அடக்கு முறையினர் ஆட்சியும்
ஆக்கிர மிப்புச் சூழ்ச்சியும்
இனவழிப்புப் போர்வெறியும்
ஈனக்கொலை காரரும்
உன்மத்தக் கயவரும்
ஊளயிடும் நரிகளும்
எக்காளப் படைகளும்
ஏவல் செய் நாய்களும்
ஐந்தாம் படைப் பேய்களும்
ஒற்றுமை மறுக்கவும்
ஓர்மமாய்க் கொல்லவும்
ஔவை சொன்னதல்ல
இஃதிங்கு தினந் தினமே
வலியோரே ஆழ்வதுவும்
எளியோரை அழிப்பதுவும்
புரையோடிய புண்ணாக
புதைந்திருக்கு மனிதத்தில்
பாகுபாடு பார்த்து நிற்கும்
பாவி மனிதன் பாசறையில்
செப்பட்டை அடியுடனும்
செங்குருதி வெறியுடனும்
உச்சக் கட்டச் செயல் வடிவம்
அப்பட்ட அ நாகரீகம்
இனவழிப்பு இனவழிப்பு
சிவப்பு இந்தியர்
சிதைந்து போனதும்
கறுப்பு அடிமைகள்
கண்ணீரில் வாழ்ந்ததும்
கன நூறு வருடக்
கல்லினும் திண்ணிய
கனவான் மார்களின்
கைங்கரியம் அன்றோ
ஏனென்று கேட்க
ஆருமே இல்லாது
கெட்டழிந்து போனதன்றோ
கெட்டழிந்து போனதன்றோ
அன்று தொட்டு
இன்று வரை
தொன்று தொட்ட
தந்திரமாய்த்
தொடர்ந்து வருமழிவரக்கன்
கையிலின்று அகப்பட்டுச்
சின்னா பின்னமாகச்
சிதறி ஓடுது
சன்னமும் குண்டும்
சரமாரியாய் வரவதில்
சிக்கிச் சாகுது
ஈழத் தமிழினம்
வாழத் தவிக்குது
வாழ்ந்த தமிழினம்
வெட்டை வெளியில்
அட்டை போட்டு
அடக்கி அழிக்குது
சிங்கள அரசு
அழிந்து போகுது
அழியாத் தமிழினம்
ஏனென்று கேள்வி கேட்க
ஏராளம் பேருண்டு
கேட்டுக் கொள்வதறற்கு
ஒன்றேனுங் காதுண்டோ
தந்தை மண்ணாம் தமிழகம்
கை கொடுக்கத் துடிக்கையில்
விந்தை மண்ணை ஆளும் கை
விரல் காட்டித் தடுக்குது
புலம் பெயர்ந்த சொந்த பந்தம்
பலம் கொண்டு நித்த நித்தம்
தினந் தோறும் போராட்டம்
நிற்காத ஆர்ப்பாட்டம்
பல வடிவில் செய்து கொண்டு
மன்றிலெங்கும் நீதி கேட்பு
மனுக்களெல்லாம் தள்ளுபடி
இன்று எளியோன்
நாளை வலியோன்
என்று நிலை மாறி விடும்
எம் துயரும் மாறி விடும்
மாறி விடும் அந்நேரம்
நாம் செய்யோம் இனவழிப்பு
செய்திடுவோம் புதிய பூமி
மானிடத்தை உயர்த்திப் பாடி
Monday, March 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment