜ் பண்ணாமல் படிப்படியாக அழுத்தம் கூட்டலாம். உங்கள் வீட்டில் infrared lamp இருந்தால் ஒத்தடத்திற்குப் பதிலாக அதன்மூலம் சூடு பிடிக்கலாம்.  தைலம் gel போட்டு உருவி விடுவதாயிருந்தால் மேல்நோக்கி அதாவது உங்கள் இதயம் எங்கிருக்கின்றதோ அந்த திசையில் உருவ வேண்டும். எனவே கழுத்து தலை என்று வரும்போது கீழ்நோக்கி உருவ வேண்டும். இந்த விதியை மீறவேண்டாம். மேலும் வலி, நீக்கம் என்பன குறைந்துவிட்டால் உங்கள் சிகிச்சையை நிறுத்தலாம்.

சிலசமயங்களில் தாக்குதலுக்கு அல்லது பாதிப்புக்கு உள்ளான இடம் வலி வீக்கத்துடன் இருந்தும் காயம் இல்லாது இருந்தாலும் தோலின் கீழே இரத்தம் கசிந்து, நீலமாக அல்லது சற்று கறுப்பாக அல்லது இரண்டும் கலந்தோ, உலக வரைபடத்தில் காணப்படும் நாடுகளின் வடிவமாகவோ அல்லது வட்டமாக இருக்கும். இது contusion (கண்டல்) எனப்படும்.
எப்படியிருந்தாலும் அடிபட்ட இடத்திற்கு உடனேயே ஐஸ் (ice pack) சிகிச்சை    4-5 நிமிடங்களுக்கு, 3-4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவையாக இரண்டு நாட்களுக்கு செய்ய வேண்டும். பின்பு மெல்லிய சூடு ஒத்தடம்.
4-5 நாட்களுக்குப் பிறகு நோவு தீர்க்கும் தைலம் போட்டு contusion உண்டான இடத்தின் விளிம்பைச் சுற்றி 25-30 தடவைகள் சற்று அழுத்தி (மசாஜ்) உருவ வேண்டும். 3-4 தடவை தினமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்கையில் அந்த contusion வரைபட அளவு சிறிதாகி மறையும். அது மறைந்த பின்பும் அவ்விடம் தோற்றத்தில் எல்லாம் சரியாக இருந்தாலும், உள்ளே தடிப்பாக அல்லது இறுக்கமாக இருக்கலாம். அதனையும் அழுத்தி மசாஜ் பண்ணி சரியான திசையில் உருவி இல்லாமல் செய்யவேண்டும். அது கடைசிவரை இல்லாமல் போகுமட்டும் மசாஜ் செய்யவேண்டும். இது மிக முக்கியம்.

கீழ்வரும் பிறர் கூற்றுக்களைப் படியுங்கள்.
  • 'முச்சக்கரவண்டி குடைசாய்ந்து, கம்பி தொடையில் பலமாக அடிபட்டு, நோவெல்லாம் வந்து சுகமாகி ஐந்தாறு வருஷம்...'
  • 'கிரிக்கெட் பந்து தொடையில் பட்டு, கண்டிச்சு எல்லாம் சரியாகி மூன்று வருஷத்திற்கு மேல்...'
  • 'படியில் ஏறும்போது சறுக்கி விழுந்து படியின் விளிம்பு தொடையில் அடித்து, கஷ்டப்பட்டு, சரியாகி நீண்டகாலம்...'
இவை என் அனுபவப் பாதையில் சந்தித்த பல நோயாளர்களில் சிலரின் முன்கதைச் சுருக்கங்கள்.

அவர்கள் எல்லோருமே தொடையில் மயலோமா (myeloma), ஒஸ்டியோமா (osteoma) என புற்று நோயின் அவதாரங்களில் ஒன்றை கொண்டிருந்தனர்.
கால் இழந்து, எலும்பு துண்டாகி வெட்டியெடுக்கப்பட்டு, புற்றுநோய் வேறு இடங்களுக்கு வியாபித்து என்று பல்வேறு நிலைகளில் அவர்கள் இருந்தனர்.
தொடையில் அடிபடுவதற்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தமோ அல்லது ஒப்பந்தமோ நான் அறியேன். நான் சந்திக்காத இதே போன்ற ஆட்கள் உலகில் எத்தனையோ நானறியேன்.
ஆனால் நீங்கள் அறிந்து - இப்படியான அடிபடுதல் - தாக்குதல் உங்களுக்காவது - மற்றவர்களுக்காவது விசேடமாக தொடையில் நிகழ்ந்தால் ஐஸ் - பின்பு சூடு - மஜாஜ் செய்து எந்த தடிப்போ - கட்டியோ இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம்.

கடைசியில் ஐஸ் விடயமொன்று.

