தொல்காப்பியம் கூறும் மரியாதை “ர்”
அவன் - அவள் - அவர்
மரியாதை இராமன் என்பது போல மரியாதை “ர்” என்பதைப் பற்றி அலசுவோம் வாருங்கள்.
தமிழில், அவன் என்பதை அவர் என்பதும், புலவன் என்பதைப் புலவர் என்பதும், அவள் என்பதை அவர் என்பதும் போன்ற “மதிப்பு” (மரியாதை) குறித்த விளித்தல் காணப்படுகிறது.
இந்த வழக்கத்தால், தமிழ் மக்கள், அவன், இவன், உவன், எவன் என்பவற்றை அவர், இவர், உவர், எவர் என்று குறிப்பிடுகிறார்கள். இது பெண்பாலிற்கும் பொருந்தும்.
எடுத்துக் காட்டாக ஒரு வார்த்தையைப் பார்ப்போம்.
இவர் எனது ஆசிரியர் கண்ணன். இவர் கணிதம், ஆங்கிலம் இரண்டுங் கற்பிக்கிறார்.
இங்கே அவர், ஆசிரியர் போன்ற “ர்” விகுதிகளை அவன், ஆசிரியன் என்ற இடங்களிற் காண்கிறோம்.
மதிப்பு விகுதியாக “ர்” சேர்க்கும் இந்த வழக்கம் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம்
சொல்லதிகாரம்
பால் திணை, வழுவமைதி
(29)
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கினாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல
பொருள்:
உயர் திணையிடத்து ஆண் பாலினையும் பெண் பாலினையும், அத் திணைப் பாலின் பன்மையால் சொல்வதும் அஃறிணையொன்றை உயர் திணை போல் விளிப்பதும் காதலுள் வழிக் கூறுவது என உணர்க. இலக்கணப்படி சரியல்ல வாகினும், வழுவமைதி பெற்று வரும்.
அதாவது, மரியாதயாக ஒருவரைக் குறிப்பிடும்போது ஒருமை இருக்குமிடத்தில் பன்மை விகுதியைச் சேர்ப்பது, இலக்கணப்படி இல்லை என்றாலும், உலக வழக்கத்தில் உள்ளது.
“இவர் கணிதம் கற்பிக்கிறார்” என்பதில் ஆசிரியர் என்ற பெயர்ச் சொல்லிலும், கற்பிக்கிறார் என்ற வினைச் சொல்லிலும் மரியாதை செலுத்தும் பண்பாடாக “ர்” வழுவமைதி காத்து நிற்கிறது.
இது எப்படி வழுவமைதி ஆகிறது. “ர்” எனற விகுதி பன்மைக்குச் சேர்க்கப்படும் விகுதி. அவர் என்றால் படர்க்கையில் பலரைக் குறிக்கும் சொல். அவன், அவள் என்ற சொற்களுக்குப் பன்மை அவர். ஒருமையைப் பன்மையில் வழங்குவதால் இது ஓர் இலக்கண வழுவே. பன்மைச் சொல் ஒருவருக்குப் பயன்படுத்துவது பிழையாக இருந்தும் அது ஏற்றுக் கொள்ளப்படும் போது அது வழுவமைதி ஆகிறது.
அஃறிணையில்: நாம் ஆசையாக வளர்க்கும் காளை மாட்டுக்குக் காங்கேயன் என்று பெயர் வைத்திருக்கலாம். அப்போது, அந்தக் காளை மாட்டை, மாடு என்று சொல்லாமல், “காங்கேயன் புல் தின்றனா?” என்று புழங்கும் போது அஃறிணை உயர்திணையாக வழங்குவதைக் காணலாம்.
பெயர்ச் சொற்களைப் போல அது சார்ந்த வினைச் சொற்களும் இந்த மரியாதை விகுதியைப் பெறுகின்றன.
அண்ணா எங்கே சென்றார்?
அப்பா எப்பொழுது வருவார்?
அம்மா என்ன கேட்டார்?
இந்த “ர்” விகுதி, பெரும்பாலும் உறவு முறைகளுடனும், எங்களோடு தொடர்புடைய மரியாதைக்கு உரியவர்களுடனும் பயன்படுத்தப்படுகிறது.
அவை தவிர்ந்த நிலைமைகளில், ‘ன்/ள்” விகுதி பயன்பாட்டில் உண்டு.
சில ஊர் வழக்கங்களில்;
அம்மா எங்கே போனா? என்பது போனாள் என்பதிலிருந்து “ள்” ஐ நீக்கி மதிப்புக் கொடுக்கும் முறை.
“அவள் வந்தாள்” என்பது “அவ வந்தா” என்றும் சொல்லப்படுவதுண்டு.
மேலும், இனங்களின் பெயர்கள் “ன்” இல் முடியும்போதும் இதைக் காண முடியும்.
இந்தியன், இலங்கையன், தமிழன், சிங்களவன், ஆங்கிலேயன் என்பவை
இந்தியர், இலங்கையர், தமிழர், சிங்களவர், ஆங்கிலேயர் எனக் குறிப்பிடப்படும்.
