Tuesday, January 27, 2009

இசை - மொழி – தமிழ் (முழுவதும்)

இசையால் வசமாகா இதயமெது? இருக்க முடியாதே.

இசை பற்றிச் சிந்திக்கும் போது அதன் தோற்றமும் வளர்ச்சியும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

மனித இனம் சிந்திக்கத் தொடங்கிய பொழுது அவனோடு இருந்த பறவைகளும் மிருகங்களும் இசையின் தோற்றத்திற்கு உதவியிருக்க வேண்டும். தற்போதிருக்கும் கிளி, மைனா, குயில் போன்ற பறவைகள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கலாம். இப் பறவைகள் எழுப்பும் இனிய ஒலியே மனித இசையின் முதல் உந்து சக்தியாக இருந்திருக்கலாம். கிளியின் இனிய கீக்கீச் சத்தமும், குயிலின் இனிய கூக்கூச் சத்தமும், மைனா போன்ற பறவைகளின் இனிய ஒலிகளும் இசைக்குரிய வித்தாக மனித சிந்தனையில் உருவாகியிருக்க வேண்டும். பறவைகளின் ஒலி காதுக்கு இனிமையாகவும் சிந்தைக்கு இதமாகவும் இருப்பதை மனிதன் உணர்ந்த போது, தானும் அது போன்ற ஒலிகளை எழுப்பி மனித இசையைத் தொடக்கி வைத்திருக்க வேண்டும்.

ஓய்வு நேரங்களில் மனிதன் இவ்வகை ஓசைகளை எழுப்பி அதை மெருகூட்டி இசையை வளர்க்கத் தொடங்கியிருக்க வேண்டும். பறவைகளின் சத்தங்கள் இசையாக ஒலித்த போது அதில் செய்திப் பரிமாற்றமும் உணர்ச்சி வெளிப்பாடும் இருந்ததை மனிதன் கவனிக்கத் தவறியிருக்க மாட்டான். மனிதனின் வெவ்வேறு உணர்ச்சிகளும் அவனது ஒலி இசை மூலம் வெளிப்பட்டு இசைக்கு மெருகு சேர்த்தன. மகிழ்ச்சி, துயரம், கோபம், தனிமை போன்ற உணர்ச்சிகளின் இசை வடிவ வெளிப்பாடு இசையில் வகைகளைக் கொண்டுவரத் துணை புரிந்தது.

மனிதனின் கூர்ப்பின் ஒரு கட்டத்தில், அவன் மொழியொன்றைப் பேசத் தொடங்கிய போது, அந்த மொழியின் சொற்களை இசையிற் போட்டு மனித உணர்ச்சிகள் வெளிப்பட்ட போது இசைக்கு ஒரு புது வடிவம் கிடைத்திருந்திருக்கிறது. இசைக் கருவிகளிலிருந்து ஒலிக்கும் இசையாக வெளிப்படும் மனித உணர்ச்சிகள் சொற்களைக் கொண்டு ஒலிக்கும் போது பாடல்கள் இசைக்கத் தொடங்கின. இசைக்காக மொழியில் உருவான பாடல்களும், பாடல்களுக்காக உருவாகும் இசை வடிவங்களும் ஒன்றையொன்று வளர்க்கத் தொடங்கின.

சொற்களும் சொற்றொடர்களும் இசையோடு ஒலிக்க வேண்டுமானால், சொற்றொடர்கள் ஒரு ஒழுங்கில் கோர்க்கப்பட வேண்டுமென்ற கட்டாயம், பாட்டு உருவாக்கத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற அடுத்த கட்ட நிலைக்கு மொழியை எடுத்துச் சென்றது. ஓசை நயம் குன்றாமல் பாடுவதற்கு ஒலி நயத்தோடு கூடிய பாட்டுகள் உருவாகி அவை இசையை மெருகூட்டிய அதே நேரத்தில் மொழியின் வளர்ச்சியில் பாட்டு இயற்றும் துறை உருவாக அவை காரணியாக இருந்தன.

மனிதன் இசைத்தான். அதில் மொழியை இழைத்தான். இசையில் இழைக்கப்பட்ட மொழிக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்து அதன் வளர்ச்சிக்கு அது துணை புரிந்தது. ஒலியாய்த் தொடங்கிய இசை பாட்டாகிப் பல்கிப் பெருகியது.