ஐஸ் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த இளஞன் ஒருவன் தவறுதலாக விழுந்து, ஐஸ் தரையில் பலதடவை உருண்டு, பிரண்டு எழும்ப, இடது தோளில் பலத்த அடி. வீட்டில் தாங்கமுடியாத வலி வீக்கத்தால் அவதிப்பட்டு, நகரத்திலேயே பெயர்பெற்ற எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணரிடம் சென்றான். அவர் திருப்பித் திருப்பி கையை பரிசோதித்து விட்டு, 'முறிவு ஏதும் இல்லை. 3 -4 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை 5 நிமிடம் வரை, தடவிக்கொண்டிருங்கள், தடவிய பின்பு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, மீண்டும் மீண்டும் பாவியுங்கள். சரியாகிவிடும்.' என்று , ஐஸ் பை (ice pack) ஒன்றைக் கொடுக்க, அவன் முறைப்புடன் பீஸ் கொடுத்ததெல்லாம் சரித்திரங்கள்.
அடுத்து வரவிருப்பது - காற்று

Sunday, April 14, 2019

பகுதி 5: முள்ளந்தண்டு பாதிப்பு

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம்.

மேலிருந்து விழுந்து, விபத்தில் அடிபட்டு இருக்கும் ஒருவருக்கு இப்படி நேரலாம். அல்லது நேரவைப்பதற்கு ஏற்கனவே உடைந்த, விலகிய துண்டுகள் தருணம் பார்த்து இருக்கலாம். பாதிக்கப்பட்டவர் வலியால் அவதியுறுவார். அவரை நாம் தூக்குவதாலோ, எழுப்பி நிறுத்துவதாலோ இருக்க வைப்பதாலோ உடைந்து விலகிய துண்டுகளுக்கு நாம் சந்தர்ப்பம் கொடுத்துவிடுவோம். முண்ணான் சிதைவுறும்.

பாதிக்கப்பட்டவர் படுக்கை நிலையிலேயே இருக்கவேண்டும். குப்புறப்படுத்தியிருந்தால் நல்லது. அவரை மெதுமெதுவாக பக்கவாட்டாக படுத்தநிலையிலேயே பலகை அல்லது கை ஸ்ரெச்சர் (hand stretcher) ஒன்றுக்கு மாற்றி வைத்தியசாலையை நாடவேண்டும். அங்கு நமது செயற்கை ஏழாம் அறிவு - X-Ray, உடைவு, விலகல் என்பதற்குரிய விடை சொல்லிவிடும். உடைவு, விலகல் இல்லையென்றால் வலி போன்ற விடயங்களை குறைக்கும் வழி இறுதியில் சொல்லப்படும்.

இதற்கும் மேலாக, எலும்பு, டிஸ்க் விலகல், முண்ணான் பாதிப்பு என்று எது இருந்தாலும் அவற்றை எலும்பு, முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் (orthopedic surgeon) நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் (neurosurgeon) என்று இருவரோ அல்லது ஒருவரோ கையாள்வார்கள். அவர்களுக்கும் தெளிவாக பாதிப்பை அறிந்து கொள்ள இருக்கவே இருக்கிறது செயற்கை எட்டாம் அறிவு - C.T. scan - அதற்கு மேல் செயற்கை ஒன்பதாம் அறிவை கொண்டிருக்கின்றது. M.R.I.

முண்ணானில் அல்லது நரம்பில் ஏற்படும் பாதிப்பு, சிகிச்சை மூலம் பழைய நிலைக்கு திரும்பும் என்பது கேள்விக்குறி போடவேண்டிய விஷயம். எதிர்காலத்தில் செயற்கை பத்தாம் அறிவு வந்து (Aliens) ஏலியன்களுடன் கலந்து பேசி, புதியமுறை மூலம் பாதிக்கப்பட்டவர் நூறு சதவீதம் குணமடைந்தால், உலகில் படுக்கையிலும், தள்ளுவண்டியிலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானவர்கள் மகிழ்ச்சியடையவார்கள்.
அடுத்து வரவிருப்பது கண்டல் காயங்கள்

Saturday, April 13, 2019

பகுதி 4 - விபத்துகளும் காயங்களும்

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர் (இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.
அடிபடுதல் - விழுதல் - மோதுதல் - விபத்துக்கு உட்படுதல் etc
இவற்றில் ஏதாவது நடந்து, இரத்தம் சிந்தும் காயங்கள், ஏதும் ஏற்படாமல் இருந்தால் 'அப்பாடா, தப்பியாச்சு...' என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் ஏற்படும்.
ஆனால், தாக்கத்திற்கு ஆளான உடலின் பகுதி வீங்கலாம், வலி ஏற்படலாம், சூடாகலாம். சிவப்போ, வேறு நிறமோ ஆகலாம். இவை அத்தனையும் சேர்ந்தே வரலாம்.
இங்கு குறிப்பிடப்போவது மேற்கூறிய பிரச்சினைகளை இலகுவாகவும், விரைவாகவும் குறைக்கின்ற முறை.
ஆனால், அடிபடுதல் போன்ற மேற்கூறிய சமாச்சாரங்கள் உடலின் எந்தப்பகுதியில் நிகழ்ந்தது - பாதிக்கப்பட்டது என்பதில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். அப்படியெனும்போது - முதலில் வருபவர்கள் தலை, முதுகுத்தண்டு, முதுகெலும்பு என்பன.

