முதலில் பதித்ததில் சில திருத்தங்களுடன் பாகுபாடு:
பிறப்போடு தொடங்குது இந்தப் பாகுபாடு
பிறந்தது பெண்ணா ஆணா என்று பாரு
பிள்ளை வளர்ப்போடு தொடருது இந்தப் பாகுபாடு
கடைக் குட்டிக்கு எப்பவும் செல்லச் சீரு
பள்ளிப் படிப்போடும் படருது இந்தப் பாகுபாடு
சட்டம்பி செல்வாக்கால் கிடைக்குது ஏத்தம் பாரு
இளமைத் துடிப்போடும் இணைந்திடுமே பாகுபாடு
காதலின் மறு பக்கம் சாதி என்ன என்று பாரு
நல்ல நட்போடும் பகையோடும் பாகுபாடு
சண்டையுஞ் சபையுங் கூடப் பார்க்குஞ் சாதி
வேலைக்குப் போனாலும் பாகுபாடு
பலவடிவில் பார்க்கலாம் வந்து பாரு
இந்த ஊரோ அந்தக் குறிச்சியோ
இன்னாற்றை சொந்தமோ
மறைமுகமாச் சாதி பார்ப்பு
வடக்கோ கிழக்கோ கொஞ்சம் மேலேறித்
தமிழோ சிங்களமோ சைவமோ வேதமோ
பாகுபாட்டு வேதமோ
இதையெல்லாந் தாண்டி வெளிநாடு வந்தாலும்
விதவிதமாத் துரத்துது இந்தப் பாகுபாடு
வந்தவைக்குள் பாகுபாடு அகதியாக வந்ததோ
முறையாக வந்ததோ முறைப்போடு திரும்பினால்
கறுப்போ வெள்ளையோ
வந்த நாட்டார் மத்தியில்
நாம் கறுப்போ வெள்ளையோ
ஊரிலை பார்த்தோமே
சிவலையோ கறுவலோ
அதையுந் தாண்டிப் பாகுபாடு
வெள்ளையோ இல்லையோ
திருப்பி முகத்தி லறையும் பாகுபாடு
பிறப்போடு தொடங்கி
நேற்று வரை தொடர்ந்தோமே
ஈனப் பாகுபாடு
பார்த்தது நாமேயென்ற
கண நேர உறைப்பு
இருந்தாலும் விடுவதில்லை
பார்த்து வந்த பாகுபாடு
மனிதா நீ விட்டுவிடு பாகுபாடு
வெட்கக்கேடு துக்கக்கோடு பாகுபாடு
வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருங் கேடு
உடைத்து நொருக்கி விடு பாகுபாடு
சதி என்ற அடுப்பில்
சமைத்ததுவே சாதி
சம்பாதித்து வந்ததல்ல
சாதியும் மொழியும்
இனமும் நிறமும்
அதனால்
விட்டுவிடு பாகுபாடு இன்றே நீ
பெற்று விடும் பேரெழுச்சி உன் நாடு
Tuesday, December 16, 2008
Subscribe to:
Posts (Atom)