மனித வளர்ச்சி பல்லாயிரம் வருடங்களூடாகப் பயணிக்கும் போது, மனிதன் பூகோள ரீதியாகப் பிரிந்து பரவத் தொடங்கினான். பிரிந்து பரவிய மனிதன் தான் சென்ற திசைகளில் தன் மொழியையும் திரித்து வழங்கிக் கால ஓட்டத்தில், வெவ்வேறான மொழிகளின் தோற்றத்திற்கும் வித்திட்டான். ஆனால் எல்லா மொழிகளிலும், மனிதனின் இசை வளர்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது.

இசைக்கும், மொழிக்கும் முடிச்சுப் போடுவது பொருந்தாதென்று சில கருத்துகளும், இசையின் இனிமை மொழிகளில் தங்கியுள்ளது என்பது போன்ற சில கருத்துகளும் இங்கே நிலவுகின்றன. இசையின் இனிமையத் தீர்மானிப்பது இசையக் கேட்போரே. கேட்பவரின் முடிவைத் தீர்மானிப்பது அவர் இது நாள் வரை பழகிய இசை வகையறாக்கள். அவரது இசைப் பரிச்சியம் சாதாரணமாக அவரது தாயின் தாலாட்டில் தாய் மொழியில் தொடங்குகிறது. ஆக, இசைப் பரிச்சியம் தாய் மொழியில் தொடங்குவதையும் அதையே ஒருவர் முதலில் பழக்கப் படுத்தியிருப்பதையும் நாம் இங்கு காண்கிறோம். இதுவே இசை நுகர்வோரின் முடிவைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்கும். தனக்குப் பழக்கமான மொழியில் உரையாடும் போது கிடைக்கும் வசதி பழக்கமல்லாத மொழியில் உரையாடும் நேரங்களில் கிடைப்பதில்லை என்பது எங்களில் பலருக்குப் புரிந்த உண்மை. சொந்த மொழியின் இலகு நடையும் இனிமையும் வசதியும் வந்த மொழியில் கிடைக்க முடியாத ஒன்று. இதுவே சொந்த மொழிப் பாடல்களை நுகர்வதிலும் எற்படும் உணர்வாகும்.

ஒருவரது தாய் மொழியல்லாத மொழியில் இருக்கும் எப்பேர்ப்பட்ட இனிமையான பாட்டும் அவரது தாய் மொழியில் இருக்கும் ஒரு சாதாரணப் பாட்டை விட அவருக்கு இனிமையாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தப் பிற மொழிப் பாடலில் அவருள்ளே புகுந்து கொள்வது அப் பாடலின் இனிமையின் ஒரு பகுதியான இசை மட்டுமே. அப் பாடலின் மொழியில் கலந்திருக்கும் கவிச் சுவை அவரைச் சென்றடைவதில்லை. அதனால் அப் பாடலின் முழு இனிமையும் அவருக்குக் கிடைக்காது என்பது வெளிப்படையே.

அந்தப் பாடலின் இசையின் இனிமை அவரைச் சேர்வதற்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்திய உப கண்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்திய மொழிகளின் அனேகமான எல்லாப் பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஓசை அடிப்படையிலிருந்து இசைக்கின்றன. ஆகவே, எந்த ஒரு இந்தியப் பாடலின் இசை வடிவமும் எந்த ஒரு இந்தியருக்கும் கேட்கக் கூடியதாக இருப்பது இயற்கையே. இந்த அடிப்படை இசை இந்தியப் பாடல்களிலும், மத்திய கிழக்குப் பகுதிப் பாடல்களிலும் இருப்பதை நாம் காணலாம். அதனால் மத்திய கிழக்குப் பகுதி மக்களின் இசை கூட நமக்குள் தாக்கம் ஏற்படுத்துவது இலகுவே. இதன் அனுபவம் பலருக்கு ஏற்படடிருக்கலாம். ஒரு அன்னிய நாட்டில் தனித்து வசித்த பலர், அரேபிய மொழிப் பாடல்களைக் கேட்கக் கிடைத்திருந்தால் அது ஒரு தனி அனுபவம். இதுவே ஒரு சீன மொழிப் பாடலாக இருந்திருந்தால் அதனால் ஒரு தாக்கத்தை எற்படுத்தியிருக்க முடியாது. இன்னும் அரேபியா - இந்தியா என்பவற்றின் தொடர்பு, வரலாறு சார்ந்த ஒரு துறை. அதை விட்டு விட்டு நம் இசைப் பார்வைக்குத் திரும்புவோம்.