தலை அடிபடுதல்

தலை பாதிக்கப்பட்டு - சிறிய மயக்கமோ அல்லது பெரிய மயக்கமோ, தனியாக வாந்தியோ, அல்லது மயக்கத்துடன் வாந்தியோ ஏற்பட்டால் - உடனடியாக நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். அத்துடன், அவரது தலை உடலின் மேற்பகுதியுடன் சேர்த்து 30-45 பாகை உயர்த்திப் பிடித்தவாறு வைத்திருத்தல் வேண்டும். இதனை மற்றவர்களின் மடி அல்லது தலையணை மூலம் செய்யலாம்.

வைத்தியசாலையில் குறைந்தது 48 மணித்தியாலங்கள் வைத்திய கண்காணிப்பில் இருக்கவேண்டும். தலை உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதா? என்பதில் மற்றவர்கள் மறந்தாலும், நீங்கள் கவனமெடுப்பது நல்லது. மற்றவற்றை வைத்திய சேவையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மயக்கம், வாந்தி இல்லாது தலை பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையை நீங்களே செய்து கொள்ளலாம். ஆனால், அடிபட்டவர் குழந்தையோ, பெரியவரோ, அவரது பாதிக்கபட்ட இடத்தை உடனே நமது கையால் கசக்குவதும், நோவு தீர்க்கும் எந்த வித கிறீம் அல்லது ஜெல் போட்டு உரஞ்சுவதும் பாதிப்பை பலமடங்கு கூட்டும். வலி குறைந்து, வீக்கம் (swelling) குறைந்து சாதாரணநிலைக்கு வரும் காலம் கூடும். இதற்கான தீர்வு உடலின் ஏனைய பாகங்களில் உண்டாகும் பாதிப்புகளில் எடுக்கவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை முடிந்தவரை சுருக்கமாக பார்த்த பின், கூறப்படும்.

முதுகெலும்பு

முள்ளந்தண்டு விடயத்தை அனாடமி, பிஸியோலொஜி பாடங்களெல்லாம் சேர்த்து விளக்கமுற்பட்டால் இன்னொரு மகாபாரதமாகி வியாசர் கோபிப்பார். அதைவிட இன்னும் பாடங்களா? என்று நீங்கள் கோபிப்பீர்கள். முடிந்தவரை சுருக்கிக்கொள்கிறேன்.

முதுகெலும்பு, நம் கைபிடி சைஸை விட சற்று குறைவான பருமனில் உள்ள எலும்புத்துண்டுகளால் ஆனது. அவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் சிறிய பருமனில் உள்ள டிஸ்க் எனும் சற்று தடித்த தட்டு வைக்கப்பட்டு , மேலும் தசைகள்  ligament எனப்படும் நார்களால் வலுவான முதுகெலும்பாக அமைந்து உடற்கூட்டை அமைப்பதில் தனது தொழில்களில் ஒன்றாக கொண்டுள்ளது.
ஒவ்வொரு முதுகெலும்புத் துண்டுகளும் தங்களது டிஸ்க் அமைந்துள்ள பாகத்தை விட்டு பின்பக்கமாக மீதிப் பாகங்களைக்கொண்டு துவாரமொன்றை அமைக்க, அது அடுக்கப்படும்போது, துவாரங்கள் எல்லம் சேர்ந்து குழாய் அமைப்பொன்று உருவாக்கப்படுகின்றது. இக்குழாய் மண்டையோட்டின் கீழே உள்ள துளையுள் தொடர்பாயுள்ளது. 
மண்டையோட்டினுள் மூளை உள்ளது என சிறுவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மூளை இல்லாதவனுக்கும் தெரியும். 
நரம்புக்கலங்கள் பலசேர்ந்து, விசேட அமைப்புகள் பல அமையப்பெற்று மண்டையோட்டை நிரப்பிக் கொண்டிருக்கும் மூளையிலிருந்து நரம்புகளும் அவற்றின் இணைப்புக்கலங்களும் சேர்ந்து, வாழையின் நடுப்பகுதித் தண்டுபோல், மண்டையோட்டின் கீழ் துவாரத்தினூடாக - அதாவது மண்டையோட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து, நமது முதுகெலும்புக் குழாய்க்குள் நுழைந்து, இடுப்பு முள்ளந்தண்டுவரை செல்கின்றது. இது முண்ணான் (spiral cord) என பெயர் கொண்டுள்ளது. (சீரான புடலங்காய் அல்லது முருங்கைக்காய் என்று உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.)


