Saturday, September 24, 2016

பாம்பும் ஏணியும்


வசதியாக வாழ்வதற்கும்
முன்னேற்றி வைப்பதற்கும்
எம்பி எம்பித் தூக்குதற்கும்
ஏணியாக எழுந்து நிற்கும்

குட்டிக் குனிவிக்கவும்
முன்னேற்ற முளைகளைக்
கிள்ளி அழிவிக்கவும்
விடமூச்சுப் பாம்பாக

பலமுகங்கள் கொண்டதுவே

சாதகங்கள் பலருக்கும்
பாதகங்கள் பலருக்கும்
வாரிக் கொடுக்குமிந்த
வலிமிக்க சாதியது

பள்ளியிலும் வேலையிலும்
மற்றும்பல இடங்களிலும்
பலபேரைத் தூக்கிவிடும்
பலபேரைத் தாழ்த்திவிடும்

படித்திருந்தும் அறிவின்றிப்
பின்பற்றுங் கற்றோரும்
படிப்பறிவே இல்லாத
பாமர மக்களும்

உரம்போட்டுச் செழிப்பிக்கும்
இம்மக்கள் தூ நிலையோர்
உலகதர முன்னேற்றம்
ஒருபோதுங் காணாரே

மானக் கேடு
வெட்கக் கேடு
நிறுத்தாமற்
போராடு

Saturday, September 10, 2016

தமிழின் கொடை



ஆங்கிலத்திற்கு ஒரு இட்டுக்கட்டு. (ஆங்கிலத்திற்கே? கொடுமை!)

தமிழர்கள் மத்தியில், ஆங்கிலத்தில் வார்த்தைகளை எழுத முடியாத அளவிற்கு ஆங்கில மொழிக்கு ஒரு குறை ஏற்பட்டுள்ளது.
அதனால் தமிழர்கள் தமிழ் மொழியில் ஆங்கிலத்தை எழுதி ஆங்கில மொழிக்குக் கை கொடுத்து வருகிறார்கள்.
பத்திரிகைகள், சஞ்சிகைகள் என  எங்கும் இந்தக் கொடை கண்கூடாகத் தெரிகிறது.
ஆங்கில வார்த்தைகளை இலகுவாக எழுத இப்பொழுது தமிழ் அரிச்சுவடி உதவுகிறது.
ஒரு சிறு உதாரணம்:
டபுள் ஹீரோயின்ஸுடன் டூயட்

முன்னொரு காலத்தில், சமசுக்கிருதத்திற்கும் கொடை வழங்கியது நம் தமிழே.

கொடையிலும் தமிழ் தான் முதலிடம்.

வாழ்க கொடுக்கும் தமிழர்கள்.