இப்பொழுது, தென்னிந்திய இசையாகப் பலர் படிப்பதும் பயிற்சி எடுத்துக் கொள்வதுமான கர்நாடக இசையைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்தக் கர்நாடக இசையில் வடமொழியிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட பாட்டுகள் மட்டுமே முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்திய மற்ற மொழிகளை விட தெலுங்கும் வடமொழியும் முதன்மைப் படுத்தப் பட்டிருக்கும் காரணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

இந்திய வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்த வரலாற்றில் வட மொழியின் தாக்கமும் ஆதிக்கமும் வேதங்கள், புராணங்களூடாக வலுப்பெற்றிருப்பதைக் காண முடிந்திருக்கும். வடமொழி மக்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பரந்து வாழ நேர்ந்த காலங்களில், வட மொழியின் தாக்கமும் விரிந்து பரவத் தொடங்கியது. பரந்து கிடந்த பிராந்திய மொழிகளிலும் அம் மொழியினரின் இசை வடிவிலும் வட மொழி கொஞ்சங் கொஞ்சமாகக் கலக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தின் குருகுலக் கல்வி முறை, வடமொழிப் பாவனையை ஆதரித்துக் காத்த மன்னராட்சி முறை என்பன வடமொழியின் தாக்கம் தடையின்றிப் புகுந்து விளையாட உதவியாக இருந்தன. உள்ளூர் மக்களின் அறியாமையாலும், மன்னர்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளாலும் கலை, கல்வி போன்றவற்றில் முன்னிலையைத் தக்க வைத்த வடமொழியாளர்கள் தம் மொழியின் ஆதிக்கத்தை உறுதியாகவும் வேகமாகவும் உள்ளூரில் வளர்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் தம் மொழியின் இருப்பை விரும்பி உள்ளூர் மொழி வளர்ச்சியையும் அதிலிருந்த கலை வடிவங்களையும் தலையெடுக்காமலும் பார்த்துக் கொண்டார்கள். இந்தக் கைங்கரியத்தில் அவர்களுக்குப் பெரிய உதவியாக விளங்கியது அக்கால மக்களின் மதம் பற்றிய நம்பிக்கைகள். இந்த மத நம்பிக்கையையே அடி நாதமாகக் கொண்டது வட மொழியும் அதன் பாடல்களும். இதனால், வடமொழியும் அது சார்ந்த இசைவடிவும் மிக இலகுவில் மதப் பலவீனர்களாக இருந்த பாமரப் பிராந்திய மக்களிடையே திணிக்கப் படக்கூடியனவாக இருந்தன.

மன்னராட்சி நடந்து கொண்டிருந்த கால கட்டங்களில், எல்லா நாடுகளுமே அடிக்கடி வேறு வேறு நாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ் வருவதும் மாறுவதுமாக இருந்தன. இப்படியாக மாறி வரும் மன்னர்கள் தத்தம் மொழியின் பால் ஆதரவாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறாக ஒரு மொழியின் மேல் இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவது இயல்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவற்றில் அகப்படாமல் எம்மொழி வந்தாலும் அதற்கெல்லாம் ஈடு கொடுத்து மன்னர்களினதும் மக்களினதும் மத நம்பிக்கையை ஊடகமாக வைத்து வட மொழி தொடர்ந்து ஊடுருவிக் கொண்டேயிருந்தது. இதனாற் சொந்த மொழியில் இசை வளர்ச்சி என்பது சிதைந்து கொண்டே போனது. அவ்வப் பொழுது அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் நாட்டின் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காலங்களில் சொந்த மொழியில் இசையின் வளர்ச்சிக்குப் பங்காற்றினாலும் ஒரு முழு வளர்ச்சி என்பது எட்டப்பட முடியாமலேயே இருந்தது.