உறவு முறைகளான மாமன், அண்ணன், அத்தான், மைத்துனன், பேரன் என்பவை மாமர், அண்ணர், அத்தார், மைத்துனர், பேரர் என வழங்கப்படும். இவற்றில் பல பிழைகள் இருந்தும் இவை பரவலாகப் பாவிப்பில் உண்டே.
இவை பலவற்றில் ஆண்களைக் குறிக்குஞ் சொற்கள் “ன்” இலிருந்து “ர்” இற்கு மாற்றமடைகின்றன. “ன்” என்பது மரியாதைக் குறவான ஒரு விளிப்பு எனவும் “ர்” என்பது மரியாதையான விளிப்பு எனவும் நாம் கருதுவதால் இப்படியான மாற்றத்தை உள்வாங்குகிறோம்.
ஒரு திரைப் படத்தில், நக்கீரனு(ரு)க்கும் சிவனு(ரு?)க்கும் இடையில் இடம்பெறும் வாக்குவாதத்தில்:
“அவன் இவன் என்ற ஏக வசனம் எதற்கு?”
என்றொரு உரையாடல் மரியாதையை வலியுறுத்தி நிகழ்வது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஆகவே மரியாதை கருதி பன்மை விகுதி சேர்த்து மக்களுடன் பழகுவது தமிழ்ப் பண்பாட்டில் காலங் காலமாக இருக்கிறது போலுள்ளது.
பொதுவாகக் குறிப்பிடப்படும் தொழில் சார்ந்த பெயர்கள்.
அரசன், அமைச்சன், பாடகன், கவிஞன், நடிகன் என்பவை அரசர், அமைச்சர், பாடகர், நடிகர் என வரும்.
இதில், இன்னொரு இக்கட்டான நிலைமை; நடிகர்கள், அமைச்சர்கள் என்று பன்மையாக்கம். அதாவது அவர்கள், இவர்கள், ஆசிரியர்கள் போன்ற “கள்” விகுதி பெறும் பன்மைச் சொற்களின் தகுதி கேள்விக்குறியே.
இன்னொரு வியப்பும் உண்டு. அதாவது, பெண்களுக்கு இந்த மரியாதை மிகப் பரந்த அளவில் வழங்கப் படுவதில்லை எனபது கண்கூடே.
பாடகி, நடிகை, ஆசிரியை போன்றவை பல வேளைகளில் “ர்” சேர்க்காமலே புழங்கப்படுவதையும் நாம் காண்கிறோம். அவள் ஒரு நடிகை என்று சொல்லும் போது மதிப்புக் கருதி அவர் ஒரு நடிகர் என்று சொல்வதில்லை. அவர் ஒரு நடிகை என்றே புழங்குவதைக் காண்கிறோம்.
பாடகன் -> பாடகர்
பாடகி -> பாடகி
ஆனால் பாடகி என்பது அதிக இடங்களில் அப்படியே உபயோகத்தில் உள்ளது.
அதே போல் நடிகர் என்பது நடிகனுக்கான மரியாதை சேர்த்த சொல். ஆனால் நடிகை என்ற சொற் பிரயோகத்தில் அதிக மாற்றம் தெரிவதில்லை.
இதில் சிறிது ஆணாதிக்கம் தொனிப்பது தெரியும். அதாவது “ர்” விகுதி ஆண்களுக்கு மட்டும் என்ற ஒரு மனப்பாங்கு.
அமைதியில்லாத வழு
தமிழ்ப் பெயர்களில் "ர்"
மக்களோடு தொடர்புடைய பல, விளிப்புகளில் “ன்” என்று முடியும் சொற்கள் மதிப்புக் குறைந்தவை என்று கருதி “ர்” சேர்க்கும் வழக்கத்தால், இவ்வாறு மதிப்பை உயர்த்தும் எமது வழக்கம், தவறான பாதையில் சென்றுள்ளதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
மதிப்பு என்று எண்ணி, ஒரு படி மேலே சென்று, “ன்” இல் முடிவடைவடையும்
ஆண்களின் பெயர்களுக்கும் “ர்” மாற்றம் செய்யும் பழக்கம் இருக்கிறது.
ஒருவருக்கு (ஆண்) பெயரிடும் போது “ன்” இல் முடிவடையும் வண்ணம் பெயர் இடப்பட்டிருந்தால், மதிப்பளிக்கிறோம் என்ற நினைப்பில் அந்தப் பெயருக்கு “ர்” விகுதி கொடுத்து ஏனையவர்கள் புழங்குவது பிழையே.
காலங் காலமாக நாம் வழங்கும் கம்பர், வள்ளுவர், திருஞானசம்பந்தர், கபிலர் போன்ற பெயர்கள் சில உதாரணங்களாகும். கம்பன் என்று இருக்கும் பெயரை, அது, “கம்பன், அவன், இவன்” என்று சொல்வது போல் உள்ளது என்று எண்ணி கம்பர் என்று குறிப்பிடும் வழக்கு உண்டு.