நமது உடம்பின் அனைத்துப்பகுதியிலிருந்தும் நரம்புகள் இந்த முருங்கைக்காய் முண்ணானுடன் தொடர்பு கொள்ள, இந்த முண்ணானிலிருந்து நரம்புகள் வெளிவந்து உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல -நரம்புகளின் வலைப்பின்னல் உடம்பு முழுவதும் உள்ளது.
சூடாக உள்ளதா? குளிரா ? பூச்சி ஊர்கின்றதா? நுளம்பு (கொசு) கடிக்கின்றதா? ஊசி குத்துகின்றதா? etc போன்ற உணர்வுகள், கை, கால் அசைவு, உடம்பு அசைவு போன்றவற்றை இந்த நரம்புகள், முண்ணான், மூளை என்பன இணைந்து செய்கின்றன.
ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்பட்டால், அதற்குரிய பகுதியில் உணர்வுகள், அசைவுகள் நம்மிடமிருந்து விடைபெறும். இதையும் விட முண்ணானின் பகுதி ஒரு மட்டத்தில் பாதிக்கப்பட்டால், சிதைவடைந்தால், அந்த மட்டத்திற்கு  கீழே உள்ள உடற்பகுதி எல்லாமே இயக்கம், உணர்வு என்பவற்றை இழந்துவிடும்.

இந்த முண்ணான் சிதைவு சில நோய்களாலும் ஏற்படலாம். முண்ணானை பாதுகாக்கும் முள்ளந்தண்டு எலும்புகள் ஒன்றோ, இரண்டோ உடைந்து விலகி முண்ணானை அழுத்தி, சிதைவடையச் செய்யலாம். டிஸ்க் விலகியே மேற்கூறிய பாதகத்தைச் செய்யலாம். 
அடுத்து வரவிருப்பது - முதுகெலும்பு பாதிப்பு

Saturday, April 06, 2019

பகுதி 3: பதட்டம் தவிர்க்கும் மூச்சுப் பயிற்சி


சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.


மூச்சுப் பயிற்சி

உங்களைச் சுற்றியுள்ள சுத்தமான இயற்கைக் காற்றை மூக்கின் மூலமாக, அவசரப்படாமல் மெதுவாக இழுங்கள். முடிந்தவை உள் இழுத்து அதேசமயத்தில் உங்கள்  இடது கை விரல்களில் பெருவிரல் நுனியையும், சுட்டுவிரல் நுனியையும் தொட்டவாறு இருந்தால் நல்லது. இழுத்த காற்றை 4-5 செக்கன்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு இதுவரைக்கும் சாதரணமாக மூடியிருந்த வாயை திறந்து, காற்றை வாய் மூலமாக வெளியிடுங்கள். அவசரப்படாமல் இதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். இதனை 4-5 தடவை செய்யலாம்.

இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்? பக்கத்தில் யார் யார் நிற்கின்றார்கள்? எல்லாமே தெரிய வரும். இப்போது நீங்கள் தளர்வு நிலைக்கு வந்திருக்கின்றீர்கள்.
இன்னுமொரு காட்சிக்கு வருவோம்.

உங்கள் வயதை நாற்பதுக்கு மேல் என எண்ணிக்கொண்டு , இக்காட்சியில் உங்களையே கதாநாயகனாக ஆக்கிக் கொள்கிறேன்.
நீங்கள் ஒரு விடயமாக அலுவலகம் ஒன்றினுள் நுழைகிறீர்கள். ஏற்கனவே, அந்த விடயமாக நான்கு தடவைகளுக்கு மேல் அங்கு போயிருக்கிறீர்கள். விடயம் சரியாவந்த பாடாயில்லை. கடைசியாக ஒரு பத்திரத்தின் மூலப்பிரதி கேட்டு அதையும் கையளித்திருக்கிறீர்கள். எட்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உங்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் இங்கு வருகின்றீர்கள்.
இப்போது குறிப்பிட்ட ஒரு உத்தியோகத்தரிடம் போய் நிற்கிறீர்கள். ஏற்கனவே பல தடவை, அவரிடம் போயிருந்தும், இப்போது அந்த உத்தியோகத்தர் உங்களிடம் 'என்ன வேண்டும்?' எனக் கேட்கிறார்.
நீங்கள் விடயத்தச் சொல்ல உத்தியோகத்தர் ஒரு கோப்பை எடுத்து, திறந்து பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே கையளித்த மூலப் பிரதியை கேட்கிறார்.
நீங்கள் ஏற்கனவே தந்துவிட்டதைச் சொல்கிறீர்கள் அவர் மறுக்கிறார். வாக்குவாதம் வலுக்கிறது. உங்களுக்கு ரென்சன் கூடி கோபம் தலைக்கேறுகின்றது. 