இந்த ஆட்சிச் சுழலிற் சிக்கியிருந்த தமிழ் அரசுகள் வீழ்வதும் எழுவதுமாக இருந்து வந்தன. எழுந்திருந்த காலங்களில் மதத்தையே ஊடகமாக வைத்துச் சைவத் திருமுறைகளும் வைணவ ஆழ்வார் பாடல்களும் வேறு பல ஆக்கங்களும் தமிழில் இசையோடு அறிமுகமாயின. ஆனாலும் தமிழரசுகள் வீழ்ந்த நேரத்தில் சைவத் திருமுறைகள் அமுக்கப் பட்டதும் பின்னர் ஒரு தடவை அவை குற்றுயிருங் குறையுயிருமாக வெளிக் கொணரப் பட்டதும் நாமெல்லாம் அறிந்ததே.

தமிழ் மண்ணைப் பொறுத்த வரை, இந்தச் சுழற்சிகளின் இறுதிக் கட்டமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழராட்சி முடிவுக்கு வந்த பின் தமிழ் நாடுகளின் ஆட்சிகள் பெரும் பாலும் அன்னிய மொழி மன்னர்களின் கைகளிலேயே இருந்து வந்தன. சோழராட்சிக்குப் பிறகு வட இந்தியரும், இசுலாமியரும், தெலுங்கு மற்றும் கன்னட மன்னர்களும் தமிழ் நாட்டைப் பல ஆண்டுகளாக ஆண்டு வந்தனர். இந்தக் காலத்தில் தமிழ் நாட்டின் இசையிலிருந்து தமிழ் மிகவும் பலமாகத் தள்ளப்பட்டு வடமொழியும் தெலுங்கும் இசையின் அடிப்படை என்ற நிலைக்கு வந்து கர்னாடக சங்கீதம் என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கான பொதுவான இசையாக நிலை பெற்று விட்டது. தெலுங்குக் கீர்த்தனைகளின் தந்தையென்று விழங்கும் தியாகராச சுவாமிகளும் தெலுங்கு மன்னராட்சியின் போதே தமிழகத்திலிருந்து கொண்டே அந்தக் கீர்த்தனைகளை உருவாக்கி கர்நாடக இசையில் தெலுங்குக்கு ஒரு மிக முக்கிய, நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இப்படியாகத் தமிழர் இசையிலிருந்து தமிழ் கழற்றி விடப்பட்டுத் தமிழ்ப் பாடல்களில்லாத கர்நாடக இசையென்ற ஒரு இசையைத் தென்னிந்தியர் அனைவருக்கும் பொதுவான இசை என்ற ஒரு நிலைப்பாட்டைத் தமிழரல்லாத மன்னர்கள் தமிழரிடம் திணித்து விட்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் இசை ஆர்வமுள்ள தமிழரும் கர்நாடக சங்கீதத்தைப் பயின்று பாண்டித்தியமும் பெற்று அதையே மற்றவர்களுக்கும் கற்பித்துக் கர்நாடக சங்கீதத்தை தமிழரின் சங்கீதமாகத் தொடரச் செய்யப் பெரும் பங்கு செலுத்தினார்கள். தவிரவும், இந்த இசைப் பாடல்கள் முழுக்க முழுக்க மத வழிபாட்டுப் பாடல்களாக இருந்த காரணத்தால் அப் பாடல்களுக்கு ஒரு உயர்ந்த புனிதமான இடமும் இலகுவாகக் கிடைத்தது. இந்தப் புனிதப் பட்டமும் சங்கீதம் பயின்ற எல்லோருக்கும் ஊட்டப்பட்டு வந்தமையால் இப்பாடல்களை எதிர்க்கவோ அன்றித் தவிர்த்து மத சார்பற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவோ அல்லது பயிலவோ யாருக்கும் துணிவு வரவில்லை. பக்தி என்ற பலவீனத்தால் கட்டுண்டு கிடந்த வெகுளிப் பாமர மக்கள் தமிழில் பாடுவதைக் கடவுளுக்கு எதிரான செய்கையென்று எண்ணி அதைப்பற்றிச் சிந்திக்கவே மாட்டார்களே. நாளும் பொழுதும் நாவிலும் காதிலும் விழும் கர்நாடக சங்கீதம் இசை வல்லுனர்களையும் அவர்களைச் சூழ இருந்த இசை இரசிகர்களையும் வசப்படுத்துவது தொடர்ந்து கொண்டே வந்தது.