கம்பனைப் பற்றிக் குறிப்பிடுகையில், இதையும் குறிப்பிடலாம். “ராமா” என்று வால்மீகி இராமாயணத்தில் வட மொழியில் இருந்த பெயரைக் கம்பராமாயணத்தில் “இராமன்” என்று மொழி பெயர்த்திருந்தார். அந்த மொழி பெயர்க்கப்பட்ட பெயரைக் கூட நாம் “இராமர்” என்று அழைக்கும் நிலையில் எங்கள் மரியாதை “ர்” எங்களை வைத்திருக்கிறது.
நல்ல காலம், நாம் “ஆபிரகாம் லிங்கன்” என்ற பெயரை “ஆபிரகாம் லிங்கர்” என்று இன்னமும் மாற்றவில்லை.
இன்னொரு வியப்பான விடயம் என்னவென்றால், “கிருஷ்ணன்” என்ற பெயர் “கிருஷ்ணர்” ஆகிவிட்டது ஆனால் “சிவன்” என்ற பெயர் “சிவர்” ஆகவில்லை. சிவர் என்றால் நன்றாக இருக்காதோ?
”ன்” இல் நிறைவடையும் மக்களின் பெயர்களுக்கு “ர்” விகுதி சேர்ப்பது பிழை என்பது என் கருத்து. தொல்காப்பியத்திலும், பெயர்களுக்கு மரியாதைப் பன்மை விகுதி சேர்க்கப்பட வேண்டும் என்று எங்கேயும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.
தற்காலத்தில் கூட பலரின் பெயர்கள் “ன்” இற்குப் பதில் “ர்” சேர்க்கப்பட்டு அழைக்கப்படும் விந்தையையும் காண்கிறோம்.
சில பெண் பெயர்களில் மரியாதை மாற்றம் இருப்பதைக் கீழே கவனிக்கலாம்.
ஔவை - ஔவையார்
வள்ளி - வள்ளியார்
பார்வதி - பார்வதியார்
நல்லதங்காள் - நல்லதங்காள் - “ர்” அல்லது “யார்” மாற்றம் இல்லை. நல்லதங்காளார் என்று சில வேளைகளில் சொல்லக்கூடும்.
பொதுவாக, “இ” என்று முடிவடையும் பெண்களின் பெயர்கள் “வாடி, போடி” என்ற மதிப்புக் குறைந்த சொற்களில் புழங்குவது போல் தோன்றுவதால், மாற்றப்பட்டிருக்கலாம். இதுவும் தவறாக இருக்கலாம்.
மேலும் எங்கள் மத்தியில், கொஞ்சம் கேலி கலந்த பெயர் வழக்கும் காணப்படுகிறது.
ஆறுமுகத்தார், சிவலிங்கத்தார், மணியத்தார் போன்றவை சில உதாரணங்கள்.
பெயர்கள் மட்டுமல்லாது வேறு பல சூழல்களிலும், மதிப்பு என்று எண்ணித் தமிழைத் தவறாகக் கையாளும் வழக்கம் நம்மிடையே உண்டு.
மேலும், அதியுயர் மதிப்பளிக்கு முகமாக வேறு பல பிரயோகங்களைப் பார்ப்போம்.
மதிப்புக்குரிய சங்கர மடங்களில் ஒன்றான காஞ்சி மடத்தின் முதன்மை ஆச்சாரியார் சங்கராச்சாரியரைக் குறிப்பிடும் போது அவர் என்பதை “அவா(ள்)” என்றும்; பெரியவர் என்பதைப் “பெரியவா” என்றும் அழைக்கப்படுவதை நாம் நாளாந்தம் பார்க்கிறோம். இது ஒரு அதி உயர் மதிப்பளிக்கும் எடுத்துக்காட்டு.
ஆளுடைய பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சம்பந்தர், ஞானப்பால் உண்டு தேவாரம் பாடியதால் ஞானசம்பந்தன் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு மேலும் மதிப்பளிக்கு முகமாக அவரை ஞானசம்பந்தர் என்றும் திருஞானசம்பந்தர் என்றும் மேலும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
நிறைவாக இங்கே சொல்ல விளைவது என்னவென்றால், “ன்” இல் முடியும் ஆண்களின் பெயர்களுக்கும், “ள்” அல்லது “இ” என முடியும் பெண்களின் பெயர்களுக்கும் மரியாதை செய்கிறோம் என்று எண்ணிப் பெயரைச் சிதைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சில உதாரணங்கள்:
- திருக்குறள் என்ற திரவியம் போன்ற நூலை இயற்றியவர் வள்ளுவன்.
- பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் உள்ள கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பன்.
- பலரால் தெய்வமாகப் போற்றப்படுபவர் இராமன்.
இங்கே நாம் கவனங் கொடுக்க வேண்டியது பெயர்களுக்கு “ர்” மாற்றம் கொடுப்பது ஒரு வகையில் அந்தப் பெயர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படல் வேண்டும் என்பதே. பல பிற மொழியாளர்கள் தம் பெயரில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
No comments:
Post a Comment