ஏற்கனவே உங்களுக்கு பிளட்பிரஷர் அதிகம். பிளட்பிரஷர் கூடுகின்றது. அதிக பிளட்பிரஷரால் உங்களுடைய மூளையில் உள்ள சிறிய இரத்தக்குழாய் வெடிக்கலாம். விளைவு பக்கவாத நோயாளியாக உங்களை சரிந்து விழச் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் சிலசமயம் உங்களை பிணமாகவே மாற்றலாம்.
இது எதுவும் நடக்காமல் கடகட வென அலுவலகத்தை விட்டு வெளியேறி, வீதிக்கு வந்து பேருந்து தரிப்பிடத்தில் நிற்கிறீர்கள். உங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இரண்டு பேருந்துகள் உங்களைக் கடந்து செல்கின்றன. அவை எந்த ஊருக்கு போகின்றன என்று பெயர்ப்பலகையைப் பார்க்காததால் தவறவிடுகிறீர்கள். பக்கத்தில் நிற்பவர் யார் யார் என்று கூட உணராமல், மூளைக்குள் காரியாலயத்தில் நடந்த சம்பவமே நிரம்பியிருக்கின்றது.

இந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், இனிமேலும் தினமும் இடைக்கிடை என்ன செய்ய வேண்டும்.
மூச்சுப் பயிற்சியைச் செய்கிறீர்கள்.
இப்போது எல்லாமே உங்களுக்கு வெளிச்சமாகின்றது. நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் என்பது புரிகிறது. இப்போதுதான் உணர்கிறீர்கள் உங்கள் குடையையும் இன்னுமொரு சிறிய பையையும் உத்தியோகத்தர் மேசைமேல் மறந்து வைத்துவிட்டு வந்ததை.
மூச்சு விடயத்தை விடாது செய்துகொண்டு காரியாலயத்தினுள் நுழைகின்றீர்கள். நீங்கள் செய்வது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  உத்தியோகத்தரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். அவரும் உங்களிடம் 'நான் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதோ இருக்கிறது உங்கள் பத்திரத்தின் மூலப்பிரதி, வேலைப் பழுவில் வேறு இடத்தில் வைத்துவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் உங்கள் விடயம் பூர்த்தியாக கடிதம் உங்களுக்கு வரும்' என்று புன்னகையுடன் சொல்கிறார்.  தான் எடுத்து வைத்திருந்த குடையையும், சின்ன கைப்பையையும் கொடுக்கிறார். 

நன்றி சொன்ன உங்கள் முகத்தில் புன்னகை. காரியாலயத்தில் இருந்த அனைவர் முகத்திலும் புன்னகை. அவர்களிடம் புன்னகையாலே விடைபெற்று வெளியே வருகின்றீர்கள்.
இப்போது பேருந்தில் வீட்டிற்கு பயணம் செய்யும் நீங்கள் விட்டு விட்டு தேவையான போதெல்லாம் மூச்சுப் பயிற்சி செய்கிறீர்கள். ஆறுதல் அடைகிறீர்கள்.

அந்தக் குடும்பத்தலைவியும் கணவனும் கூட காலைப் பரபரப்புக்கிடையில் வேலை செய்துகொண்டே மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்களானால் அவர்களுக்கு ஏற்பட்ட ரென்சன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த இலகுவான பயிற்சியை விட்டு விட்டு உங்களால்  நாள்முழுக்க செய்ய முடியும்போதெல்லாம் செய்யுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட சிலர் தொடர்ச்சியான ரென்சனுக்கு ஆளாகி இருப்பர். அவர்களுக்கு தூக்கமின்மை, கோபம், புலனை ரிவி பார்த்தல், பத்திரிகை வாசித்தல் போன்றவற்றில் செலுத்த முடியாமை, பசியின்மை. தொழிலில் அக்கறை காட்டாமை , சமூகத்தொடர்பை தவிர்த்தல் என்று பல பிரச்சினைகளுடன் இருப்பார்கள். மனநோயாளியான நிலைதான்.

போரிலோ அல்லது அடக்குமுறையாளர்களால் தொடர்ச்சியான சித்திரவதைக்குள்ளானவர்கள், பலாத்கார வன்புணர்வுக்கு உள்ளானவர்கள், குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது வேறு ஆட்கள் விபத்தில் அல்லது வேறு வகையில் கொல்லப்படுவதை நேரில் பார்த்தவர்கள் போன்றோர் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாவார்கள்.

இவர்களுக்கு மனோவைத்திய நிபுணர் அல்லது அது பற்றி அறிவுள்ள சாதாரண வைத்தியர் அல்லது ஆற்றுப்படுத்துவோர் என தமிழில் அழைக்கப்படும் கவுன்சிலர், பிஸியோதெறபிஸ்ட் ஆகியோர் கொண்ட குழு வைத்தியம் பார்த்து குணமடையச் செய்வர்.