பக்தியைப் பயன் படுத்தி அல்லது பக்தியால் பயப்படுத்திப் புகுத்தி விட்ட சங்கீதத்தில் இன்னொன்றையும் சேர்த்துக் குழப்பியிருந்தார்கள் ஆதியில் தமிழைத் தள்ளி வைத்த விற்பன்னர்கள். தமிழ் மொழியில் இருக்கும் கடின ஒலிகளும், தமிழ் மொழியில் கிடைக்காத சில ஒலிகளும் தமிழில் இசையை இனிமையாக இசைக்க முடியாமல் செய்யும் பெருந் தடைக் கற்கள் என்ற நச்சுக் கருத்தையும் பரப்பி மக்களை நம்ப வைத்து வந்தனர். இந்தப் பரப்புரை இன்றும் தொடர்வதை நாங்கள் கண் கூடாகக் காண்கிறோம். இந்த அப்பட்டமான பிழையான வாதத்தை இன்னமும் எம் மக்கள் செவி மடுக்கிறார்கள் என்பது ஒரு வேதனையான உண்மை. இந்த அபத்தத்திற்காக, இனிமையும் மொழியும் பற்றிய விளக்கம் முதலில் விளக்கப்பட்டு விட்டது.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீதத்தை வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறமிருக்க நாடகங்கள் மூலமும் கிராமிய இசை மூலமும் தமிழரிசை மறு புறத்தில் தானாகவே வளர்ந்து கொண்டிருந்தது. நாடகங்கள் பாட்டுகளால் பாடி நடிக்கப் பட்டுக்கொண்டிருந்த நாள் முதலாகத் தமிழரிசையும் தமிழ் நாடகங்களுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது. பின்னர் இது திரைப்படத் துறைக்குட் புகுந்து திரையிசையாக மிளிர்ந்த போது தமிழின் இனிமை தனித்துத் தெரிந்தது. ஆக திரைப் படப் பாடல்களால் தமிழரிசை இப்பொழுது தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பது எமக்குப் பெருமையே.

சோழராட்சிக்குப் பிறகு அதிகாரம் மிக்க அரசாக தமிழரசுகள் இன்று வரை தலை நிமிர்த்தவில்லை. சிற்றரசுகள் ஆங்காங்கே இருந்தாலும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதாக ஒன்றும் இருக்கவில்லை. அதனால் அதிகாரத்தினாற் கூடத் தமிழைத் தமிழரின் இசையில் முதன்மைப்படுத்த முடியவில்லை. இருந்தும் பாபநாசம் சிவன் போன்ற இசை அறிஞர்களின் முயற்சியால் தமிழ்ப் பாடல்கள் தோன்றினாலும் அப் பாடல்களுக்கு முறையான மரியாதை தமிழ்ப் பாடல் என்ற காரனத்தால் மறுக்கப் பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது.

அண்மைக் காலங்களாக அவ்வப்போது தோன்றும் புரட்சிகரச் சிந்தனையாளர்களினாலும் மொழிப் பற்றுள்ளவர்களின் அயராத முயற்சியிகளாலும் ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்கள் இப்பொழுது மேடைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இருந்தும் நமது தாய் மொழியில் பாடுவதும் பயில்வதுமே நமக்கு அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழ் இசைக் கலைஞர்கள் முழுமூச்சாக முயன்றால் இசைத் தமிழை மெருகூட்டி வளர்த்து நம் எதிர்காலச் சந்ததிக்கு அளிக்க முடியும். தமிழர் மத்தியில் இருக்கும் எண்ணற்ற இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் இதை உணர்வு பூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுத்த வேண்டும்.

