பென்னம்பெரும்
பூமி சின்னஞ்சிறி தாச்சு
வண்ணம்
நிறை மாந்தர் எங்கும் வதிவாச்சு
வெள்ளை
பெரிதென்று எண்ணுகிற நச்சு
கொள்ளை
யிடுகிறதே நிறமக்கள் மூச்சு
மதமென்றும்
மொழியென்றும் நிறமென்றும் இனமென்றும்
பரந்துவாழ்
மக்களிலே காண்பதொரு பொருட்டல்ல
பெரிதென்றும்
சிறிதென்றும் படுத்துவது பண்பல்ல
சார்புநிலைத்
தத்துவத்தில் பெரிதென்றும் பெரிதுமல்ல
மனிதரிலே
கிளைவிட்ட பல்வேறு குழுமங்கள்
பலமிக்க
கூட்டத்தால் தாழ்த்தியே வீழ்த்திவிடும்
புரையோடிப்
புழுத்திருக்கும் பாகுபாட்டுப் பேய்தன்னை
துடைத்தழித்து
வீறுநடை நாம் போடவேண்டாமோ
நிறங்களின்
கோலம் அழகென ரசிப்போரே
மனிதரில்
தோல்நிறம் கண்டு வெறுப்பு ஏனோ
வெள்ளை
உயர்வென வண்ணம் மிதிப்பீரோ
சிந்தை
சிதைந்த பேதமைப் பேயரே
எந்தவொரு
பாகுபாடும் வெறிகொண்டு திமிறயிலே
வெந்தழியும்
நாடுகளும் பண்பாடும் மனிதமுமே
இந்த
நிலை மாறிவிட நற் தலைமை எழுந்தோங்கி
துணிவோடு
வழிகாட்ட மக்களதைப் பின்தொடர்வார்
குறைவென்று
மற்றவரைக் கொடுமைப்படுத்தும் வலி
தமக்கே
நிகழுவதாய்க் கொஞ்சமெண்ணிப் பார்த்தாலே
கொடிதினிநாம்
செயலாகா என்றுணர்ந்து குறுகுவரே
கொலைவரையே
சென்றுவிடும் நிறவெறியைத் தகர்ப்பாரே
பாகுபாடு
பேசாத அனைவரையும் நேசிக்கும்
கல்வியினைப்
பிள்ளைகட்குப் புகட்டிநாம் வளர்த்தாலே
மனிதநேயம்
வளர்ந்துவிடும் இனவெறியும் அழிந்துவிடும்
இந்த அவனி
வந்தவர்கள் இன்பமாய் வாழ்ந்திடுவர்
ஆக்கம்: க. செயபாலன், 2020