மூச்சுப்பயிற்சி நீங்களாகவே செய்து உங்களுக்கே பயன் கிடைக்க கூடிய ஒரு வழி.
பயிற்சி செய்கின்றீர்கள்!
ஆறுதல் அடைகிறீர்கள்!

அடுத்து வரவிருப்பது - விபத்துகளும் காயங்களும்

Wednesday, March 27, 2019

பகுதி 2: நோய் - தவிர்ப்பும் தீர்வும்


சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

அறிமுகம்

பதட்டம் – ரென்சன் (Tension)


ரென்சன் என்றாலே பதட்டம், படபடப்பு, கொந்தளிப்பு, மன அமைதியுடன் இருக்க முடியாத நிலை, மூளை வெவ்வேறு யோசனைகளுக்கு போய்க்கொண்டிருக்க நாம் வேறு செய்கைகளச் செய்வது, இத்தியாதிகளுடன் வேறுபலவும் இருக்கின்றன.

எல்லோரும் உடல், மன தளர்வுடன் ஆறுதலாக இருக்கவே விரும்புகிறோம். அப்போதுதான் நமது செய்கைகள் பிழையின்றியும், தெளிவாகவும் அழகாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தினை பேண இது பல வழிகளில் உதவும்.
ஆனால், வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற கவலை, பயம் ஒரே நேரத்தில் பல அலுவல்களை பார்க்க வேண்டிய நிலைமை, அவசரப்படுதல், ஏன் அதிகூடிய மகிழ்ச்சி கூட எம்மை ரென்சனுக்கு உள்ளாக்குகின்றன. அந்த அமைதி, தளர்வு குலைகின்றன.  வீட்டைப் பூட்டி அரைவாசித்தூரம் வந்தபிறகு, பின்கதவைப் பூட்டினோமா, போன்ற ஐயப்பாடுகள் வருவதும் டென்சனுடன் காரியங்கள் ஆற்றுவதால்தான்.

கணவனும், மனைவியும் வெவ்வேறு இடங்களில் தொழில் புரியும் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு வருவோம். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். காலை நான்கு மணிக்கு குடும்பத்தலைவி படுக்கையை விட்டு எழும்புகிறாள். மனம் அமைதியாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பல வேலைகளச் செய்து முடிக்க வேண்டும். பல்விளக்கல், குளிப்பு எல்லாம் கொஞ்சம் அவசரத்தில் நடக்கின்றது. காலை உணவு, மதிய உணவு தயாரிப்புகள் நடக்கின்றது. காபி தயாரிக்கப்பட்டு கணவர், குழந்தைகள் எழுப்பப்படுகின்றனர்.. முனகிக் கொண்டு அடுத்தபக்கம் திரும்பிப் படுக்கும் மகனை அதட்டி சத்தமிட்டு எழுப்புகிறாள்.

அவளது இதயத் துடிப்பு எண்ணிக்கை சற்று கூடுகின்றது.

அவளது கணவனும் பிள்ளைகளைக் குளிப்பாட்டி உடை அணிவித்து, காரியாலயம் போக அவசரபடுகின்றனர்.

அவருக்கும் இதயத்துடிப்பு சற்று கூடுகின்றது.

இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பியபின் கணவன் ஸ்கூட்டரில் சென்று ட்ரபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு காத்திருக்க, நேரம் போகின்றதென ரென்சன் கூடுகின்றது. மனைவிக்கும் அவசரப்பட்டு வேலையை முடிக்க ரென்சன் கூடுகின்றது.

வீதியில் இறங்கி அவசர அவசரமாக நடந்த அந்த குடும்பத்தலைவிக்கு முன்னால் சிரித்துக் கொண்டு நடந்து சென்ற உறவினர் கூட கண்ணுக்குத் தெரியவில்லை. இடைமறித்து பிச்சை கேட்ட பிச்சைக்காரனை அதட்டி, நெஞ்சு படபடப்புடன் பஸ்ஸில் ஏறுகின்றாள். கடைசியில் கணவன், மனைவி இருவருமே காரியாலயம் சென்று, இருக்கையில் அமர்ந்து நேரம் செல்ல செல்ல இதயத் துடிப்பு சீராகி, பதட்டம் எல்லாம் அடங்கி ஆறுதல் நிலைக்கு வருகின்றனர். மனைவி அப்போதுதான் அந்த பிச்சைக்காரனை அவ்வளவு ஏன் அதட்டினோம் என்று நினைக்கிறாள். சில்லறை கொடுத்திருக்கலாமே என்று நினைக்கிறாள்.