தமிழர்கள் எப்பொழுதும் ஒரு மதசார்பற்ற நிலையிலிருந்து வழுவாமல் தங்கள் கலையை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே தமிழில் இசையைச் செப்பனிடும் பணியில் பாடலியற்றுவோர்கள் மத சார்பற்ற பாடல்களை இயற்ற வேண்டும். முன்னர் தோன்றிய தமிழ்ப் பாடல்கள் கூட மத சார்பான பாடல்களாக இருப்பது தமிழிலிசை வளர்ச்சிக்குத் துணை செய்வதாக இல்லை. மதத்தைத் தவிர்த்து ஏனைய விடயங்களை மையமாக வைத்துக் கொண்டு பாடல்களை ஆக்கித் தமிழில் பாடல்களை நிறைய உருவாக்க வேண்டும். பல மதத்தைச் சேர்ந்த எல்லாத் தமிழர்களும் இசையைத் தமிழில் முழு மனதோடு பயில நம் புதுத் தமிழிசை உகந்ததாக இருக்க வேண்டும். இசையை முறையாகக் கற்கத் தொடங்குவோருக்கு இசைச் சுர வரிசைகளில் வைத்துப் பாடுவதற்கு தமிழ்ப் பாடல்களையே தமிழர் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்கும் போது அது முழுக்க முழுக்கத் தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். பயிலுவோர் பழகும் பாட்டுகளின் பொருளுணர்ந்து கற்க வேண்டும்.

அண்மைக் காலங்களில் பல இசைக் கலைஞர்கள் தமிழில் ஏராளமான பாடல்களைப் பாடி வருகிறார்கள்.இதனால் எமது பாரம்பரிய இசை வடிவங்களில் தமிழ்ப் பாடல்களைப் பாடக் கூடிய நிலையொன்று வந்து கொண்டிருக்கின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் தாய் மொழியில் அப் பிள்ளைகள் முழுக்க முழுக்கக் கற்பதற்கு உதவி செய்ய வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருப்பது போல, தமிழர் மத்தியில் இன்றைய நாளில் இருக்கும் எண்ணிலடங்காத் தமிழ்க் கலைஞர்கள் இதற்காகத் தங்கள் திறமையைப் உபயோகித்துத் தமிழர் தமிழில் இசை கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இசையால் வசமாகா இதயமெது?
தமிழிசையால் வசமாகா இதயமெது, எது, எது?

வாழ்க தமிழரிசை.

Saturday, January 17, 2009

வாழ்க திருமா

திருவாளர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் உண்ணா நோன்பு வெற்றியடைய வாழ்த்துகள். வன் காதுகளில் எதுவும் ஏறாது, உனக்கு ஏன் இந்தப் பாதை? எனக்குச் சரியாகப் படவில்லை. என் அன்பான வேண்டுகோள் திரு இந்த உண்ணா விரததைக் கை விட வேண்டும் என்பதே. திலீபனும் அன்னை பூபதியும் போதும்.


நீதி கேட்டு முழங்குகின்றாய் திருமா
முரசு கொட்டி வாழ்த்துகின்றோம் திருமா
தொல் காப்பியனே தந்தையான திருமா
நல் காப்பியமே உந்தனது நோன்பு

உன் நோன்பு வெல்ல வேண்டும்
உன் உறுதி ஓங்க வேண்டும்
உன் போலத் தலைவன் வேண்டும்
தமிழ் வாழ நீ வேண்டும்

கல்லில் கூட நார் உரிக்கலாம்
மணலில் கூட நார் திரிக்கலாம்
கண்ணை மூடிக் கட்டியோர் முன்
உன்னை நீயும் மாய்க்கலாமோ

பலபேரை வாழவைத்த இந்தியா
தமிழோரை வீழவைப்ப துத்தியா
பிராந்தியத் தலையே இது நீதியா
தலை கால் புரியாத போதையா

அகிம்சைக்கு ஆணிவேரே காந்தியார்
ஆணிவேர் பாய்ந்தவூரே இந்தியா
ஆணிவேர் ஆடியே போகுமா
காந்தியே ஆடியே போவாரா

நீடூழி நீ வாழ்க திருமாவளவா
தமிழ் வாழ நீ வாழ்க அருமைவளவா
உன் சேயை மதித்திடு இந்தியா
உன் மதிப்பைக் காத்திடு இந்தியா