இது சாதரணமாக பல சமயங்களில் நமக்கு உருவாகும் ரென்சன் தானாகவே உருவாகி தானாகவே சாதாரண நிலைக்கு வருகின்றது. இந்த சமயத்தில் நமது இதயத்திற்கு கூடுதல் வேலை வருகின்றது.
நமது இதயம் வருடக்கணக்காக தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றது. உலகில் இப்படி வேலை செய்யும் இயந்திரம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இதயத்தின் வேலைகளை ரென்சன் சமயத்தில் இன்னும் கூட்டுகின்றோம். இப்படி அடிக்கடி கூட்டுவது இதயத்திற்கு நல்லது அல்ல. ரென்சன் அடிக்கடி உண்டாவதைத் தடுக்கவேண்டும்.

ரென்சன் இருக்கும்பொழுது, சிறிய சிறிய விடயங்களுக்கும் மற்றவர்களுடன் கோபப்படுவீர்கள். ஒரு விடயத்தில் புலனை நன்றாகச் செலுத்த முடியாதிருக்கும். உங்களைச் சுற்றியுள்ள ஆட்கள், சூழல் என்பவை உங்களுக்கு தெளிவாகப் புரியாமல் இருக்கும். ஞாபகமறதி கூட இருக்கும். ரென்சன் நீடித்து இருந்தால் இரவில் தூக்கமும் வராது. அல்லது ஒழுங்கான தூக்கமாக இருக்காது.

இப்படிப்பட்ட ரென்சன் எங்களது வாழ்க்கையில் தேவையாகவும் உள்ளது. நாங்கள் மேடையில் பேசும்போதோ, நடிக்கும்போதோ, நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும்போதோ நிகழ்வுகளில் நாமும் பங்குபற்றும்போதோ இப்படியே பல 'போதோ' க்கள் இருக்க - குறிப்பிட்ட அளவு ரென்சன் இவைகளுக்கெல்லாம் நமக்கு வேண்டும். சுருக்கிச் சொல்வதானால் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியை இங்கு நான் கொண்டுவர வேண்டியுள்ளது.

இக்கட்டுரையின் முக்கியமான குறிக்கோள்; வைத்தியத்தை நாடாது, பதட்டத்தைத் தவிர்க்கும் முறையொன்றைச் சொல்வதே.

அடுத்து வரவிருப்பது ரென்சன் தவிர்த்தல்

Monday, March 25, 2019

நோய் - தவிர்ப்பும் தீர்வும்

சுகாதாரத்துறையில் சேவை புரியும் அனுபவம் மிக்க நண்பரொருவர்(இன்பராஜா), தன் சேமிப்பிலுள்ள ஆலோசனைகளை தமிழில் வழங்கி மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில், இங்கே என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இது பல பாகங்களாகத் தொகுக்கப்படும்.
வாசியுங்கள், பயன்பெறுங்கள்.

அறிமுகம்


இவ்வுலகில் ஒவ்வொரு நேரத் துணிக்கையிலும், கோடிக் கணக்கான உயிர்கள் அழிவுறுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான உயிர்கள் உலகின் மடிக்குள் வருகின்றன. அவற்றுள் மனித உயிர்களும் அடங்கும்.

ஒவ்வொரு சிசுவும் முழு உருவாக்கம் பெற்று சாதிக்கப் போகின்றதோ, உலகிற்கு போதிக்கப் போகின்றதோ அல்லாது வீட்டையோ, நாட்டையோ பாதிக்கப்போகின்றதோ தெரியாது.

ஆனால் தெரிந்த உண்மை என்னவென்றால், சிசு பிறக்கும் போதே போராடத் தயாரகிக் கொண்டே பிறக்கின்றது, என்பதுதான். சிசு பிறந்தவுடன் அழுவதே தனது சுவாசப்பைகளை விரியவைக்கும் போரட்டத்தினால்தான். பின் குப்புற விழவும், தவழவும், எழுந்து நிற்கவும் போராடித்தான் வெற்றியீட்டுகின்றது. வளர, வளர போராட்டங்கள்தான். சிலருக்கு போராட்டங்கள் கூடலாம். சிலருக்கு குறையலாம். சிலருக்கு கொஞ்சமாகவே போராட்டங்கள் அமையலாம். ஆனால் ஒரேயொரு போராட்டத்தை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நமக்கு ஏற்படும் நோய்களுக்கான போராட்டம்தான் அது.

நோய்களை இல்லாது செய்யவோ, தடுக்கவோ அல்லது குறைக்கவோ வெவ்வேறு வகையான வைத்திய முறைகள் உலகில் உள்ளன. அவற்றில் பிரதான இடம் வகிப்பது வெஸ்டர்ன் மெடிசின் எனப்படும் மேல்நாட்டு வைத்திய முறை. கீழ்நாட்டு வைத்தியங்களான ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி, நாட்டுவைத்தியம் இன்னும் ஏதேதோ உள்ளன. நாட்டுக்கு நாடு வெவ்வேறு வைத்தியங்கள் உள்ளன. 

வெவ்வேறு சிகிச்சை முறைகள் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் எல்லா நோய்களையும் அவை தீர்க்கின்றனவா என்பது அறியப்படாத விடயம். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பிரதான இடத்தை வகிப்பது மேல்நாட்டு வைத்திய முறையே. அதன் விஸ்தீரணம் மிகப் பெரியது. மேல்நாட்டு வைத்தியமுறை தனியார் வைத்திய சாலைகளாக உருவெடுத்து , இன்று பெரிய வியாபாரத் தளமாக மாறியுள்ளது. இன்னொரு விடயம் என்னவென்றால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கிராமங்களிலும், நகரங்களின் மறைவான பகுதிகளிலும் இருந்து கொண்டு, தராதரமற்ற போலி வைத்தியர்கள் மக்களை ஏமாற்றி சிகிச்சை செய்து, பணம் சம்பாதிக்கின்றார்கள். சுகாதாரத் துறையை மேம்படுத்துகிறோம், மேம்படுத்தி விட்டோம் எனக் கூறுபவர்கள், தகுந்த நடவடிக்கைகள் மூலம் இவர்களைத் தடுப்பது, பிடிப்பது போன்ற விடயங்களைச் செய்யாமலிருப்பது என்பதெல்லாம் வேறுவிடயங்கள். 

இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் நமக்கு வருகின்ற சில பல நோய்களை தடுப்பது, குறைப்பது, தீர்ப்பது என்பது. அவற்றை இயற்கையின் உதவியுடன் நாமாகவே செய்யலாம். எவரது உதவியும் இல்லாமல், எமக்கோ மற்றவர்களுக்கோ சிகிச்சை செய்யலாம்.
இப்போது உணவுகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் தேகாரோக்கியத்திற்காக பழைய முறைக்கு மாற்ற வேண்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல விடயங்கள் தான் ஆனால் அந்த உணவுகள் தான் நமக்கு கிடைப்பது பெரும் பாடாக இருக்கின்றது. எனது விடயங்கள் அந்தப் பக்கமாக போகாது என்பதை இங்கு முதலில் குறிப்பிட விரும்புகிறேன். 

சிகிச்சை முறைகளை சொல்ல முன்னர் நான் யார் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். நான் ஒரு பிஸியோதெறபிஸ்ட் (Physiotherapist). 45 வருட அனுபவம் என்னிடம் ஒட்டி இருக்கின்றது. ஆயிரக்கணக்கானதோ அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகளுடனோ தொடர்புபட்டிருக்கின்றேன்.
அத்துடன் இன்னும் என்னென்னவோ என்னிடம் சேர்ந்து, நான் மேலே சொன்னவாறு சில, பல உடல் ரீதியான பிரச்சினைகளை நம்மாலே தீர்த்துக் கொள்ளலாம் என்கிற அறிவை உங்களுக்கு தரலாம், நீங்களும் பயன் பெறலாம்.மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்பதற்காக இதனை எழுதுகிறேன். இதுவே எனது இலக்கு. 

Sunday, March 03, 2019

திருக்குறள் வேதத்திலிருந்து வந்ததா?

திருக்குறள் வேதங்களிலிருந்து பெறப்பட்ட அறிவியல் நூல் என்று பறைசாற்றலும், புத்தகம் எழுதுவோருமாக பரபரப்பு வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன இப்பொழுது. 
நாமறிந்த வரைக்கும், நண்பர்கள் பலர் மூலமாகவும், நாம் அறிவது, வேதங்கள் எழுதப்படாத ஒரு தொகுப்பென்பதே. பிரம்மாவிடமிருந்து சீடர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது என்பது தான் நாம் தெரிந்திருப்பது.

பிரம்மா மற்றும் அவரின் சீடர்களுக்கே சரியான விளக்கம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்.

இப்படியாகக் கடத்தப்படும் வேதம், காலத்துக்குக் காலம் பிறரிடமிருந்து கற்கும் நல்ல கருத்துக்களையும் உள்வாங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லையே.

விக்கிப்பீடியாவின் தரவின்படி, வேதங்கள் எழுதப்பட்ட காலம் ஒரு 1200 ஆண்டுகள் முன்னர் தான். அப்படியிருக்க, 2500 ஆண்டுகள் பழமையான திருக்குறள் வேதத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமே.

இதோ, விக்கிப்பீடியா சொல்வது: (https://en.wikipedia.org/wiki/Vedas)
Due to the ephemeral nature of the manuscript material (birch bark or palm leaves), surviving manuscripts rarely surpass an age of a few hundred years.[43] The Sampurnanand Sanskrit University has a Rigveda manuscript from the 14th century;[44] however, there are a number of older Veda manuscripts in Nepal that are dated from the 11th century onwards.[45]